மாங்காயும் கைக்கோலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 386 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஒரு குருடன் தட்டித் தடவிக்கொண்டே ஒரு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். வெயில் கொடுமையாக எரித்துக் கொண்டிருந்தது. எங்காவது நிழல் கிடைக்குமா என்று தேடி அவன் சென்று கொண்டிருந்தான். ஓரிடத்திற்கு வந்ததும் குளிர்ந்த நிழல் தன் மீது படுவதை அவன் உணர்ந்தான். கைக்கோலினால் தட்டிப் பார்த்து அந்த இடத்திலே ஒரு மரம் இருப்பதை அறிந்து கொண்டான். அந்த மரத்தின் அடியிலே போய் உட்கார்ந்தான். 

சிறிது நேரம் சென்றபின் தொப்பென்று ஏதோ விழுந்த ஓசை கேட்டது. ஒலி வந்த இடத்தை நோக்கி நகர்ந்தான். குருடன் தரையைக் கையால் தடவித் தடவி ஒரு காயைக் கண்டெடுத்தான். மூக்கின் அருகில் கொண்டு சென்றபோது அது ஒரு மாங்காய் என்று அறிந்து கொண்டான். அந்த மாங்காய் சிறிதும் புளிப்பில்லாமல் பச்சரிசி போல் சுவையாக இருந்தது. 

குருடன் அதைக் கடித்துத் தின்றான். இன்னொரு மாங்காய் தின்ன வேண்டும் போல் இருந்தது. 

தலைக்கு மேலே மாங்காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. கைக்கோலை வீசி எறிந்தால் ஏதாவது விழும் என்ற எண்ணம் அந்தக் குருடனுக்கு ஏற்பட்டது. 

தன் கைக்கோலை எடுத்தான். மேல் நோக்கி அதை வீசி எறித்தான். 

கைக்கோல் சில்லென்ற ஓசையுடன் மேல் நோக்கிச் சென்றது. மரக்கிளைகளின் ஊடே சிக்கிக் கொண்டது. 

மாங்காயும் விழவில்லை. கைக்கோலும் பறி போயிற்று. 

குருடன் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கிக் கொண்டிருந்தான். பிறகு குருட்டுத்தனமாகத் தான் செய்த செயலை எண்ணி நொந்துகொண்டே, கைக்கோல் இல்லாமலே அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வழியில் பல தொல்லைகளை அனுபவித்துக் கொண்டு தன் இருப்பிடத்தை யடைந்தான். 

கருத்துரை:- குருட்டுத்தனமான நம்பிக்கையோடு எந்தச் செயலையும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் எண்ணியதும் நிறைவேறாமல், இருப்பதையும் இழக்க நேரிடும். 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *