அன்று காலை மிகவும் உற்சாகமாகக் கண் விழித்தான் அபிலாஷ். அன்று அவன் பிறந்த நாள் அல்லவா? அபிலாஷுக்கு இது 12-வது பிறந்த நாள்.
குளித்து, அப்பா வாங்கிக் கொடுத்த புது உடையை உடுத்தி, காலை உணவு உண்டபின் பள்ளிக்குக் கிளம்பினான்.
எல்லா வருடமும் தனது பிறந்த நாளை பள்ளியில் தன் நண்பர்களுடன் கொண்டாடுவது அவனுடைய வழக்கம். பள்ளி வேன் வீட்டு வாசலில் வந்த நின்றது. அபிலாஷின் அம்மா, கேக்கையும் இனிப்புகளையும் அவன் கையில் கொடுத்தார். ஆனால் அபிலாஷ் –
“அம்மா இது இங்கேயே இருக்கட்டும். நான் பள்ளி விட்டு வந்ததும் கொடுக்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றான்.
மாலையில் அபிலாஷ் வீடு திரும்பியதும், தன் அம்மாவிடம், “அம்மா, என்னோட கொஞ்சம் வாங்களேன்’ என்றான்.
“எங்கே கண்ணு, அம்மாவைக் கூப்பிடறே?’ என்றபடியே அவனுடன் கிளம்பினார்.
இருவரும் தெருக்கோடியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்குச் சென்றனர். அங்கே, காப்பக நிர்வாகி மேரி, அபிலாஷைப் பார்த்து, “வா… அபிலாஷ், உன் நண்பன் வருணைப் பார்க்க வந்தாயா?’ என்று கேட்டார்.
“ஆமாம், சிஸ்டர், இன்று எனது பிறந்தநாள். இனிப்பு எடுத்துக்கோங்க’ என்றான் அபிலாஷ்.
தான் கொண்டு வந்திருந்த கேக்கையும் இனிப்புகளையும் அங்கிருந்த தன் நண்பன் வருணுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியுடன் வழங்கிவிட்டுத் தனது தாயாருடன் வீடு திரும்பினான்.
வீடு திரும்பியவுடன் அவனது தாய், “ஏன் அபிலாஷ், காலையில் உன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கவில்லை..?’ என்று கேட்டார்.
“இல்லை அம்மா! நேற்று நான் பள்ளி விட்டு வரும்போதுதான் வருணைப் பார்த்தேன். நான் என்னைப் பற்றியும் உங்களைப் பற்றியும் அவனிடம் கூறினேன். ஆனால் அவன் தன்னைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அவனது அம்மா, அவன் பிறந்த உடனேயே அவனை விட்டுட்டுப் போயிட்டாங்களாம்…’ என்ற அபிலாஷ் மேலும்,
“என்னோட நண்பர்களுக்கெல்லாம் பெற்றோர் இருக்காங்க. அவங்க கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுப்பாங்க… ஆனால் வருண் மாதிரியான பசங்களுக்கு யாருமே இல்லம்மா! அதனாலதான் என் பிறந்த நாளை இவர்களோடு கொண்டாடினேன். இதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி ஒவ்வொரு பண்டிகையையும் இங்கே வந்து கொண்டாடலாம் என்று நினைக்கிறேன்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அம்மா?’ என்ற கேட்டான் உணர்ச்சி பொங்க.
கண் கலங்கிய அவனது அம்மா, அவனை உச்சி மோர்ந்து அணைத்துக் கொண்டார்.
இளம் படைப்பாளி
-பா.கோகுலகிருஷ்ணன் (நவம்பர் 2011),
9-ம் வகுப்பு, சி.இ.ஓ.ஏ.பதின்ம மேல்நிலைப் பள்ளி, அ.கோசாகுளம், மதுரை-17.