பட்டத்தை எங்கே இருந்து பறக்க விடலாம் என்று யோசித்தபடியே தவளையும் தேரையும் நடந்து சென்றன.
“காற்று எங்கே அதிகமாக வீசுகின்றதோ… அங்கேதான் பட்டத்தைப் பறக்க விட முடியும்’ என்றது தவளை.
“அப்படியா..! கொஞ்ச தூரம் நடந்து சென்றால் அங்கே மிகப் பெரிய புல்வெளி இருக்கிறது…’ என்றது தேரை.
தவளையும் தேரையும் அந்தப் புல்வெளியை நோக்கிச் சென்றன.
அந்தப் புல்வெளியில் அடித்த காற்றை உணர்ந்த தவளை, “நம்முடைய பட்டம் மிகவும் மேலே, ஆகாயத்துக்கு மிக அருகில் சென்று பறக்கும்’ என்று ஆசையுடன் கூறியது.
தேரையும் “ஆமாம்…’ என்று தலையசைத்தது.
“தேரை நண்பா, நான் நூலைப் பிடித்துக் கொள்கிறேன். நீ பட்டத்தைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் ஒடு பார்க்கலாம்…’ என்றது தவளை.
இதைக் கேட்ட தேரை, புல்வெளியில் பட்டத்தை உயரே தூக்கிப் பிடித்தபடி ஓடியது. தன்னுடைய தட்டையான, சிறிய கால்களை வைத்துக் கொண்டு தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடியது தேரை!
ஓரிடத்தில் சென்று நின்று கொண்டு பட்டத்தை விண்ணில் விட்டது. பட்டம், வீசிய காற்றால் இழுக்கப்பட்டு மேலெழும்பியது. ஆனால், திடீரென்று பட்டம் கீழே விழுந்தது!
அப்போது, யாரோ சிரிப்பது போல சத்தம் கேட்டது. தேரையும் தவளையும் திரும்பிப் பார்த்தன.
அங்கே ஒரு புதர் இருந்தது! அந்தப் புதருக்கிடையில் மூன்று பறவைகள் இருந்தன. அவைகள்தான் தேரையும் தவளையும் பட்டம் விடும் அழகைப் பார்த்துச் சிரித்தன.
அந்தப் பறவைகளில் ஒரு பறவை தேரையிடம், “நீங்கள் கொண்டுவந்த பட்டம் பறக்காது. அதற்காக ரொம்பவும் சிரமப்படாதீர்கள்…’ என்றது.
இதைக் கேட்டவுடன் தேரையின் முகம் கவலையுற்றது. தவளையை நோக்கி ஓடியது.
“தவளையே, இந்தப் பட்டம் பறக்காதாம்… ஆகவே இந்த முயற்சியை நாம் கைவிட்டு விடுவோம்…’ என்றது தேரை.
உடனே தவளை, “தேரையே நாம் திரும்பவும் முயற்சித்துப் பார்க்கலாம்… நமது பட்டம் எப்படியும் பறக்கும்’ என்றது.
சிறிது நேர யோசனைக்குப் பிறகு, மீண்டும் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு புல்வெளியில் ஓடியது தேரை.
பழைய இடத்துக்குச் சென்று நின்று கொண்டு, பட்டத்தை உயரே தூக்கி காற்றில் விட்டது.
இப்போது பட்டம் சிறிது அதிக நேரம் மேலே பறந்தது. ஆனால், மீண்டும் தொம்மென்று கீழே விழுந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த, பறவைகள், “நீங்கள் செய்கிற செயலைப் பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது. உங்கள் பட்டம் ஒருபோதும் தரையை விட்டு மேலே பறக்காது!’ என்றன.
தேரைக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. தவளை இருக்குமிடத்துக்குச் சென்றது. தவளையிடம் பறவைகள் கூறியதைச் சொல்லி வருந்தியது.
தவளை, கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், “இன்னொரு முறை பட்டத்தைப் பறக்கவிட்டுப் பார்ப்போம்… இந்தத் தடவை, பட்டத்தைத் தலைக்கு மேல் வீசும்போது, மேலே நன்றாகக் குதித்து, இன்னும் அதிக உயரத்தில் வீசு! அப்போதுதான் நாம் நினைத்தபடி பட்டம் வானில் பறக்கும்…’ என்றது.
சற்றும் சளைக்காமல் தேரையும் பட்டத்தைத் தூக்கிக் கொண்டு ஓடி, ஓரிடத்தில் போய் தன்னால் முடிந்தவரை உயரே குதித்து வானில் பட்டத்தை வீசியது.
அடித்த காற்றில் பட்டம் மெதுவாக மேல் எழும்பியது. சிறிது நேரம் நன்றாகப் பறந்தது. ஆனால் மறுபடியும் புல்வெளியில் சடாரென்று கீழே விழுந்தது.
“இந்தப் பட்டம் மிகவும் பழசாகி விட்டது. அதனால் இதைக் குப்பையில் வீசிவிட்டு வீட்டுக்குப் போய்வாருங்கள்…’ என்று தேரையிடம் புதரிலிருந்த பறவைகள் கூறின.
மீண்டும் தேரை, தவளையிடம் சென்று புதர் பறவைகள் சொன்னதை அப்படியே கூறியது.
“தேரை நண்பா, கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம். நீ குதித்துக் குதித்து ஓடிப் போய் பட்டத்தைத் தலைக்கு மேல் எவ்வளவு உயரமாக வீச முடியுமோ அப்படி வீசு. வீசும் போது ‘பட்டமே, மேலே செல்!’ என்று சொல்லிக் கொண்டு வீசு, சரியா?’
என்று நம்பிக்கையைக் கைவிடாமல் சொன்னது தவளை.
தேரையும், புல்வெளியில் தவளை சொன்னது போல பட்டத்தைத் தூக்கிக் கொண்டு குதித்துக் குதித்து ஓடியது. சிறிது தூரம் போனவுடன் வந்த வேகத்திலேயே, கையிலிருந்த பட்டத்தை வெகு வேகமாக வானில் வீசியது. வீசும்போது மறக்காமல், “பட்டமே, மேலே செல்…’ என்று சொன்னது.
இப்போது மேலே வீசிக் கொண்டிருந்த காற்று பட்டத்தை மெல்ல மெல்ல மேலே தூக்கியது. வானில் பட்டம் பறக்க ஆரம்பித்தது. பறந்தது…. பறந்தது… பறந்துகொண்டே இருந்தது. வானில் மிக உயரத்தில், பட்டம் பறக்கத் தொடங்கியது. கீழே விழவேயில்லை!
மிக உயரத்தில் தங்களது பட்டம் பறப்பதைக் கண்ட தேரை சந்தோஷத்தில் கூவிப் பாடவே ஆரம்பித்துவிட்டது!
தவளையும் சந்தோஷத்தில்… “எங்கள் பட்டம்… எங்கள் பட்டம்’ என்று கத்த ஆரம்பித்தது!
– டிசம்பர் 2011