பேராசை பெருநஷ்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 22,500 
 

ஒரு தெருவில் மூதாட்டி ஒருத்தி சென்று கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலி ஒரு திருடனின் கண்ணில் பட்டுவிட்டது. சற்று நேரத்தில் அவளது காலடி யருகே ஏதோ ஒரு பை உருண்டு வந்தது. பாட்டி பையை எடுத்துப் பார்த்தாள். உள்ளே தகதகவென ஒரு தங்கக்கட்டி ஜொலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தவள் யாரும் பார்க்காததை உறுதி செய்து கொண்டு, கட்டியை மட்டும் எடுத்து முந்தானையில் முடிந்துகொண்டாள்.
அவ்வேளையில் திருடன் ஒருவன் அவள்முன் வந்தான். “”பாட்டி… அந்த தங்கக்கட்டியை நீ எடுத்து மறைச்சுவச்சதை நான் பாத்துட்டேன். எனக்கு அதில் பாதியைக் கொடுத்துடு. இல்லாட்டி, கடத்தல் தங்கம் வச்சிருக்கிறதா போலீசில் காட்டிக் கொடுத்துடுவேன்,” என மிரட்டினான். கட்டியில் பாதியைக் கொடுக்க யாருக்குத்தான் மனசு வரும். பாட்டி அவனிடம், “”அடேய், நான் ஏழைடா! ஏதோ, ஆண்டவனா பாத்து இன்னிக்கு கருணை செஞ்சிருக்காரு. நீ என்னடான்னா அதுலயும் பங்கு கேக்குறியே!” என்றவள், தர மறுத்தாள்.
திருடன் விடாப்பிடியாய் அவளிடம் தங்கம் கேட்டு நின்றான். மூதாட்டிக்கோ, அவனிடம் தங்கத்தை தர விருப்பமில்லை. எனவே, அவளது புத்தி வேறுவிதமாக வேலை செய்தது. “கட்டி கனக்கிறதைப் பார்த்தா 20 பவுனாவது தேறும், இதுல வந்தவனுக்கு பாதியை எப்படிக் கொடுப்பது’ என சிந்தித்தாள். எனவே, திருடனிடம் “”சரி! தொலைஞ்சு போடா! என் கழுத்தில் கிடக்கிற இந்த ஐந்து பவுன் செயினைத் தரேன், அதோடு ஆளை விடு,” என்றவள், தன் சங்கிலியைத் தருவதாகக் கூறினாள்.
திருடனும் ஒன்றும் தெரியாதவன் போல, “”சரி… சரி… வயசானவளா இருக்கிறியேன்னு பாக்குறேன். இல்லாட்டி பாதிப்பங்கு வாங்காம விட்டிருக்க மாட்டேன்,” என்றவன், சங்கிலியை வாங்கிக்கொண்டு போய் விட்டான்.பிறகென்ன…பாட்டி வீட்டுக்குப் போய் தங்கக்கட்டியை உரசினாள். மேலே ஒட்டியிருந்த தகதகத்த தாள் கிழிந்து வந்தது. உள்ளே ஒரு செம்புக்கட்டி இருந்தது. பேராசையால் வந்த விளைவால் உள்ளதும் போனதை எண்ணி வருந்தினாள். குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டால் இப்படித்தான் கஷ்டமும் நஷ்டமும் வரும், சரிதானே! .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *