மீனாக்ஷிபுரம், அழகிய கிராமம்.
வாசு , சரவணன் இருவரும் எதிர், எதிர் வீட்டில் சிறு வயது முதல் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள்.
இருவரும் நண்பர்கள் என்ற போதிலும், வாசு நன்கு படிக்கும் திறன் உடையவன், இருப்பினும் விளையாட்டில் சுமார். சரவணன் விளையாட்டில் கெட்டி. படிப்பில் சுமார்.
வாசு எப்போதுமே சரவணனை தன் போட்டியாளனாக நினைத்ததே இல்லை. சரவனனுக்கோ வாசு மீது எப்போதும் ஒரு பொறாமை. அதற்க்கு காரணம் அவன் நல்ல படிக்கிறான் என்று அனைவரும், அவன் காது பட பேசிக்கொண்டே இருப்பார்கள்.
சரவணன் விளையாட்டில் கெட்டி என்று பெருமையாக எப்போதாவது, ஒரு முறை தான் பேசுவார்கள். இதனால் வாசுவை சரவணனுக்கு பிடிக்காது என்றாளும், சிறுவயது முதல் நண்பர்களாக இருப்பதால் வேறு வழி இல்லாமல் அவனிடம் நட்பாக இருப்பான்.
இந்த முறை பள்ளி தேர்வில் வாசுவை விட , அதிக மதிப்பெண் வாங்கி கட்டுவேன் என்று சரவணன் தன் தந்தையிடம் சவால் விட்டுள்ளான்.
அதனால் வாசுவை தோற்கடிக்க , என்ன பண்ணலாம் என்ற யோசனையில் தான் நேரத்தை செலவிட்டானே, தவிர படிக்கவில்லை சரவணன்.
ஏதோ ஒரு திட்டம் தீட்டி விட்டு, இரவு சரியாக படிக்காமல் தூங்கிவிட்டான் சரவணன். வாசுவோ புரிந்து படிப்பதில் கெட்டிக்காரன் , அதனால் அவனும் ரொம்ப நேரம் முழிக்காமல் தூங்கி விட்டான்.
மறுநாள் காலை, தேர்வு நாள்.
சரவணன் பள்ளிக்கு சீக்கிரமாக கிளம்பி சென்றுவிட்டான். நண்பர்களுடன் சேர்ந்து படிக்க போவதாக கூறிவிட்டு , புதுமுக நண்பன்களுடன் சேர்ந்து வாசுவை தோற்கடிக்க திட்டம் தீட்டிவிட்டு தேர்வு எழுத பள்ளிக்கு புறப்பட்டான் சரவணன்.
பள்ளியில் காலை மணி அடிக்கப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் அவர்கள் தேர்வு எழுதும் அறையை நோக்கி புறப்பட்டு சென்றனர்.சரவணனும் தேர்வு அறையை நோக்கி நடந்தான். இனம் புரியாத மகிழ்ச்சி, வாசுவை வென்ற மாதிரியான மகிழ்ச்சியில் இருந்தான். தேர்வு அறைக்கு சென்று அமர்ந்தான். ஆசிரியர் வருகை பின் தேர்வு ஆரம்பம் ஆனது. வாசு வரவில்லை என்ற சந்தோஷம் அவனுக்கு.
சிறிது நேரம் கழித்து, கையில் மற்றும் தலையில் சிறு காயங்களுடன் வாசு தேர்வு அறையை நோக்கி வந்தான். அதை பார்த்ததும் சரவணனுக்கு ஏனோ ஒரு விதமான பழி வாங்கும் எண்ணம் அதிகரித்தது.
எப்படி இவன் தப்பித்தான், கிறுக்கு பயலுக, அறைகுறையா வேலை பார்த்திருக்காங்க. இவங்கள நம்பி எப்படி…?, சே! எல்லாம் வீணாகி விடும் போல , இருந்தாலும் தேர்வு நேரம் மிக குறைவு தான். அதனால் அவனால் சரியாக எழுத முடியாது என்ற எண்ணம் சரவணனுக்கு இருந்தது.
வாசு அந்த ஆசிரியரிடம் சிறுது நேரம் பேசி விட்டு, தேர்வு எழுத உள்ளே நுழைந்தான்.வாசுவை எதுவும் தெரியாத மாதிரி “ என்ன ? வாசு பரிச்சைக்கு லேட் ? அதென்ன தலையில காயம்! “, என்று மெதுவாக சரவணன் விசாரிக்க ,
அதற்க்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்து விட்டு தேர்வை எழுத ஆரம்பித்தான் வாசு.
தேர்வை எழுதும் ஆர்வம் குறைந்து, “வாசு எப்படி வந்தான் ? என்ன ஆச்சு ?” என்ற கேள்வி சரவணன் மனதில் எழுந்தது. வாசு தனக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் தேர்வை எழுதி கொண்டிருந்தான்.
பள்ளி மணி அடிக்கப்பட்டது. தேர்வு முடிந்து அனைவரும் வெளியில் வந்து கொண்டிருக்க , வாசுவை எதிர் பார்த்து சரவணன் நின்றுகொண்டிருந்தான்.
சரவணன் நிற்பதை கவனிக்காமல் , வாசு வேகமாக பள்ளியை விட்டு கிளம்பி கொண்டு இருந்தான்.
“டே! வாசு நில்லுடா.எங்கடா வேகமாக போற “ , என்று சரவணன் கேட்க,
அதற்க்கு வாசு “சரவணா, நான் மருத்துவனைக்கு போகிறேன். “ என்றான்.
“யாருக்கு என்னாச்சு ? வாசு “ என்று மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், ஆர்வம் அதிகமாக, நக்கலுடன் வாசுவை பார்த்தபடி கேட்க,
“இல்லை, சரவணா காலைல பள்ளிக்கு கிளம்பியபோது , என் அப்பாவின் வண்டி கோளாறு ஆகி விட்டதால் , என் அப்பா என்னை நடந்து போக சொன்னார். ஆனால் அந்த நேரம் உன் அப்பா நான் அந்த வழியாக தான் போறேன் என் கூட வா உன்னை பள்ளியில் இறக்கி விட்டு போகிறேன் என்று வண்டியில் ஒட்கார வைத்து கூட்டி வந்தார்?..“ என்று வாசு கூற,
அதிர்ச்சியாக “என் அப்பாவா, உன்னை கூட்டி வந்தார்?“ என்று சரவணன் கேட்க ,
அதற்கு “ஆமாம்! சரவணா உன் அப்பா தான் என்னை வண்டியில் கூட்டி வந்தார். அந்த ஒத்தை அடி பாதைல வரும் போது, யாரோ மூணு பேர் வந்து எங்கள வண்டியோட தள்ளிவிட்டு ஓடி போய்ட்டாங்க. வண்டியோட நாங்க ஆத்தை ஒட்டி இருக்கிற பாதாள சாக்கடைல விழுந்துட்டோம். எனக்கு தலைல, கைல லேசான காயம். உங்க அப்பாவுக்கு நல்ல அடி, மயக்கம் போட்டு விழுந்துட்டார். அவரை மருத்துவமனைல சேர்த்து விட்டு , எனக்கு முதல் உதவி எடுத்திட்டு , வேகமா தேர்வு எழுத வந்தேன். அதான் உன்கிட்ட கூட சொல்லாம மருத்துவமனைக்கு போய்ட்டு இருக்கேன்.” என்று வாசு கூற ,
சரவணன் கண்களில் கண்ணீர் வர, வாசுவுக்கும் அவங்க அப்பாக்கும் போட்ட திட்டம், என் அப்பா மாட்டிகிட்டார், என்று மனது வேதனை பட, தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறுக்கு என் அப்பாவுக்கு தண்டனை கிடைத்து விட்டதே என்று நினைத்து வேதனை பட்டான் சரவணன். மருத்துவமனையை நோக்கி வாசுவும், சரவணனும் நடக்க ஆரம்பித்தனர். தவறை உணர்ந்தவனாய் சரவணன். கண்களில் கண்ணீருடன் அப்பாவை பார்க்க நடக்க ஆரம்பித்தான்…
மற்றவர்களுடன் ஆரோக்கியமான போட்டி இருக்கலாம், பொறாமை மட்டும் இருக்க கூடாது. வெற்றி, தோல்வி வாழ்வில் சர்வ சாதாரணமாய் வந்து போகும். சிறு வயது முதல் எதனையும் ஏற்றுகொள்ள மனதை, பக்குவ படுத்தி கொள்ள வேண்டும். வெற்றி வந்தால் ஏற்று கொள்ள தெரிந்த நம்மால், தோல்வி வந்தால் அதற்கான காரணத்தை அறிய மனம் மறுக்கிறதோ…