கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,417 
 
 

உங்களை மாதிரி பூபாலனும் சமத்துப் பையன்தான். அவனுக்கு கிரிக்கெட்னா ரொம்ப இஷ்டம். போகப் போக என்ன ஆச்சுன்னா கிரிக்கெட்ல டாஸ் போட்டு முடிவெடுக்கிற மாதிரி எல்லாத்துக்கும் டாஸ் போட ஆரம்பிச்சுட்டான்.

ஸ்கூல் விட்டு வந்ததும் வீட்டில் அறிவியல் படிக்கலாமா, ஆங்கிலத்தைப் படிக்கலாமா? என்று முடிவெடுக்கக்கூட டாஸ் போட்டுப் பார்ப்பான். சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்த இந்தப் பழக்கம், கடைசியில் எல்லாத்துக்கும் பூவா? தலையா? போட்டுத்தான் முடிவு எடுப்பது என்றாகிவிட்டது பூபாலனுக்கு.

அம்மா, அப்பா எல்லோரும் சொல்லிப் பார்த்தாகிவிட்டது. அதற்கு நம்ம ஃப்ரெண்டு என்ன செய்தார் தெரியுமா? இனி பூவா, தலையா? போட்டுப் பார்க்கலாமா, வேண்டாமா? என்று நாணயத்தைச் சுண்டினான். தலை விழுந்தது, வழக்கம் போல நாணயம் சொல்வதே சரி என்ற நிலைக்கு வந்து விட்டான்.

இவனைத் திருத்தவே முடியாது என்று விட்டுவிட்டார்கள். ஒரு நாள் காலையில் அப்பா அவனை அவசரமாக கூப்பிட்டார். ‘‘பூபாலா, தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை, மூச்சு விடவே சிரமப்படுகிறார், ஓடிப்போய் ஒரு டாக்ஸியோ ஆட்டோவோ கூப்பிட்டு வா’’ என்றார்.

அப்போதுகூட அவன் டாஸ் போட்டுப்பார்க்கத் தவறவில்லை. பூ விழுந்தால் டாக்ஸி, தலை விழுந்தால் ஆட்டோ என்று முடிவு செய்தான். தலை விழுந்தது. விழுந்தடித்துக்கொண்டு ஆட்டோவைத் தேடி ஓடினான். வழியில் வந்த டாக்ஸி எதையும் பொருட்படுத்தவில்லை. ஆட்டோ ஸ்டாண்ட் இருப்பதோ தெருக்கோடியில். நேரமோ ஓடிக்கொண்டிருந்தது. மூச்சு வாங்க ஓடி ஆட்டோ ஸ்டாண்டை அடைந்த பிறகுதான் தெரிந்தது அன்றைய தினம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தலைவர் இறந்துவிட்டதால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அன்று நகர் முழுதும் ஆட்டோ ஓடாது என்று.

அப்போதுதான் பூபாலனுக்கு உறைத்தது. ‘எதிரில் வந்த டாக்ஸியை எல்லாம் விட்டுவிட்டு நாணயம் சொன்னதைத்தான் கேட்பேன் என்ற வீம்பு எவ்வளவு தவறாகப் போய்விட்டது’ என்று.

அவசர அவசரமாய் எதிரில் வந்த டாக்ஸியைப் பிடித்து வீட்டுக்கு விரைந்தான். வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டு சுரேஷ் வந்து, ‘‘தாத்தாவுக்கு ரொம்ப சீரியஸாயிடுச்சுன்னு ஆஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்காங்க’’ என்றான்.

அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றான். அம்மா. அப்பா யாருமே அவனிடம் பேசவில்லை. சின்னத் தம்பிகூட முகத்தை திருப்பிக் கொண்டான். அழுகை முட்டிக்கொண்டு வந்தது பூபாலனுக்கு. அப்பாவைக் கட்டிக்கொண்டு ‘‘ஸாரிப்பா, இனிமே பூவா, தலையா? போட மாட்டேன்பா. எதுவா இருந்தாலும் சுயமா யோசிச்சு முடிவா எடுப்பேன்பா. தாத்தாவுக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா’’ என்று கதறினான்.

அவனுடைய மாற்றத்தை புரிந்துகொண்ட அப்பாவும் ‘‘சரி வா, தாத்தாவைப் போய்ப் பார்க்கலாம். அவருக்கு ஒண்ணும் இல்லை. வழக்கம் போல் தாத்தா, கதைகள் சொல்வாரா, மாட்டாரா? பூவா, தலையா? பூபாலனுக்கு’’ என்று சிரித்தார்.

‘‘அப்பா…’’ என்று பொய்யாய்ச் சிணுங்கினான் பூபாலன்.

வெளியான தேதி: 16 செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *