ஓர் ஊரில் இரண்டு சோம்பேறிகள் இருந்தார்கள். அவர்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள். எல்லோரையும் ஏமாற்றியே பிழைப்பு நடத்தவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சோம்பேறிகளில் ஒருவன் எத்தன். மற்றொருவன் தசுக்கன். இப்படிப் பெயர் வைத்து அவர்களை எல்லோரும் கூப்பிடுவார்கள்.
அந்த ஊரில் புதன்கிழமைதோறும் சந்தை கூடும். எல்லோரும் தங்கள் நிலத்திலே விளைந்த பொருள்களைச் சந்தையில் கொண்டுபோய் விற்பார்கள். விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு தங்கள் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்வார்கள்.
ஒரு புதன்கிழமையன்று வழக்கம்போல் சந்தை கூடியது. எத்தன் ஒரு கோணிப்பையில் நிறைய வரண்ட சருகுகளைப் போட்டுக்கொண்டான். மேலே மட்டும் கொஞ்சம் வேர்க் கடலையைப் பரப்பி வைத்தான். அந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு அவன் சந்தைக்குச் சென்று, “வேர்க்கடலை, வேர்க் கடலை” என்று கூவிக்கொண்டிருந்தான். அதே சந்தைக்குத் தசுக்கனும் ஒரு கோணிப்பையைத் தூக்கிக் கொண்டு வந்தான். அதில் அவன் நிறையச் சருகுகளையும், குச்சிகளையும் போட்டு அவற்றிற்கு மேலே சில உருளைக்கிழங்குகளைப் பரப்பியிருந் தான். “உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு” என்று அவன் கூவிக் கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் இரண்டு பேர் களிடத்திலும் வியாபாரம் செய்ய யாரும் வரவில்லை. வெகு நேரம் சுற்றித்திரிந்த பிறகு எத்தனும், தசுக்கனும் சந்தையில் தற்செயலாகத் சந்தித்தார்கள். ‘தசுக்கா, உன் பையில் என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று எத்தன் கேட்டான். “மூட்டை நிறைய உருளைக்கிழங்கு இருக்கிறது” என்றான் தசுக்கன். “என் மூட்டை திறைய வேர்க்கடலை இருக்கிறது. இரண்டு பேரும் மூட்டைகளை மாற்றிக் கொள்வோமா?” என்று மெல்ல ஆரம்பித்தான் எத்தன். தசுக்கன் உடனே சம்மதம் தெரிவித்தான். இரண்டு பேரும் மூட்டைகளை மாற்றிக் கொண்டு குதூகலத்தோடு அவனவன் வீட்டிற்குப் போனார்கள்.
வீடு சென்றதும் தசுக்கன் ஆவலோடு மூட்டையை அவிழ்த்துக் கீழே கொட்டினான். மூட்டையில் அரைப்படி வேர்க்கடலை கூட இல்லை. உடனே அவன் எத்தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான். எத்தனும் இதே போல ஏமாற்ற மடைந்து தசுக்கன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். இருவரும் பாதி வழியில் சந்தித்தார்கள். ஒருவன்மேல் மற்றொருவன் குற்றம் சாட்டத் தொடங்கினான். இதற்குள் நன்றாக இருட்டி விட்டது. இருட்டிலே நெடுநேரம் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் கள்.
கடைசியில் அவர்கள் இரண்டு பேருக்கும் வாய்வலி எடுத்துக் கொண்டது. தொண்டை கம்மியது. “தம்பி, நாம் சமாதானமாகப் போவோம். இரண்டு பேரும் கெட்டிக்காரர்கள். அதனால் நமக்குள் இனிமேல் சண்டை வேண்டாம். நாம் இருவரும் அண்ணன் தம்பிகள் போல இருப்போம். சேர்ந்தே வேலை செய்வோம்” என்று எத்தன் நயமாகப் பேசினான்.
“எனக்கும் அது சம்மதமே; ஆனால் என் உருளைக்கிழங் குக்கு விலை அதிகம். அதனால் நீ முதலில் எனக்கு இரண்டணாக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுத்தால் தான் எனக்கு நீ அண்ணன்” என்று தசுக்கன் பதில் சொன்னான்.
இரண்டணாவைப்பற்றி மறுபடியும் சச்சரவு தொடங்கிற்று. பேச்சு வளர்ந்தது.
கடைசியில் எத்தன் சமாதானத்திற்கு வந்தான். “பக்கத் திலே ஒரு பாழுங் கிணறு இருக்கிறது. அதற்குள்ளே நிறையத் தங்கமும் வெள்ளியும் இருக்கிறதாக நான் கேள்விப் பட்டிருக் கிறேன். வா, உனக்கு அந்தக் கிணற்றைக் காட்டுகிறேன்” என்று அவன் கூறிக்கொண்டே தசுக்கனை அழைத்துச் சென்றான். இருவரும் ஒரு பாழுங் கிணற்றை அடைந்தார்கள்,
தசுக்கா, இந்தக் கோணிப்பையில் உன்னைக்கட்டிக் கிணற் றுக்குள் விடுகிறேன். நீ உள்ளே சென்றதும் கையில் கிடைக்கிற பொருள்களையெல்லாம் இந்தப் பையில் போட்டு முதலில் மேலே அனுப்பு. பிறகு இரண்டாம் முறையாக நான் பையை உள்ளே விடும் போது நீ அதிலேறிக் தொண்டு வந்துவிடலாம். கிடைக்கும் பணத்தை இரண்டு பேருமாகப் பங்கிட்டுக் கொள்வோம்” என்று கூறினான் எத்தன்.
“எனக்கு இரண்டணா அதிகமாகப் பங்கிடவேணும், உருளைக்கிழங்கு விலை அதிகம்” என்று வாதாடினான் தசுக்கன். வெகுநேரம் இதைப்பற்றி அவர்களுக்குள் விவாதம் நடந்தது. கடைசியில் எத்தன் இணங்கினான். தசுக்கனைக் கோணிப்பை யில் கட்டிப் பாழுங் கிணற்றுக்குள் விட்டான்.
கிணற்றின் அடியில் சென்றதும் தசுக்கன் பைக்குள் இருந்த படியே ஒரு காலை எடுத்து மெதுவாகக் கீழே வைத்தான். சப்பாத்திக்கள்ளி முள் நறுக்கென்று காலில் குத்தியது. அவன் நன்றாக உற்றுப் பார்த்தான். ஒரே இருட்டாக இருந்தபடியால் ஒன்றுமே தெரியவில்லை. பிறகு மெதுவாக மற்றொருகாலை எடுத்து வைத்தான். அந்தக் காலிலும் முள் நன்றாகக் குத்திற்று. அதனால் அவனுக்கு எத்தன் மேல் சந்தேகம் வந்துவிட்டது. தன்னை ஏமாற்றிக் கிணற்றுக்குள்ளேயே விட்டு விட்டுப்போக எத்தன் தந்திரம் செய்திருக்கிறான் என்று அவனுக்குத் தோன் றிற்று. அதனால் அவனும் ஒரு சூழ்ச்சி செய்ய நினைத்தான்.
அவன் கோணிப்பைக்குள் உட்கார்ந்துகொண்டே, “அண்ணா , தங்கம் கட்டி கட்டியாக ஏராளமாகக் கிடக்கிறது!” என்று சத்தமாகக் சொன்னான்.
“தம்பீ, சத்தம் போடாதே; முதலில் தங்கக்கட்டிகளை யேல் லாம் கோணிப்பைக்குள் போட்டு அனுப்பு. ஒரு கட்டியையும் விட்டுவிடாதே” என்று எத்தன் பதில் சொன்னான்.
கிணற்றுக்குள் தங்கம் இருக்குமென்று அவன் முதலில் நினைக்கவில்லை. தசுக்கனை ஏமாற்றவே அவனைக் கிணற்றில் கட்டிவிட்டான். ஆனால் இப்பொழுது தசுக்கன் கூறியதைக் கேட்டதும் தங்கத்தின் மீதிருந்த ஆசையால் அவன் அதை உண்மையென்றே நம்பிவிட்டான்,
தசுக்கன் பைக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, “அண்ணா , தங்கக் கட்டியெல்லாம் பையில் கட்டியாகி விட்டது, மேலே இழு” என்றான். எத்தன் ஆவலோடு பையை மேலே இழுத்துக்கொண்டான். பிறகு பையைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டான். தசுக்கன் ஒழிந்தான் என்பது அவனுடைய எண்ணம். அவனைத் தந்திரமாக ஏமாற்றி விட்டதை நினைத்து நினைத்து அவன் அடிக்கடி வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே போனான்.
நடக்க நடக்கக் கோணிப்பையின் பாரமும் அதிகமாவது போல அவனுக்குத் தோன்றிற்று. அவனால் அதற்கு மேல் பை யைத் தூக்கிக் கொண்டு போக முடியவில்லை. பைக்குள் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் அதிகமாயிற்று. யாராவது வருகிறார்களா என்று அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரே இருட்டாக இருந்த தால் கண்ணுக்கு யாருமே தெரியவில்லை. ஓரிடத்தில் புதராகச் செடிகளும் மரங்களும் இருந்தன. அவ்விடத்தில் அவன் கோணிப்பையை மெதுவாகக் கீழே இறக்கி வைத்தான். “அப்பா! ரொம்பக் கனம். எனக்கு நிறையத் தங்கம் கிடைத்து விட்டது. தசுக்கனை ஏமாற்றிவிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே எத்தன் பையை அவிழ்த்தான்.
“அண்ணா! பயப்பட வேண்டாம். பங்குக்கு நான் இருக் கிறேன்” என்று சொல்லிக் கொண்டே தசுக்கன் பையைவிட்டு வெளியே வந்தான். இரண்டணாக் கொடுக்கவேண்டும் என்று அவன் மறுபடியும் வாதாடினான். நெடுநேரம் இருவரும் கூச்சலிட்டனர்.
அவர்கள் இப்படிப் போராடிக் கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்திலே ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு பேய்கள் நிறைய இருந்தன. அவைகளுக்கு இவர்கள் போடும் கூச்சல் நன்றாகக் கேட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்க இரண்டு குட்டிப் பேய்கள் ஆசைகொண்டன. பதுங்கிப் பதுங்கி அவை மெது வாகத் தசுக்கனும் எத்தனும் போராடிக் கொண்டிருந்த இடத் திற்கே வந்துவிட்டன. ஒரே இருட்டாக இருந்தபடியால் ஒரு வரும் அவற்றைக் கண்டு கொள்ள முடிய வில்லை. அதனால் குட்டிப் பேய்கள் இரண்டும் தைரியமாக அவர்கள் பக்கத் திலேயே நெருங்கி வந்தன.
அந்தச் சமயத்தில் தசுக்கன் எத்தனை விடாமல் பிடித்துக் கொள்ள விரும்பித் தன்னுடைய கைகளை நீட்டினான். பக்கத்திலே வந்திருந்த குட்டிப்பேய் ஒன்றின் வலதுகை அவள் பிடியில் அகப்பட்டது. இருட்டில் அந்தக் கை யாருடையது என்று தசுக்கனுக்குத் தெரியவில்லை. எத்தன் கைதான் என்று நினைத்து அவன் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். “ஓடப் பார்க்கிறாயா? அது முடியாது; கையை விடவே மாட்டேன்” என்று அவன் உரத்துக் கூவினான். அந்தச் சமயத்தில் இரண்டு பேய்கள் அங்கேயிருப்பது எத்தனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் நடுங்கிக்கொண்டே ஒரு மரத்தின் பின்னால் போய் மறைந்துகொண்டு என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். தசுக்கன் குட்டிப் பேயின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தான். கையிலகப் பட்டகுட்டிப்பேய் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது. அதற்குச் சத்தம் போடவும் தைரியம் வரவில்லை.
மற்றொரு குட்டிப்பேய் பயந்து ஓட்டம் பிடித்தது. சுடு காட்டிலிருந்த ஆயிரம் பேய்களிடத்திலும் அழுதுகொண்டே நடந்த விஷயத்தை அது சொல்லிற்று. எல்லாப் பேய்களும் பயந்து அழத் தொடங்கிவிட்டன. அப்பொழுது ஒரு கிழப்பேய் முன்னால் வந்து, “இப்பொழுது அழுது கொண்டிருப்பதால் பயனில்லை. அந்த ஆள் இரண்டணாத்தானே வேண்டும் என்று கேட்கிறான் ? நாம் ஒவ்வொருவரும் ஒரு இரண்டணா கொடுத் துக் குட்டிப்பேயை மீட்டு வருவோம்” என்றது. “ ஐயோ, அவன் எல்லோரையும் சேர்த்துப் பிடித்துக்கொள்வான்; நாங்கள் வரமாட்டோம்” என்று மற்ற பேய்களெல்லாம் ஒரே மூச்சில் கூறின.
“ அவனுக்குப் பணந்தான் வேண்டும். பணத்தைக் கொடுத்து விட்டால் அவன் நம்மை ஒன்றும் செய்யமாட்டான். ஒவ்வொருவரும் இரண்டணா எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தைரியம் சொல்லிற்று கிழப்பேய்.
கடைசியாக எல்லாப் பேய்களும் அரை மனதோடு ஒப்புக் கொண்டன. “கிழப்பேய்தான் பணத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு முன்னால் செல்லவேண்டும்” என்று மற்ற பேய்க ளெல்லாம் சொல்லவே கிழப்பேயும் அதற்குச் சம்மதித்தது. கிழப்பேய் முன்ஞல் செல்ல மற்ற பேய்களெல்லாம் நடுங்கிக் கொண்டே பின்னால் சென்றன. அவைகள் பக்கத்தில் வரும் போது தசுக்கனுடைய குரல் கேட்டது. ” விடவே மாட்டேன்; பணங் கொடுத்தால் தான் கையை விடுவேன்” என்று அவன் பழையபடி சத்தம் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ஐயா, இந்தாருங்கள் பணம்; ஆயிரம் பேய்களும் ஆளுக்கு இரண்டணாக் கொண்டுவந்திருக்கிறோம். குட்டிப்பேயை விட்டுவிடுங்கள்” என்று கிழப்பேய் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டது.
“பேயா?” என்று சொல்லிக் கொண்டே தசுக்கன் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்தான். தப்பித்ததே போதும் என்று குட்டிப் பேய், “வாருங்கள், ஓடிப்போய்விடுவோம்” என்று சொல்லிக்கொண்டே ஓட்டம் பிடித்தது. மூட்டையைப் போட்டுவிட்டுக் கிழப்பேயும் மற்ற பேய்களும் பின்னாலேயே ஓட்டம் பிடித்தன. ஆயிரம் பேய்கள் வந்திருக்கின்றன என்று தெரிந்ததும் மறைந்து நின்றிருந்த எத்தனும் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டான்.
வெகுநேரம் கழித்து எத்தனுக்கும் தசுக்கனுக்கும் மூர்ச்சை தெளிந்து சுயநினைவு வந்தது. ஆனால் ஒருவன்கூடக் கண்ணைத் திறக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு இரண்டு பேரும் பிணம் போலக் கிடந்தார்கள்.
இரவு நீங்கிப் பொழுது கிளம்பி நன்றாக வெய்யில் உறைத்த பிறகுதான் எத்தன் மெதுவாக ஒரு கண்ணில் பாதி யைத்திறந்து பார்த்தான். பேய்கள் ஒன்றும் இல்லை. தசுக்கன் மாத்திரம் பிணம் போலக் கிடத்தான். அவனுக்குப் பக்கத்திலே கிடந்த பணமூட்டையும் எத்தன் கண்ணில் பட்டது. உடனே அவன் எழுந்து பணமூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். தசுக்கனுக்குத் தெரியாமல் எங்காவது போய்விட வேண்டுமென்பது அவன் எண்ணம். ஆனால் அவன் எண் ணம் நிறைவேறவில்லை. அது வரையிலும் தசுக்கனும் அரைக் கண்ணால் மெதுவாகப் பார்த்துக்கொண்டு தானிருந்தான். அதனால் அவன், “அண்ணா! பேய் எனக்குத்தான் பணம் கொடுத்தது. பணமூட்டையை வைத்துவிட்டுப் போ” என்று கூறிக்கொண்டே எழுந்து ஓடி வந்தான். எத்தன் முன்னால் ஓடினான். தசுக்கன் பின்னால் தொடர்ந்தான். “பிடி, பிடி விடாதே; எனக்குப் பேய் கொடுத்த பணத்தை அவன் தூக்கிக் கொண்டு போகிறான் ” என்று கூறிக்கொண்டே அவன் ஓடி வந்தான். “பேய் எனக்குத்தான் கொடுத்தது” என்று கூவிக் கொண்டே எத்தன் முன்னால் ஓடினான்.
“பேயாவது பணங்கொடுக்கிறதாவது – இவர்கள் இரண்டு பேரும் பயித்தியம் பிடித்தவர்கள்” என்று மக்களெல்லோரும் கூறிக்கொண்டே பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தார்கள்.
கடைசியில் ஒரு தனியிடத்திற்கு எத்தன் வந்து சேர்ந்தான். அதற்குமேல் அவனால் ஓட முடியவில்லை. அவனுக்கு மூச்சுத் திணறிற்று. அவன் அப்படியே களைத்துப் போய்த் தரையில் உட்கார்ந்தான். தசுக்கனும் அவன் பின்னாலேயே வந்து சேர்ந்தான். அவனுக்கும் பெருமூச்சு வாங்கிற்று.
கொஞ்ச நேரம் இரண்டு பேராலும் பேச முடியவில்லை. பிறகு எத்தன், “ தம்பி, இனிமேல் நாம் ஒருவரையொருவர் ஏமாற்றுவதை விட்டுவிடுவோம்” என்று சொன்னான். ”அப்படி யானால் சரி, பேய் கொடுத்த பணம் எனக்குத்தான் சொந்தம். ஆகவே அதை நீ என்னிடம் கொடு” என்றான் தசுக்கன்.
“தம்பி, பாதியாவது எனக்குக் கொடு” என்று சொல்லிக் கொண்டே எத்தன் மூட்டையை அவிழ்த்துக் கொட்டினான். மூட்டையிலிருந்து உடைந்த ஓடுகள் தான் சலசலவென்று விழுந்தன. இருவரும் ஏமாற்ற மடைந்தனர்.
அது முதல் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஏமாற்று வதை நிறுத்திவிட்டனர். ஏமாற்றுவதால் யாருக்கும் நன்மை ஏற்படாது என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. பிறகு இரண்டு பேருமாகச் சேர்ந்து நாணயமாக வியாபாரம் செய்து வாழத் தொடங்கினார்கள்.
– தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.