சீனா தேசத்திலே ஒரு சிறிய ஊரிலே ஒரு பையன் தனியாக ஒரு குடிசையிலே வசித்து வந்தான். அவனுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை. அவன் ஓர் அனாதை. அதனால் அவன் தானே வேலை செய்து சம்பா தித்து வயிறு வளர்த்து வந்தான். வனத்திற்குள்ளே புகுந்து விறகு பொறுக்கி விற் பான். சில நாட்கள் விளை நிலங்களிலே களை எடுக்கச் செல்வான். இப்படி அவன் வாழ்க்கை நடத்தினான்.
அந்தப் பையனுடைய பெயர் மாலி யாங். அவ னுக்கு அழ கான சித்தி ரங்களும், ஓவி யங்களும் எழுதவேண்டு மென்று அளவுகடந்த ஆசை. ஆனால் அவனிடம் சித்திரம் எழுதும் தூரிகை வாங்கப் பணம் இல்லை. தூரிகை இருந்தால் தான் பலவகை யான வர்ணங்களில் அதைத் தோய்த்து நல்ல நல்ல ஓவியங்கள் வரைய முடியும். மாலியாங் கிடத்தில் தூரிகை யில்லாவிட்டாலும் அவன் ஓவியம் வரைவதை நிறுத்தவில்லை. மரக் குச்சிகளை கொண்டு மண்ணிலே சித்திரம் வரைவான். பச்சைத் தழைகளைப் பறித்து அவற்றைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு சுவர்களிலே குருவிகள் வரைவான். ஆற்றுக்குச் சென்றால் விரலால் தண்ணீரைத் தொட்டுத் தொட்டுப் பாறை மேலே உருவங்களை எழுதுவான். இவ்வாறு எழுதி எழுதி அவன் மிகவும் தேர்ச்சி அடைந்து விட்டான். அவன் வரையும் குருவிகளும் விலங்குகளும் உயி ருள்ளவை போலவே இருக்கும். தூரிகையில்லாமலே அவனுக்கு அவ்வளவு திறமை ஏற்பட்டிருந்தது. தூரிகையும் இருந்தால் பெரிய ஓவியனென்று புகழ்பெறலாம் என்று அவனுக்கு ஆசை. ஆனால் அவனால் ஒரு சிறிய தூரிகையும் வாங்க முடியவில்லை. வேலை செய்து சம்பாதிக்கும் பணம் அரை வயிற்றுக் கஞ்சிக்கே போதவில்லை. இருந்தாலும் தூரிகை வேண்டுமென்ற ஆசைமட்டும் அவன் மனத்திலே எப்பொழு தும் இருந்தது.
இப்படியிருக்கும் பொழது ஒரு நாளிரவு அவனுடைய கனவிலே யாரோ ஒரு முனிவர் தோன்றினார். அவர் கையிடல ஒரு அழகான தூரிகை இருந்தது. அதற்குத் தங்கத்திலே பிடி போடப்பட்டிருந்தது. அதனால் அது பளபளவென்று மின்னிற்று. அந்த முனிவர், “மாலியாங், இதோ இந்த மந்திரத் தூரிகையை எடுத்துக்கொள். இதற்கு அதிசயமான சக்தியெல்லாம் உண்டு” என்று சொல்லி அவனிடம் தூரிகையைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
மாலியாங் மிகவும் குதூகலமடைந்தான். அடுத்த நாள் காலையில் அவன் அந்தத் தங்கத் தூரிகையைக் கொண்டு காகிதத்திலே ஒரு குயிலின் படம் வரைந்தான். என்ன ஆச்சரியம்! படம் பூர்த்தியான உடனே அந்தக் குயில் உயிர்பெற்று வானத்திலே பறந்தது! பறக்கும் போதே அழகாகப் பாடிற்று. மாலியாங் துள்ளிக்குதித்தான். மகிழ்ச்சியால் எழுந்து ஆடினான். அவன் ஆற்றங்கரைக்குப் போய்த் தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டு காகிதத்தில் ஒரு மீன் வரைந்தான். அது உயிர் பெற்றுத் தண்ணீருக்குள் குதித்தது. பலவிதமாக அது மின்னிக்கொண்டு நீந்தி விளையாடியது. அதைக் கண்டும் மாலியாங் களித்துக் கூத்தாடினான்.
மாலியாங் மிகுந்த ஏழையல்லவா? அதனால் அவனுக்கு ஏழைகளின் கஷ்டம் நன்றாகத் தெரிந்திருந்தது. அந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு அவன் உதவி செய்ய முன்வந்தான். நிலத்தை உழுவதற்கு யாரிடமாவது எருதுகள் இல்லையென்றால் அவர்களுக்கு முன்னால் சென்று மாலியாங் இரண்டு எருதுகளின் படம் வரைவான். உடனே அந்த எருதுகள் உயிர்பெற்று நிற்கும். வேண்டியவருக்கு அவற்றைக் கொடுப்பான். கலப்பை இல்லாதவருக்குக் கலப்பை வரைந்து கொடுப்பான். இப்படியாக யாருக்கு எது தேவையென்று தெரிகிறதோ அதையெல்லாம் தனது மந்திரத்தூரிகையின் சக்தியால் உண்டாக்கிக் கொடுத்தான். ஏழைகளெல்லாம் அவனை மனமார வாழ்த்தினார்கள். மாலியாங் இவ்வாறு உதவி செய்யும் செய்தி ஊர் முழுவதும் விரைவில் பரவிற்று.
அந்த ஊரிலே ஒரு பணக்காான் இருந்தாள். அவன் பேராசைக்காரன். அவன் மாலியாங்கின் மந்திரத்தூரிகையை அபகரித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். உடனே அவன் மாலியாங்கைத் தன்னிடம் வருமாறு ஓர் ஆளிடம் சொல்லியனுப்பினான்.
மாலியாங் வந்தவுடன், “டேய், எங்கே அந்த மந்திரத் தூரிகை? அதை என்னிடம் கொடு” என்று அதிகார தோரணையில் கேட்டான், மாலியர்ங் ஏழையாக இருந்தாலும் பயப்படவில்லை. தூரிகையைக் கொடுக்க முடியாது என்று நிதானமாகப் பதில் சொன்னான்.
பணக்காரனுக்கு மூக்கிற்குமேல் கோபம் வந்தது. அவன் மாலியாங்கை இருட்டான ஒரு அறைக்குள் தள்ளிக் கதவைப் பூட்டிவைத்தான். பட்டினி கிடந்து மாலியாங் வாடவேண்டும் என்பது அவனுடைய எண்ணம்.
அதனால் அவன் மூன்று நாட்கள் வரையில் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. நான்காம் நாள் அவன் மெதுவாக வந்தான். அறையின் கதவு இடுக்கிலே உள்ளே பார்த்தான். அவன் எதிர்பார்த்தது போல மாலியாங் சோர்ந்து கிடக்கவில்லை. மாலியாங் ஒரு பட்டு மெத்தையிலே ஒய்யாரமாகப் படுத்திருந்தான். விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. பக்கத்திலே நான்கு தட்டுகளிலே ஆப்பிள், ஆரஞ்சு முதலான பழங்களும் வெவ்வேறு விதமான பலகாரங்களும் குவிந்திருந்தன. மாலியாங் ஒரு ஆப்பிளைக் கையிலெடுத்து வாயிலே கொஞ்சங் கொஞ்சமாகக் கடித்துச் சுவைத்துக்கொண்டிருந்தான். வானம்பாடி ஒன்று அறைக்குள்ளே பறந்துகொண்டே பாடிக்கொண்டிருந்தது.
இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க பணக்காரனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுதுதான் அவனுக்கு மாலியாங்கைப் பட்டினிபோட முடியாது என்கிற விஷயம் புலப்பட்டது. மாலியாங் தனது மந்திரத்தூரிகையின் உதவியால் தனக்கு வேண்டிய உணவுப்பொருள்கள், விளக்கு முதலிய எல்லாவற்றையும் உண்டாக்கிக்கொள்ள முடியும் என்பதை அவன் உணர்ந்தான். அவனுக்கு மேலும் கோபம் பொங்கிற்று. “டேய், சின்னப்பயலே, உன்னை இப்பொழுது சித்திரவதை செய்கிறேன் பார்” என்று கத்திக் கொண்டே அவன் தன்னுடைய ஆட்கள் மூன்று பேரை அழைத்துவரச் சென்றான்.
மாலியாங் கலக்கமடையவில்லை. அவன் ஏணி ஒன்று வரைந்தான். அது உண்மையான ஏணியாக மாறிற்று. அதைச் சுவரிலே சாத்தி அதன் மேலே ஏறிக் கூரையின் வழியாக அவன் வெளியே தப்பித்துக்கொண்டு போய் விட்டான். பணக்காரன் ஆட்களோடு திரும்பி வந்து பார்க்கும்பொழுது அறைக் குள்ளே ஏணிமட்டும் இருந்தது. ஆத்திரத்தோடு அவன் ஏணி மேலே அவசரம் அவசரமாகத் தாவி ஏறினான். அந்த அவசரத்திலே ஏணி சறுக்கிக் கீழே விழுந்தது. அவன் தொப்பென்று தரையில் விழுந்து புரண்டான். அவன் தலையிலே நன்றாக அடிபட்டு எலுமிச்சம்பழம்போலப் புடைத்துக்கொண்டது. அவனுக்குக் கோபம் இன்னும் அதிகமாயிற்று. அவன் வெளியே ஓடினான்.
இதற்குள் மாலியாங் தனது மந்திரத்தூரிகையின் உதவியால் ஒரு குதிரையை உண்டாக்கி அதன்மேல் ஏறிக்கொண்டு புறப்பட்டான். அதைக் கண்டதும் பணக்காரன் தன்னுடைய குதிரையின்மேல் பாய்ந்து ஏறிக்கொண்டு மாலியாங்கைப் பிடிக்க வேகமாகத் தொடர்ந்தான். மாலியாங்குக்குக் குதிரைச் சவாரி செய்து பழக்கம் இல்லாததால் அவனால் குதிரையை வேகமாகச் செலுத்த முடியவில்லை. பின்னால் வரும் குதிரை நெருங்கிக்கொண்டேயிருந்தது. பணக்காரன் ஒரு ஈட்டியைத் தன் கையிலே ஓங்கிக்கொண்டிருந்தான். அதைக் கண்டதும் மாலியாங் மந்திரத்துரிசையை எடுத்தான். காகிதத்திலே ஒரு வில்லும் ஒரு அம்பும் வரைந்தான். அவை உண்மையான வில்லும் அம்புமாக மாறின. அவன் வில்லை யெடுத்து அம்பைத் தொடுத்துக் குறி பார்த்துப் பணக்காரன் மேல் விட்டான். அம்பு குறி தவறவில்லை. பணக்காரனுடைய மார்பிலே அது பாய்ந்தது. பணக்காரன் தரையிலே விழுந்து புரண்டான்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாலியாங்கிற்கு அந்த ஊரிலேயே இருக்கப் பிடிக்கவில்லை. அவன் ஊர் ஊராகச் சென்று பலருக்கும் உதவி செய்தான். கடைசியில் ஒரு பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு கொடுங்கோலன் அரசு செய்து வந்தான். அவன் செய்கின்ற கொடுமையால் மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். அந்த அரசன் எப்பொழுது ஒழிவானோ என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதை வெளியில் யாரும் சொல்லவில்லை. அரசனிடத்திலே அவர்களுக்கு அவ்வளவு பயம்.
கொடுங்கோலனுக்கு மாலியாங்கைப் பற்றியும் அவனுடைய மந்திரத்தூரிகையைப் பற்றியும் தெரிந்தது. மந்திரத்தூரிகையை அவனிடமிருந்து கவர்ந்துகொள்ள உடனே அவன் திட்டமிட்டான். மாலியாங்கைத் தனது சபையிலே வரும்படி கட்டளையிட்டான். சபையின் நடுவிலே இரும்புக்கம்பிகளால் ஒரு கூடாரம் அமைக்கச் சொன்னான். மந்திரிகளுக்கும் பிரதானிகளுக்கும் எதற்காக அக்கூடாரம் என்று முதலில் விளங்கவில்லை. சிங்கம் புலிகளை அதற்குள் அரசன் விடச் சொல்லுவானோ என்று அவர்கள் பயந்தார்கள். இருந்தாலும் அரசனிடம் அதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள அஞ்சினார்கள். அரசன் உத்திரவுப்படியே பலமான இரும்புக் கூடாரம் அமைத்தார்கள்.
மாலியாங் அரச சபையில் வந்து சேர்ந்தான். அரசன் முதலில் அவனை மிகவும் புகழ்ந்து பேசினான். “உனது திறமையைக் கண்டு களிக்க எனக்கு அடங்காத ஆசை உண்டாகிறது. இந்த இரும்புக் கூடாரத்திற்குள்ளே அமர்ந்து நீ உனது திறமையைக் காண்பிக்கவேண்டும்” என்று அரசன் மெதுவாகத் தன் கருத்தை வெளியிட்டான். கூடாரத்திற்குள்ளிருந்து கொண்டு ஒரு புலி வரைய வேண்டுமாம். இது அரசனுடைய விருப்பம். அரசனுடைய சூழ்ச்சி மாலியாங்கிற்கு உடனே புரிந்துவிட்டது. கூடாரத்திற்குள்ளிருந்து புலி வரைந்தால் அந்தப் புலி உயிர்பெற்று வந்துவிடும். பிறகு அது மாலியாங்கையே எதிர்த்துப் பாய்ந்து கொன்று தின்றுவிடும். அவன் வெளியே வரமுடியாதபடி கூடாரத்தின் கதவை அரசன் வெளிப்பக்கத்திலே பூட்டியிருந்தான்.
அரசனுடைய சூழ்ச்சி தனக்குத் தெரிந்துவிட்டதாக மாலியாங் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவன் கொஞ்சமும் பதற்ற மில்லாமல் கூடாரத்திற்குள் நின்று தனது மந்திரத் தூரிகையைக் கையில் எடுத்தா. ஆனால் அவன் காகிதத்திலே புலி வரையவில்லை. ஒரு நாகப்பாம்பை வரைந்து இரும்புக் கம்பிகளின் வழியாகக் காகிதத்தை அரசனுக்கு முன்னால் வெளியே வீசினான். நாகப்பாம்பு உயிர்பெற்று எழுந்து புஸ் புஸ் என்று சீறிக்கொண்டு அரசன்மேல் பாய்ந்தது. அரசன் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தோடினான். சேவகர்கள் பாம்பை அடித்துக் கொன்றிரா விட்டால் அது அரசனைக் கடித்திருக்கும். தன்னுடைய சூழ்ச்சியை மாலியாங் புரிந்துகொண்டான் என்று அரசனுக்கு விளங்கிவிட்டது. அதனால் அவன் மாலியாங்கை சமாதானப்படுத்த எண்ணினான். மாலியாங்கை இரும்புக் கூடாரத்திலிருந்து வெளிவரச் செய்து அவனை அரசன் தன் பக்கத்திலே சிம்மாசனத்திலே உட்கார வைத்துக் கொண்டான்.
“மாலியாங், உனக்கு என் மகளைக் கலியாணம் செய்து கொடுக்கிறேன். என் ராஜ்யத்திலும் பாதியை உனக்குக் கொடுக்கிறேன். நீ எனக்கு மருமகனாக இருந்து சந்தோஷமாக வாழவேண்டும்” என்று அரசன் கூறினான். புதிதாக ஏதோ ஒரு சூழ்ச்சியை அரசன் மனத்திலே எண்ணிகொண்டிருக்கிறான் என்று மாலியாங்கிற்குத் தோன்றியது. இருந்தாலும் அதை அவன் வெளியிலே காட்டிக்கொள்ளவில்லை. “சரி தங்கள் இஷ்டப்படியே நான் நடந்துகொள்கிறேன்” என்று அவன் பதில் கூறினான்.
அரசனுக்கு அளவில்லாத குதூகலம் ஏற்பட்டு விட்டது. மாலியாங் இரவிலே தூங்கும் போது அவனைக் கொன்றுவிட அரசன் திட்டமிட்டிருந்தான். ஆனால் மாலியாங் ஏமாந்து விடவில்லை. அவனுக்கு ஒரு சூழ்ச்சி உதய மாயிற்று.
“அரசே, தாங்கள் என்னை மருமகனாக்கிக்கொள்ள விரும்புவதைக் கண்டு, நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், அதனால் தங்களுக்கு ஒரு புதுவிதமான வேடிக்கை காட்ட நான் இப்பொழுது ஆசைப்படுகிறேன்” என்றான் அவன்.
“உனது ஆசைப்படியே செய். எனக்கு யாதொரு தடையுமில்லை” என்று பதில் சொன்னான் அரசன்.
உடனே மாலியாங் ஒரு காகிதத்திலே மந்திரத்தூரிகையால் ஒரு கடல் வரைந்தான். அவர்களுக்கு எதிராக நீலக்கடல் ஒன்று தோன்றியது. அலைகள் மெதுவாக எழுந்து அரசனுடைய கால்களை வருடிக்கொண்டு கரையில் மோதின. பிறகு மாலியாங் ஒரு அழகான கப்பல் வரைந்தான். கடலிலே அந்தக் கப்பல் ஒரு மாய மாளிகையைப் போல மிதந்தது. நவரத்தினங்கள் எல்லாம் அதில் இருந்து ஒளிவிட்டன. இந்தக் காட்சியைக் கண்டு அரசன் பிரமித்துப்போனான்.
“அரசே, இந்தக் கப்பலில் ஏறிச் சிறிது நேரம் உல்லாசமாகக் கடலின்மேலே சென்று வாருங்கள். நான் ஒரு தென்றலை வரவழைக்கிறேன்” என்று மாலியாங் நயமாகக் கூறினான். அரசன் உடனே கப்பலில் ஏறிக் கொண்டான். மாலியாங் முதலில் தென்றல் காற்றைக் காகிதத்தில் வரைந்தான். உடனே தென்றல் எழுந்தது. அது கப்பலை மெதுவாகக் கரையிலிருந்து கடலுக்குள்ளே செலுத்தியது. அரசன் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தான். “பலே பலே, மாலியாங்” என்று கரையில் நின்ற மாலியாங்கை நோக்கி உற்சாகத்தோடு கூறினான். ஆனால் அடுத்த கணத்திலே அவனுடைய மகிழ்ச்சியானது பயமாக மாறியது. ஏனென்றால் மாலியாங் தனது மந்திரத் தூரிகையைக் கொண்டு ஒரு கொடுமையானபுயலை வரைந்தான். அது நூற்றுக்கணக்கான மைல் வேகத்துடன் கிளம்பிற்று. கப்பலை ஒரேயடியாக அடித்துக் கொண்டு போய் நடுக்கடலில் கவிழ்த்தது. அரசன் கப்பலோடு கடலில் மூழ்கி மாண்டான்.
அரசன் மாண்டதை அறிந்த மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். மாலியாங்கைப் பலவாறு புகழ்ந்து கொண்டாடினார்கள்.
மாலியாங் அந்த நகரத்தில் அதிக நாள் தங்கி இருக்கவில்லை. அவன் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று ஏழை மக்களுக்கு உதவி செய்வதிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கலானான்.
– தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.