(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கங்கைக் கரையில் திரிகூட மலை என்று ஒரு மலை யிருந்தது. அதற்கப்பால் ஒரு பெரிய இத்தி மரம் இருந்தது. அந்த மரப்பொந்தில் ஒரு கிழட்டுக் கழுகு வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு கண்ணும் தெரியாது, கால்களில் நகமும் கிடையாது. அதற் காக இரக்கப்பட்டுக் காட்டில் உள்ள பறவைகள் எல்லாம் தாந்தாம் தேடுகின்ற இரையில் சிறிது சிறிது கொண்டு வந்து கொடுத்து அதைக் காப் பாற்றி வந்தன.
ஒரு நாள் அந்த இடத்திற்குப் பூனை யொன்று வந்து சேர்ந்தது. அது பறவைகளின் குஞ்சுகளைப் பிடித்துத் தின்னும் நோக்கத்தோடு தான் அங்கே வந்தது. அந்தப் பூனையைக் கண்டதும் அங்கிருந்த பறவைக் குஞ்சுகளெல்லாம் பதை பதைத்துக் கத்தின. கண் தெரியாத அந்தக் கிழக்கழுகு ஏதோ கெடுதல் வந்து விட்டதென்று துடித்து அந்தக் குஞ்சுகளைப் பார்த்து, ‘ஏன் பயந்து கத்துகிறீர்கள்’ என்று கேட்டது.
இதற்குள் அந்தப் பூனை தந்திரமாக நாம் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி, கழுகின் முன்போய் நின்றுகொண்டு, ‘ஐயா, வணக்கம்’ என்று கூறியது.
‘நீ யார்?’ என்று கழுகு கேட்டது.
‘நான் ஒரு பூனை!’ என்றது பூனை.
‘நீ இப்பொழுதே இந்த இடத்தைவிட்டு ஓடிப் போய்விடு! இல்லையானால் உன் உயிர் போய் விடும்’ என்று கழுகு எச்சரித்தது.
‘ஐயா கழுகாரே, முதலில் என் கதையைக் கேளுங்கள். அதன் பின் நீங்கள் என்மேல் கோபித் துக் கொண்டாலும் சரி. சாதி வேறுபாட்டை மனத் தில் கொண்டு மற்ற பிராணிகளைக் கொல்லுவதும், சாதிக் கொரு நீதி என்ற முறையில் உபசாரம் செய்வதும் நேர்மையான முறையல்ல. அவனவன் கொண்டுள்ள ஒழுக்கங்களைக் கண்டபின்பே எது செய்ய வேண்டுமோ அது செய்ய வேண்டும்’ என்று பூனை கூறத் தொடங்கியது.
‘நீ இங்கு எதற்காக வந்தாய்? அதை முதலில் சொல்’ என்றது கழுகு.
‘நான் கங்கைக் கரையில் வாழ்கிறேன். நாள் தோறும் கங்கை நதியில் உடல் முழுவதும் அமிழக் குளித்து, சாந்திராயணம் என்ற விரதத்தைச் செய்து வருகிறேன். நீர் மிகுந்த புண்ணியவான் என்று கேள்விப்பட்டேன். அதனால் உம்மைப் பார்த்துப் போகவே புறப்பட்டு வந்தேன். ஏனெனில், வயது முதிர்ந்த அறிவாளிகள் எங்கிருக்கிறார்கள் என்று. கேட்டு அவர்களிடம் தருமோபதேசம் கேட்பது ஒருவனுடைய கடமை என்று தர்ம சாத்திரம் படித்தவர் கள் எல்லோரும் சொல்லுவார்கள். உம்மிடம் அறங் கேட்க வந்த என்னை நீர் கொல்ல நினைத்து விட்டீர். இது சரியா? பகைவர்களும் கூடத் தம்மை அடுத்தவர்களுக்கு நன்மையே செய்வார்கள். பகை கொண்டு தன்னை வெட்ட வருபவனுக்கும் மரம் நிழல் கொடுத்துக் களைப்பாற்றும்.நிலவு தீயவன் வீட்டிற்கும் வெளிச்சம் கொடுக்கிறது. பெரியவர்கள், புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உபகாரம் செய்வார்கள். எவனொருவன் வீட்டிற்கு, ஒரு விருந்தாளி வந்து முகம் வாடித் திரும்புகிறா னோ, அவன் வீட்டுப் புண்ணியத்தை எடுத்துக் கொண்டு தன் பாவத்தை அங்கே விட்டு விட்டுச் செல்லுகிறான் அந்த விருந்தாளி என்று சொல்லு வார்கள்.” என்று பூனை சொல்லிக்கொண்டிருந்தது.
‘ஆனால், இறைச்சி அருந்துவதும் அதற்காக உயிர்களைக் கொல்லுவதும் உங்கள் குலத்துக்குரிய குணம் அல்லவா?’ என்று கிழட்டுக் கழுகு கேட்டது.
‘சிவ சிவா! என்ன தீயவுரை! பஞ்சமா பாதகத் தில் பெரிய பாவம், கொலைப் பாவம். அப்பாவம் செய்பவர்கள் தீய நரகம் அடைவார்கள். அற நூல் கள் பல அறிந்துள்ள நான், இத்தீய கொலைத் தொழிலை விட்டுவிட்டேன். நல்ல பழவகைகளை உண்டு வாழ்கின்றவர்கள், பாவச் செயல் செய்யப் புகுவார்களா?’ என்று பூனை தன்னைப்பற்றி உயர் வாகப் பேசிக் கொண்டது.
கழுகு கடைசியில் அதை நம்பியது. பூனையும் தன்னோடு இருக்க அது இடங் கொடுத்தது. பூனை பிறகு கழுகுக்குத் தெரியாமல் மெல்ல மெல்ல நடந்து சென்று, இளம் பறவைக் குஞ்சுகளைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தது. நாளடைவில் தங்கள் குஞ்சுகளைக் காணாமல் பறவைகள் தேடத் தொடங் கின. இது தெரிந்தவுடன் பூனை அங்கிருந்து ஓடி விட்டது.
தங்கள் குஞ்சுகளைத் தேடி வந்த பறவைகள், கழுகிருக்கும் பொந்தருகில் வந்து பார்த்தன. பூனை தான் கொன்று தின்ற குஞ்சுகளின் வெள்ளெலும்பு களையும் சிறகுகளையும் கழுகுப் பொந்தின் எதிரிலே போட்டு வைத்திருந்தது. அந்த எலும்புகளையும் சிறகுகளையும் கண்ட பறவைகள், கழுகுதான் தங்கள் குஞ்சுகளைக் கொன்று தின்றுவிட்டது என்று நினைத்துக் கோபம் கொண்டன. எல்லாமாகக் கூடி அந்தக் கிழட்டுக் கழுகைக் கொத்திக் கொத்திக் கொன்று விட்டன.
குணம் தெரியாமல் யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பது இதனால் நன்கு விளங்குகிறது.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 2 – நட்பு உண்டாக்குதல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.