ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார்.
“அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து, அதனைப் பத்திரமாக அலமாரியில் பூட்டி வைத்திருந்தேன். ஆனால் மறுநாள், அலமாரியைத் திறந்து பார்க்கையில் அந்தத் தோல் பையைக் காணவில்லை. என்னிடம் நான்கு வேலைக்காரர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவன்தான் இத் திருட்டைச் செய்திருக்க முடியும்!’ என்றார்.
“ஆனால், அவர்கள் நால்வரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுகின்றார்கள். அவர்களுள் ஒருவனை நான் அடித்தாலும் மற்ற மூவரும் வேலையை விட்டுப் போய்விடுவர். அதனால் அவர்கள் நால்வரையும் தண்டிக்காத வகையில், நான் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்! அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்…’ என்று அரசனிடம் வேண்டினார் அந்த வியாபாரி.
அரசர், மந்திரியைப் பார்த்து, “நீங்கள்தான் இந்த வழக்கைத் தீர்த்து வைக்க வேண்டும். உண்மையான திருடனை, அப்பாவி வேலைக்காரர்களைத் துன்புறுத்தாமல் கண்டுபிடிக்க வேண்டும்’ என்றார்.
“தாங்கள் கூறியபடியே, அது நடக்கும்’ என்றார் மந்திரி.
மாலையில் அந்த நால்வரையும் மந்திரி அழைத்து, விசாரித்தார். நால்வருமே தாங்கள் நிரபராதி என்றனர்.
‘உங்களில் ஒருவர் உண்மையைக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்கு வேறு வழியில்லை. எனது மந்திரக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டியதுதான்’ என்று கூறிவிட்டு நால்வருக்கும் ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்தார்.
பின்னர், “இவை சாதாரணக் குச்சிகள் என்று நினைத்துவிடாதீர்கள். மந்திர சக்தி வாய்ந்தவை! இவற்றை இன்று இரவு முழுவதும் வைத்திருங்கள். யாருடைய குச்சி நான்கு அங்குலம் வளர்கிறதோ, அவர்தான் குற்றவாளி’ என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
அன்று இரவு, உண்மையான குற்றவாளிக்கு ஒரு யோசனை தோன்றியது. தனக்குத் தரப்பட்ட குச்சியை நான்கு அங்குலம் வெட்டிவிட்டால், மந்திரி கூறியபடி அந்தக் குச்சி நான்கு அங்குலம் வளர்ந்தாலும் அது பழைய நிலையிலேயே இருக்கும் என்று எண்ணி அந்தக் குச்சியில் நான்கு அங்குல நீளத்தை வெட்டிவிட்டான்.
மறுநாள் அரசவைக்கு எல்லோரும் வந்தார்கள்.
மந்திரி எல்லோருடைய குச்சிகளையும் வாங்கிப் பார்த்தார். உண்மையான குற்றவாளியைக் கை காண்பித்தார். மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அரசரிடம், மந்திரி, “நான் கொடுத்த குச்சிகள் மந்திரசக்தி வாய்ந்தவை அல்ல. யார் திருடன் என்பதைக் கண்டுபிடிக்கவே அவ்வாறு கூறினேன். குற்றவாளி தப்பித்துக் கொள்வதற்காக அந்தக் குச்சியில் நான்கு அங்குலம் வெட்டியிருக்கிறான். அதனால் அவனது குச்சி சிறிதாகிப் போய்விட்டது. இதைக் கொண்டுதான் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தேன்..’ என்று கூறினார்.
குற்றவாளி தனது தவறை ஒப்புக்கொண்டு தங்க நாணயங்களைத் திருப்பிக் கொடுத்தான்.
மந்திரியின் தந்திரத்தை அரசர் மெச்சி, அவருக்குப் பரிசு வழங்கினார்.
மு.ஆறுமுக விக்னேஷ்,
8-ம் வகுப்பு, பி.ஏ.சி.எம்.மேல்நிலைப் பள்ளி,
இராஜபாளையம்.
மார்ச் 2012