ரம்யாவுக்கு அவளது தோழிகளுடன் அடிக்கடி சண்டை வந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள். எதற்காகத் தோழியருடன் தனக்கு சண்டை வருகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படிச் சண்டை வராமல் தடுக்கவும் முடியவில்லை.
இப்படி அடிக்கடி சண்டை போடுவதால் அனைவரும் சேர்ந்து தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்தாள். கடும் மன உளைச்சலுக்கும் ஆளானாள்.
மிகுந்த மனக்கவலையுடன் இருந்த ரம்யாவின் முன்னால் ஒரு நாள் தேவதை ஒன்று தோன்றியது…
ரம்யா அந்த தேவதையிடம், “”எனக்கு உதவ முடியுமா?” என்று கேட்டாள்.
“”அதற்காகத்தானே வந்திருக்கிறேன்…” என்ற தேவதை ரம்யாவிடம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைத் தந்தது.
“”இது சாதாரணக் கண்ணாடி கிடையாது. மாயக் கண்ணாடி! நாம நம்பளை என்னவாக நினைச்சுக்கிட்டு இந்தக் கண்ணாடியைப் பார்க்கிறோமோ அந்த உருவம் இதுல தெரியும்..!” என்ற தேவதை, “”நீ இதை உன் நண்பர்கள் எல்லோரிடமும் காண்பி.. அதுக்குப் பின்னாடி என்னை வந்து பாரு!” என்று சொல்லிவிட்டு மறைந்து போனது.
தனக்கு உதவச் சொன்னால் இப்படிக் கண்ணாடியைத் தந்துவிட்டுப் போகிறதே இந்தத் தேவதை என்று குழம்பினாள் ரம்யா.
இருந்தாலும் தேவதை சொன்னதைச் செயல்படுத்தினாள். அடிக்கடித் தன்னை ஒரு ராணியாகக் கற்பனை செய்து கொள்வது அவளுடைய வழக்கம். தன்னை ஒரு ராணியாகக் கற்பனை செய்து கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள்…
பல்லக்கில் பவனி வரும் மகாராணியாகத் தெரிந்தாள் ரம்யா! ரம்யாவின் தம்பிக்குக் கெüபாய் படங்கள் என்றால் உயிர்! தன்னை ஒரு கௌபாய் வீரனாகக் கற்பனை செய்து கொண்டு கண்ணாடியைப் பார்த்தான் அவன்.
ஸ்டைலான கெüபாய் வீரனாகத் தெரிந்தான்.
அக்கம்பக்கம் குடியிருக்கும் தனது தோழியர் சிலரிடம் அந்தக் கண்ணாடியைக் காண்பித்தாள் ரம்யா. வகுப்புத் தோழியர் சிலரை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களிடமும் காண்பித்தாள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவம் தெரிந்தது. பக்கத்து வீட்டுத் தோழி ஒருத்திக்கு அரக்கியாக, சித்தப்பா பையனுக்கு ஏர் ஓட்டும் உழவனாக, வகுப்புத் தோழிக்கு விஞ்ஞானியாக, அத்தை பையனுக்கோ சர்க்கஸில் கூத்து காட்டும் கோமாளியாக அவரவருடைய விருப்பத்துக்கேற்ப உருவங்கள் அந்தக் கண்ணாடியில் பிரதிபலித்தன.
ஒவ்வொருவரின் கற்பனையும் ஒவ்வொரு விதத்தில் சுவராசியமாகத்தான் இருந்தது.
தேவதை தனக்கு என்ன வழி சொல்லப் போகிறது?
மிகுந்த ஆர்வத்துடன் ஒருநாள் தேவதையை அழைத்தாள்.
ஓர் அர்த்தப் புன்னகையுடன் ரம்யாவின் முன்னால் தோன்றியது அந்தத் தேவதை.
“”என்ன ரம்யா? உன் நண்பர்கள்கிட்ட காண்பிச்சியா?” கேட்டது அது.
“”காண்பிச்சேன்..! இந்தா உன் கண்ணாடி…” ரம்யா கண்ணாடியைத் திருப்பித் தர அதைப் பெற்றுக் கொண்டு அந்த தேவதை கிளம்பத் தயாரானது…
“”என் பிரச்னைக்குத் தீர்வு?” அவசரமாக இடைமறித்தாள் ரம்யா.
“”நீதான் சூட்டிகையான பெண்ணாச்சே… இந்தக் கண்ணாடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையை உன்னாலப் புரிஞ்சுக்க முடியலையா?” என்று கேட்டது தேவதை.
“”குழப்பமா இருக்கு… நீயே சொல்லி விடேன்…” ரம்யா கெஞ்சினாள்.
ஓரிரு விநாடிகள் அமைதிக்குப் பின்பு தேவதை சொல்ல ஆரம்பித்தது.
“”கண்ணாடியில தெரிஞ்சது உங்க உருவமில்லை! அது உங்க கற்பனை… அதாவது உங்க சிந்தனை! எந்த ரெண்டு பேரோட சிந்தனையாவது ஒண்ணா இருந்துச்சா, ரம்யா?” தேவதை கேட்டது.
“”இல்லை… இல்லை…” தலையாட்டி மறுத்தாள் ரம்யா.
“”இதுதான் மனுஷங்க மனசு, ரம்யா! எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ரெண்டு பேரோட மனசும் ஒண்ணு போல சிந்திக்காது. மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்! நால பேரு மத்தியில நாம இருக்கும்போது இதை இயல்பா எடுத்துக்கணும்! உனக்கு என்ன பிரச்னைன்னா, நீ மத்தவங்க கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய். நீ நினைச்சதுதான் சரின்னு பிடிவாதம் பிடிக்கிறாய். நீ என்ன விரும்புகிறாயோ, அதைத்தான் உன்னைச் சுற்றி இருக்கறவங்களும் விரும்பணும்னு நினைக்கிறாய்… எப்ப நம்ம கருத்தை மத்தவங்க மேல வலிஞ்சு திணிக்கிறோமோ அப்ப கண்டிப்பா அந்த இடத்துல சண்டை சச்சரவு வரத்தான் செய்யும்! அதனாலதான் உனக்கு உன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி சண்டை வந்துவிடுகிறது…” என்ற தேவதை சற்று இடைவெளிவிட்டுச் சொன்னது –
“”உன்னோட கருத்து சரியா இருக்கலாம். ஆனா அதைச் சொல்ற விதம்னு ஒண்ணு இருக்கு! அதிகாரமா சொன்ன எடுபடாது. பொறுமையாகவும் அன்பாகவும் சொன்னா எல்லோரும் ஏத்துப்பாங்க. உன்னுடைய அணுகுமுறையை மாத்திப் பாரு ரம்யா. எந்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து உன்னை ஒதுக்கிவிடுவாங்கன்னு பயப்படுகிறாயோ அவர்களே உன்னைத் தலைமேல வைச்சுக் கொண்டாடுற சூழ்நிலை உருவாகும்! நான் வருகிறேன்…” என்று கூறிவிட்டு தேவதை மறைந்து போனது.
பள்ளியில் மதிய இடைவெளி நேரம். ரம்யா தனது பென்சிலைச் சீவுவதற்காக ஷார்ப்பனரைத் தேடினாள். அவளுடைய ஷார்ப்பனரைத் தோழி ஒருத்தி வைத்திருந்தாள். ரம்யாவுக்கு முணுக்கென்று கோபம் வந்துவிட்டது. வேறொரு சமயமாக இருந்தால் அந்தத் தோழியைக் கண்டபடி திட்டியிருப்பாள். ஆனால் இப்போது தேவதை கூறிய அறிவுரை ஞாபகத்துக்கு வரவே நயந்து பேசினாள்-
“”நீதான் என் ஷார்ப்பனரை எடுத்தியா? ஒரு வார்த்தை சொல்லிவிட்டு எடுத்திருக்கக்கூடாதா? நீ எடுத்தது தெரியாம நான் ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டிருக்கேன் பாரு…” என்றாள்.
இவள் சுடு சொற்களைப் பேசும்போது பதிலுக்கு அவர்களும் சுடுசொற்களைப் பேசுவார்கள்.
ஆனால் இப்போது தோழி அப்படிப் பேசவில்லை.
“”ஸôரிப்பா… உன்கிட்ட கேட்காமல் எடுத்தது தப்புதான்! என்னை மன்னிச்சுடு…” என்றபடி ஷார்ப்பனரைத் திருப்பித் தந்தாள்.
அணுகுமுறை செய்யும் மாயாஜாலத்தை நன்றாகவே புரிந்து கொண்டாள் ரம்யா. தொடர்ந்து அதைக் கடைப்பிடித்தும் வந்தாள்.
அதற்குப் பின்னால் அவளுக்கும் தோழியருக்கும் இடையில் சண்டைகளே வரவில்லை..!
– ஏப்ரல் 2012