சிறுகம்பையூர் என்ற ஊரில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்த ஏழை மனிதரிடம் செல்வம் இல்லையென்றாலும் தன் குழந்தைகளை அன்பு காட்டி அரவணைத்து நல்ல வழியில் வளர்த்து ஆளாக்கினார். தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைகளை அழைத்தார்.
“”குழந்தைகளே… உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக சொத்துக்கள் ஒன்றுமில்லை. என்னிடம் உள்ளதை உங்களுக்கு தருகிறேன். அதை கொண்டு நீங்கள் புத்தியோடு பிழைத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறினார்.
முதல் மகனுக்கு ஒரு கோழியையும், இரண்டாம் மகனுக்கு அரிவாளையும், மூன்றாம் மகனுக்கு ஒரு பூனையையும் கொடுத்தார்.
“”மகன்களே இந்த பொருட்களை பார்த்து ஏளனமாக நினைக்கவேண்டாம். இந்த பொருட்களில் உங்கள் தந்தையுடைய ஆசீர்வாதம் இருக்கிறது. என் சொல் பேச்சை கேட்டு நடந்தால் உங்களுக்கு நிறைய பொருட்களை இவை சம்பாதித்து தரும்.
“”இவற்றை எடுத்து கொண்டு இந்த பொருட்கள் இல்லாத நாடுகளுக்கு சென்று உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தினால் நிச்சயம் பணக்காரனாவீர்கள்,” என்று சொல்லிவிட்டு இறந்தார்.
தந்தையை இழந்த பிள்ளைகள் மிகவும் வருந்தினர். இறப்பு சடங்குகள் எல்லாம் செய்து முடித்த பிறகு மூத்த மகன், தந்தை கூறியபடியே கோழியை எடுத்து கொண்டு பெருஞ்செல்வந்தர் ஆவதற்காக வீட்டை விட்டு புறப்பட்டான்.
ஒவ்வொரு நாடாக சென்றான். எல்லா நாட்டிலும் கோழிகள் இருந்தன. எனவே, அவனது கோழியை விலைக்கு வாங்குவோர் ஒருவரும் இல்லை. இப்படியாக பல நாடுகளை சுற்றி திரிந்தான். அவனுக்கு வெறுப்பு உண்டாயிற்று. இருப்பினும் அப்பா சொன்ன சொல்லை நினைத்து மனதை தேற்றிக் கொண்டு சென்றான்.
ஒரு நாள் ஒரு புதிய தீவை அடைந்தான். அந்த தீவில் கோழிகளே இல்லை. சூரியனை கண்டு காலை மாலை நேரத்தை அறிந்து கொள்வர். ஆனால், இரவு நேரத்தை அவர்களால் கணக்கிட முடியாமல் தவித்தனர்.
இதுதான் தன் கோழியை விற்க சரியான இடம் என்பதை அறிந்து, அந்த ஊர் மக்களை அழைத்தான் மூத்தவன்.
“”இந்தப் பறவையை பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக இருக்கிறது. இதன் தலையில் அழகான கொண்டை இருக்கிறது. இந்த பறவை இரவு நேரத்தில் மூன்று முறை கூவும்.
“”அப்படியென்றால் முதல் சாமம், இரண்டாம் சாமம், மூன்றாம் சாமம் என்று கணக்கிட வேண்டும். மூன்றாம் சாமம் வந்ததும் விடியப் போகிறது என்றுஅர்த்தம்.
அதே போல் பகலில் கூவும் போது நேரத்தை எப்படி கணக்கிட வேண்டும் என்பதை சொன்னான். அதை கேட்ட அந்த தீவு மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அன்று இரவு கோழி கூவுவதை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.
அன்று இரவு கோழி மூன்று முறை கூவியது. அதை கேட்ட மக்கள் வியப்படைந்தனர். “”ஐயா இந்த பறவையை எங்களுக்கு விலைக்கு கொடுங்கள்,” என்று கெஞ்சினர் அவ்வூர் மக்கள்.
“”ஒரு மூட்டை பொன் நாணயம் கொடுத்தால் நிச்சயமாக அந்த பறவையை தருவேன்,” என்றான்.
“இத்தனை சிறந்த பறவைக்கு இவ்வளவு சிறிய அளவு பொன் கேட்கிறானே…’ என்று நினைத்த மக்கள் உடனே அவன் கேட்ட அளவு பொன்னை கொடுத்து அந்த கோழியை வாங்கி கொண்டனர். பொன்னை எடுத்து கொண்டு ஊர் திரும்பினான் மூத்தவன்.
அண்ணன் கொண்டு வந்த பொற்காசுகளை கண்டு வியப்படைந்தனர் தம்பிகள் இருவரும். உடனே இரண்டாவது மகன் தன் அரிவாளை எடுத்து கொண்டு புறப்பட்டான்.
அவன் புறப்பட்டு சென்று பல நாட்கள் வரையில் அந்த அரிவாளால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. பல இடங்களில் சுற்றினான். கடைசியாக ஒரு நாட்டிற்கு வந்தான். அந்த நாட்டிலிருந்தவர்கள் அரிவாளை பார்த்ததேயில்லை. அந்நாட்டு மக்கள் வயல்களில் தானியம்விளைந்தால், அவற்றை கையால் கசக்கியோ அல்லது கதிர்களை கிள்ளியோ எடுத்துச் செல்வர்.
இதனால் தானியங்கள் பலவகையிலும் கீழே சிந்தி வீணாவதை குறித்து வருந்தினர். அத்துடன் ரொம்ப நேரம் கஷ்டப்பட வேண்டியிருப்பதை உணர்ந்தனர். இந்த நிலையை பார்த்த இரண்டாவது மகன் அந்நாட்டு மக்களுக்கு தன்னுடைய அரிவாளின் பயனை எடுத்து கூறினான்.
பிறகு அரிவாளை கொண்டு கதிர்களை அறுத்துகட்டிகொடுத்தான். அதனால் கதிர்கள் வீணாகாமல் இருப்பதை கண்ட மக்கள் ஆச்சரியமடைந்தனர். “”என்ன விலை வேண்டுமானாலும் சொல் தருகிறோம். அந்த அரிவாளை எங்களுக்கு கொடுத்துவிடு,” என்றனர்.
இரண்டு மூட்டை நிறைய தங்க நாணயங்கள் கேட்டான் இரண்டாமவன். அப்படியே கொடுத்துவிட்டு அந்த அரிவாளை வாங்கி சென்றனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் இளையவன்.
அண்ணன்கள் இருவரும் நிறைய பணம் சம்பாதித்து வந்ததை கண்ட தம்பி மகிழ்ச்சியடைந்தான். தானும் அவ்வாறே செல்வதாக கூறி தன்னுடைய பூனையுடன் புறப்பட்டான்.
பூனையுடன் பல நாடுகள் சுற்றிப் பார்த்தான். எல்லா நாடுகளிலும் பூனைகள் இருந்தன. இதனால் சில மாதங்கள் மிகவும் கஷ்டப்பட்டான். ஒரு நாள் ஒரு நாட்டிற்குள் நுழைந்தான். அந்த நாட்டில் பூனைகளே இல்லை. ஆனால், எக்கச்சக்கமான எலிகள் இருந்தன.
அவை மக்களுக்கு கொடுத்து வந்த துன்பங்கள் ஏராளம். இதனால் அந்த ஊர் மக்கள் நிம்மதியை இழந்தனர். அந்த ஊர் ராஜா எலிகளின் தொல்லையை எப்படி நீக்குவது என்று தெரியாமல் தவித்தான். அச்சமயத்தில் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கினான் சிறியவன்.
அந்த வீட்டிலிருந்த எலிகளை எல்லாம் வேட்டையாடியது பூனை. இரண்டு நாட்களில் அந்த வீட்டில் எலிகளே இல்லை. இதை கண்ட நகரத்து மக்கள் மகிழ்ந்து போய் அரசனிடம் இந்த விஷயத்தை கூறினர். உடனே அரசன் இந்த புதுமையான விலங்கை விலைக்கு வாங்கினால் நாட்டிற்கு நன்மை ஏற்படும் என நினைத்தான்.
பூனைக்காரனை அழைத்து, “”உனக்கு எவ்வளவு பொருள் வேண்டும்?” என்று கேட்டான்.
பத்து மூட்டை பொன்னும், பத்து மூட்டை வெள்ளியும் கொடுத்தால் இந்த விலங்கை தருவேன் என்றான். அப்படியே கொடுத்து பூனையை வாங்கி கொண்டான் அரசன். தான் சம்பாதித்த பொருட்களோடு ஊர் போய் சேர்ந்தான்.
தங்களை விட தங்கள் தம்பி பல மடங்கு மிகுதியாக பொருள்கள் கொண்டு வந்ததை கண்டு மகிழ்ந்தனர் அண்ணன்கள். சகோதரர்கள் மூவரும் தங்களுக்கு வேண்டிய வீடு, நிலம் முதலியவற்றை வாங்கி கொண்டு சுகமாக வாழ்ந்தனர்.
நீதி: குட்டீஸ்… பெற்றோர் சொல் கேட்டு நடந்ததால் பிள்ளைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா?
நீங்களும் உங்கள் பெற்றோர் பேச்சை கேட்டு நடங்கள். நிச்சயம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.