(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பிறர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்
முத்தநாதன் என்பவன் “சிவாகமத்தை அறி விக்க வந்தேன்” என்று மெய்ப்பொருள் நாயனா ரிடம் சொல்லிப் பக்கத்திலிருந்த மனைவியரையும், காவலரையும் அகலச்செய்து, தனியே முத்தநாதன் மேலும், மெய்ப்பொருளார் கீழுமாக இருந்து, பாடம் சொல்வதற்காக ஏட்டைப் பிரித்தான். பிரித்த ஏட்டினுள் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கழுத்தை அவன் அரிந்தான். பாதி அரிந்து இரத்தம் பெருகி ஓடுவதைக் காவல் செய்த தத்தன் கண்டு முத்தநாதனை வெட்டப்போனான். அப்போது மெய்ப்பொருளார் தடுத்து, இவனை ஒன்றும் செய்யாதே இவனை எவ்விதத் துன்பமும் செய்யாமல் ஊருக்கு வெளியே விட்டுவா! என்று சொன்னார். அவனும் அவ்விதமே செய்தான். “பாடம் சொல்வேன்” என்று வந்து தனக்குத் துன்பம் செய்தவனுக்குத் தான் துன்பம் செய்யாமல் பொறுத்த பொறுமையுள்ள மெய்ப்பொருளாரைத் திருக்கோவலூரில் உள்ள மக்களும், பிறரும் தம் மனத்தில் பொன்னைப்போல் மதித்து வைத்துப் புகழ்ந் தார்கள். வள்ளுவரும் இவ்விதம் பொறுத்தலே சிறப்புடையது என்று அறிவித்தார்.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
ஒறுத்தாரை = (பிறர் தமக்குத் தீங்கு செய்த விடத்துப் பொறுக்காமல் அவனைத்) தண்டித்தவரை
ஒன்று ஆக = ஒரு பொருளாக
வையார் = (அறிவுடையவர்) மனதில் நினையார்
பொறுத்தாரை = (அத் தீங்கைப்) பொறுத்தவர்களை
பொன்போல் = பொன்னைப் (போற்றி வைப்பது) போல
பொதிந்துவைப்பர் = இடைவிடாமல் மனதில் நினைப்பர்.
கருத்து: மேலோர், பொறுமை யுடையோரைப் பொன் போல் பொதிந்து வைப்பர்.
கேள்வி: பொன் போல் பொதிந்து வைக்கப்படுபவர் எவர்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.