புத்திசாலித் தலைவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 561 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கம்போல பரந்து விரிந்து நிழல் பரப்பி நின்ற அந்த ஆலமர விருட்சத்தின் கீழே கிராமத்துப் பஞ்சாயத்துக் கூட்டம் ஆரம்பமானது..

கிராமத்து சனங்களெல்லாம் பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தபடி குழுமியிருந்தனர்.

அப்பொழுது பஞ்சாயத்துத் தலைவர் எழுந்து “அன்பான மக்களே, எமது கிராமத்திலுள்ள அநேகமான வளவுகள் காடுகள் நிறைந்து கிடக்கின்றன. அக்காடுகளை அந்தந்த வளவுக்காரர்கள் துப்பரவு செய்து, எமது கிராமத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருங்கள்” என்றார்.

அதற்கு மக்களும் “அப்படியே செய்கிறோம்” என்றனர்.

அவர்கள் சொன்னபடியே எல்லோரும் காடுகளை வெட்டி வளவுகளைத் துப்பரவு செய்யும் பணியை ஆரம்பித்தனர். ஆனால், செல்லாச்சிக் கிழவி மட்டும் துப்பரவு செய்யாமல் சும்மாவே இருந்தாள்.

எண்பது வயது நிறைந்து, தோல்கள் சுருங்கி, கன்னங்கள் குழி விழுந்து, உடல் கூனி, பொல்லுக்கம்புடன் திரியும் ஒண்டிக்கட்டைக் கிழவியினால் எப்படி மண்வெட்டி, கோடரி பிடித்து வேலைசெய்ய முடியும்?

அன்றாடம் இடியப்பம், பிட்டு, அவித்து விற்று சீவியம் நடாத்துவதற்கே நேரம் சரியாக இருந்தது.

ஆனாலும் காட்டைத் துப்பரவு செய்யாமல் விட்டால் அடுத்த பஞ்சாயத்துக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் நல்ல தண்டனை கிடைக்கும் என்பதனை நினைக்க பயமாகவும் இருந்தது.

இதனால் கிராம மக்களிடம் சென்று தனது வளவையும் துப்பரவு செய்து தாருங்கள் என்று கேட்டாள்.

அதற்கு அவர்களோ *பணம் தாருங்கள் துப்பரவாக்கித் தருகிறோம்” என்றனர்.

அவள் “அன்றாடம் இடியப்பம், பிட்டு அவித்துச் சீவியம் நடத்துகிறேன். என்னிடம் பணம் இல்லை ” என்றாள்.

“பணம் இல்லாவிட்டால் உனது வளவைத் துப்பரவு செய்துதர முடியாது. அடுத்த பஞ்சாயத்துக் கூட்டத்தில் நல்ல தண்டனை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கேலி செய்தனர்.

இதனால் மனமுடைந்த கிழவி, கிடைக்கும் தண்டனை கிடைக்கட்டும் என்றவாறு இருந்து விட்டான்.

ஒரு வாரம் கழித்து அடுத்த பஞ்சாயத்துக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தின் போது தலைவர் மக்களைப் பார்த்து “நான் கூறியபடி எல்லோரும் வளவுகளில் உள்ள காடுகளைத் துப்பரவு செய்து விட்டீர்களா? என்று வினாவினார்.

அதற்கு மக்களோ எல்லோருமாக ஒன்று சேர்ந்து. “ஆம், தலைவரே, செல்லாச்சிக் கிழவியின் வளவைத் தவிர மற்றவை எல்லாம் துப்பரவு செய்யப்பட்டு விட்டன” என்றனர்.

இதைக் கேட்ட தலைவர் “அப்படியா சங்கதி?’ என்றவாறு செல்லாச்சிக் கிழவியை அழைத்தார்.

கிழவியோ நடுநடுங்கியபடி நிலத்திலே தடியை ஊன்றியவாறு எழுந்து நின்றாள்.

நடுநடுங்கும் கிழவியைக் கண்ட தலைவருக்கு கிழவியின் மேலே இரக்கம் பிறந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

கிழவியைப் பார்த்து “ஆச்சி நீங்கள் ஏன் வளவைத் துப்பரவு செய்யவில்லை” என்று கேட்டார்.

“எனக்கு வயசாயித்து, கோடரி, மண்வெட்டி பிடித்து வேலை செய்ய ஏலாது. அதோட அன்றாடம் இடியப்பம், பிட்டு அவிச்சி விற்கத்தான் நேரங்காணுது. அதனால் தான் துப்பரவாக்கல்ல. இந்த ஊர் இளைஞர்களைக் கொஞ்சம் துப்பரவாக்கித் தாங்க எள்று கேட்டன். அவர்கள் எங்க…காசு தரட்டாம் துப்பரவாக்கித் தருகிறோம் என்கிறார்கள்” என்று பெருமூச்சு விட்டாள் கிழவி.

அதற்கு தலைவரோ “ஆச்சி நீங்க எந்தக் காரணமும் சொல்லேலாது. எங்களுடைய பஞ்சாயத்துக் கட்டளையை மீறி விட்டீர்கள். இது பெரிய குற்றம். நீங்கள் கிழவியாக இருப்பதனால் ஒரேயொரு மன்னிப்புத் தருகிறேன். அடுத்த பஞ்சாயத்துக் கூட்டத்திற்கிடையில் வளவைத் துப்பரவு செய்துவிட வேண்டும். இல்லையேல் கிராமத்தை விட்டு உன்னைத் துரத்திவிடுவேன்” என்று கடுமையாக எச்சரித்தார்.

பின்பு சபையோரைப் பார்த்து “சபையோர்களே எமது கிராமத்திற்கு அதிஷ்டமொன்று அடித்திருக்கின்றது. அதாவது எமது கிராமத்தில் தங்கப் புதையல் ஒன்று இருப்பதாக வரைபடம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்தப் புதையலை இந்தக் கிராம மக்களே கண்டு பிடிக்க வேண்டும். அப்புதையலைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அதில் அரைவாசி சன்மானமாக வழங்கப்படுவதுடன், மீதி அரைவாசியும் இந்த பஞ்சாயத்தில் ஒப்படைக்கப்பட்டு அது கிராம அபிவிருத்திக்குப் பயன்படும்” என்று கூறி வரைபடத்தை பொது மக்களிடம் கொடுத்தார்.

தங்கப் புதையல் என்றதும் பொதுமக்கள் எல்லோரும் நீயா? நானா? என்று போட்டி போட்டுக் கொண்டு வரைபடத்தைப் பார்த்தனர்.

மறுநாள் அதிகாலை செல்லாச்சிக் கிழவி அப்பம்’ அவித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவளுடைய வளவை கிராம மக்கள் கத்தி, கோடரி, மண்வெட்டி சகிதம் சூழ்ந்து கொண்டனர். கிழவிக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளுடைய கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. மௌனமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மின்னல் வேகத்தில் மரங்களை வெட்டினார்கள். காடுகளைத் துப்பரவு பண்ணினார்கள். வேரைப்பிடுங்கிக் குவித்தனர். மண்ணைக் கிண்டி உழுதார்கள்.

ஆனால் அவர்களால் புதையலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியில் நீண்டதொரு பெருமூச்சை விட்டபடி ஒவ்வொருவராகத், தத்தமது ஆயுதங்களைச் சுமந்தபடி, வீட்டை நோக்கி நடையைக் கட்டினர்.

அடுத்த பஞ்சாயத்துக் கூட்டம் ஆரம்பமானது. தலைவர் மக்களைப் பார்த்து “மக்களே! சென்ற கூட்டத்தில் சொன்னபடி புதையலைக் கண்டு பிடித்தீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு பொதுமக்கள் “நீங்கள் தந்த வரைபடத்தின்படி எல்லா இடமும் சல்லடை போட்டுத் தேடினோம். ஆனால் புதையல் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் கூறினார்கள்.

அதற்குத் தலைவர் “புதையல் கிடைத்து விட்டதே!” என்றார்.

தலைவரின் வார்த்தைகள் எல்லோரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

தங்களையே மறந்து “புதையல் கிடைத்துவிட்டதா?” என்றனர்.

தலைவர் சிரித்துக் கொண்டு, “ஆம், புதையல் கிடைத்துவிட்டது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியந்தான்.

அண்மைக்காலமாக எமது கிராமத்தில் பெரியோர்களை மதித்து நடக்கும் தன்மை போன்ற மனிதப் பண்புகள் குறைவடைந்திருப்பதைக் காண முடிந்தது.

எமது பஸ்களிலே கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், குழந்தையுடன் நிற்கும் தாய்மார், நோயாளி போன்றவர்களுக்கு தகுந்த இடம் கொடுக்காமல், இருப்பதை அவதானிக்க முடிந்தது.

அந்த மறைந்துபோன மனிதப் பண்புகளை மீண்டும் நிலைபெறச் செய்யவே காடு துப்பரவு செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தேன்.

அதில் வயதுபோன கிழவி உங்களிடம் வந்து உதவி கேட்டாள். ஆனால், நீங்களோ, பணம் தந்தால்தான் துப்பரவு செய்வோம் எனக் கேலி செய்தீர்கள்.

ஆனால், நான் புதையல் ஒன்று இருக்கிறது என்று சொன்னவுடன், ஊரே திரண்டு வந்து கேலி பண்ணிய கிழவியின் வளவென்றும் பாராமல் துப்பரவு பண்ணிணீர்கள்.

இதிலிருந்து பெரியவர்களின் வார்த்தைகளை மதிக்காமல் பணத்தையே மதிக்கிறீர்கள் என்பது சொல்லாமலே புரிந்தது.

இந்தச் செய்கையே உங்கள் வாழ்வில் ஒரு பாடமாக இருக்கட்டும்.

இன்றிலிருந்தாவது பெரியோரை, பெற்றோரை, ஆசிரியரைக் கனம் பண்ணி நடப்பதுடன் பஸ் போன்ற வாகனங்களில் கர்ப்பிணி, வயோதிபர், நோயாளி, குழந்தையுடன் நிற்பவர்கள் போன்றோருக்கு இடம் கொடுத்து அழிந்து, மறைந்து, கொண்டிருக்கும் எமது மனிதப் பண்புகளை மீண்டும் நிலைபெறச் செய்வோம்” எனக் கூறி பேச்சை முடித்தார்.

இப்பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கிழவி உடனே எழுந்து “தம்பி நீ நீடூழி வாழ வேண்டும்” என்று கூறினாள்.

அதற்கு தலைவர் “ஏன் ஆச்சி அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“உன்னோட இந்தத் தந்திரத்தால் மனிதப் பண்புகள் மட்டும் மலரல்ல, என்ர வாழ்வும் மலர்ந்திருக்கு. ஏனெண்டா கேக்கிறா? பொதுமக்கள் துப்பரவு செய்து கிடைத்த விறகினால் நான் கஷ்டப்பட்டு விறகு வெட்டாம, இடியப்பம் அவித்து சீவியகாலம் முழுவதும் சந்தோசமாக வாழ்வேன்’

இதைக்கேட்ட சபையோர் கொல்லெனச் சிரித்துக்கொண்டதுடன் தலைவரின் திறமையை மெச்சினர்.

மீண்டும் கிராமத்தில் மனிதப் பண்புகள் பண்பாடு வளரத் தொடங்கியது.

– நரியின் தந்திரம், முதற் பதிப்பு: அக்டோபர் 2000, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *