கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 340 
 
 

இமய மலையின் வடபகுதியிலே பனி மலைகள் சூழ்ந்துள்ள ஒரு தேசம் இருக்கிறது. அதன் பெயர் திபெத்து. அங்கே யாலூங் என்ற ஒரு ஆறு உண்டு. அந்த ஆற்றின் கரையிலே முச்சீ என்ற பெயர் உள்ள ஒரு இளைஞன் தன் தாயா ரோடு வசித்துவந்தான்.

முச்சீ மிகவும் ஏழை. அவனுக்குச் சொந்தமான நிலம் கிடையாது. அவன் குத்தகைக்குக் கொஞ்சம் நிலம் வாங்கி அதை மிகவும் சிரமப்பட்டு உழுது வாழ்க்கை நடத்தி வந்தான், அவனுடைய தாயாரும் காலையிலிருந்து பொழுது சாயும் வரை யீல் நிலத்தில் வேலை செய்தாள். அதனால் நிலம் நன்றாக விளைந்தது.

இதைக் கண்டு நிலத்தின் சொந்தக்காரனுக்குப் பொறாமை உண்டாயிற்று. அவன் தன் சொந்தப் பண்ணையிலே நிறைய ஆள் வைத்து விவசாயம் நடத்தினான். அதில் அவ்வளவு நன்றாக விளைச்சல் உண்டாகவில்லை. அதனால் அவனுக்கு முச்சீ படம் பொறாமை ஏற்பட்டது. முச்சீயிடம் இரண்டு திபெத்து நாட்டு யாக் எருதுகள் இருந்தன. அவற்றை எப்படியாவது கவர்ந்துகொள்ளவேண்டுமென்று நிலச்சொந்தக்காரனுக்கு உள் ளுக்குள்ளே ஆசை.

அவனுடைய பெயர் காளிகங்கன். அவனுக்கு நிலம் ஏராளமாக உண்டு. பணமும் நிறைய உண்டு. அதனால் அவனைக் கண்டால் எல்லோரும் பயப்படுவார்கள்.

காளிகங்கன் ஒரு நாள் குதிரைமேல் ஏறிக்கொண்டு கங்க திங்கம் என்ற ஊருக்கு புறப்பட்டான். அப்படிப் போகும் பொழுது முச்சீ மண்வெட்டியால் நிலத்தை வெட்டிக் கொண் டிருப்பதைக் கண்டான். உடனே அவன் முச்சீயின் எருதுகளைக்கைப்பற்ற ஒரு தந்திரம் கண்டு பிடிக்கலானான். அவன் முச்சீ யைப் பக்கத்தில் வருமாறு கூப்பிட்டான்.

“நான் கங்கதிங்கம் போய்விட்டு ஒரு வாரத்தில் வருவேன். அதுவரையிலும் நீ மண்வெட்டியைக் கொண்டு நிலத்தை எத்தனை தடவை வெட்டினாய் என்பதைக் கணக்கு வைத்து எனக்குச் சொல்லவேண்டும். கணக்குத் தவறினால் உன் எருது களை எனக்குக் கொடுத்துவிடவேண்டும்” என்று கூறிவிட்டுக் அவன் நின்று கூடப் பார்க்காமல் போய்விட்டான்.

முச்சீக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவன் மண்வெட்டியை ஓங்கும்போதெல்லாம் ஒரு சிறு கல்லைத் தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். ஆனால் இப்படிச் செய்துகொண்டே அதிக நேரம் வேலை செய்ய முடியவில்லை. சட்டைப்பையில் உள்ள கற்கள் பெரிய பாரமாக ஆகிவிட்டன. மண்வெட்டியால் நிலத்தை வெட்டும் பொழுது அவை கீழே சிதறி விழவும் தொடங்கின. அதனால் கணக்கும் தவறலாயிற்று. வேலையும் வழக்கம் போல் நடக்கவில்லை. முச்சீ இவ்வாறு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்த அவன் தாயா ருக்கு அழுகை வந்துவிட்டது. “காளிகங்கன் எருதுகளைப் பிடித்துக்கொள்வானே, இனிமேல் நாம் எப்படி நிலத்தை உழுது சீவனம் செய்வோம்” என்று கூறிக் கொண்டே அவள் ஓலமிட்டுப் புலம்பினாள்.

“அம்மா, நீ வருத்தப்பட வேண்டாம். ஆறு வற்றிப் போனாலும் மலையுச்சியிலே பனிக்கட்டி இருக்கிறது. அதன் உதவியால் நமக்குத் தண்ணீர் கிடைக்கும். அதைப்போலவே காளிகங்கனுடைய சூழ்ச்சியை உடைத் தெறிய நமக்குத் தெரியாவிட்டாலும் மற்றவர்களுக்குத் தெரியலாம். நான் அண்டை வீட்டுக்காரர்களிடம் பேசி வருகிறேன். நீ கவலைப்படாதே” என்று முச்சீ கூறிவிட்டுப் போனான். அண்டைவீட்டுக்காரர்கள் அவனுக்கு நல்ல தந்திரம் ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார்கள். “குள்ளநரியின் தந்திரத்தை அதை விடப் பெரிய தந்திரத்தால் தான் வெல்ல முடியும். அப்படி நீ இந்தத் தந்திரத்தைச் செய்” என்று அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.

முச்சீயின் கவலை நீங்கிற்று. அவன் மணவெட்டியை ஓங்கும் போதெல்லாம் கணக்கு வைக் காமல் வழக்கம்போல வேலை செய்ய லானான்.

ஒரு வாரம் கழித்து காளிகங்கன் திரும்பிவந்தான். “முச்சீ, எங்கே உன்னுடைய கணக்கு? சரியாகச் சொல்லாவிட்டால் எருதுகள் எனக்கு சொந்தம்” என்று அவன் அதட்டினான். அதைக் கண்டு முச்சீ பயப்படவில்லை. “இதோ என் கணக்கு. நீங்கள் கங்க திங்கம் போய்த் திரும்பிவருகிற வரை யில் உங்களுடைய குதிரை எத்தனை தடவை காலெடுத்து வைத்ததோ அத்தனை தடவை நான் மண்வெட் டியை ஓங்கினேன்” என்று அவன் பதில் சொன்னான்.

காளிகங்கன் திகைத்துப்போனான். இப்படிப்பட்ட பதிலை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அவன் தேள் கொட்டிய திருடன்போல மௌனமாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான். இருந்தாலும் அவனுக்கு எருதுகளைக் கவர்ந்து கொள்ள வேண்டு மென்ற ஆசை மறையவில்லை. அதற்கு அவன் நல்ல சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு காளிகங்கன் மறுபடியும் கங்க திங் கத்திற்குப் புறப்பட்டான். அவன் குதிரையில் சவாரி செய்யும் போது முச்சீயும் அவன் தாயாரும் நிலத்திலே கல் பொறுக்கிக் குவியலாகப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

“டேய், முச்சீ, நான் கங்கதிங்கத்திலிருந்து திரும்பி வந்தவுடன் நீ எனக்குக் கல்லிலே நூல் எடுத்து ஒரு கைக்குட்டை செய்து கொடுக்க வேண்டும். இப்பொழுதே வேலை தொடங்கு. இல்லாவிட்டால் உன் எருதுகளைப் பிடித்துக் கொண்டு போய்விடுவேன்” என்று உரத்த குரலில் கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டான்.

கல்’லிலே எப்படி நூல் உண்டாக்க முடியும்? இப்படிச்செய்ய முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லிப் பண்ணைக்காரன் உத் தரவிட்டுப் போனதை நினைத்துத் தாயார் தேம்பினாள். அவள் கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தது. எருதுகள் போய் விடுமே என்று விம்மினாள்.

முச்சீ அவளுக்குத் தேறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். மறுபடியும் அண்டை வீட்டுக்காரர்களுடைய ஆலோசனையை நாடினான். பிறகு கவலையேதும் இல்லாமல் காளிகங்கனுடைய வருகையை எதிர்பார்த்திருந்தான்.

காளிகங்கன் பத்து நாட்களில் திரும்பினான். ” எங்கே கைக்குட்டை ?” என்று அதிகாரத்தோடு முச்சீயைக் கேட்டான், இந்தத் தடவை எருதுகள் தனக்குக் கிடைத்துவிடும் என்று அவனுக்கு உள்ளுக்குள்ளே குதூகலம்.

“கைக்குட்டை தயாராகிவிட்டது. ஆனால் அதில் பூவேலை செய்ய வில்லை. உங்களைப் போன்ற பணக்காரர்கள் பூவேலையில் லாத கைக்குட்டையை வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் பூவேலைக்காகத் தங்களை எதிர் பார்த்துக்கொண் டிருக்கிறேன். கல்லில் நூலுண்டாக்கிச் செய்யும் கைக்குட்டைக்கு நட்சத் திரத்தை வைத்துப் பூவேலை செய்தால் தான் நன்றாக இருக்கும். ஆகையால் நட்சத்திரத்தைப் பறித்துக் கொடுங்கள் ” என்று அவன் வினயமாகப் பதில் சொன்னான்.

காளிகங்கனுக்கு வாய் அடைத்துப் போய்விட்டது. அவன் ஊமையைப் போல ஒன்றும் பேசாமல் போய்விட்டான். ஆனால் அவன் உள்ளத்திலே கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

அன்று இரவு அவன் சில ஆட்களைக் கூட்டிக்கொண்டு முச்சீயின் வீட்டிற்குள் நுழைந்தான். உறங்கிக் கொண்டிருந்த முச்சீயின் கைகளையும் கால்களையும் கட்டினார்கள். அவனுடைய தாயார் அவர்களுக்கு மத்தியிலே புகுந்து தடுக்க முயன்றாள். காளிகங்கனும் அவனுடைய ஆட்களும் சேர்ந்து அவளை அடித்தனர்; அவள் மூர்ச்சைபோட்டுக் கீழேவிழுந்தாள். பிறகு முச்சீயைத் தூக்கி வரும்படி காளிகங்கன் கட்டளை யிட்டான். எருதுகளை ஓட்டிக்கொண்டுவரும்படியும் சொன்னான்.

முச்சீயை ஒரு மலைச்சிகரத்திற்குத் தூக்கிச் சென்றார்கள். அங்கே அவனைப் படுக்கவைத்து அவன் தூங்கும்போது கீழே உருட்டித் தள்ளிவிட வேண்டும் என்பது காளிகங்கனது எண் ணம். அதற்காக அவனை மலையுச்சியிலே ஒரு செங்குத்தான பாறையின் ஓரத்தில் கிடத்தினார்கள். அப்பொழுது அவன் விழித்துக்கொண்டிருந்தபடியால் அப்படியே விட்டுவிட்டுக் காளி கங்கனும் அவனுடைய ஆட்களும் ஓய்வு எடுத்துக்கொண்டார் கள். இரண்டு ஆட்கள் ஒரு பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள்ளே உணவுப்பொருள் கள் இருந்தன. அவற்றைக் கொண்டு அந்த இரண்டு பேரும் விருந்து தயார் செய்யத் தொடங்கினார்கள்.

காளிகங்கனுக்குப் பெரிய தொந்தி இருந்தது. அதனால் மிகவும் சிரமப்பட்டு மலையேறினான். அவன் உடம்பெல்லாம் வலித்தது. களைப்பினால் அவன் அப்படியே படுத்துத் தூங்கிப் போய்விட்டான். அவன் தூங்குவதைக் கண்டு, மற்ற ஆட் களும் அப்பொழுது தயாராக இருந்த உணவைத் தொடாமல் பாத்திரங்களிலே வைத்து விட்டுத் தூங்கலானார்கள்.

முச்சிக்கு நல்ல தருணம் கிடைத்தது. அவன் எப்படி யோ கஷ்டப்பட்டுத் தன் கைக்கட்டுகளை அவிழ்த்துக்கொண்டான். பிறகு கால் கட்டுகளை அவிழ்க்க முடியாதா என்ன? அது சுல பமாக முடிந்தது. அவன் மெதுவாக உணவுப்பெட்டியைக் கொண்டுவந்து தான் படுத்திருந்த இடத்தில் வைத்து அதன் மேலே தனது மேலங்கியைப்போட்டு மூடிவிட்டான். காளிகங் கனுடைய ஆள் ஒருவனுடைய குல்லாயைத் தன் தலையில் வைத்துக்கொண்டான். பிறகு அமைதியாக உட்கார்ந்து உணவை நன்றாகச் சாப்பிடத் தொடங்கினான்.

காளிகங்கன் அரைத்தூக்கத்தோடு விழித்துப் பார்த்தான். முச்சீ பாறையோரத்திலே அசைவில்லாமல் நன்றாகத் தூங்கு வதுபோல அவனுக்குத் தோன்றியது. உடனே அவன் அந்த இடத்திற்குச் சென்று உணவுப்பெட்டியைக் காலால் உதைத் துத் தள்ளினான். அது வெகுதூரம் கீழே சென்று தொப்பென்று விழுந்தது. “சனியன் தொலைந்தான்” என்று கூறிக்கொண்டே மகிழ்ச்சியோடு திரும்பிவந்து காளிகங்கன் மறுபடியும் படுத்துக் கொண்டான். உணவு சாப்பிடுகிற முச்சீயைத் தன்னுடைய ஆட்களில் ஒருவன் என்று நினைத்துக்கொண்டு அவன், “நன்றாகச் சாப்பிடு, நன்றாகச் சாப்பிடு. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்விட்டுப் பிறகு வருகிறேன்” என்று கூறிவிட்டுத் தூங்கிவிட்டான். அவன் மறுபடியும் எழுந்திருப்பதற்குள் முச்சீ அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான்.

மறுநாள் காளிகங்கனைத் தேடிக்கொண்டு முச்சீ அவன் மாளிகைக்குப் போனான்.

“நன்றாகச் சாப்பிடும்படி சொன்ன தற்கு நான் நன்றிகூற வந்தேன்” என்று அவன் தைரியமாகச் சொன்னான். காளிகங் கனுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. முச்சீயை அன்போடு தன் மாளிகைக்குள்ளே அழைத்தான். “இந்தா, இந்தத் தங்கத்தாயத்தை வைத்துக்கொள்” என்று நாய் வடி வத்தில் இருந்த ஒரு தாயத்தை அவனிடம் கொடுத்தான்.

நாய் வடிவத்தில் உள்ள தாயத்தைக் கழுத்தில் அணிந்து கொண்டால் பல நன்மைகள் உண்டாகும் என்பது திபெத்து நாட்டிலே ஒரு நம்பிக்கை. பேய், பிசாசு எதுவும் பக்கத்தில் வராது என்றும் சொல்வார்கள். அதனால் முச்சீ அந்தத் தாயத்தை ஆவலோடு வாங்கிக்கொண்டான். உடனே காளிகங்கன் உரத்துக் கூவத் தொடங்கினான். “டேய் திருடா! என் தாயத் தைத் திருடிக்கொண்டாயா ? இவனைப் பிடியுங்கள், கட்டுங்கள்” என்று கத்தினான். வேலைக்காரர்கள் ஓடிவந்து முச்சீயைப் பிடித்துக் கட்டினார்கள்.

“பகலிலேயே திருடுகிறாயா? உனக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன் பார்” என்று சொல்லி காளிகங்கன் முச்சீயை யாலூங் ஆற்றின்மேலிருந்த ஒரு பாலத்திற்கடியில் கட்டிவைத்தான். பாலத்தை முதுகிலே சுமப்பவனைப்போல முச்சீ பாலத்தின் அடிப்பாகத்தில் கட்டுண்டு கிடந்தான். அவனுக்கு உதவி செய்ய அங்கு யாருமே வரவில்லை. முச்சீக்குக்கீழே ஆற்றுத் தண்ணீர் கொந்தளித்துக்கொண்டு ஓடிற்று. முச்சீ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டே அழுது புலம்பினான். அவனுடைய தாயாரின் நினைவும் அவனுக்கு வந்தது. துக்கம் தொண்டையை அடைத் தது. அவனால் பாடக்கூட முடியவில்லை.

அந்தச் சமயத்திலே கலாவங்கன் அங்கே குதிரைமேல் வந்தான். அவன் காளிகங்கனுடைய தம்பி, பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குச் சென்றுவிட்டு அப்பொழுதுதான் அவன் திரும்பி வந்துகொண்டிருக்கிறான். பாலத்தின் அடிப் பாகத்தில் ஒருவன் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று.

“யாரங்கே? அங்கே என்ன செய்கிறாய்?” என்று அவன் கேட்டான்.

“நான் முதுகு பலமடையச் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான் முச்சீ.

நெடுந்தூரம் குதிரைமேல் சவாரி செய்ததால் கலாவங்க னுக்கு முதுகு வலித்தது. தானும் முதுகுக்கு பலம் கொடுக்க விரும்பினான். ” என்னையும் பாலத்துக்கு அடியில் கட்டிவைத்து அந்த வித்தையைக் கற்றுக்கொடுப்பாயா?” என்று அவன் கேட்டான்.

“பணக்காரர்களுக்கு இந்த வித்தை வராது. ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டுக் கற்றுக்கொண்டால் பிறகு முதுகுவலியே வராது” என்று முச்சீ பதில் சொன்னான். கலா வங்கனுக்கு ஆசை அதிகரித்துவிட்டது. “எப்படியாவது எனக்குச் சொல்லிக் கொடு, என்னுடைய தங்கத்தாயத்தை உனக்குக் கொடுக்கிறேன்” என்று அவன் கூறினான்.

“நீ வற்புறுத்திக் கேட்பதால் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். முதலில் என்னை அவிழ்த்துவிடு. தங்கத்தாயத்தையும் என் கையில் கொடு” என்று முச்சீ சொன்னான்.

கலாவங்கனைப் பாலத்தின் அடிப்பாகத்தில் கட்டி வைத்து விட்டு முச்சீ புறப்பட்டான். புறப்படுமுன் “யாரென்ன கேட் டாலும் நீ பதில் பேசாதே. பதில் பேசினால் எல்லாம் கெட்டுப் போகும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அவன் போய் விட்டான்.

பொழுது விழுந்தது. இருள் எங்கும் பரவிற்று. அந்த வேளையிலே காளிகங்கன் பாலத்திற்கு வந்தான். கத்தியை எடுத்துக் கயிற்றை அறுத்தான். அறுக்கவே அதில் கட்டப் பட்டியிருந்த கலாவங்கன் ஆற்று வெள்ளத்திலே வீழ்ந்து மூழ்கி மறைந்தான். “தொலைந்தான் முச்சீ” என்று கூறிக் கொண்டே காளிகங்கன் களிப்போடு வீட்டிற்குத் திரும்பினான்.

மறுநாள் காலையிலே முச்சீ தங்கத்தாயத்தைக் கையில் ஏந்திக் கொண்டு அவனிடம் சென்றான்.

“நீ எப்படியடா வந்தாய்?” என்று ஆச்சரியத்தோடு காளிகங்கன் கேட்டான்.

“நீங்கள் ஆற்றிலே என்னைத் தள்ளியது மிக நல்ல காரியம். அதனால் நான் பெரிய பணக்காரன் ஆகிவிட்டேன். இதோ பாருங்கள் தங்கத்தாயத்து” என்றான் முச்சீ.

காளிகங்கனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பணம் என்ற சொல்லைக் கேட்டதும் அவன் நாக்கில் நீர் ஊறிற்று. “எப்படிப் பணக்காரன் ஆனாய்?” என்று ஆவலோடு கேட்டான்.

“பாலத்திலிருந்து விழுகிறவர்களையெல்லாம் பணக்கார னாக்க ஆற்றுத் தேவதை திட்டமிட்டிருக்கிறது. நான் ஆற்றில் விழுந்தவுடனே அந்தத் தேவதை தோன்றி என்னை அத னுடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்றது. ஏராளமான நவரத்தினங்களையும், தங்க நகைகளையும் எனக்குக் கொடுத்தது. அவற்றை யெல்லாம் என்னால் எடுத்துக்கொண்டுவர முடிய வில்லை. இந்தத் தாயத்தை மட்டும் கொண்டு வந்தேன்” என்று கூறிவிட்டு அவன் தாயத்தை எடுத்துச் சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும்படி ஆட்டிக் காண்பித்தான். பேராசைக்காரனான காளிகங்கனுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது.

“நான் போனால் எனக்கும் கிடைக்குமா?”

“பணக்காரர்களுக்குத்தான் அங்கு நல்ல வரவேற்புக் கிடைக்குமாம். நீங்கள் போனால் ஆற்றுத் தேவதைக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும்”.

முச்சீ இவ்வாறு கூறியதைக் கேட்டதும் காளி கங்கனுக்கு உற்சாகம் பொங்கிக்கொண்டு வந்தது. பாலத்தில் இருந்து தன்னை ஆற்றுக்குள்ளே தள்ளும்படி முச்சீயை வேண்டிக் கொண்டான். முச்சீ அவன் விரும்பியவாறே செய்து முடித்தான். இதைக் காண்பதற்காக காளி கங்கனுடைய உறவினர்களும், நண் பர்களும் அங்கே ஓடிவந்தார்கள். காளிகங்கனுக்கு மட்டும் நிறையப் பொருள் கிடைக்கப்போவதை நினைத்து அவர்களுக்குப் பொறாமை உண்டாயிற்று. அதை உணர்ந்துகொண்ட முச்சீ “நீங்கள் கவலைபப்ட வேண்டாம். அவரால் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வரமுடியாது. ஆற்றில் முழுகியதும் அவர் கைகளை ஆட்டி உங்களையெல்லாம் வரும்படி சைகை காட்டு வார். நீங்கள் விரும்பினால் நீங்களும் ஆற்றில் குதித்து வேண்டிய பொருளை எடுத்துக்கொள்ளலாம்” என்று அவன் தெரிவித்தான்.

காளிகங்கன் ஆற்றில் வீழ்ந்ததும் ஏமாற்றம் அடைந்தான். அங்கே ஆற்றுத் தேவதை வரவில்லை. ஆற்றுவெள்ளம் தான் வாயிலும் மூக்கிலும் ஏற ஆரம்பித்தது. தான் ஏமாந்துபோன தை அவன் உணர்ந்தான். தன்னைக் காப்பாற்றும்படி கைகளை ஆட்டி ஆட்டி எல்லோரையும் அழைத்தான். வாய்க்குள்ளே தண்ணீர் புகுந்ததால் அவனால் பேசமுடியவில்லை. அவன் கைகளை வேகமாக ஆட்டுவதைக் கண்டதும் உறவினர்களும், நண்பர்களும் சற்றும் தாமதம் செய்யாமல் ஆற்றிலே குதித்தார்கள். ஆற்று வெள்ளம் எல்லோரையும் அடித்துச் சென்றது.

புலி வாயிலிருந்து தப்பிய ஆட்டைப்போல முச்சீ தன் வீடு திரும்பினான். இப்பொழுது அவனுக்கு யாரும் பகைவர் இல்லை. அவன் அமைதியாக நிலத்தை உழுது பயிர் செய்து வாழத் தொடங்கினான்.

– தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *