மாய உலகத்தில் ஒரு பிரவேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 991 
 
 

அழுது கொண்டிருந்தான் அஸ்வின். அப்பா அடித்துவிட்டார். அம்மா திட்டிவிட்டாள். வாங்கியதோ குறைந்த மதிப்பெண், ஆனால் அதைத் திருத்தி அதிகமென ஆக்கியதை கண்டுபிடித்துவிட்டார்கள். அவ்வப்போது சின்னச் சின்ன தவறுகள் செய்வான் தான். சிறிது நேரத்தில் அவற்றை மன்னித்து விடுவார்கள். ஆனால் இந்த தவறுக்கு அவனை வெளுத்து விட்டார்கள்.

அழுதபடியே கட்டிலுக்கு கீழே படுத்திருந்தான். கொஞ்சம் பெரிய கட்டில். நேரமாக நேரமாக கட்டிலுக்கு கீழேயிருந்த இருள் கண்களுக்குப் பழகிவிட்டது. தேம்பல் நின்றது. சாப்பாடு நேரம் கடந்தது. ஆனால் இவனை யாரும் தேடவில்லை. கோபமாய் படுத்திருந்தான். கட்டிலுக்கு கீழே உருண்டபடியே சுவற்றின் ஓரத்திற்குச் சென்றான்.

சென்றவன் கைகளில் எதோ சின்ன கைப்பிடி போல தட்டுப்பட்டது. அதில் கையை வைத்தவன் விளையாட்டாக திருக ஆரம்பித்தான். அந்தக் கைப்பிடியும் இவன் சுற்றச் சுற்ற.. மறுப்பேதும் சொல்லாமல் சுற்ற ஆரம்பித்தது.

இரண்டு சுற்று தான் சுற்றியிருப்பான்.. இருளாய் இருந்த கட்டிலடி இப்போது சிறிது வெளிச்சத்திற்கு வந்ததைப் போல உணர்ந்தவன்.. கண்களை நன்றாகத் திறந்து பார்க்க.. அந்த கைப்பிடியின் அருகில்.. ஒரு சிறிய இடைவெளி தோன்றி இருந்தது. கைப்பிடியை மேலும் மேலும் திருக.. இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது.

சிறிது நேரத்தில் நன்றாக இடைவெளி வந்துவிட வெளிச்சமும் முழுதாக உள்ளேயிருந்து வந்தது. ஆச்சரியம் அடைந்தவன் மெல்ல அந்த இடைவெளிக்குள் படுத்தபடியே சென்றான். உடனே ஒரு சிறிய பள்ளம் வர.. உள்ளே குதித்தான். அவன் முன்னே ஒரு பாதை தென்பட்டது.

‘இது என்ன கட்டிலுக்கு கீழே எதாவது சுரங்கமா..!’

‘இதுல போலாமா வேணாமா..!’ திரும்பி தான் இறங்கிய வழியைப் பார்த்தான். எளிதாக ஏறிவிடலாம் போலத்தான் தோன்றியது. அந்தப்பாதையின் சிறிது தூரத்தில் ஒரு சிறிய தோட்டம் காணப்பட்டது. அதன் நுழைவாயிலே அரண்மனை முகப்பு போல இருந்தது.

இவனுக்கு பிடி கொள்ளவில்லை. உடனே போய்விடலாம் என வேக வேகமாக நடக்க ஆரம்பித்தான். தூரத்தில் ஒரு நதியின் ஓசை கேட்டது. பலவித பறவைகள் எழுப்பும் ஒலிகளும் கேட்டது. மெல்லிய தென்றலும் அங்கே உலவிக் கொண்டிருக்க.. ‘இது என்ன புதுசா இருக்கு.. இதப்பத்தி நம்ம வீட்டுல யாருக்காவது தெரியுமா.. தெரியாதா..’ என யோசித்தவனின் வயிறு இப்போது அனத்தத் தொடங்கியது.

பசி.. பசி.. பசி..

ஆகா.. இப்பப் போயி இப்படிப் பசிக்குதே..! இங்க நான் யார்கிட்ட போய் சாப்பாடு கேட்க.. என அஸ்வின் நினைத்த மறு நொடி.. இரண்டு மூன்று வித்தியாசமான உருவங்கள் அவன் முன் தோன்றின..

மூன்று அடிகளே கொண்ட விசித்திர உருவங்கள். தலை முழுதும் முகமூடி போட்டது போல இருந்தது. வெளியே வாய் சிரித்தபடி இருந்தது. கண்களைத் தேடினான் காணவில்லை. பயந்து போனவனாய் சட்டென்று அஸ்வின் நிற்க.. அவன் காலடியில் அவை விழுந்து வணங்கின..

“வியோம் வியோம் வியோம்.. வாருங்கள் வாருங்கள் இளவரசே.. உங்களுக்கு எங்கள் வந்தனங்கள்.. உங்களுக்கு இப்போது பசி என்று அறிகிறோம். உண்ண என்ன வேண்டுமோ கேளுங்கள். கேட்டது உங்களுக்கு கிடைக்கும். வியோம் வியோம் வியோம்”

“யா யா யார் நீங்க? நான் உங்களுக்கு இளவரசா? எனக்கு பசினு நான் மனசுக்குள்ளத்தானே நினைச்சேன். உங்களுக்கு எப்படி தெரியும். இது என்ன இடம்? இது எப்படி எங்க வீட்டு கட்டிலுக்கு அடியில வந்துச்சு? நான் சாப்பிட எது கேட்டாலும் எனக்கு தருவீங்களா..! அது எப்படி சாத்தியம்?”

“வியோம் வியோம் வியோம்.. இது ஒரு மாய தேசம். இது எப்போதும் மறைந்தே இருக்கும். எங்கள் தேசத்துச் சாவியைத் திருகி யார் எங்கள் தேசத்துக்குள் வருகிறார்களோ அவர்களே எங்களுக்கு இளவரசன் அல்லது இளவரசி.. எங்கள் தேசத்திற்குள் பெரியவர்கள் யாரும் வர முடியாது. அவர்களுக்கு இடமில்லை. ஆனால் ஒரு இளவரசனோ இல்லை இளவரசியோ எப்போதும் இங்கே வரவேற்கப்படுவார்கள். இங்கு எங்களைப்போன்றே ஆயிரம் பேர் உண்டு. அனைவரும் உங்களுக்கு அடிமை. எங்கள் அனைவருக்கும் மந்திர தந்திரமெல்லாம் அத்துப்படி. எங்களிடம் எது கேட்டாலும் கிடைக்கும். உங்கள் உலகில் நீங்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளீர்கள் என்று தெரிகிறது. அதனைப் போக்க எங்களால் ஆன எல்லா முயற்சிகளும் செய்வோம். இப்போது சாப்பிட என்ன வேண்டும் என்று கேளுங்கள்.. வியோம் வியோம் வியோம்”

ஆச்சரியத்தில் வாயடைந்து நின்றான் அஸ்வின். ‘என்ன நான் இளவரசனா.. எனக்கு மந்திர தந்திரம் தெரிந்த ஆயிரம் அடிமைகளா?’ யோசிக்க யோசிக்க அப்படியே வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். தனக்கு பிடித்த சாப்பாடு.. பலகாரம்.. என அவன் ஒவ்வொன்றாகச் சொல்ல.. அனைத்தும் அவனுக்கு முன்னே வரிசையாக வரத் தொடங்கியது. எதைச் சாப்பிடுவது எதை விடுவது என்றே அவனுக்குத் தெரியவில்லை. முடிந்தவரை அத்தனையும் சாப்பிட்டான். பசி பறந்தோடியது.

“வியோம் வியோம் வியோம்.. தாங்கள் நிம்மதியாக உணவருந்தியதைக் கண்டு நாங்கள் அகமகிழ்ந்தோம். வாருங்கள் இளவரசே.. தங்களது அரண்மனைக்குச் செல்வோம்.. வியோம் வியோம் வியோம்”

என அவர்கள் கூறி முடித்த வேளை, ஒரு தங்கத்தேர் வந்து அவன் முன்னால் நின்றது. தேரில் குதிரைகளுக்குப் பதிலாக இவர்களைப் போன்ற இரண்டு பேர் இருந்தனர். தேரோட்டியாகவும் இவர்களைப் போன்றே இருந்தார் ஒருவர். இவன் ஏறியதும் தேர் புறப்பட்டது.

இரண்டு நிமிடங்களில் ஒரு பெரிய அரண்மனை வாயிலில் தேர் நிற்க.. வெளிய இறங்கிய அஸ்வின்.. அரண்மனை நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர்ந்த கண்ணாடியில் தன்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டான். முழுவதுமாய் மாறி இருந்தான் அஸ்வின். ராஜ உடை அணிந்திருந்தான். முகத்தில் கூட ராஜகளை தாண்டவமாடியது.. நானா நானா இது என தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அவனே தான். வேறு யாரும் அல்ல..

‘எதற்கு எனக்கு இவ்வளவு பெரிய பரிசு.. ஒரு தப்பு செய்தேன். அதற்கான தண்டனையாக அடி வாங்கி அழுது கொண்டிருந்த எனக்கு இப்படியோரு ஆச்சரிய உலகம் பரிசா? நம்பவே முடியவில்லையே!’ என அஸ்வின் யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. அஸ்வினை அழைத்துச் செல்ல அரண்மனை உள்ளேயிருந்து மந்திரியும், படைத்தளபதியும் வந்துவிட்டனர்.

“வியோம் வியோம் வியோம்.. வாருங்கள் இளவரசே வாருங்கள்.. சேருங்கள் இளவரசே சேருங்கள்.. நமது தேசத்தை வெற்றிகரமான தேசங்களின் பட்டிலலில் சேருங்கள்.. கூறுங்கள் இளவரசே கூறுங்கள்.. நமது அரண்மனைச் சிறையில் ஆயிரம் ஆண்டுகளாய் தீர்ப்பு வேண்டி அடைபட்டு கிடப்பவர்களுக்கு.. ஒரு முறையான தீர்ப்பை கூறுங்கள் இளவரசே கூறுங்கள்.. வியோம் வியோம் வியோம்..”

அஸ்வினின் சிந்தனையில் என்னென்னவோ ஓடியது.

‘வரவேற்பெல்லாம் பிரமாதம். சாப்பாட்டு கவனிப்பெல்லாம் அட்டகாசம். ஆனா எதோ தீர்ப்புன்னு சொன்னாங்களே.. அதுக்கும் எனக்கும் என்ன

சம்பந்தம்.. நானோ சின்னப்பையன். செஞ்ச தப்புக்கு அடி வாங்கிட்டு ஓடி வந்தவன். எங்கிட்ட தீர்ப்பு கேட்டா என்ன கிடைக்கும்? அதும் ஆயிரம் ஆண்டு சிறையில இருக்கறவங்க.. முன்னாடியே இவ்வளவு பெரிய தண்டனை வாங்கிட்டாங்களே.. அப்பறம் நான் என்ன தீர்ப்பு சொல்றது? யாரா இருந்தாலும் விடுதலை கொடுத்திட வேண்டியது தான். சரி.. என்ன நடக்குதுனு பார்க்கலாம்”, என ஆவலாக அரண்மனையின் உள்ளே சென்றான்..

அரண்மனை ஆரம்பத்திலேயே இனிமையான வாத்தியங்கள் முழங்கின. இன்னிசை காதுகளில் குளிர்ச்சியைக் கொடுக்க.. இன்பமாய் நடந்துவந்தான் மாய தேசத்து இளவரசன் அஸ்வின். அரண்மனையின் உள்கட்டமைப்பு அத்தனை கம்பீரத் தோற்றம் கொடுத்து அஸ்வினை மெய்சிலிர்க்க வைத்தது. ‘இத்தகைய அரண்மனைக்கு நான் இளவரசனா? யாரிடமாவது நான் சொன்னால் எப்படி நம்புவார்கள்? இதையெல்லாம் எப்படி நான் நிரூபிப்பேன்?’ என்ற யோசனையிலேயே அரியணையில் அமர்ந்தான்.

அதுவரை இரண்டு புறமும் நின்றிருந்த அமைச்சர் பெருமக்கள் அஸ்வின் அமர்ந்ததும் அமர்ந்து கொண்டனர்.

தலைமை அமைச்சர் எழுந்து நின்றார்.

“வியோம் வியோம் வியோம்.. எங்கள் இளவரசருக்கு என் வந்தனங்கள். அரசவைக்கு வருக.. உங்கள் அன்பு மொழி தருக. உங்கள் உரையைக் கேட்க அரசவையே ஆவலாக உள்ளது.. வியோம் வியோம் வியோம்”

‘என்ன உரையா? நானா? எப்படி?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. தானாகவே தன் கட்டுப்பாடு இல்லாமலே எழுந்து நின்றான் அஸ்வின்.

“வியோம் வியோம் வியோம்..” என்ன அவர்கள் சொல்வதையே நாம் பேசுவதற்கு முன் சொல்கிறோமே என்ற சிந்தனை எதுவுமில்லாமல் தன் சிற்றுரையை ஆரம்பித்தான் இளவரசன் அஸ்வின்.

“மாய தேசத்தின் அனைவருக்கும் என் வந்தனங்கள். உங்கள் அனைவரின் வரவேற்பிலும் அகமகிழ்ந்தேன். நம் தேசத்தை அனைவருக்கும் அறியச் செய்வோம். நம் வீரத்தை எங்கெங்கும் பறை சாற்றுவோம். வெற்றி மட்டுமே நமது மந்திரமாகட்டும். உண்மையான நாட்டுப்பற்றுள்ளவர்கள் நாம் தானென்று அனைவருக்கும் உரக்கச் சொல்வோம். சொல்லப்போனால் நம் நாடு எதிரிகளே இல்லாத நாடு. இது ஒரு பாதாள நாடு. அவ்வப்போது தோன்றும் இளவரசர்கள், இளவரசிகளால் உயிர் பெற்றெழும் நாடு. இந்நாட்டின் இளவரசன் என்ற பதவியை நான் பெற்றது பெருமகிழ்ச்சி. எதிர்பாராத சந்தோசம். யோசிக்க முடியாத விஷயங்களையெல்லாம் நான் இங்கு காண்பது ஆச்சரியமளிக்கிறது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி. வந்தனம்.. வியொம் வியோம் வியோம்”

அஸ்வினின் உரைக்குப் பின் அவை நீண்ட நேரம் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

“என்ன நானா இப்படி? நானா பேசினேன்? எனக்கு இப்படியெல்லாம் கூட பேசத் தெரியுமா?”, என்று ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தான் அஸ்வின்.

மீண்டும் எழுந்தார் அமைச்சர்.

“வியோம் வியோம் வியோம்.. நமது சிறையில் ஆயிரம் வருடங்களாக இருக்கும் அந்த இரண்டு கைதிகளை இழுத்து வாருங்கள்.. வியோம் வியோம் வியோம்”

இவர்களைப் போலவே இருந்த இரண்டு பேர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவையில் இழுத்துவரப்பட்டு நிறுத்தப்பட்டனர்.

இருவரும் மிகவும் சோகமாக.. கண்ணீருடன் இருப்பார்கள் என்று பார்த்தான் அஸ்வின். அவர்களோ மிகவும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு வந்து நின்றனர்.

“வியோம் வியோம் வியோம். இவர்கள் செய்த குற்றமென்ன? வியோம் வியோம் வியோம்”

சிறை அதிகாரி எழுந்தார்.

“வியோம் வியோம் வியோம். ஒவ்வொரு முறையும் உங்களைப் போல் எங்கள் முன் தோன்றும் இளவரசனையோ இளவரசியையோ அவர்கள் மீண்டும் தங்களது பிறந்த நாட்டிற்கு போக முடியாமல் கொன்று விடுகிறார்கள். அதுவும் தீர்ப்பு சொல்ல அழைத்து வரப்படும் அன்றே அதனைச் செய்கிறார்கள்.. வியோம் வியோம் வியோம்”, என்று அவர் கூறி முடித்த நொடி அதிர்ந்து போய் எழுந்து நின்றான் அஸ்வின்.

திடீரென்று அப்பா, அம்மாவெல்லாம் ஞாபகம் வந்தார்கள். வீடு ஞாபகம் வந்தது. பள்ளி ஞாபகம் வந்தது. நண்பர் கூட்டம் ஞாபகம் வந்தது. ‘இது என்ன சோதனை? மாய தேசத்தில் இதுவரை ஆச்சரியத்தில் இருந்த என்னை இப்போது அழிக்கப் பார்க்கிறார்களே! இதற்காகவா இத்தனை வரவேற்பு? இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்? இதற்காகவா என் சொற்பொழிவு? இதற்காகவா நான் இளவரசன் ஆனேன். இனி நான் நன்றாக படிப்பேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். குறிப்பாக அப்பா அம்மாவை.. என்னை மன்னித்து விடுங்கள் இருவரும். எனக்கு எதாவது யோசனை கொடுத்து பிழைக்க வையுங்கள்.. ஆகா.. உடனே நான் திரும்பிப் போக வேண்டுமே.. இந்த தீர்ப்பு பற்றி எதுவும் சொல்லாமல் திரும்பி போனால் தப்பிப்பிழைக்க வாய்ப்பு இருப்பது போல இருக்கிறதே.. என்ன செய்யலாம்’ என நின்ற படியே யோசித்தான் அஸ்வின்.

வியோம் வியோம் வியோம் மன்னரே தீர்ப்பு? வியோம் வியோம் வியோம்”, என்று மந்திரி கேட்கும் சத்தம் கேட்டது.

தனக்கு எதுவும் தெரியாது என்பது போல..

“சர்ர டெர்ர பர்ர டோர்..

சில்ல செல்ல பெல்ல மோர்..

செட்ட டெட்ட பெட்ட தேர்..

சொவ்வ பொவ்வ மொவ்வ கூர்..”, என்றவன் இன்னும் ஏதோதோ உளர‌த் தொடங்கினான்.

அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படிச் சொல்லியபடியே அஸ்வின் மயங்கி விழுந்தது போல நடிக்க.. பதறிவிட்டனர் அனைவரும்..

மயக்கத்திலேயே.. ‘வீடு வீடு என் வீடு விடு விடு.. விட்டு விடு..’ என அவன் புலம்ப.. உடனடியாகத் தேர் வரவழைக்கப்ப்பட்டது.

கைதிகள் மீண்டும் சிறைக்குப் போக.. அஸ்வினை அழைத்துக்கொண்ட அவன் முதல் முதலில் வந்த இடத்திற்கே வந்தனர்.

அப்போது மெல்ல முழித்தவனை அதோ என்று அவர்கள் கைகாட்ட..

தான் வந்த இடத்திற்கு வந்துவிட்டோம் என்று அறிந்தவன் மெல்ல இறங்கி அங்கு சென்று, குதித்து ஏறி.. அச்சிறுவழியில் நுழைந்து தன் வீட்டு கட்டிலுக்கு அடியில் வந்தான். மெல்லத் திருகி அந்த வழியை அடைத்தான்.

ஒரு பெருமூச்சு விட்டான்.

எப்படி உயிர் பிழைத்து வந்தோம் என்பதே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. படபடவென்று வெளிய வந்து அம்மாவையும், அப்பாவையும் தேடினான். நல்லிரவாதலால் அனைவரும் உறங்கி விட்டிருந்தனர்.

மீண்டும் அவன் அந்த மாயலோகத்திற்கு போகும் வாய்ப்பே இல்லை.

அவன் வீட்டிற்குள் புதைந்த கிடந்த மாய லோகத்தின் நினைப்பிலேயே வரும் நாட்களில் மிகவும் நன்றாக படிக்க ஆரம்பித்தான் அஸ்வின்.

ஆனாலும் அடிக்கடி அவன் கனவில் அவர்கள் வந்து ‘வியோம் வியோம் வியோம்’ என்று சொல்லிக் கொண்டு தான் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *