(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாவற்கள் நிறமான அந்தப் பீங்கானிலே சோறு நிறைக்கப்பட்டிருந்தது. சோற்றிலே மல்லிகை மலரின் நிற மும், மென்மையும் சிறை பிடிக்கப்பட்டிருந்தன. அந்தச் சோற்றுப் பீங்கானின் மேற்பரப்பிலே சோற்றுப்பருக்கை களோடு ஒரு நெல்லும் காட்சிதந்தது. அந்த நெல்லின் அடிப்பக்கமாக ஓரிடத்திலே தோல் மிகக்குறுகிய அளவு வெடித்திருந்தது. அதன் வழியே பாதியளவு அவிந்த அரிசி மெல்லியதாகத் தலைகாட்டியது.
அவ்வேளை, அந்நெல்லின் வதனம் வாடியிருந்ததைப் பக்கத்திலே கிடந்த ஒரு சோற்றுப்பருக்கை அவதானித்து விட்டது. மறுகணம், அந்தச் சோற்றுப்பருக்கை நெல்லின் மீது அனுதாபங்கொண்டு, “நெல்லே, நீர் ஏன் ஒரு மாதிரி யாக விருக்கின்றீர்? என்று வினவியது. அதற்கு அந்த நெல் தனது நலிந்த குரலிலே விடைபகர்ந்தது: ”இப்போது சோறாக மாற்றமடைந்திருக்கின்ற இச்சமூகம் சில காலத் திற்கு முன் நெல்லாக விருந்த போது, என்னை நன்கு அரவணைத்துக் கொண்டது. அதனால் நான் மிக்க பெரு மைப்பட்டுக் கொண்டேன். ஆனால், இப்பொழுது அதே சமூகம் சோறாக மா றியிருக்கின்ற இந்த நிலையிலே, என்னை மிகவும் வெறுக்கின்றதே! இதனை நினைக்க நினைக்கத்தான் எனக்குத் துன்பம் பொங்குகிறது. அதுதான்…” அந்தநெல் சோற்றுப்பருக்கைகளை அசதியோடு நோக்கியது.
“நீ முன்பு அப்போதுள்ள சமூக நிலைக்கேற்ப விளங் கினாய். அதனால் உன்னை அது சேர்த்துக்கொண்டது. ஆனால் இப்போதோ நீ சமூக நிலைக் கேற்ப மாற்றமடைய வில்லை. அதனா அது உன்னை வெறுக்கின்றது. எப் பொழுதும் நாம் சமுதாய நிலைக்கேற்ப மாற்றமடைந்து கொள்ள வேண்டும். இல்லையெனின் அது நம்மை வெறுத்து விடும். எனவே, நீ உண்மை நிலையை அறியாது வருந்துவது வீண்”. ஒரு பீங்கான் சோற்றினதும் ஏகப் பிரதிநிதியான அந்த ஒரு சோற்றுப்பருக்கை அறிவுரை கூறியது. அதனைக் கேட்ட பின், “ஆ.. அப்படியா?” என்றவாறு தன்னை வெறுப்பதற்குரிய காரணத்தை அறிந்துகொண்ட அந்த நெல் இப்பொழுது புதியதொரு வினாவைத் தொடுத்தது;
“சோற்றுப்பருக்கையே, நாம் இவ்வாறு மாற்ற மடைந்துகொண்டு போனால் நமக்கென்று சில கொள்கைகள் உண்டல்லவா? அவற்றையெல்லாம் நாம் துறந்துவிடுவதா?”
“நமக்கும் சில கொள்கைகள் உண்டென்பதை நாம் மறுக்கவில்லை. அதேவேளை சமுதாய மாற்றத்தோடு இணைந்து செல்வதற்காக நமது கொள்கைகளைத் துறக்க வேண்டுமென்றும் நாம் சொல்லவில்லை. நீர் எங்களைப் பார்க்கவில்லையா? நாங்கள் எமது கொள்கைகளைத் துறந்து விடாமல் தானே மாற்றமடைந்திருக்கின்றோம். நாம் இந்த விடயத்தைப் பரந்த அளவில் நோக்குவோமானால் நமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட நியாயமில்லை என்று அந்தச் சோற்றுப்பருக்கை தனது சகோதரர்களது கருத்துகளையும் சேர்த்து வெளியிட்டு வைத்தது.
அதற்கு அந்த நெல், “நீங்கள் எப்படிச் சொன்னா லும் உங்களது போக்கு எனக்குப் புரியாத புதிராகவே யிருக்கிறது” என்றது. மறுகணம் அது, தன்னை ஒரு முறை உலுக்கி விட்டுக்கொண்டு மேலும் உரையைத் தொடர்ந்தது:
“நீங்கள் எனது மாற்றத்தைக் கவனித்திருப்பீர்கள், இதற்கு மேல் என்னால் மாற்றமடைய முடியாது’
அந்த நெல்லின் இம்மாற்றம் போலியானதென்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சோற்றுப்பருக்கை அவ் வார்த்தைகளைக் கேட்டவுடனே, “சீச்சீ… இதென்ன மாற்றமா சும்மா பாசாங்கு காட்டுகிறாய்” என்றது”
அதனைச் செவிமடுத்த அந்த நெல், அந்தச் சோற் துப்பருக்கையை நோக்கி, “நீ மட்டுமல்ல, உன்சகோதரர் களும் எனது மாற்றத்தைப்பற்றி எப்படி வேண்டுமென்றா லும் நினைத்துக்கொள்ளுங்கள்” என்று விட்டு மேலும் ஏதோ கூற முற்பட்டது. அதேவினாடி, அந்தச் சோற்றுப் பருக்கை திடீரென்று குறுக்கிட்டு, “உம்மோடு பேச்சு இனிவேண்டாம். இத்தோடு நிறுத்திக்கொள்” என்றுவிட்டு அதிகவெறுப்போடு தனது முகத்தை வேறு திசை யில் திருப்பிக்கொண்டது. ஆனால், அந்தச் சோற்றுப் பருக்கையின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த நெல்லோ, செய்வதறியாது தலை கவிழ்ந்தது.
தனது சமூகம் தன்னை எவ்வளவுதான் வெறுத்து விட்ட போதிலும், அதனை விட்டும் நீங்கிக்கொள்ள மன மின்றி ஒட்டிக்கொண்டிருந்த அந்த நெல்லின் சிந்தனை இப்பொழுது முளைவிட ஆரம்பித்தது.
அவ்வேளை, அங்கு வந்த ஒரு நங்கை சோற்றுப் பருக்கைகளோடு கிடந்த அந்த நெல்லைக் காண்கிறாள். ‘இந்த நெல் மேலும் இங்கே கிடப்பது அழகல்ல’ என்று எண்ணியோ என்னவோ அவள் உடனேயே அதனை அங்கிருந்து பிரித்தெடுத்து வெளியிலே வீசி எறிந்து விடுகிறாள். இந்தச் சம்பவம் வெறுந்தரையிலே தன்னந்தனியாகக் கிடந்த அந்த நெல்லின் வேதனையை மேலும் அதிகரிக்கச் செய்தது. அதனால் அது, இப்போது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது.
வினாடிகள் நிமிடங்களாகி நேரம் கரைந்துகொண் டிருந்தது. சிறிது நேரத்தின் பின்பு அந்த நெல்லுக்கு உண்மை நிலை உதயமாகியது. ‘தமது இனத்தைச் சேர்ந்த மற்றவர்களெல்லாம் தம் கொள்கையையும் விட்டுக்கொடுக் காமல் சமூக மாற்றத்திற்கேற்ப மாற்றமடைந்து அதனோடு இணக்கமாக வாழுகின்றனரே. தானும் அவ்வாறு நடந் திருந்தால், தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதே. சமுதாய நிலைக்கேற்ப மாற்றமடைந்துகொண்டு போனால் தனது கொள்கைகள் மறைந்துவிடுமென்று தவறுதலாக எண்ணியதுதான் நான் இவ்வாறு நடந்துகொண்டதற்குக் காரணம். நான் தான் பிழை விட்டுவிட்டேன்’ என்று அந்த நெல் தனக்குள்ளே பிரலாபித்து விட்டு நிலத்தை ஆரத்தழுவிக் கொண்டது.
– தினகரன் வார மஞ்சரி – 1980.07.20.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.