முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து போனான். சொர்க்கத்திற்கு வந்த அவனை இந்திரன் வரவேற்றான்.
“”பூவுலகில் உன் புகழ் பேசப்படும்வரை இங்கே தங்கி இருக்கலாம்!” என்றான் இந்திரன்.
எண்ணற்ற ஆண்டுகள் சென்றன. அவனை அழைத்த இந்திரன், “”பூவுலகில் எங்கும் உன் புகழ் பேசப்படுவதாக தெரியவில்லை. நீ இனிமேல் இங்கே தங்கியிருக்க முடியாது!” என்றான்.
அவன் வருந்துவதைப் பார்த்த இந்திரன், “”பூவுலகில் உன் பெயரைப் பேசுபவர் ஒருவர் இருந்தால் போதும். நீ மீண்டும் இங்கேயே தங்கலாம்!” என்றான்.
நம்பிக்கையுடன் பூவுலகம் வந்தான் அவன். என்றும் இளமையாக வாழும் மார்க்கண்டேய முனிவரிடம் சென்றான். தன் கதையை அவரிடம் சொன்னான்.
“”நீங்கள் இந்திரத்யும்னன் என்ற பெயரைக் கேட்டு இருக்கிறீர்களா? நன்றாக நினைவுபடுத்திச் சொல்லுங்கள்!” என்று கேட்டான்.
“”அப்படி ஒரு பெயரைக் கேட்டதாக எனக்கு நினைவு இல்லையே!” என்றார் அவர்.
“”எல்லையற்ற வாழ்நாளை உடையவர் நீங்கள். என் பெயரைக் கேட்டது இல்லை என்கிறீர்களே. நான் என்ன செய்வேன்?” என்று கண் கலங்கினான் அவன்.
உதவி செய்ய நினைத்த அவர், “”என்னிலும் மூத்ததான கோட்டான் ஒன்று இமயமலையில் வாழ்கிறது. உன் பெயர் அதற்குத் தெரிந்து இருக்கலாம். என்னுடன் வா!” என்றார்.
அவர்கள் இருவரும் இமயமலை வந்தனர். அங்கிருந்த கோட்டானிடம் அவர், “”நீ இந்திரத்யும்னன் என்ற அரசனின் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறாயா? நன்றாக நினைவுப்படுத்திச் சொல்!” என்றார்.
“”அப்படி ஒரு அரசனின் பெயரை நான் கேள்விப்பட்டது இல்லை. அருகில் இந்திரத்யும்னன் என்ற ஏரி உள்ளது. அங்கே என்னிலும் மூத்ததான ஆமை ஒன்று வாழ்கிறது. அதற்கு அந்த அரசனைத் தெரிந்து இருக்கலாம்!” என்றது.
அவர்களுடன் ஏரிக்கரைக்கு வந்த அது ஆமையை அழைத்தது.
கரைக்கு வந்த ஆமை, “”எதற்காக என்னை அழைத்தாய்?” என்று கேட்டது.
“”இந்திரத்யும்னன் என்ற அரசனின் பெயரை நீ கேள்விப்பட்டு இருக்கிறாயா?” என்றது கோட்டான்.
அந்தப் பெயரைக் கேட்டதும் ஆமை தன்னை மறந்தது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
“”வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய அந்த வள்ளலைப் பற்றியா கேட்கிறாய்? அவர் கொடையாகக் கொடுத்த பசுக் கூட்டங்கள் துள்ளிக் குதித்ததால் ஏற்பட்ட பள்ளமே இந்த ஏரி. அவர் தாரை வார்த்த நீரால்தான் இந்த ஏரியே நிரம்பியது. அவர் செய்யாத வேள்விகளே இல்லை. எப்படி நான் அவரை மறப்பேன்!” என்று தழுதழுத்த குரலில் சொன்னது.
அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. வானுலகத் தேர் ஒன்று அங்கே பறந்து வந்தது. அதில் இருந்த தேவர்கள் இந்திரத்யும்னனை வணங்கினர்.
“”உங்கள் புகழ் இங்கே நிலைத்து உள்ளது. சொர்க்கத்திற்கு வாருங்கள்!” என்று அழைத்தனர்.
ஏரிக்கரையில் இருந்த அவர்களுக்கு நன்றி சொன்னான் அவன். பிறகு தேரில் ஏறி விண்ணுலகம் சென்றான்.
தர்மத்தின் மகிமையை பார்த்தீர்களா குட்டீஸ்…
– செப்டம்பர் 17,2010