மாதா, பிதா, கூகுள், தெய்வம்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,079 
 

அந்தத் தனியார் பேருந்து, ஒரு புகழ்பெற்ற ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் நின்று பெரியவர் சிவசண்முகத்தை இறக்கிவிட்டுப் போகும்போது நண்பகல். நல்ல சித்திரை மாதம் கத்திரி வெயில்.

தூய வெண்ணிற வேட்டி, பருத்திச் சட்டை, துண்டு அணிந்திருந்தபோதிலும் வியர்வை ஆறாகப் பெருகி ஓடியது அவருக்கு.

மாதாகுடை ஒரு கையிலும் மதிய உணவடங்கிய துணிப் பை மறுகையிலுமாக மெல்ல அந்தப் பள்ளியின் முகப்பில் நின்ற பாதுகாவலரிடம் அடையாள அட்டையினைக் காண்பித்து, அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார்.

இடப் புறத்தில் அழகிய பாலமுருகன் ஆலயம். இது பள்ளியா அல்லது பல்கலைக் கழகமா என்று வியக்கும் வண்ணம் பரந்திருந்த வளாகம். பெரிய விளையாட்டு மைதானம். சுற்றிலும் பசுமை சேர்க்கும் மரங்கள் என்று வெயிலின் கடுமை உள்ளே சற்றுத் தணிந்திருந்தது.

முருகனை வணங்கியபின், குடை போல நிழல் விரித்திருந்த இலுப்பை மரமொன்றின் நிழலில் சிவசண்முகம் அமரவும், பள்ளியின் மதிய இடைவேளை மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

தூரத்தில் பேரன் எழிலமுதன் இளமஞ்சள் வெந்தய நிறச் சீருடையில் அவரை நோக்கி வருவது தெரிந்தது.

அம்மா வழித் தாத்தாவான இவரைப் போலவே அவனும் நெடுநெடுவென வளர்ந்திருந்தான்.

சிறுவயதில் இடுப்பில் அரைஞாண் கட்டிக் கொள்ள, இவர் அவன் பின்னால் ஓடியதும், நீண்ட நேரப் போராட்டத்துக்குப்பின் கலகலவென சிரித்தவாறே தாத்தாவின் மீசையைப் பேரன் முறுக்கியதும் அதேவேளையில் பேரனின் இடுப்பில் கயிறைக் கட்டியதுமான அந்த இனிய நிகழ்வு அவர் மனதில் மின்னலாய்த் தோன்றி மறைந்தது.

அவனெங்கே? இவனெங்கே? நடையில் சோர்வு, உடையில் கசங்கல், கேசப் பராமரிப்பில் கவனமின்மை… ஹூம்..! பெருமூச்செறிந்தவரின் அருகில் வந்து அமர்ந்தான் எழிலமுதன் (இனி சுருக்கமாக அமுதன்).

“”இப்பத்தான் வந்தீங்களா?”

“”ம்… நல்லா இருக்கியா கண்ணு?”

“”ப்ச்…” உச்சுக் கொட்டியபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு எங்கேயோ பார்த்தான் அமுதன்.

“”நேத்து அம்மா என்கிட்டே போன்ல பேசினபோதே தெரியும்! என்னை சமாதானப்படுத்த நீங்க வருவீங்கன்னு. இவ்வளவு தூரம் நீங்க வந்தது, வீண் தாத்தா! என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன். ஸôரி!”

தாத்தா அவனையே கூர்ந்து பார்த்தார். வெறும் மூன்றே வரிகளில் தான் இங்கு வந்ததன் காரணத்தையும் அவனது நிலைப்பாட்டையும் சுருக்கமாகச் சொல்லிவிட்ட அமுதனுடைய சாமர்த்தியத்தைப் பாராட்டுவதா? அப்படியில்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசம் இந்தத் தலைமுறைய எண்ணி வருந்துவதா என்று ஒருகணம் தடுமாறினார்.

“”நாம பிறகு நிதானமாகப் பேசுவோம். நீ இப்ப உங்க பாட்டி செஞ்சு கொடுத்த உணவை முதல்ல சாப்பிடு…”

“”நீங்க?”

“”நான் சாப்பிட்டாச்சு…” என்றவாறே கையோடு கொண்டுவந்த பாக்குமட்டைத் தட்டில் நடுங்கும் கைகளால் உணவைப் பரிமாறினார். கைகளைக் கழுவியதும் பாட்டியின் சமையலை ஆசை ஆசையாய் அள்ளி விழுங்கும் பேரனைப் பரிவோடு பார்த்தார்.

ஒரே பையன். பொத்திப் பொத்தி வளர்த்த மகன். பெருநகரத்தின் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தவனை, 11 மற்றும் 12-ஆம் வகுப்பிற்காக, ஒருகாலத்தில் கோழிப் பண்ணைக்கும் இப்போது கல்விக்கும் புகழ்பெற்று விளங்கும் அந்த மாவட்டத்திலுள்ள சிற்றூர் ஒன்றில் தரம்வாய்ந்த உறைவிடப் பள்ளியில் தங்கிப் பயில வைத்துள்ளனர் அவரின் மகளும் மருமகனும்.

அவர்களும் ஆசிரியர்கள்தான்! ஆனாலும் தங்களின் ஒரே மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்னும் ஆவலில் இங்கே சேர்த்துள்ளனர். ஆனால் அமுதன் திரும்பவும் வீட்டிலிருந்தே படிக்கப் போவதாகவும் இங்கிருக்கப் பிடிக்கவில்லை எனவும் அடம் பிடிப்பதுதான் இப்போது பிரச்னை! அவனை சமாதானப்படுத்தத்தான் தாத்தாவின் இந்தப் பயணம்!

கைகழுவிவிட்டு நிமிர்ந்த பேரனின் முகத்தைத் தன் துண்டால் ஒற்றியெடுத்தார்.

“”திரும்பவும் வகுப்புக்கு எத்தனை மணிக்குப் போகணும்?”

“”இல்லை தாத்தா… இன்று மாதத்தின் கடைசி சனிக்கிழமை! அரைநாள்தான் வகுப்பு”

“”ம்… நல்லதாப் பேச்சு! நிதானமாச் சொல்லு. உனக்கு இங்கே என்னடா கண்ணு பிரச்னை? நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்ங்கிற நம்பிக்கை உனக்கு இருந்தா தயங்காம சொல்லு!”

அமுதனின் கண்கள் ஒரு விநாடி கலங்கின. சிறிய மெüனத்துக்குப் பின் பேசத் தொடங்கினான்-

“”தாத்தா… இங்க ஒண்ணுமே சரியில்லை. காலையில் கட்டாயம் 5 மணிக்கே எழுந்து படிக்கணும். பாத்ரூம்ல வரிசையா நின்னுதான் குளிக்கணும். சாப்பாட்டுக்கும் வரிசை. ராத்திரி 11 மணி வரை மறுபடியும் படிக்கணும். பச்சைத் தண்ணியிலதான் குளிக்கணும். 2 மாதத்துக்கு ஒரு தடவைதான் வீட்டுக்குப் போய் வரணுமாம்…” அமுதனின் குரல் உடைந்தது.

மெல்ல இயல்பு நிலைக்கு வந்தவன் தொடர்ந்தான்…

“”எல்லாத்தையும் விடக் கொடுமை.. நாம சொந்தமா எதுவும் எழுதக் கூடாதாம்! பாடப் புத்தகத்திலிருப்பதை மனப்பாடம் பண்ணி அப்படியே எழுதணுமாம். எனக்குப் புடிக்கலை! என்னை வீட்டுக்குக் கூட்டிப் போங்க தாத்தா… ப்ளீஸ்!”

“”சரி, இன்னும் ஏதாவது குறைகள் இருக்கா? நான் உன்னை நிச்சயமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். ஆனால் நீ சொன்னதை நான் கேட்ட மாதிரி நான் சொல்வதையும் நீ கவனமாகக் கேட்கணும்… சரியா?”

“”ம்… சரி!”

“”எங்கே, இப்போ சிரி…”

அமுதன் இன்னமும் “உம்’மென்று இருக்க, தாத்தா, “”நான் ஒரு புதிர் போடறேன். விடை சொல்லு பார்க்கலாம். மூணு பூச்சி பேருந்துல ஏறிச்சாம். ரெண்டு பூச்சிக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர் மூணாவது பூச்சிக்கு மட்டும் டிக்கெட்டோட லக்கேஜ் சார்ஜும் போட்டாராம், ஏன்?”

“”தெரியலையே தாத்தா!” விழித்தான் அமுதன்.

“”ஏன்னா, அது மூட்டைப் பூச்சி!” தன் வயதையும் மறந்து கலகலவெனச் சிரித்த தாத்தாவின் உற்சாகம் அமுதனையும் தொற்றிக் கொள்ள அவனுக்கும் மெதுவாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

தான் சொல்வதைக் கேட்கும் மனநிலைக்கு பேரன் வந்துவிட்டதை உணர்ந்தவராகப் பலத்த யோசனையோடு பேச ஆரம்பித்தார்-

“”கண்ணு, நீ இப்பப் படிக்கிற கல்வி நிறுவனங்கள் ஆழமான அறிவும் பலமான அனுபவமும் உள்ள அர்ப்பணிப்பு உணர்வு உள்ள சில ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் உருவானது. வெறும் லாபம்தான் இவங்களோட நோக்கமா இருந்தா இந்த இடத்தில் திரையரங்கமோ, வணிக வளாகமோ கட்டியிருக்கலாம். ஆனால், இவங்க தங்களோட கல்வி அனுபவத்தை முதலீடா வச்சு, அதிக மதிப்பெண்களை சுலபமா எடுப்பதற்கான நுணுக்கங்களைக் கற்றுத் தருகிற பயிற்சி மையங்களாக இந்தப் பள்ளிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இவங்க குறிக்கோளில் லாபமும் ஓர் அங்கமே தவிர லாபம் மட்டுமே நோக்கம் அல்ல! இதை முதலில் நீ மனசுல ஏத்திக்கணும்!”” – சிறிய இடைவெளி விட்டுத் தண்ணீர் பாட்டிலில் இருந்து ஒரு மடக்கு நீரைக் குடித்தார் தாத்தா.

“”இந்தப் பள்ளியின் இயக்குநர்கள், பசுமையான மரங்கள், பாதுகாப்பான கட்டடங்கள், மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம், தரமான உணவு, சுகாதாரமான குடிநீர், முறையான பயிற்சி, ஒவ்வொரு மாணவன் மேலும் தனிப்பட்ட கவனம், ஒழுக்கம், கனிவு, கண்டிப்பு, சில நேரம் தண்டனை, சுணங்கிப் போன மாணவனுக்கு ஊக்கம், வெற்றி பெற்ற மாணவனுக்குப் பாராட்டு…ன்னு ஒருநாளின் 24 மணி நேரமும் பம்பரமா சுழன்று, உங்களோட நல்ல எதிர்கால வாழ்க்கைக்கு உங்க அப்பா, அம்மாவை விடவும் அதிகமா உழைக்கறாங்க… இதை உன்னால மறுக்க முடியுமா?”

அமுதன் சிறு கல்லொன்றை எடுத்து மாணவர்கள் உபயோகித்த நீரை மறுசுழற்சி செய்து மரங்களுக்கு நீர் விடும் சிறு கால்வாயொன்றில் எறிந்தான். அவனது மெüனத்தை சம்மதமாக உணர்ந்த தாத்தா தொடர்ந்தார்…

“”அமுதா, 12-ஆம் வகுப்பு முடியும் வரை உன் கற்பனைக்கோ, சொந்தக் கருத்துகளுக்கோ, படைப்பாற்றலுக்கோ தேர்வில் மதிப்பெண்கள் கிடைக்காது என்பதுதான் யதார்த்தம்! பல நூறு வருடங்களாகப் போராடி, பெரியவங்க கண்டுபிடிச்ச உண்மைகளைத் தொகுத்து, பாடப்புத்தகங்களாக வச்சிருக்காங்க. அதை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது கவனிச்சு, பிறகு புரிஞ்சு, மனப்பாடம் பண்ணி தேர்வில் எழுதினாத்தான் மதிப்பெண்கள்! என்ன புரிஞ்சுதா?”

“”ஹூம்… இதெல்லாம் ஒரு செகண்ட்ல இன்டர்நெட்ல கூகுள் மூலம் தெரிஞ்சுப்பேன்…” முணுமுணுத்தான் அமுதம்.

“”என்னது கூகுளா? நம்ம வரவேற்பறையில தகவலைக் குப்பை மாதிரி கொட்டற தொழில்நுட்ப சாதனங்களால கெடுதல்கள்தான் அதிகம்! நல்லது ரொம்பவும் குறைவு. நம்ம பாரம்பரிய குருகுலக் கல்வி உருமாறி கூகுள் கல்வியா சிதைஞ்சு போனது எவ்வளவு அவலம் தெரியுமா? எந்தத் தகவலானாலும் ஒரு நல்ல ஆசிரியர், தான் முதல்ல கிரகிச்சு, பிறகு அதை மாணவனுக்கு ஏத்தமாதிரி வடிகட்டித் தர்றதுனாலதான் அவருக்கு ஆசு+இரியர், அதாவது குற்றங்களைக் களைபவர்னு பேர் வந்துச்சு! இதை நீ குறை சொல்லலாமா?”

-இப்போது அமுதன் சுவாரஸ்யமாக கவனிக்கத் துவங்குவதை தனக்குக் கிடைத்த பாதி வெற்றியாக எண்ணிய தாத்தா, உற்சாகமாகத் தொடர்ந்தார்…

“”அந்தக் காலத்துல அரசன் மகனோ ஆண்டியின் மகனோ யாராக இருந்தாலும் குருகுலத்துலதான் பாடம் படிக்கணும்! நீ அஞ்சு மணிக்கு எழுந்துக்க அலுத்துக்கறியே, அந்தக் காலத்துல அதிகாலையில் எழுறது மட்டுமல்ல, குருவுக்கும் குருபத்தினிக்கும் சேவையும் செய்யணும். கடுமையான தண்டனைகளும் உண்டு. உப்பில்லாத உணவுதான் சாப்பிடணும். அறிவுத்திறன், நினைவாற்றல், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் இது மூணும் இருந்தா 1200-க்கு 1200 மதிப்பெண்களே எடுத்துடலாம். ஆனா, வெறும் மதிப்பெண்கள் மட்டுமில்லை, கூடவே ஒழுக்கமும் அவசியம்கிறதனால்தான் இங்கே இவ்வளவு சட்ட திட்டங்கள்!

ஒரு வழக்கம், பழக்கமா மாற 21 நாட்கள் வேணுமுன்னு பெரியவங்க சொல்வாங்க. இங்க 2 வருடப் பழக்கம் நீயே விட்டுவிட நினைச்சாலும் உன் வாழ்நாள் முழுக்க உன் நிழல் போலக் கூட வரும் தெரியுமா? இதுபோன்ற பள்ளிகளை நம்ம பாரம்பரியமான குருகுலக் கல்வியின் நவீன வடிவமாகவே நான் பார்க்கறேண்டா கண்ணு…”

ஒரு நிமிடம் இடைவெளி விட்ட தாத்தா, தன் பையினுள் கைவிட்டு அவனுக்குப் பிடித்த தேன்மிட்டாய்களை எடுத்து நீட்டினார்.

“”கண்ணு, உன் கற்பனையையும் படைப்பார்வத்தையும் நான் குறை சொல்லலை! நியூட்டனின் புவியீர்ப்பு விசையைப் பற்றி அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் நீ புரிஞ்சுக்கணும்! அதைத்தான் நீ தேர்விலும் எழுதணும். அதுக்குத்தான் “விதி’ன்னு பேர். நீ 12-வது வகுப்பு முடிச்சபின் உன் படைப்பாற்றலை வச்சு அந்த விதிக்கு மேலேயோ இல்லை அந்த விதியே தப்புன்னு கூட நீ நிரூபிக்கலாம். உன்னை யாரு வேண்டாம்னு சொன்னது?”

அமுதன் இடைமறித்தான்-

“”அது சரி தாத்தா! கரப்பான் பூச்சி எப்படிக் குடும்பம் நடத்துதுன்னு நான் தெரிஞ்சு என்ன பண்ணப் போறேன்? அது போர் இல்லையா சொல்லுங்க?”

தாத்தாவுக்குப் புன்முறுவல் எட்டிப் பார்த்தது. “”ஏன், நம்ம எல்லாருடைய வீடுகளிலும் வாழற ஒரு ஜீவன்தானே அது? அதைப் பற்றியும் தெரிஞ்சுக்கலாமே!” என்றவர்…

“”அமுதா, எந்தவொரு நன்மையிலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்யும். நல்ல சோறு வேணும்னு நினைச்சா அந்த அரிசியை கல், குருணை, பூச்சி நீக்கி நாம பயன்படுத்துறது இல்லையா? அதுபோலத்தான்… இப்போ சமச்சீர் கல்வி முறை எல்லோராலும் பாராட்டற மாதிரி மாறி வருது இல்லையா? கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே மாறும்!”

அமுதனின் முகத்தில் சிந்தனை ரேகைகள்!

“”அமுதா! விடுதியில் படிக்கிறதால நிறைய நன்மைகள் இருக்குப்பா. குழு மனப்பான்மை, யதார்த்த சிந்தனை, தலைமைப் பண்பு, பெற்றவர்களின் அருமை இதெல்லாம் இங்கேதான் கைகூடும். இந்தப் பண்புகளினால் மனம் பக்குவமடையும். இதை நான் என் சொந்த அனுபவத்தால சொல்றேனப்பா!” தாத்தா மேல் துண்டால் முகத்தை ஒற்றியெடுப்பதை பரிவோடு கவனித்தான் அமுதன்.

“”தாத்தா இந்த பெஞ்சில உட்காருங்க. கொஞ்சம் தண்ணி குடிங்க” என்றபடி நீர் பிடிக்க ஓடினான்.

அமுதன் கொண்டு வந்த நீரைக் குடித்ததும் தெம்பாகப் பேச ஆரம்பித்தார்-

“”அமுதா மணி ஆகிவிட்டது. பேருந்துக்கு நேரமாச்சு! உன் முடிவு என்னன்னு சொன்னா நான் உங்க அப்பா அம்மாகிட்டப் பேச வசதியாயிருக்கும்” என்றவாறு அன்றலர்ந்த தாமரை போன்ற தன் பேரன் முகத்தையே பார்த்தார்.

அவன் கேசத்தை தனது கரங்கலால் ஒதுக்கிவிட்டார்.

“”ம்…” தன் ஆட்காட்டி விரலை முகவாயில் வைத்து ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல நடித்தவன்…

“”நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், தாத்தா!” என்று சஸ்பென்சாக இடைவெளி விட்டு, “”அடுத்த மாதம் நீங்க வரும்போது பாட்டி செய்யற குழிப் பணியாரமும் கொண்டு வந்தாத்தான் நான் இங்கே இருப்பேன்” என்று சொல்லிவிட்டு சிறு குழந்தையாய்ச் சிரித்தான். அதற்கு வலு சேர்ப்பது போல பாலமுருகனின் கோவில்மணி ஒலித்தது.

தன் பேரனுக்காகவாவது தான் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆதுரத்தோடு முருகனிடம் வேண்டியபடி, அவன் முன் நெற்றியில் முத்தம் கொடுத்தார் தாத்தா.

புதிய மனிதனாய்ப் பிறந்த களிப்பில் அமுதனின் முகமும் மலர்ந்தது.

– என்.எஸ்.சாந்தனு பரீஷத் (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *