விஜயபுரி நாட்டின் மன்னர் உக்கிரப் பெருவழுதி, தனது நாட்டில் அதிக வரிகள் விதித்து மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். மன்னரின் இந்தக் கொடுஞ்செயலை அவரிடம் எடுத்துச் சொல்ல யாரும் முன்வராமல் அஞ்சிக் கொண்டிருந்தனர்.
மன்னர் தன் மந்திரியுடன் ஒருநாள் நகர்வலம் புறப்பட்டார். நகர்வலம் வந்து கொண்டிருந்த போது, வானத்தில் கருமேகங்கள் திரண்டு வருவதைக் கண்டு மன்னர் உக்கிரப் பெருவழுதி, “இப்பொழுது மழை வரும் போலிருக்கிறதே..!’ என்றார்.
“கண்டிப்பாக இப்போது மழை வராது… இந்தக் கருமேகங்கள் நம் நாட்டுக்குள் நுழையவே நுழையாது மன்னா…’ என்றார் மந்திரி.
“ஏன் அப்படிச் சொல்கிறீர்?’
“மன்னா, அந்தக் கருமேகங்கள் நம் நாட்டிற்குள் நுழைந்தால் அவைகளுக்கும் நீங்கள் கடுமையாக வரி விதித்து விடுவீர்களே… அதனால் அவை ஒரு போதும் நமது நாட்டிற்குள் நுழையாது!’ என்றார் மந்திரி அடக்கத்துடன்.
மந்திரியின் இந்த விளக்கத்தைக் கேட்ட மன்னர், விதவிதமான வரிகளை விதித்து மக்களைக் கொடுமைப்படுத்திய தனது தவறை உணர்ந்தார்.
நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான வரிகளை நீக்கும்படி உடனடியாக உத்தரவிட்டார்.
மக்களின் துன்பமெல்லாம் மறைந்து மகிழ்ச்சியுடன் வாழலாயினர்.
– மதுரை க.பரமசிவன் (நவம்பர் 2011)