அந்த கிராமத்தில் தங்கமணி என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். பெயருக்கு ஏற்றார்போல அவர் தங்கமான குணம் கொண்டவர். தன்னால் முடிந்தமட்டும் பிறருக்கு உதவி செய்வார்.
அவர் வேலைக்கு சென்றால் தினசரி சம்பளம் ரூபாய் 300 கிடைக்கும். சொந்த வீடு இல்லை. அவருக்கு விக்னேஷ், மாரீஸ்வரன் என இரு ஆண்பிள்ளைகள். பிள்ளைகளை நல்லமுறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவராக தங்கமணி இருந்தார். சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்பம் நடத்தி வந்தார்.
அவரது ஊரிலேயே அவரது குலதெய்வமான உலகம்மன்கோவில் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அந்தக் கோவிலை, சீரமைத்து ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் நடைபெறும் விழாவினை சிறப்பாக நடத்த முயற்சி மேற்கொண்டார்.
கோவிலில் முதல்முதலாக அன்னதானத்தையும் தொடக்கிவைத்தார். ஊரின் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டு அன்னதானம் வழங்குவது எனக் கூறுவார். இதனால் அவருக்கு ஊரில் நல்ல பெயர் இருந்துவந்தது.
வேலைக்கு சென்றுவந்த நாளில் கிடைக்கும் சம்பளத்தில் 20 ரூபாய் அல்லது பத்து ரூபாய் சேமிப்பார். ஒரு உண்டியலில் அந்தப் பணத்தைப் போட்டுவைப்பார். ஒரு வருடம் முடிந்ததும் அந்தப் பணத்தைக்கொண்டு குடும்பத்துடன் ஏதாவது ஓர் ஊருக்கு சுற்றுலா சென்றுவருவார்.
நமது பிள்ளைகளுக்கும் சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்கவே இதனைச் செய்து வருகிறேன் என்பார்.
இப்படியாக அவர் இரு பிள்ளைகளையும் நல்லமுறையில் படிக்க வைத்துப் பட்டதாரிகளாக ஆக்கிவிட்டார்.
அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டாலும், தங்கமணி வேலைக்குச் செல்வதை விட்டுவிடவில்லை. உழைப்புதான் ஒருவருக்குப் பெருமைதரும் என்பார்.
பின்னர் இரு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து வைத்தார்.
வயதாகிவிட்ட தங்கமணி, தனது இரு பிள்ளைகளையும் அழைத்து, எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சேமிக்கும் பழக்கம் வேண்டும். முடிந்த மட்டும் பிறருக்கு உதவி செய்யுங்கள். குலதெய்வத்தை வணங்க மறக்க வேண்டாம் என அறிவுரை கூறிவிட்டு, இறந்துவிட்டார்.
சில மாதங்கள் கழித்து, அவரது மனைவியும் இறந்துவிட்டார். விக்னேஷ் மற்றும் மாரீஸ்வரன் ஆகிய இருவரும் வேறு வேறு ஊர்களில் வேலை செய்துவந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இருவரும் குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்கு சாமி கும்பிட பிறந்த ஊருக்கு வந்துவிடுவார்கள். குலதெய்வத்தைத் தேடி வருபவர்களில் பலருக்கு அந்த ஊரிலேயே சொந்தமான வீடு இருந்தது. இதனால் அவர்களுக்கு சாமி குடும்பிட வந்துபோவதற்குப் பிரச்னை இல்லாமல் இருந்தது.
விக்னேஷுக்கும், மாரீஸ்வரனுக்கும் சொந்த வீடு இல்லாதது வருத்தமாக இருந்தது. அவர்கள் வரும்போது ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பூவரச மரத்தின் கீழ் தங்கியிருந்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இப்படியாக சில ஆண்டுகள் உருண்டோடின. விக்னேஷ் மற்றும் மாரீஸ்வரனுக்கும் குழந்தைகள் பிறந்தன.
அந்த ஆண்டும் வழக்கம்போல குலதெய்வம் கோவிலுக்கு வந்தார்கள். விக்னேஷ் மனைவி சுந்தரி, “அந்தக் காலத்தில் உங்கள் தந்தை கொத்தனாராக இருந்தும் ஒரு சொந்த வீடு கட்டவில்லையே! இப்போது நாம்தான் கஷ்டப்படுகிறோம்’ என வருத்தமாகக் கூறினாள். அப்போது அந்தப் பக்கமாக வந்த அந்த ஊர்க்காரர் முனியப்பன், “அம்மா நீங்கள் நினைப்பது உங்கள் அளவில் சரியாக இருக்கலாம். நான் தங்கமணியுடன் பழகியவன். கடின
உழைப்பு, குடும்பத்தை நடத்திச் செல்லும் விதம், பிள்ளைகளைப் படிக்க வைத்தது, ஊர் ஒற்றுமைக்கு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தது… இப்படிப் பல நல்ல காரியங்களை அவர் செய்துள்ளார். அவர் இந்த ஊரில் நற்பெயரை சம்பாதித்துள்ளார். இறந்த பின்னரும் அவரது பெயர் கூறும்படி உள்ளது. அதுதான் மனிதனுக்கு வேண்டும். அவர் எதுவும் சொத்து சேர்க்கவில்லை என எண்ண வேண்டாம். இந்த ஊருக்கு அவரே ஒரு சொத்துதான். அவரது பிள்ளைகளான நீங்கள் இருவரும் உழைத்து, சேமித்து இந்த ஊரில் ஒரு வீடு கட்டலாமே! அது உங்களால் முடியும். அதைச் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் கூறியதைக் கேட்ட பிள்ளைகள் மருமகள் அனைவரும் தங்கமணி செய்த காரியங்களை நினைத்துப் பெருமைப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் நாமும் கடினமாக உழைத்து, சேமித்து ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டனர்.
– எஸ்.பாலசுந்தரராஜ் (ஆகஸ்ட் 2012)