காட்டுராஜா சிங்கத்துக்கு அன்று நல்ல பசி. எங்கெங்கு தேடியும் எந்த மிருகமும் அகப்படவில்லை. கடைசியாகத் தேடியலைந்து ஒரு மானைப் பிடித்தது. இருந்த பசியில் அந்த மானின் இறைச்சியை அவசர அவசரமாகத் தின்ன ஆரம்பித்தது சிங்கம்.
அப்படி அவசரமாகத் தின்றபோது, சிங்கத்தின் தொண்டைக்குள் ஒரு எலும்பு சிக்கிக் கொண்டது. அதன் விளைவாக சிங்கத்தின் தொண்டை பெரிதாக வீங்கிவிட்டதால், சிங்கத்துக்கு இறைச்சியை மென்று விழுங்குவது கஷ்டமான காரியமாக இருந்தது. வலியும் அதிகமாக இருந்தது.
அப்போது மரக்கிளையொன்றில் தாவிக் கொண்டிருந்த குரங்கு ஒன்றை சிங்கம் பார்த்தது.
அந்தக் குரங்கிடம், “”நீ என் தொண்டையில் சிக்கியிருக்கும் எலும்பை எடுத்து எனக்கு உதவி செய். நான் உனக்கு மிகவம் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்” என்றது.
குரங்கு யோசித்தது. சிங்கத்தின் வாய்க்குள் கையை விடும்போது சிங்கம் தனது கையைக் கடித்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தது. உடனே, “”சிங்கராஜாவே, சில காலமாக என் கண்களில் புரை நோய் இருக்கின்றது. சின்ன முள் கூட என் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே என்னால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது” என்று கூறிவிட்டு மரத்திலிருந்து தாவி ஓடிவிட்டது.
பிறகு சிங்கம் கரடியொன்றைப் பார்த்தது. அதனிடம் தனது தொண்டையில் சிக்கியிருக்கும் எலும்பை எடுத்து, தனக்கு உதவி செய்யும்படி கேட்டது.
கரடியும் வாய்க்குள் கையை விட்டால் சிங்கம் தன் கையைக் கடித்துவிடும் என்று எண்ணி, ”அரசே, மன்னிக்க வேண்டும். நான் உங்கள் வாயில் கைவிட்டு எலும்பை எடுக்கும்போது என் கையிலுள்ள ரோமங்கள் முரடாக இருப்பதால் அவை உங்கள் வாயில் குத்தி, உங்களுக்கு அதிக வலிதான் ஏற்படும்” என்று கூறிவிட்டு, அதுவும் ஓட்டம் எடுத்தது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தந்திர நரி ஒன்று எங்கே தன்னையும் சிங்கம் அழைத்து எலும்பை எடுக்கச் சொல்லிக் கேட்குமோ என்று எண்ணி, சிங்கத்தைப் பார்த்து,
“”அரசே! நீங்கள் துன்பப்படுவது எனக்குப் புரிகிறது. தங்கள் தொண்டையில் சிக்கியிருக்கும் எலும்பை எடுக்கக் கூடியது பறவையினம்தான். அதுவும் எனக்குத் தெரிந்த மரக்கொத்திப் பறவை ஒன்று இருக்கிறது. அது இதைச் சுலபமாகச் செய்துவிடும். நான் உங்களை அதனிடம் அழைத்துச் செல்கிறேன்…” என்று கூறி, தூரத்தில் ஒரு மரத்திலிருந்த மரங்கொத்திப் பறவையிடம் அழைத்துச் சென்றுவிட்டு விட்டு, நைசாக ஓடிப்போனது அந்த நரி.
மரக்கிளையில் உட்கார்ந்திருந்த மரங்கொத்திப் பறவையிடம் சிங்கம் தனது துன்பத்தை எடுத்துக் கூறியது.
அதற்கு மரங்கொத்தி, “”உங்கள் தொண்டையில் சிக்கியுள்ள எலும்பை எடுக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் உங்கள் அகன்ற வாய்க்குள் என் தலையை நுழைக்கத்தான் எனக்குப் பயமாக இருக்கிறது. ஒருவேளை, நீங்கள் என்னைத் தின்றுவிட்டால் நான் என்ன செய்வது?” என்று கேட்டது.
“”பயப்படாதே, நண்பா, உன்னை தின்றுவிடமாட்டேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்று” என சிங்கம் கெஞ்சியது.
மிகவும் பரிதாபப்பட்ட மரங்கொத்தி, அந்த சிங்கத்தை மல்லாந்து படுத்துக்கொள்ளும்படி சொன்னது. பிறகு அது, “எதற்கும் இந்த சிங்கத்தை நம்புவதற்கில்லை’ என்று நினைத்தது.
எனவே, சிங்கம் தனது வாயை திடீரென்று மூடிவிடாமல் தடுப்பதற்காக அதனுடைய மேல் தாடைக்கும் கீழ் தாடைக்கும் இடையில் ஒரு சிறிய கம்பை நிற்க வைத்துப் பிறகு, சிங்கத்தின் வாய்க்குள் தனது தலையை நுழைத்து, தனது அலகினால் சிங்கத்தின் தொண்டையில் சிக்கியிருந்த எலும்பைத் தட்டி விழச் செய்து வெளியே எடுத்தது. பிறகு சிங்கத்தின் வாயிலிருந்து தனது தலையை வெளியே இழுத்துக் கொண்டு தாடைகளுக்கிடையில் நிறுத்தியிருந்த சிறிய கம்பைத் தட்டி விழச் செய்தது. பிறகு விர்ரென்று பறந்து மரக்கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது.
சிங்கம் மரங்கொத்திக்கு நன்றி சொல்லியது.
இதையெல்லாம் தூரத்திலிருந்து மறைந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்கு, கரடி, நரி ஆகியவை மரங்கொத்தியின் மதியூகத்தைப் பாராட்டின.
சிங்கராஜாவுக்கே உதவி செய்தது குறித்து மரங்கொத்தி மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டது.
– எம்.ஜி.விஜயலெக்ஷ்மி கங்காதரன் (ஆகஸ்ட் 2013)