கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 6,216 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ManKuttiஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும். குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல் இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது, எங்கே எப்படித் தண்ணீர் குடிப்பது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கும்.

அந்தக் காட்டுக்கு அடிக்கடி வேட்டைக்காரர்கள் வரு வார்கள். அவர்கள் வரும் போது கூடவே வேட்டை நாய்களையும் அழைத்து வருவார்கள். முயல், மான் முதலிய பிராணிகளைத் தான் அவர்கள் அதிகமாக வேட்டையாடுவார்கள். ஏதாவது ஒரு முயல் அல்லது மானைக் கண்டுவிட்டால், உடனே வேட்டை நாயை ஏவி விடுவார்கள். அந்த நாய்களைக் கண்டாலே முயல்களுக்கும், மான்களுக்கும் கிலிதான். தலை தெறிக்க ஓட ஆரம்பித்து விடும்.

ஒரு நாள் அம்மா மான் குட்டி மானைப் பார்த்து, “கண்ணு, இந்தக் காட்டிலே வேட்டை நாய் உபத்திரவம் அதிகம். அதனாலே, நீ வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தது.

அதற்குக் குட்டி மான், “வேட்டை நாயா! அது எப்படி யம்மா இருக்கும்? நான் பார்த்ததே இல்லையே!” என்றது.

“நான் கூட அதைச் சரியாகப் பார்த்ததில்லை. அதைப் பார்க்கவே பயமாயிருக்குமாம்!” என்று சொன்னது அம்மா மான்.

“பயமா! அது என்னம்மா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டது குட்டி மான்.

“நீயோ இளங்கன்று. உனக்குப் பயத்தைப் பற்றி என்ன தெரியும்? ஆனாலும், நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தூரத்தில் வேட்டைநாய் வரும் சத்தத்தைக் கேட்டால், உடனேயே நாம் எதிர்த் திசையிலே வெகு வேகமாய் ஓடிப் போய்விட வேண்டும்” என்று சொன்னது அம்மா மான்.

உடனே குட்டி மான், “அப்படியா! ஏனம்மா அப்படி ஓட வேண்டும்? அது என்ன செய்துவிடுமாம்?” என்று கேட்டது.

ManKutti1“என்ன செய்யுமா? வேகமாக ஓடிவந்து அப்படியே ‘குபுக்’ கென்று மேலே பாயும். பாய்ந்து பல்லாலே சதையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். உடனே வலி தாங்காமல் நாம் ‘தொப்’பென்று கீழே விழுந்து விடுவோம். அப்போது, வேட்டைக்காரர்கள் ஓடிவந்து நம்மைப் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள்” என்று விளக்கிச் சொன்னது அம்மா மான்.

இதைக் கேட்டதும் குட்டி மான், “ஏனம்மா, வேட்டை நாய்க்கு நீ மட்டும் தான் பயப்படுகிறாயா? அல்லது எல்லா மான்களுமே பயப்படுமா?” என்று கேட்டது.

“எல்லா மான்களுக்குமே பயம்தான். வேட்டை தாய்க்குப் பயப்படாத மானே இருக்காது” என்றது அம்மா மான்.

“அப்படியானால், ஆண் மான்கள் கூட வா பயப்படும்?”, என்று சந்தேகத்தோடு கேட்டது குட்டி மான்.

“ஆண் மானாவது, பெண் மானாவது? எந்த மானாயிருந்தாலும் வேட்டை நாய்க்குப் பயம்தான்” என்றது அம்மா மான்.

“ஏனம்மா , ஆண் மானுக்குத்தான் கொம்பு இருக்கிறதே! அது ஏன் பயப்படவேண்டும்? வேட்டை நாய் பக்கத்திலே வந்ததும், கொம்பாலே குத்திக் கீழே தள்ளி விடலாமே ! எனக்குக் கொம்பு முளைக்கட்டும். நான் என்ன செய்கிறேன் பார்” என்று பெருமையோடு சொன்னது குட்டி மான்.

“கண்ணு, நமக்குக் கடவுள் கொம்பைக் கொடுத்தது சண்டை போடுவதற்காக அல்ல. அழகுக்குத்தான் கொடுத்திருக்கிறார்” என்றது அம்மா மான்.

இப்படி அம்மா மானும், குட்டி மானும் பேசிக்கொண் டிருக்கும்போதே, தூரத்தில் ஏதோ சத்தம் கேட்பது போலிருந்தது. உடனே, அம்மா மான் தன் காதுகளை நிமிர்த்திக் கொண்டு சத்தம் வந்த பக்கம் பார்த்தது. மறுநிமிஷம், “ஐயையோ, வேட்டைநாய் வருவதுபோல் தெரிகிறதே! வா, வா. சீக்கிரம் ஓடிவா” என்று கூறிவிட்டு, முன்னால் ஓட ஆரம்பித்தது அம்மா மான்.

ஆனால், குட்டி மான் ஓடவில்லை. ‘இந்த வேட்டை நாய் எப்படித்தான் இருக்கும் என்று பார்த்துவிடவேண்டும்’ என்று நினைத்தது. உடனே அங்கே இருந்த ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.

சிறிது நேரத்தில், ‘தடதட’ என்று வேட்டை நாய் அந்தப் பக்கமாக ஓடி வந்தது. ஆனால், நல்லகாலம்; அது ஒளிந் திருந்த மான்குட்டியைப் பார்க்கவில்லை! ஏதோ ஒரு திசையைப் பார்த்து ஓடிவிட்டது.

ManKutti2வேட்டை நாய் போனபிறகு, குட்டிமான் வெளியே வந்தது. அம்மா போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்றது. வெகு நேரம் சென்று அம்மா மான் அங்கு வந்து சேர்ந்தது. வந்தவுடனே அது குட்டி மானைப் பார்த்து, “அப்பா! நல்லகாலம். அந்தச் சண்டாள நாயிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டாய்! ‘இளங்கன்று பயமறியாது’ என்பார்கள். அது உன் விஷயத்தில் உண்மைதான். என்ன இருந்தாலும் நான் ஓட ஆரம்பித்தவுடனே நீயும் ஓடி வந்திருக்க வேண்டும். நீயும் கூட வருவாய் என்று நினைத்துத்தான் நான் முன்னால் ஓடினேன். போகட்டும். இனி, இந்த மாதிரி செய்யாதே. ஆபத்து!” என்று புத்தி சொன்னது.

“அம்மா, நீ மிகவும் பயப்படுகிறாய் அம்மா! நான் இந்தப் புதருக்குள் ஒளிந்துகொண்டு, வேட்டை நாய் எப்படியிருக்கும் என்று பார்த்தேன். அது உன் உயரம்கூட இல்லை. அதற்குக் கொம்பு இருக்கிறதா என்று பார்த்தேன். அதுவும் இல்லை. அதனால் நம்மை என்ன செய்ய முடியும்? எனக்கு மட்டும் கொம்பு முளைக்கட்டும்; ஒரே குத்திலே அதைக் குத்திக் கீழே சாய்த்து விடுகிறேன்” என்று வீரமாகச் சொன்னது குட்டி மான்.

இதைக் கேட்டதும், அம்மா மான் சிரித்துக்கொண்டே , “குழந்தாய், நீ பெரிய தைரியசாலிதான். இருந்தாலும், வேட்டை நாய், சிங்கம், புலி இந்த மாதிரி மிருகங்களுக்கெல்லாம் நாம் பயப்படாமல் இருக்க முடியாது. கடவுள் நமக்கு அந்த மாதிரி படைத்திருக்கிறார்” என்றது.

உடனே குட்டி மான், “ஏனம்மா, இந்தக் காட்டிலே சிங்கம் கூட இருக்கிறதா?” என்று கேட்டது.

ManKutti3“இருக்கிறது. ஆனால், எப்போதாவது அபூர்வமாகத்தான் இந்தப் பக்கம் வரும்” என்றது அம்மா மான்.

“அப்படியா! அதையும் ஒரு நாளைக்கு நான் நேரிலே பார்த்து விடுகிறேன்” என்றது குட்டி மான்.

“ஐயையோ, சிங்கத்தை நேரிலே பார்ப்பதா! அது நம்மைக் கொன்று போட்டு விடுமே!” என்று உடம்பை உதறிக் கொண்டே சொன்னது அம்மா மான்.

“போம்மா, எதைச் சொன்னாலும், அது கடித்துவிடும், இது கொன்றுவிடும் என்றுதான் சொல்கிறாய்” என்று சலிப்போடு கூறியது குட்டி மான்.

“நீயோ சிறுபிள்ளை, உனக்கு எங்கே பயம் தெரியப் போகிறது?…சரி, வா, தண்ணீர் குடித்துவிட்டு வரலாம்” என்றது அம்மா மான்.

பிறகு அம்மா மானும், குட்டி மானும் தண்ணீர் குடிக்கச் சென்றன.

இது நடந்து ஒரு வாரம் இருக்கும்.

அன்று ஒரு நாள், குட்டி மானும், அம்மா மானும் ஒரு குட்டைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றன. தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பி வரும்போது, அம்மா மான் குனிந்து தரையைப் பார்த்தது. பார்த்ததும், “ஐயையோ, சிங்கமல்லவா இங்கே வந்திருக்கிறது!” என்று பயத்தோடு சொன்னது.

ManKutti4“என்னம்மா, சிங்கமா! அது எப்படி இருக்கும்? சொல்லம்மா” என்று கேட்டது குட்டி மான்.

“இதோ பார், சிங்கத்தின் காலடி தெரிகிறது. இந்தப் பக்கமாகத்தான் அது போயிருக்கிறது. ஆகையால், நாம் இப்படிப் போவதே ஆபத்து! வந்த பக்க மாகவே ஓடி விடலாம். சிங்கம் நம்மைப் பார்த்தால், சும்மா விடாது. அப்படியே மேலே பாய்ந்து, கடித்துத் தின்றுவிடும்” என்று திகிலுடன் கூறியது, அம்மா மான்.

உடனே குட்டி மான், “நீ வேண்டுமானால், போம்மா. நான் இங்கேயிருந்து சிங்கத்தைப் பார்த்து விட்டுத்தான் வரப்போகிறேன்” என்றது.

இதைக் கேட்டதும் அம்மா மானுக்குக் கோபம் வந்து விட்டது. “என்ன இது, புரியாமல் பேசுகிறாயே! சாவதானமாகப் பேச இது நேரமில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகவேண்டும். வா, நாம் இருவரும் ஓடிப் போய்விடலாம்” என்று கட்டாயப் படுத்தியது.

அதே சமயம் ‘தட தட’ என்று தூரத்திலே ஒரு சத்தம் கேட்டது. உடனே, அம்மா மான், “ஐயோ, வேட்டை நாய் வேறு வருகிறதே! இனியும் இங்கு நிற்கலாமா! வா, வா, சீக்கிரம் வா. நிற்காதே! உம், ஓடி வா” என்று கூறிக்கொண்டே ஓட ஆரம்பித்தது.

அம்மாவின் பின்னால் குட்டி மான் ஓடவில்லை. முன்போலவே அங்கிருந்த ஒரு பெரிய புதருக்குள் மறைந்து கொண்டது வேட்டை நாய் எந்தப் பக்கம் வருகிறது என்று இடுக்கு வழியாகப் பார்த்தது.

வேட்டை நாய் அதே வழியாகத்தான் வந்தது. புதருக்குச் சிறிது தூரத்தில் வந்ததும், அது நின்றது. இங்கும் அங்குமாக மோப்பம் பிடித்தது. பிறகு, புதருக்குப் பக்கத்திலே வந்தது. இன்னும் ஒரு விநாடியில், அது மான் குட்டி ஒளிந்திருப்பதைக் கண்டு பிடித்துவிடும்! உடனே, ஒரு தாவாகத் தாவி, அதன் மென்னியைப் பிடித்துவிடும்!

ManKutti5ஆனால், அதற்குள் ‘ஹா!’ என்ற சத்தம் கேட்டது. உடனே அந்தக் காடே கிடுகிடுத்தது. அது என்ன சத்தம்? சிங்கம்தான் அப்படிக் கர்ஜனை செய்தது. சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும், வேட்டை நாய் ஓடிப்போய் ஒரு மரத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டது.

சிறிது நேரத்தில் சிங்கம் அந்தப் பக்கமாக வந்தது. புதருக்குள் மறைந்து கொண்டிருந்த குட்டி மான் சிங்கத்தை உற்றுப் பார்த்தது. பார்த்ததும், “ப்பூ, இந்தச் சிங்கத்திற்குத் தானா அம்மா பயப்படுகிறாள்! இது நம்மை என்ன செய்து விடும்? இது நம் அம்மா உயரம் கூட இல்லை. தலையிலே கொம்பையும் காணோம். சத்தம் தான் பலமாகப் போடுகிறது” என்று நினைத்தது.

சிங்கம் அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டே நடந்தது. அப்போது மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த வேட்டை நாயை அது பார்த்து விட்டது. உடனே, அது கர்ஜித்துக் கொண்டே வேட்டை நாயை நோக்கிப் பாய்ந்தது. வேட்டை நாயைக் கண்டாலே, அந்தச் சிங்கத்துக்குக் கோபம் அபாரமாக வந்துவிடும். “இந்த வேட்டை நாய்களால் தானே காட்டிலுள்ள முயல்களும், மான்களும் குறைந்து கொண்டே வருகின்றன! ஆகையால், நாம் இதைச் சும்மா விடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டே சிங்கம் வேகமாகப் பாய்ந்தது.

வேட்டை நாய்க்குத் தப்ப வழியில்லை. அதனால், அது சிங்கத்தை எதிர்த்துச் சண்டைபோட ஆரம்பித்தது. ஒளிந்திருந்த மான் குட்டி சிங்கத்தையும் வேட்டை நாயையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தது. இரண்டும் ஒன்றை ஒன்று பற்களால் கடித்தன; நகங்களால் கீறின, ‘உர்ர்…. உர்ர்’ ‘வள் … வள்’ என்று சத்தம் போட்டன. சிறிது நேரத்தில் இரண்டுக்கும் உடம்பெல்லாம் காயம்! தரையெல்லாம் இரத்தம் !

நேரம் ஆக ஆக வேட்டை நாய் ஓய்ந்து விட்டது. சிங்கம் சளைக்கவில்லை. வீராவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் வேட்டை நாயின் ஆயுள் முடிந்துவிடும் என்று குட்டி மானுக்குத் தெரிந்து விட்டது. உடனேயே, அதன் உடல் நடுங்கியது; உரோமம் சிலிர்த்தது. பயம் மனத்திலே புகுந்துகொண்டது!

ManKutti6‘சரி, இனிமேல் நாம் இங்கிருந்தால் நமக்கும் இதே கதிதான்! நாயைத் தீர்த்துக் கட்டிவிட்டு, சிங்கம் நம்மிடத்திலே வந்துவிடும். சிங்கத்தைப் போலவே வேட்டை நாய்க்கும் கோரமான பற்கள் இருக்கின்றன; கூர்மையான நகங்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும், அதனாலேயே, சமாளிக்க முடியவில்லையே! நம்மால் எங்கே முடியப் போகிறது? சிங்கத்தின் உருவத்தையும், வேட்டை நாயின் உருவத்தையும் பார்க்கும்போது எனக்குப் பயம் ஏற்படவில்லை. ஆனால் அவைகளின் துஷ்ட குணங்களைப் பார்க்கும் போதுதான் ஒரே பயமாக இருக்கிறது. துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று அம்மா சொன்னதைக் கேட்காமல் போனேனே. இப்போது என்ன செய்வது?… சிங்கம் சண்டை மும்முரத்தில் இருக்கிறது ஆகையால், இந்த நிமிஷமே நாம் இந்த இடத்தை விட்டு ஓடிவிடவேண்டும். ஆம், ஓடுவதற்காகத்தானே கடவுள் எனக்கு நீளமான கால்களைக் கொடுத்திருக்கிறார்! இதோ ஓடுகிறேன், என்று கூறிக்கொண்டே ஓட்ட ஓட்டமாக ஓட ஆரம்பித்தது குட்டி மான்.

அம்மா மானைப் பார்த்த பிறகுதான் குட்டி மானின் ஓட்டம் நின்றது. குட்டி மானைப் பார்த்த பிறகுதான் அம்மா மானின் கவலை தீர்ந்தது!

– ரோஜாச்செடி, மூன்றாம் பதிப்பு: மே 1968, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *