(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“தம்பி சௌக்கியமா? ” என்ற குரல் வந்த திசையில் தன் பார்வையை அகல விரித்தது ஓர் எலுமிச்சை. அங்கே… தனக்கு எதிரே எட்டு ஒன்பது அடி தொலைவிலே ஒரு மாமரம் நின்றிருப்பதும், நாலா பக்கங்களிலும் கிளைகளைப் பரப்பி மிக்க செழிப்போடு விளங்கிய அது கனிகள், காய்கள், பூக்கள் ஆகியவற்றைப் பூண்டு ஒரு புது மணப் பெண் போல மிக்க பூரிப்போடு திகழ்வதும் அந்த எலுமிச்சையின் பார்வையிலே விழுந்தன. தன்னிடம் சுகசெய்தி வினவியது அந்த மாமரம்தான் என்பதை உணர்ந்து கொண்ட எலுமிச்சை அதனை நோட்டமிடுவதை நிறுத்தி உடனேயே பதிலளித்தது:
“சௌக்கியத்துக் கென்ன. என்றாலும் தங்களைப் போல் இல்லை”
எலுமிச்சை ‘பொடி’ வைத்துப் பேசுகிறதென்பதைப் புரிந்து கொண்ட மாமரம், “ஏன் அப்படிக் கூறுகிறீர்?'” என்று கேட்டது. அதற்கு அந்த எலுமிச்சை மிகவும் ஆர்வத் தோடு விடை பகர்ந்தது:
“நாம் வதிகின்ற இக்காணியிலே குடியிருக்கும் இந்த மனிதர்கள் உமக்குத் தினமும் நீர் ஊற்றுவதோடு இடை யிடையே பசளையுமிட்டு நன்கு பராமரித்து வருகிறார்கள். அதனால் நீர் மிக்க பூரிப்போடு வாழ்ந்து வருகின்றீர். இவர்கள் என்னையும் ஆரம்பத்திலிருந்து சில வருடங்கள் வரை உம்மைப் போலவே கவனித்து வந்தார்கள். பின் நான் காய்க்கமாட்டேன் என்று எண்ணியோ என்னவோ எனக்கு நீர் ஊற்றுவதையும், பசளையிடுவதையும் நிறுத் திக் கொண்டார்கள். ஆனால் இன்று எனக்கு, இருந்திருந்து எப்போதாவது பெய்யும் மழை நீர் மட்டுமே கிடைத்து வருகிறது. எனக்கேற்பட்ட இந்த நிலைமை காரணமாக நான் சாதாரணமாக வாழ்ந்து வருகிறேன். அது தான்..”
செழிப்பின்றியும், சோபை இழந்தும் காட்சி தந்த அந்த எலுமிச்சையின் பார்வையிலே வாழ்வில் நம்பிக்கை ஒளி துளிர்விட்டுக் கொண்டிருந்தது.
அந்த எலுமிச்சையின் வார்த்தைகளைக் கேட்ட மா. “ஆ..அதுவா விஷயம்” என்று விட்டு மேலும் தொடர்ந்தது:
“நான் கனிகளையும், காய்களையும் கொடுக்கிறேன். அதனாலேதான் இவர்கள் என்னை இவ்வாறு கவனித்து வருகிறார்கள். ஆனால் நீர் எதுவுமே ஈவதில்லையே.. இந் நிலையில் இந்த மனிதர்களிடமிருந்து எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?”
“கொடுப்பதற்கு என்மனம் மிகவும் விரும்புகிறது. ஆனால், இன்றைய நிலையில் நான் அவ்வாறு நடந்து கொள்வதற்கு என்னிடம் எதுவுமேயில்லையே. இதற்கு நான் என்ன செய்வது?” அந்த எலுமிச்சை அங்கலாய்த்துக் கொண்டது.
“என்னமோ அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நீ கொடுத்தால் தான் மற்றவரிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்க முடியும். இன்றைய உலகமே அப்படித்தான் இருக்கிறது”
மாமரத்தின் இவ்வார்த்தைகளைச் செவிமடுத்த எலுமிச்சை மேற்கொண்டு எதுவுமே புகல முடியாது மௌனத்தில் வீழ்ந்தது.
காலமென்ற கடலில் நாட்கள் என்னும் அலைகள் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டேயிருந்தன.
பத்துப் பதினொரு மாதங்களின் பின் யாருமே எதிர் பாராத வகையில் அந்த எலுமிச்சை பூத்துக் காய்க்கத் தொடங்கிய போது அந்த மனிதர்களின் உள்ளங்களும், வதனங்களும் உவகையினால் மலர்ந்து போயின. அன்று முதல் அவர்கள் அந்த எலுமிச்சைக்கு ஓடிஓடி நீரூற்றினார் கள். இடையிடையே பசளையும் இட்டுக் கொண்டார்கள். இந்நிலையிலேதான் ஒரு நாள்… அந்த எலுமிச்சை மாமரத்தை நோக்கிப் புன் முறுவலை முகிழ்த்துக் கொண்டு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தது:
“அண்ணா…… இங்கு குடியிருப்பவர்கள் நீண்ட காலமாக என்னைப் புறக்கணித்து வந்ததோடு இவர்களது பிள்ளைகள் கூட என்னைக் குத்திக் கிழித்து இம்சித்தும் வத்தார்கள். கால ஓட்டத்திலே எனது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இப்போது நான் காய்க் கத் தொடங்கியிருக்கிறேன். அதனால், இவர்கள் என்னை யும் உன்னைப் போலவே நன்கு கவனித்து வருகிறார்கள். பார்த்தீரா இந்த மனிதர்கள் எவ்வளவு சுய நலக்காரர்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த மனிதர்களி டமிருந்து கிஞ்சித்துமே பிரதி பலனை எதிர்பார்க்கவில்லை இவர்கள் விரும்பியவாறு காய்களையோ அல்லது கனி களையோ கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்”
இவ்வாறு இயம்பிய அந்த எலுமிச்சை தன்னை ஒரு முறை மெல்ல உலுக்கி விட்டுக் கொண்டது.
எலுமிச்சையின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மாமரமோ, எதுவுமே பேச முடியாது தலை கவிழ்ந்தது. ஆனால் அது எலுமிச்சையின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி உள்ளூர வியந்து கொண்டது.
– தினகரன் வார மஞ்சரி – 1981.03.08.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.