முனியாண்டியின் மூளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 30,170 
 
 

முனியாண்டி இரண்டு நாளாய் கவனித்து கொண்டுதான் இருக்கிறான். அவன்

அப்பா காத்தமுத்து பயந்துவிட்டவர் போல் காணப்படுகிறார். இவன் பள்ளிக்கு செல்லும் முன்னர் அப்பாவிடம் சொல்லி விட்டுத்தான் செல்வான். இந்த இரண்டு நாட்களாக அப்பா சரியில்லை என்பது அவர் முகபாவனையில் கண்டு கொண்டான்.

முன்னெல்லாம், போயிட்டு வர்றேம்ப்பா என்று சொன்னால் சூதனாமா போயிட்டு வா என்று மகிழ்ச்சியுடன் சொல்லி அனுப்புவார். இப்பொழுது அவனை பயந்து பயந்து பார்க்கிறார். பத்திரம்,பத்திரம் அடிக்கடி சொல்லி அனுப்புகிறார்.காலையில் அம்மாவிடம் கூட முனியாண்டி கேட்டான், அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு, இரண்டு நாளா பயந்தமாதிரிஇருக்கறாரு. அம்மா, சட்டென அதெல்லாம் ஒண்ணுமில்லை., நீ சீக்கிரம் ஸ்கூலுக்கு கிளம்பற வழிய பாரு என்று அவனை விரட்டுவதிலேயே குறியாயிருந்தாள்.

முனியாண்டி அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவன் அப்பா காத்தமுத்து அந்த ஊரில் இருந்த ஒரு பணக்கார சேட்டு பங்களாவில் காவல்காரனாய் இருக்கிறார். தினமும் மாலை ஆறு மணிக்கு சேட்டு வீட்டு காம்பவுண்டு கேட்டுக்கு காவலுக்கு சென்றால் மறு நாள் எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார். முனியாண்டி ஸ்கூல் போகும் வரை விழித்து அவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தூங்கப்போவார். பகலில் தூங்கினால்தானே இரவு முழுக்க தூங்காமல் காவல் காக்க முடியும்.

வகுப்பில் முனியாண்டிக்கு மனசே சரியில்லாமல் இருந்தது, அவன் அப்பா ஏன் பயந்த மாதிரி இருக்கிறார். அவர் நல்ல உயரமும் நல்ல தைரியசாலியாகவும் இருப்பவர்.எப்பொழுதும் சிரிப்புடனே இருப்பவர், இரண்டு நாட்களாகத்தான் இப்படி இருக்கிறார். என்னவென்று தெரியவில்லையே/ இப்படி சிந்தனையிலேயே இருந்தவனை யாரோ பிடித்து உலுக்கவும் சட்டென சுயநினைவுக்கு வந்தான்.

டேய் என்னாச்சுடா, அப்படியே யோசனையாகவே இருக்கறே? பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பன் ஆரோக்கியம் கேட்டான்.

ஒண்ணுமில்லைடா, என்று இவன் சொன்னாலும், ஆரோக்கியம் விடவில்லை.

உண்மையை சொல்லு, என்று வற்புறுத்தவே, இவன் தன் தந்தை இப்படி கவலையில்

இருப்பதை சொன்னான்.

அவ்வளவுதானே கவலையை விடு, நான் அந்த பங்களா வழியாகத்தான் பள்ளிக்கு வருகிறேன். அதுபோக எங்க ஏரியாவுல இருந்து ஒரு அக்காவும் அந்த பங்களாவுக்கு பாத்திரம் கழுவி கொடுக்கும் வேலைக்கு சென்று வருகிறாள். அதனால் நாளை காலையில் என்ன விசயம் என்று கேட்டு சொல்கிறேன் என்றான்.

மறுநாள் ஆரோக்கியம் சொன்ன செய்தி முனியாண்டிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சேட்டு வீட்டில் விலையுயர்ந்த வெள்ளி தட்டும், டம்ளரும் காணாமல் போய் விட்டது. அவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் அந்த பங்களாவில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவரையும் கூப்பிட்டு இன்னும் ஒரு வாரத்தில் அந்த பொருள் திரும்பி வந்தாகனும், அப்படி வரலையின்னா போலீஸ் கம்ளெயிண்ட் கொடுத்துடுவேன். அவங்க எல்லாத்தையும் பிடிச்சு விசாரிக்க ஆரம்பிச்சா உங்களுக்குத்தான் அவமானம் அப்படீன்னு சொல்லிட்டாங்க. இதுல காத்தமுத்துவும் அடக்கம். அதனாலதான் அவரால இரண்டு நாளா வீட்டுல நிம்மதியா இருக்கமுடியலை.

முனியாண்டிக்கு மனசுக்குள்ள திடீருன்னு ஒரு தைரியம், அப்பாகிட்ட போனான், அப்பா உனக்கு என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சு போச்சு, நான் வேணா இன்னைக்கு உன் கூட காவல்காக்க துணைக்கு வாறேன், அங்க சேட்டு ஐயா இருந்தா அவர்கிட்ட பேசறேன்.

மகனை அன்புடன் பார்த்த காத்தமுத்து, வேணாண்டா, அங்கெல்லாம் நீ வரக்கூடாது, முதலாளி ஒத்துக்கமாட்டாரு, என்று சொன்னான். அதெல்லாம் முடியாது இன்னைக்கு நான் உன் கூட வரத்தான் போறேன், பிடிவாதம் பிடிக்கவும், முனியாண்டியின் அம்மா, அவனையும்தான் கூட்டிட்டு போங்களேன். வேறு வழியில்லாமல் அன்று இரவு முனியாண்டியையும் கூட்டி சென்றான்.

இரவு காவல் வேலையை எடுக்கப்போகும் முன் தன் மகனையும் சேட்டுவிடம் கூட்டி சென்றான். பங்களாவுக்குள் நுழைந்தவுடன் ரோஜாப்பூவின் வாசனை அப்படியே மனசை மயக்கியது. அப்பாவிடம் அது என்னப்பா இப்படி ஒரு வாசனை என்று கேட்டான். அது ஒரு செண்ட், எப்பொழுதும் வேலையாள் பங்களாவை கூட்டி துடைத்து அந்த செண்டை தெளித்து விடுவார்கள். காலையிலும், மாலையிலும் இப்படி செய்வார்கள் என்று சொன்னார்.

பங்களாவுக்குள் சேட்டு உட்கார்ந்திருந்தார். முனியாண்டி தைரியமாக சேட்டுவிடம் ஐயா, எங்கப்பா உங்க கிட்ட பதினஞ்சு வருசமா வேலை செய்யறாருன்னு எங்கிட்ட சொல்லியிருக்காரு. அப்படி பட்டவரை நீங்க சந்தேகப்படறீங்களா?

சேட்டு அவனை வியப்புடன் பார்த்து தம்பி உங்கப்பா மாதிரி மூணு பேரு எங்கிட்ட பதினைஞ்சு வருசமா இருக்காங்க. அவங்களுக்காகத்தான் நான் போலீஸ் கேஸே கொடுக்கலை. ஆனா இந்த திருட்டை கண்டுக்காம விட்டா, மறுபடி மறுபடி நடந்துகிட்டே இருக்கும், அதனாலதான் ஒரு வாரம் டைம் கொடுத்திருக்கேன்.

நீ எத்தனையாவது படிக்கிறே? என்று அன்புடன் கேட்க, இவன் பணிவாக எல்லா பதில்களையும் சொன்னான்.

மறு நாள் நண்பன் ஆரோக்கியத்திடம் அவன் அப்பாவுடன் காவல் வேலைக்கு போனதையும், அப்பொழுது பங்களாவுக்கு போனதையும், சேட்டுவிடம் பேசியதையும் சொன்னான். அந்த பங்களாவில் இருந்த ரோசாப்பூ மணம் பற்றியும் சொன்னான்.

நண்பன் இதென்ன பிரமாதம் என் வீட்டுலயும் செண்ட் பாட்டில் வச்சிருக்கேன், பாக்கறயா? என்று சொன்னான். உனக்கு எப்படி கிடைச்சுது,? ஆரோக்கியத்திடம் முனியாண்டி கேட்டான், நான் சொன்னேனில்லையா, அந்த சேட்டு பங்களாவுல பாத்திரம் கழுவ போற அக்கா எங்கம்மா கிட்ட கொடுத்துச்சு.பங்களாவுல எல்லாருக்கும் சும்மாவே கொடுப்பாங்களாம், வச்சுக்கன்னு சொல்லி கொடுத்துச்சு.

அப்படியா என்று வியப்புடன் கேட்டான் முனியாண்டி.

மாலை வீட்டுக்கு போனவுடன் அவன் அப்பாவிடம் இதை பற்றி பேசினான்.அப்புறம் வேறு சில விசயங்களையும் தெரிந்து கொண்டவன், இன்றைக்கும்

பங்களாவுக்கு வருவதாக சொன்னான்.

வழக்கம்போல காத்தமுத்து சேட்டுவிடம் இரவு பணிக்கு சேருவதற்கு முன்னர் அவரிடன் சொல்லிப்போக வந்தார். கூட முனியாண்டியும் இருப்பதை பார்த்த சேட்டு என்ன காத்தமுத்து படிக்கிற பையனை இராத்திரி இப்படி கூட்டி வரக்கூடாது, அப்புறம் படிப்பு கெட்டுவிடும் என்று சொன்னார்.

முனியாண்டி ஐயா என்னை மன்னிக்கனும், நானாகத்தான் வந்தேன் உங்களுக்கு ஒரு விசயம் சொல்லணும்னு வந்துருக்கேன், பணிவாக சொல்லிவிட்டு,

உங்க வெள்ளி தட்டும், டம்ளரும் எங்க இருக்கும் அப்படின்னு கண்டு பிடிச்சுட்டேன். ஆனா நான் சொல்றமாதிரி நீங்க செஞ்சா அதை சத்தமில்லாம கைப்பற்றிடலாம்.

சொன்னவனை கூர்ந்து பார்த்த சேட்டு, மேலே சொல்லு என்று தலையாட்ட இவன்

தனது யோசனையை சொன்னான்.

இரண்டு நாட்கள் ஓடியிருந்தன. வெள்ளித்தட்டும், டம்ளரும் அந்த பாத்திரம் கழுவும் பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்டு விட்டன. முனியாண்டியின் யோசனைப்படி ஒருவன் வியாபாரியை போல் வேசமிட்டு அந்த பெண்ணிடம் மெல்ல பேச்சு கொடுத்து நல்ல விலை தருவதாக சொல்ல அவளும் சேட்டு வீட்டில் எடுத்து வந்த அந்த பொருட்களை இவனிடம் கொடுத்து பணம் கேட்டாள்.அது மட்டுமல்ல, வேறு சில இடங்களில் இருந்து எடுத்து வந்திருந்த பொருட்களையும், விலைக்கு கொடுப்பதாக தெரிவித்தாள்.

அது போதுமே, சத்தமில்லாமல் போலீசுக்கு போவதாக சொல்லி எல்லா பொருட்களையும் மீட்டு விட்டனர். அவளிடம் இருந்து கைப்பற்றிய பொருட்களை அவரவர் இடத்திலும் சேர்ப்பித்து விட்டனர்.

முனியாண்டியின் மூளையை பாராட்டிய சேட்டு அவன் இறுதி வகுப்பு வரை படிக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து விட்டார்.

முனியாண்டியின் அம்மா கேட்டாள், எப்படிடா கண்டு பிடிச்சே?

அப்பா இதுவரைக்கும் எந்த செண்ட் பாட்டிலும் வீட்டுக்கு கொண்டு வந்ததில்லை. பங்களாவுல இந்த மாதிரி எந்த பொருளும் சும்மா கொடுக்கறாங்கன்னு நம்மகிட்ட இதுவரைக்கும் சொன்னதும், இல்லை.

உண்மைதான் நேர்மை இருக்கும் இடத்தில் தைரியம் இருக்கும் குட்டீஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *