வேடன் ஒருவன் குளத்தின் அருகில் வலையை விரித்து இருந்தான். அதில் கொஞ்சம் தானியங்களையும் போட்டிருந்தான்.
பல பறவைகள் அந்த வலையில் சிக்கிக் கொண்டன. பறவைகள் பெரிதாக இருந்ததால், வலையோடு பறந்தன. அவற்றைத் தொடர்ந்து வேடனும் ஓடினான்.
வழியில் கிழவன் ஒருவன் வேடனைப் பார்த்து , ” எங்கே நீ ஓடுகிறாய்?” என்று கேட்டான்.
“பறவைகளைப் பிடிப்பதற்காக ஓடுகிறேன் என்றான் வேடன்.
“உயரப் பறக்கும் பறவைகளை, தரையில் ஓடிப் பிடித்து விடமுடியுமா?” என்றான் கிழவன்.
அதற்கு வேடன், “வலையில் ஒரு பறவை மட்டும் இருந்தால், பிடிக்க இயலாது. ஆனால், எப்படியும் இவைகளைப் பிடித்து விடுவேன்” என்றான்.
வேடன் சோர்வு அடையாமல், பறவைகளைப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான்.
மாலை வேளை வந்தது. பறவைகள் அனைத்தும் கூட்டுக்குச் செல்வதற்காக, ஒவ்வொரு திசையில் வலையை இழுத்தது. ஒன்று காட்டை நோக்கி இழுத்தது, இன்னொன்று மரத்தை நோக்கி இழுத்தது; வேறு ஒன்று வயலை நோக்கி இழுத்தது.
அதனால் பறவைகளின் எண்ணம் நிறைவேறாமல் எல்லாப் பறவைகளும் வலையோடு தரையில் விழுந்தன.
வேடன் மகிழ்ச்சியோடு , வலையிலிருந்து ஒவ்வொரு பறவையாக எடுத்து தன்னுடைய கூடைக்குள் போட்டுக் கொண்டான்.
ஒற்றுமை இல்லாவிடில் அழிவுதான்!
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்