ஒர் ஊரிலே குயவரும் கம்மாளரும் நெருங்கிய நண்பர்கள். பிழைப்பில்லை; பெரும்பசி—வெளியூருக்குப் புறப்பட்டனர்.
வழியிலே, ஊர் நடுவிலே அக்கிரகாரம்—திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் யோசித்தார்கள். நம் இருவருக்கும் பூணூல்தான் இருக்கிறதே. இந்த ஊரிலே நம்மை யார் அடையாளம் கண்டு பிடிப்பது—திருமண வீட்டிலே போய்ச் சாப்பிடலாமே, சாப்பிட்டுவிட்டே போகலாமே— என்ற முடிவுக்கு வந்து, ஐயர் வீட்டுத் திருமணத்திலே நுழைந்து விட்டார்கள். கும்பல்—ஒரே கூட்டம். இருவரும் சேர்ந்து போக முடியவில்லை. தனித்தனியாக பிரிந்து போய்ப் பந்தியில் உட்கார்ந்து விட்டார்கள்.
எல்லாம் பரிமாறிய பிறகு, பிராமணாள் எல்லாரும் கையில் தண்ணிரை வாங்கினார்கள். குயவரும் வாங்கி னார். எல்லோரும் கண்ணை மூடுவதைப் பார்த்தார்; தானும் மூடிக் கொண்டார்.
எல்லோரும் நீர் விளாவி, சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
குயவன் கண்ணைத் திறவாததால், மற்றவர்கள் உண்பதைக் காண முடியவில்லை, அதனால் கையில் நீரோடு கண்ணை மூடியபடியே உட்கார்ந்திருந்தார்.
சாம்பார் பரிமாற வந்த ஐயர்— ‘என்னாங்காணும், குசப்பிராமணனா யிருக்கிறீரே. சாப்பிடுங்காணும்’—என்று சொன்னார்.
இவர் உடனே கண்ணை விழித்து, ‘அதோ, கதவிடுக்கிலே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிற அந்தக் கம்மாளப் பையலா—என்னைக் குசவன்’ என்று சொன்னான்; அவனைப் பார்த்துக்கிறேன்—என்று கூறியதும்,
பந்தியில் உள்ள அனைவரும் உண்ணாமல் எழுந்து கூடி—
பாவம்! இவர்கள்.
போகாத இடந்தனிலே போகவேண்டாம் என்ற ‘உலக நீதி’ யைப் படித்திருந்தால், இப்படி நடை பெற்றிராது.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை