முல்லைநாட்டு இளவரசன் ஜெயவீரன், குருகுலத்தில் பயிற்சி முடிந்து நாட்டுக்குப் புறப்பட்டான். சிறந்த வில்லாளி.
அவன் தன் ஊருக்கு வரும் வழியில், ஓர் அடர்ந்த காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. பாதி வழியிலேயே இருட்டிவிட, கொடிய மிருகங்கள் நிறைந்த அக்காட்டில், இரவு நேரத்தை எப்படிக் கழிப்பது என்று சிந்தித்தான் ஜெயவீரன்.
பின்னர் ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டான். சற்று நேரத்தில், சிறிது தொலைவில் நெருப்பு எரிவது தெரிந்தது. அருகில் சென்று பார்த்தான். மூன்று அரக்கர்கள், தோலுரித்த ஆடு ஒன்றைத் தீயில் வாட்டிக் கொண்டிருந்தனர்.
மேலும் மூன்று ஆடுகள் அவர்கள் அருகில் இருந்தன. வாட்டிய ஆட்டு மாமிசத்தின் தொடை ஒன்றைப் பிய்த்து, எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன் என்றபடி, மூவரில் ஒருவன் அதைத் தன் வாயருகே கொண்டு சென்றான்.
சட்டென்று புதரில் மறைந்து கொண்ட ஜெயவீரன், மாமிசத் துண்டைக் குறிபார்த்து அம்பை விட்டான். அந்தோ பரிதாபம்! அவன் கையிலிருந்த மாமிசத் துண்டு பறந்து போனது. “”பார்த்தீர்களா, பார்த்தீர்களா? என் மாமிசத் துண்டு காற்றில் பறந்து செல்கிறது.”
“”காற்றே அடிக்கவில்லையே, எப்படி பறந்து போகும்?”
“”காற்று அடிக்காவிட்டாலும், இந்தக் காட்டில் மாமிசம் பறக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது,” என்றான் அவன்.
“”இப்போது பார்! காற்றும், காடும் என்னை என்ன செய்துவிடும்?” என்றபடி, ஆட்டின் மறு தொடையைக் கைகளால் இறுகப் பற்றி, மாமிசத்தை வாயருகில் கொண்டு சென்றான் மற்றொருவன்.
ஜெயவீரன் விட்ட அம்பால், அவனது மாமிசத் துண்டும் பறந்து போய்விட்டது.
“”ஐயய்யோ! இது என்ன மாயாஜாலமாக இருக்கிறது. காற்று அடிக்காமலேயே கறித்துண்டு பறக்கிறது,” என்றான்.
மூன்றாவது ஆள் ஆட்டின் தலையை எடுத்தான். அவன் எடுத்த மாத்திரத்திலேயே அதுவும் பறந்தது.
அவர்கள் மூவரும், “”பேய், பேய்!” என்று கத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தனர்.
“”ஓடாதீர்கள், நில்லுங்கள். உங்கள் மாமிசத் துண்டுகளைப் பறித்தது நான்தான். உங்களால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால், நான் அம்பு ஒன்றை விட்டேனென்றால், உங்கள் மூவரின் தலைகளும் மண்ணில் உருளும்,” என்றபடி அம்பை எடுத்தான்.
“”ஐயய்யோ! எங்களைக் கொன்றுவிடாதே. நாங்கள் உனக்கு அடிமை,” என்ற அவர்கள் கீழே விழுந்து வணங்கினர்.
“”ஏன் இங்கே வந்தீர்கள்?”
“”இந்த மலைக்கு அப்பால் ஒரு நாடு இருக்கிறது. அங்கே ஓர் அழகான இளவரசி இருக்கிறாள். அவளைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறோம். ஆனால், அவளை ஒரு பயங்கரமான நாய் பாதுகாத்து வருகிறது. நெருங்க முடியவில்லை.”
“”போயும் போயும் ஒரு நாய்க்கா இவ்வளவு பயப்படுகிறீர்கள்? என்னுடன் வாருங்கள், நாயைக் கொன்றுவிடுகிறேன்.”
மறுநாள் இரவு—
அந்த மூவரும், மலைக்கு அப்பால் உள்ள அந்த நாட்டிற்குச் சென்றனர். இளவரசியின் மாளிகையில் அவளைக் காவல் காத்துக் கொண்டிருந்த அந்தக் கொடூரமான நாய், இவர்களைப் பார்த்ததும் பாய்ந்து ஓடிவந்தது.
ஜெயவீரன் ஓர் அம்பு விட்டான். அந்த அம்பு, நாயின் மண்டையைப் பிளந்தது. அந்த இடத்திலேயே நாய் சுருண்டு விழுந்து இறந்தது.
ஜெயவீரன் அந்த மூன்று அரக்கர்களையும் அங்கேயே நிறுத்திவிட்டு அரண்மனைக்குள் சென்றான். அங்கே வெள்ளிக் கத்தியொன்று மேசை மேல் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில், மேசையின் மேல் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தான்.
அதில், “”இக்கத்தி யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் இறந்தவர்களையும் பிழைக்க வைப்பர்,” என்று எழுதி இருந்தது. அக்கத்தியை எடுத்துத் தன் பையில் போட்டுக் கொண்டான் ஜெயவீரன்.
அடுத்து, இளவரசியின் அறைக்கு வந்தான். அவள் பஞ்சணையில், அழகுப் பதுமையாய் துயில் கொண்டிருந்தாள். அப்படியொரு அழகியை அவன் பார்த்ததே இல்லை. அவள் வதனம், வானத்துத் தேவதையொன்று மண்ணில் வந்துவிட்டதோ என்று ஐயுறும் வண்ணம் இருந்தது.
அந்த அரக்கர்கள் கையிலா இவளை ஒப்படைப்பது என்று எண்ணியவாறே அவள் அருகில் சென்ற ஜெயவீரன், அவள் படுக்கைக்குக் கீழே கிடந்த அவளது காலணிகளில் ஒன்றை எடுத்துத் தன் பையில் போட்டுக் கொண்டான். பின்னர், விலையுயர்ந்த போர்வையின் ஓரத்தில், பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த, “முத்து பவள மோகினி’ என்ற அவள் பெயரை மட்டும் கத்தரித்து எடுத்து, அதையும் தன் பையில் போட்டுக் கொண்டான்.
வெளியில் வந்து அந்த மூன்று அரக்கர்களையும் கொன்று அவர்கள், நாக்குகளைத் துண்டித்து, அவற்றைத் தன் பையில் போட்டுக் கொண்டான்.
காலையில் எழுந்த அரசன், அந்த மூன்று அரக்கர்களின் பிணங்களைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
“”என்ன அரசே! இந்த மூன்று அரக்கர்களையும் கொன்றது யார் என்று திகைக்கிறீர்களா? நான்தான். நீங்கள் ஏற்கனவே நாட்டில் பறை அறிவித்தது போல், உங்கள் மகளை எனக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும்!” என்று அருகில் இருந்த தளபதி சொன்னான்.
அவனுக்கு ஒரு கண் குருடு. அத்துடன் விகாரமான தோற்றமுடையவன். இளவரசிக்கு அவனை மணக்க விருப்பமில்லை. மன்னர் தன் வாக்குறுதியை நிறைவேற்ற நினைத்தார், முடியவில்லை. எனவே, இளவரசியின் மேல் மன்னருக்குக் கோபம் ஏற்பட்டது.
சாலையோரத்தில் ஒரு குடிசையைக் கட்டி, வருவோர் போவோர்க்கெல்லாம் சமைத்துப் போடும்படி இளவரசிக்கு ஆணையிட்டான் மன்னன். சாதாரணப் பெண் போன்று உடையுடுத்தி, அரசன் தரும் உணவுப் பண்டங்களை வைத்து, தினமும் அவ்வழியாக வருவோருக்கு உணவு படைத்து வந்தாள் இளவரசி.
ஒருநாள், அவ்வழியாக ஜெயவீரன் வந்தான். இளவரசியின் குடிசைக்குச் சென்றான். அவள் உணவு பரிமாறிக் கொண்டிருக்கும்போது, அவனிடம் இருந்த அந்த வெள்ளி வாளைப் பார்த்துவிட்டாள்.
“”இளைஞரே! இந்த வெள்ளிவாள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?”
“”ஒரு அரண்மனையில் இளவரசி ஒருத்தியை இரவில் பார்க்கச் சென்றபோது கிடைத்தது.”
“”இதன் மகிமை என்ன?”
“”இது யாருடைய கையில் இருக்கிறதோ, அவர்கள் இறந்தவர்களையும் பிழைக்க வைப்பர்.”
“”உங்களுக்கு அந்த அரண்மனையில் ஏற்பட்ட வேறு அனுபவங்கள்?”
“”இளவரசியைக் கவர்ந்துபோக வந்த மூன்று அரக்கர்களைக் கொன்று, அவர்களின் நாக்கை இந்த வாளினாலேயே அறுத்தேன்.”
“”அதை நான் எப்படி நம்புவது?”
“”இதோ, அவர்களுடைய மூன்று நாக்குகளையும் என் பையினுள் வைத்திருக்கிறேன்.”
“நீங்கள் அரண்மனைக்கு வந்தீர்கள் என்பதற்கு வேறு சான்றுகள்?”
“”இதோ, அந்த இளவரசி முத்துப்பவள மோகினியின் ஒரு கால் செருப்பும், அவள் பெயர் பொறித்த போர்வையின் துணியும்.”
“”ஐயோ இளைஞரே! நான்தான் அந்த இளவரசி.”
கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இருவரும் அரசனிடம் சென்று உண்மையைக் கூறினர். பொய் சொன்ன ஒற்றைக் கண் தளபதியை, அரசன் கழுவேற்றினான். ஜெயவீரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான்.
பட்டூஸ்… பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் எப்படியும் மாட்டிக்கொள்வர் என்பது புரிகிறதா?
– ஜூன் 11,2010