முன்னொரு காலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வீரபுரி என்கிற ஊரில் கருப்பன் என்று ஒரு சிறிய செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு காத்தாயி என்ற மனைவியும், சூரன் என்ற மகனும் இருந்தனர். தினமும் பாடுபட்டு நிறய பணம் சம்பாதித்துவந்தான். ஆனால் அவன் அந்த பணத்தை செலவு செய்யாமல் மிகவும் சிக்கனமாக இருந்தான். சம்பாதித்த பணம் முழுவதும் அவன் வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் சேமித்து வைத்தான். அதனால் அவனை எல்லோரும் கருமி என்று அழைத்தனர். அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்ல சில நாட்கள் சென்ற பின்பு அவனுக்கு வயதானதால் பயம் வந்துவிட்டது. தான் இதுவரை சேர்த்து வைத்த பணத்தை என்ன செய்வது? எப்படி அதை பாதுகாப்பாக வைப்பது என்று யோசித்து வந்தான்.
அந்தக் காலத்தில் இப்பொழுது இருப்பது போல பணத்தை பத்திரமாக பாதுகாக்க எந்த ஒரு வசதியும் கிடையாது. அதனால் எல்லோரும் பணத்தை ஒரு பானையில் போட்டு வீட்டுக்கு உள்ளேயோ அல்லது வீட்டு தோட்டத்திலோதான் புதைத்து வைப்பார்கள். அப்பொழுதெல்லாம் பணம் என்பது தங்க காசுகள் என்பதை நினைவுகொள்ள வேண்டும்.
அவன் தன்னிடம் இருந்த தங்கக் காசுகளை ஒரு பானையில் வைத்து வீட்டின் பின்புறம் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் புதைத்து வைத்திருந்தான். அது பற்றி அவன் மனைவிக்கும் மகனுக்கும்கூட தெரியாது. அவன் நிறைய பணம் வைத்திருந்தாலும் அவன் கருமியாக இருந்ததால் அவர்களின் வீடு எப்பொழுதும் வறுமையில் இருப்பதுதான் வழக்கம். அவன் மனைவிக்கும் மகனுக்கும் கருப்பன் அவர்களுக்கு தெரியாமல் பணம் சேர்த்து வைப்பது தெரிந்திருந்தது. ஆனால் அவர்களுக்கு கருப்பன் எங்கே பணத்தை மறைத்து வைத்திருக்கிறான் என்பது மட்டும் தெரியாது.
ஒரு நாள் அவன் பணம் புதைத்து வைத்த இடத்தில் பெரிய குழிகள் இருப்பதை பார்த்தான். அந்த குழிகள் அவன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பெருச்சாளிகளால் ஏற்பட்டது என்பது அவனுக்கு தெரிந்ததும் அவனுக்கு பயம் வந்துவிட்டது. பணத்தை பூமியில் புதைத்து வைப்பது பாதுகாப்பாக இருக்காது என்று நினைத்து அவன் தன்னிடம் இருந்த தங்கக் காசுகள் முழுவதையும் அந்த ஊரில் இருந்த ஒரு பெரிய செல்வந்தரான முத்து வணிகரிடம் கொடுத்து வைத்தான். அவன் எப்பொழுது வந்து கேட்டாலும் அந்த பணத்தை திரும்ப தருவதாக செல்வந்தர் எழுதி கொடுத்த ஓலையை பத்திரமாக வீட்டில் வைத்திருந்தான். இப்படி இருக்கும்போது ஒரு நாள் கருப்பன் இறந்துவிட்டான்.
அவன் மனைவிக்கும் மகனுக்கும் கருப்பன் பணத்தை சேர்த்து வைத்திருப்பது தெரியும்.
கருப்பனின் மனைவியும் மகனும் அவன் அதுவரை சேர்த்து வைத்த பணத்தை வீடு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் மிகவும் வறுமையில் வாடினர்.
வீரபுரியில் ஒரு பெரிய எரி இருந்ததது. அந்த ஏரியின் கரையில் ஒரு பெரிய வயதான புளிய மரம் இருந்தது. செல்வந்தர் முத்து வணிகர் அந்த புளிய மரத்தில் ஒரு வேதாளம் இருப்பதாக புரளி கிளப்பிவிட்டு ஊரில் எல்லோரையும் நம்பவைத்துவிட்டார். அதனால் யாரும் அந்த புளிய மரத்தின் அருகில் செல்வதில்லை. அவர் அந்த புளிய மரத்தை சுற்றிலும் பத்து அடி தூரத்தில் ஒரு முள் வெலி அமைத்துவிட்டார். முள் வேலியின் மீது கருப்பு துணிகளை வைத்து மறைத்துவிட்டார்.
இரவு வேளையில் முத்து வணிகர் மட்டும் யாருக்கும் தெரியாமல் அந்த புளிய மரத்தின் அருகில் சென்று அவரிடம் இருந்த தங்க காசுகளை பானைகளில் போட்டு புதைத்து வைத்திருந்தார். அந்த மரத்தில் வேதாளம் இருப்பதாக எல்லோரும் எண்ணியதால் அவர் பணம் அங்கு பத்திரமாக இருந்தது. அவர் வேண்டியபோது அங்கு போய் பணத்தை எடுத்துக்கொள்வார்.
அவர் யாரும் பார்க்காத போதுதான் இரவில் அங்கு செல்வார். அப்படி யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று, அவர் அங்கு செல்லும்போது கருப்பு உடை அணிந்து பார்ப்பவர்களுக்கு வேதாளம் போன்ற தோற்றத்துடன் செல்வார்.
ஒருநாள் கருப்பனின் மனைவியிடம் முத்து வணிகர் எழுதி கொடுத்திருந்த ஓலை கிடைத்தது. அவளும் அவள் மகனும் அதை எடுத்துகொண்டு நேராக முத்து வணிகரிடம் சென்று கருப்பன் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் திரும்ப கொடுக்குமாறு கேட்டனர்.
முத்து வணிகருக்கு பேராசை. அவரிடம் கருப்பன் கொடுத்து வைத்திருந்த பொற்காசுகளை திரும்ப கொடுக்காமல் அவர்களை ஏமாற்றுவது என்று முன்பே திட்டம் போட்டிருந்தார்.
“கருப்பன் என்னிடம் கொடுத்து வைத்திருந்த தங்க காசுகளுடன் இருந்த பானையை நான் முன்பே அவனிடம் திரும்ப கொடுத்துவிட்டேன்.” என்று முத்து வணிகர் கூறிவிட்டார். அவர் மேலும் “உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் என் வீட்டை நன்றாக சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.” என்று கூறிவிட்டார்.
முத்து வணிகர் கருப்பன் கொடுத்த பணத்தையும் அந்த புளிய மரத்தின் அடியில்தான் ஒரு பானையில் போட்டு புதைத்து வைத்திருந்தார். அவரின் பேராசையால் அதை திரும்ப கொடுக்க அவருக்கு மனமில்லை.
இந்த வழக்கை கருப்பன் மனைவி காத்தாயி அந்த நாட்டு அரசரிடம் கொண்டு சென்றாள். அரசரும் அதை விசாரிப்பதாக கூறிவிட்டார். அரசர் சில சேவகர்களை அனுப்பி முத்து வணிகரின் வீட்டை சோதனை செய்து பார்த்தார். ஆனால் அவரால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பனும் உயிரோடு இல்லை. கருப்பன் முத்து வேலரிடம் பணம் கொடுத்ததோ அல்லது அவர் கருப்பனுக்கு பணத்தை திரும்ப கொடுத்தோ பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அதனால் அவர் அந்த வழக்கை அத்துடன் முடித்துவிட்டார்.
கருப்பனின் மனைவியும் முத்து வணிகரிடம் கருப்பன் கொடுத்து வைத்திருந்த பணம் அவரிடம் இருக்கிறது என்று நன்றாக தெரிந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒரு நாள் இரவில் கருப்பனின் மகன் சூரன் ஏரிக்கரை பக்கமாக வந்துகொண்டு இருக்கும்போது முத்து வணிகர் ஏரியின் அருகில் வேதாளம் இருக்கும் புளிய மரத்துக்கு அருகில் செல்வதை பார்த்தான். முத்து வணிகர் கருப்பு உடை அணிந்திருந்தாலும் அவர் முகத்தில் பட்ட நிலவு ஒளியினால் அவர்தான் முத்து வணிகர் என்று சூரனுக்கு தெரிந்துவிட்டது. அவன் உடனே ஒரு மரத்தின் மறைவில் இருந்துகொண்டு முத்து வணிகரை கவனித்தான். வழக்கம் போல முத்து வணிகர் தான் கொண்டு வந்திருந்த தங்கக் காசுகளை பானையில் போட்டு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சூரன் முத்து வணிகர் சென்ற பின், தனது வீட்டுக்கு சென்று மண்ணை தோண்டுவதற்கு தேவையான மண்வெட்டி, கடப்பாரை ஒரு சாக்கு பை ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தைரியாமாக அந்த புளிய மரத்தின் அடியில் தோண்டி அங்கு இருந்த எல்லா பணத்தையும் எடுத்து அவன் கொண்டு வந்திருந்த சாக்கு பையில் போட்டுக்கொண்டு அவன் வீட்டுக்கு வந்துவிட்டான். பிறகு அந்த இரவிலேய அவர்களின் வீட்டின் தோட்டத்தில் நல்ல இடமாக பர்ர்த்து அவன் கொண்டு வந்திருந்த தங்க காசுகள் அடங்கிய பானைகளை புதைத்து வைத்துவிட்டான்.
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் முத்து வணிகர் வழக்கம்போல பணம் எடுக்க புளியமரத்துக்கு சென்று அவர் புதைத்து வைத்திருந்த தங்கக் காசுகள் அடங்கிய பானைகளை தேடினார். ஆனால் அங்கு ஒரு பானைகூட இல்லை. அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவரால் அதை வெளிய சொல்லவும் முடியவில்லை. யார் அந்த பணத்தை எடுத்திருப்பார்கள் என்று அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அந்த சோகத்திலேயே அவர் இறந்துவிட்டார்.
அவரது பேராசை பெரும் நஷ்டத்தில் முடிந்தது!