போட்டிக்கு வந்த காற்றண்ணன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 86 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதிரவனும் காற்றண்ணனும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. உலகத்தில் இரண்டு வல்லவர்கள் சந்தித் தால், அவர்களுக்குள் என்ன போட்டி ஏற்படும்? யார் வல்லவர் என்பதைத் தவிர வேறு எதற்காக அவர்கள் மோதிக் கொள்ளப் போகிறார்கள்.

“நான் தான் வல்லவன்” என்றான் காற்றண்ணன்.

“இல்லை. நான் தான் வல்லவன்!” என்றான் கதிரவன்.

“மெய்ப்பிக்கிறாயா?” என்றான் காற்றண்ணன்.

“முதலில் நீ வல்லவன் என்பதைக் காட்டு. பிறகு நான் என் வல்லமையைக் காட்டுகிறேன்” என்றான் கதிரவன். “சரி அதோ, பூமியில் பார்! தெருவில் கைத்தடி ஊன்றி நடந்து செல்லுகிறானே கிழவன், அவனிடம் நம் வல்லமையைக் காட்டலாம்” என்றான் காற்றண்ணன்.

“போயும் போயும் தள்ளாடி நடக்கும் கிழவனிடமா நம் கைவரிசையைக் காட்ட வேண்டும்?” என்று நகைத்தான் கதிரவன்.

“வீண் பிதற்றல் வேண்டாம். கூறுவதைக் கவனித்துக் கொள். அந்தக் கிழவன் அணிந்திருக்கிறானே மேல் சட்டை, அதை அவன் உடலிலிருந்து பறித்தெரிய வேண்டும். என் ஆற்றலை நான் காட்டுகிறேன். உன் ஆற்றலை நீ காட்டுவாயா?” என்று கேட்டான் காற்றண்ணன்.

சரி என்று சவாலை ஏற்றுக் கொண்டான் கதிரவன்.

காற்றண்ணன் தன் வல்லமையைக் காட்டத் தொடங்கினான்.

ஊய் ஊய் என்று, காற்று வீசத் தொடங்கியது. தெருவில் கைத்தடி ஊன்றித் தள்ளாடி நடந்து செல்லும் கிழவனின் மேல் சட்டையைத் தன் ஊங்காரப் பாய்ச்சலால் கழற்றி எறிய முயன்றான் காற்றண்ணன்.

கிழவனுக்கு மூச்சுப் பொறுக்கவில்லை. கைத் தடியைக் கீழே போட்டான். தெருவோரத்தே இருந்த ஒரு ஒதுப்புறமான இடத்தில் போய் முடங்கிக் கொண்டான். தன் மேல் சட்டையை இழந்துவிடாமல் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

காற்று மேலும் வேகமாக வீசியது. கிழவன் குளிர் தாங்கமுடியாமல் தன் கைகளை உடலில் பதித்து மூடிக் கொண்டான்.

காற்று வேகம் மிக மிக, அவன் கையின் அழுத்தம் மிகுந்தது. சட்டையை இழுத்து இழுத்துப் போர்த்துக் கொண்டபடி அவன் தன் உடலோடு அணைத்துக் கொண்டான்.

ஒருமணி நேரம் ஊய் ஊய் என்று ஊதிய காற்று ஓய்ந்தது. கதிரவனிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது.

“நான் தோற்றுவிட்டேன். நீ உன் வல்லமை யைக் காட்டு” என்றான் காற்றண்ணன்.

அதுவரையில் மேகங்களுக்குப் பின்னே ஒளிந்திருந்த கதிரவன் வெளியில் வந்தான்.

கிழவன் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கினான். நேராக அந்தக் கிழவன் மீது தன் கதிர்களை வீசினான்.

சிரித்த முகத்தோடு தன் ஒளிக் கதிர்களை அவன் கிழவன் மீது செலுத்தினான்.

கிழவனின் குளிர் அகன்றது. வெயில் ஏற ஏறப் புழுக்கம் மிகுந்தது. முதலில் முடங்கியிருந்த கைகளை அகற்றியவன். சிறிது நேரத்தில் வேர்க்கத் தொடங்கியதும் மேல் சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் போட்டான். மேலும் வெப்பம் மிகவே உள் சட்டையையும் கழற்றிப் போட்டான். வியர்வையைத் துடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

காற்றண்ணன் கதிரவன் முன் தலை குனிந்தான்.

“அண்ணலே நீதான் வென்றாய்” என்று பாராட்டினான்.

“உன் வெற்றியின் இரகசியம் என்ன?” என்று கேட்டான்.

“வன்முறையும் தாக்குதலும் வெறுப்பை உண்டாக்கும். அன்பும் அரவணைப்பும் ஆதரவைப் பெருக்கும். என் அன்புக்கைகளின் தழுவல் எனக்கு வெற்றி தேடித்தந்தது” என்றான் கதிரவன்.

அவன் வெற்றிக் கதிர்கள் உலகெங்கும் பாவிக் கொண்டிருந்தன.

– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *