கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 848 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

முன்னிரவு நேரம். முழுநிலவு வானத்தில் முளைந்திருந்தது. அமுதக் கதிர்கள் ஒளியை அள்ளிச் சொரிந்து கொண்டிருந்தன. குளிர்க்காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது. அது ஒரு சின்னஞ்சிறு கிராமம். இருபது முப்பது வீடுகள் இருந்தன. நாலு திசையிலும் சூழ்ந்து செறிந்த மரங்கள், அமைதியான சிற்றூர்.

அமைதி சூழ்ந்த நேரம் அது. இரவுப் பறவைகள் ஆங்காங்கே கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன. கிராமத்து நாய்கள் ஒவ்வொன்றின் குரல். நிலவு மலர்ந்திருந்த அந்த நேரத்தில் பச்சையின் மனமும் மலர்ந்திருந்தது. அவன் புறப்பட்டு விட்டான். ஐந்தாறு ஆடுகள்; ஆறேழு ஆட்டுக்குட்டிகள்; அவனுடைய அருமை நாய் வீரன்: கையிலே ஒரு மூங்கில் குச்சி; பச்சை இப்பொழுது மெல்ல நடந்தான். வழக்கமான தன் நண்பர்களோடு அந்த வாயில்லாத ஜீவன்கள்தாம் அவனுடைய நண்பர்கள்.

ஊருக்கு வடகிழக்கில் வளமான மேய்ச்சல் நிலம் இருந்தது. அந்தப் படுகையையடுத்து ஆறு ஓடிக் கொண்டிருந்தது. காளிகோயில் படுகை என்ற பெயர் அந்தப் பகுதிக்கு உண்டு. காளிகோயில் படுகைப் பக்கம் இப்போது மனித நடமாட்டமே நின்றுவிட்டது. இப்போது காளிகோயிலில் வழிபாடுகளும் வந்தனைகளும் கிடையாது. காலங் கடந்து சிதைந்து நிற்கும் கோயில் அது.

ஒப்பற்ற நிலையில் உயிர் பெற்று விளங்கியது காளி கோயில். அது ஒரு காலம்! தலைமுறைத் தலைமுறையாக அந்தக் கிராம மக்களின் இதயக் கோயிலாக இருந்து வந்திருக்கின்றது. என்றாலும் நிலையில்லாத எத்தனையோ மாறுபாடுகள். அவற்றால் கோயிலின் மகத்துவமும் மங்கிப் போய்விட்டது. மிகப் புராதனமான காளிகோயிலைப் பக்கத்து ஊர் ஜமீன்தார் ஒருவர் புதுப்பித்தாராம். அந்தக் காளியம்மன் ஜமீன்தாரின் குலதெய்வமாம். கோயிலுக்கு நிவந்தங்கள் அதிகம் கிடையாது. ஆனாலும் அந்த ஜமீன்தாரின் ஆதரவில் பூசாரி இருந்து எல்லா அலுவல் களையும் கவனித்து வந்தான். ஜமீன்தார். வாரத்திற்கொரு முறை கோயிலுக்கு வருவார். அப்போதெல்லாம் அந்தச் சின்னக் கிராமமே விழாக் கோலத்தில் கொஞ்சிக் கொண்டிருக்கும். களியாட்டம் நடக்கும்; சித்திரைக்குச் சித்திரை தீமிதி: கடாவெட்டு. பத்து வருஷங்களுக்கு முன்பு கூட எல்லாம் சரிவர நடந்து கொண்டுதானிருந்தனவாம். பச்சையின் அப்பா பரமானந்தக் கோனாருக்குக் காளிதேவியின் மீது தனி அன்பாம். அவர் இருக்கும்போது தினமும் கோயிலுக்குப் போய் வருவார். வருஷத்திற்கு ஒரு ஆட்டை பலி கொடுப்பார். காளியின் கருணையால் அவருக்கு எல்லா வசதிகளும் இருந்தன. நூற்றுக்கு மேல் சொந்த ஆடுகள். ஆட்டுக்குட்டிகள் விற்பதில் மட்டும் வருஷத்திற்கு ஐந்து நூறு. ஆறு நூறு கிடைக்குமாம் இதெல்லாம் பச்சைக்கு அம்மா சொல்லியிருக்கிறாள்.

கோனார் கண்ணை மூடிவிட்டார். கோனாரின் தம்பி பச்சையின் சித்தப்பா – அண்ணன் போக்குக்கு முரண் பட்டவன். அந்தச் செல்லமுத்து சூதாட்டத்தில் பெரிய சமர்த்தன். அண்ணன் இருக்கும் வரையில் செல்லமுத்து அடக்க ஒடுக்கமாக இருந்தான். பிறகுதான் சூழ்நிலை அவனைச் சூதாட்டப் பித்தனாக்கி விட்டிருந்தது. பச்சையின் அம்மா செல்லமுத்துவுக்கு எத்தனையோ சொன்னாள். சொல்லிப் பயன்?

சூதாட்டம் நடப்பதற்குக் காளிகோயில் இடம் கொடுத்தது. நாள்போக்கில் சோம்பேறிகள் கும்மாள மடிக்கும் இடமாக அது மாறியது. ஐந்தாறு வருஷங்களுக்கு முன் ஒரு பெரும் புயல் அடித்தது. அந்தப் புயலால் கிராமத்திற்குப் பெருத்த சேதம். கூரை வீடுகள் நிலை குலைந்தன. தென்னந் தோப்புகள் தோப்புகளாய் நிற்கவில்லை. பெயருக்குச் சில மரங்கள் மட்டும் தலை நிமிர்ந்து நின்றன. ஆற்று வெள்ளம் பயிர் பச்சைகளைப் பாழாக்கிவிட்டது. அந்தப் புயலில்தான் கோயிலுக்கும் சேதம் விளைந்தது. செழுமை அழிந்தது. பூசாரியின் உயிரும் ஒருநாள் போய்விட்டது. அப்புறம் கவனிக்க யாரும் முன்வரவில்லை. ஜமீன்தார் குடும்பமும் புதுப்பிக்க எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. கவனிப்பாரற்றுக் காலத்தின் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தக்கோயில்.

பச்சைக்கு மட்டும் அந்தப் பாழடைந்த கோயிலின் மேல் ஒரு விதப் பற்று வெயில் காயும் நேரத்தில் அவன் அங்கேயிருப்பான்.

எதிரே இருக்கும் படுகையில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இரவுக் காலங்களில் தனிமையில் வந்து மனஅமைதியோடு பச்சை உட்கார்ந்திருப்பான். அவனுக்கு அச்சம் என்பதே கிடையாது. பன்னிரண்டு வயதுதான் இருக்கும். ஆனாலும் அஞ்சாத மனம்! பிஞ்சு நெஞ்சம்.

காளி கோயில் பக்கம் ஆவிகள் நடமாடுகின்றன என்பார்கள் நச்சரவங்கள் நெளியும் பகுதி என்றும் பேசிக் கொள்வார்கள், கோயில் பக்கம் இறந்து போனவர்கள் எத்தனையோ பேர் என்ற பேச்சும் கிராமத் தில் உண்டு என்றாலும் எதைப் பற்றியும் பச்சைக்கு அக்கறை கிடையாது. நிலவுக் கால இரவு வந்துவிட்டால் பச்சைக்கு மனங்கொள்ளாத மகிழ்ச்சிதான்.

ஆற்றுப்படுகையில் ஆடுகளை மேயவிட்டு விடுவான். அவற்றைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் அவனுடைய நாய் வீரன், பச்சையின் உயிர்த் தோழன். நிம்மதியோடு கோயில் வாசலில் நித்திரை செய்வான் பச்சை. அது அவன் பழக்கம். காளியம்மன் கண்மணியைக் காப்பாற்றிக் கடைச் சேர்ப்பாள் என்ற நம்பிக்கை பச்சையின் ஏழைத்தாய்க்கு உண்டு.

2

பச்சை பாழடைந்த கோயிலில் உட்கார்ந்திருந்தான். தூரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றிற் கருகே வீரன் படுத்திருந்தது. நிலவு வெளிச்சத்தில் கோயில் முழுதும் தெரிந்தது. தேவியின் சிதைந்த உருவம் தெளிவா கத் தெரிந்தது. உருவழிந்த சிற்பங்களும் பாறைகளும் சிதறிக் கிடந்தன. கோயிலை ஒருமுறை நோட்டம் விட்டான் பச்சை, காளி காளியாகவேயிருந்தாள். அவன் மனத்தில் பிடிபடாத எண்ணங்கள் நழுவிக் கொண்டிருந்தன மேலே போட்டிருந்த சிறு துண்டால் தரையைத் தட்டிவிட்டுச் சாய்ந்தான் பச்சை. கோயில் சுவரையொட்டி பெரிய அரசமரம். தண்மையான நிலவு. இதமான காற்று இதயக் கவலை யெல்லாம் நீங்கும் அந்த நேரத்தில் பச்சையின் நெஞ்சில் மட்டும் துயர மின்னல்கள் நெளிந்தன.

அந்தியில் அம்மா சொன்ன செய்தி அவன் நினைவில் நின்றது. வள்ளியப்பன் மிரட்டிய மிரட்டல் இப்பொழுது கூடப் பச்சையின் மேனியை நடுங்கச் செய்தது பாவம். அவன் சின்னவன்! உலகமறியாதவன் சின்ன வயதிலேயே அவனுக்கு எத்தனை பொறுப்பு!

பச்சை தாய்க்கேற்ற பிள்ளையாக இருந்தான். பாசத்தோடு பெற்ற மகனைப் பேணினாள் அம்மா. பச்சையின் அப்பா இருக்கும்போது அந்த வீட்டில் மகிழ்ச்சி விளையாடாத நேரமே கிடையாது. அப்பொழுது மூட்டை மூட்டையாக வீட்டில் நெல் இருக்கும். கழனிப் பக்கம் போனால் பை பையாகக் கறிகாய்களை அள்ளி வருவார் கோனார். அவரை, துவரைக்கெல்லாம் பஞ்சமே கிடையாது. கறவை மாடுகள் இருந்தன. வாழை மரங்கள் தடையின்றிக் குலை தள்ளிக் கொண்டிருந்தன. அது ஒரு நேரம்! அப்பொழுதெல்லாம் பச்சை சின்னக் குழந்தை; பால் மணம் மாறாத வயசு. எல்லாம் இப்போது கனவாகவும் கதையாகவும் மாறிப் போய்விட்டன.

குடும்பம் செல்லமுத்துவால் தான் குலைந்தது. சுகமாக இருந்த குடும்பம் சூதாட்டத்தால்தான் கெட்டுப் போயிற்று ஜமீன்தார் வாரிசான மைனர்களுக்கும் இந்தச் சூதாட்ட மென்றால் உயிர் காளி கோயிலுக்கு மைனர்களும் வந்து போவதுண்டு விளையாடுவதற்காக.

செல்லமுத்துவிடம் எத்தனையோ முறை மைனர் தோல்வி கண்டிருக்கிறார். கிடைத்த பணத்தை எல்லாம் எங்கோ ஓரிடத்தில் ரகசியமாகச் செல்லமுத்து ஒளித்து வைத்திருக்கிறான் என்று சூதாட்ட வட்டாரம் பேசிக் கொண்டது.

***

ஒரு நாள் இரவு.

அது மழைக்காலம். அன்றியும் பின்னிலவுக் காலம் காளிகோயிலின் ஒருபுறத்தில் கோஷ்டி’ கூடியிருந்தது. நாட்டாண்மைக்காரர் மகன் வையாபுரியின் மடியில் கனமிருந்தது; வைத்தியலிங்கக் கோனார் மகனிடம் சில நூறு ரூபாய்கள்! மைனரைப் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. வழக்கத்துக்குமேல் சற்றுப் ‘பளு’வாகவே அன்றைக்கு மைனர் மார்த்தாண்டம் வந்திருந்தார். இன்னும் சில விளையாட்டு வீரர்கள். இத்தனைக்கும் செல்ல முத்துவிடம் இருந்தது ஐந்தோ ஆறோதான்!

ஆட்டம் அன்றுதான் ஆட்டமாக இருந்தது. ஒவ்வொரு சுற்றிலும் மைனரின் பணம் கரைந்தது. மற்றவர் களின் கையும் சளைத்துவிட்டது, செல்லமுத்துவுக்கருகில் ஒரு குவியல்! வெள்ளி ரூபாய்கள்தாம்! இருளிலே மின்னியது வெள்ளிப்பணம். செல்லமுத்துவின் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. இத்தனை ரூபாய்களையும் எடுத்துக் கொண்டு போனால் கவலையில்லாமல் காலத் தைக் கழிக்கலாமே! எத்தனையோ முறை அழாக்குறையாக அண்ணி முறையிட்ட தெல்லாம் செல்லமுத்துவுக்கு நினைவு வந்தது. கிடைத்திருக்கும் பணத்தின் உதவியால் அண்ணியின் மனத்திற்குச் சாந்தியளிக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தான் கோயிலில்.

ஆட்டம் முடிந்துவிட்டது. அனைவர் உள்ளமும் உடலும் அலுத்துவிட்டன. செல்லமுத்துவுக்கு மட்டும் மகிழ்ச்சி வெள்ளம். விளக்கு அங்கே மங்கலாக ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. விளக்கொளியில் செல்லமுத்துவின் முகம் சிரித்தது. மைனரின் முகத்தில் கோபக்கனல்: வையாபுரிக்கு விசனம் தாங்க முடியவில்லை. மற்றச் சிலருக்கும் வேறு வேறு மனநிலை. அனைவரின் நோக்கமும் அந்தப் பணத்தில் தான்! மைனர் முகக்குறி காட்டினார். வையாபுரி ஏதோ சைகை செய்தான். அருகிலிருந்தவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் குரூரம்! ஏதோ பயங்கரம் நடக்கப் போகின்றதை அந்தச் சூழ்நிலை சொல்லிக் கொண் டிருந்தது. தூரத்தில் ஆந்தைகள் அலறின. ‘ஓ’வென்று மரங்கள் எழுப்பிய பேரிரைச்சல!

அந்த விளக்கு… அதன் ஒளி மங்கிக் கொண் டிருந்தது. மைனர் எழுந்தார்; மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். மேல் துண்டில் அத்தனை பணத்தையும் வாரிப் போட்டு மூட்டை கட்டினான் செல்லமுத்து. மனத்தில் மகிழ்ச்சி இருந்தது. என்றாலும் அது பீதி கலந்த மகிழ்ச்சிதான்! அடுத்த நொடி! அடியெடுத்து வைத்தான் செல்லமுத்து. இரண்டடி கூட எடுத்து வைக்கவில்லை. அதற்குள் –

விளக்கு அணைந்துவிட்டது. இருளிலே பளிச்சென்று பளபளத்தது ஒரு பொருள் செல்லமுத்துவின் உடலில் பாய்ந்தது அது!

“ஐயோ… அம்மா!” அந்த ஓலம் அங்கே எதிரொ லித்தது. அடியற்ற மரமாகச் சாய்ந்தான் செல்லமுத்து. இருளிலே ஒரே பயங்கரம்! மைனருக்கும் ஒன்றுமே புரியவில்லை. பீதிச் சூறாவளி அவர் நெஞ்சில் சுழன்றது!

வையாபுரி சன்னமான குரலில், “டேய் முனிசாமி. கறுப்பையா… பயலைத் தூக்குங்கள். ஆற்றிலே எறிந்து விட்டு வாங்க! சல்தியாப் போங்க. ஆள் போயிட்டான்…!” என்றான்.

இரண்டு மூன்று பேர் செல்லமுத்துவின் உடலைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இப்போது அங்கே இருந்தவர்கள். மைனர் மார்த்தாண்டமும் வையாபுரியுந் தான். மார்த்தாண்டத்தின் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. உள்ளத்திலும் படபடப்பு.

அப்போது –

அந்தக் கருக்கிருட்டில் வையாபுரி கீழே குனிந்தான். அவன் கையில் அந்த வெள்ளை மூட்டை! அப்பால் நகரப் பார்த்தான். மார்த்தாண்டத்திற்கு உணர்வு வந்தது.

“வையாபுரி. நில்…!”

“எதற்காக…?”

“மரியாதையாக நின்றுவிடு;’

“நீ யார், என்னைத் தடுக்க?”

வையாபுரியின் பதில் மைனரின் மனத்திலே கனலை மூட்டியது! அடுத்த கணம் –

வையாபுரியின் தோள் பக்கம் பாய்ந்தது மார்த் தாண்டத்தின் சுருள் கத்தி. ஆழமாகப் பாய்ந்துவிட்டது கத்தி. குத்துப் பொறுக்கமாட்டாமல் கீழே சாய்ந்தான் வையாபுரி.

வானம் இருண்டது. வையமெங்கும் வரம்பில்லாத இருட்டு. மின்னல் மின்னியது. இடி இடித்தது. மழை பொழியவும் ஆரம்பித்துவிட்டது. மார்த்தாண்டத்திற்கு மனக்கலக்கம். உடலில் திறனே இல்லை. கண்களில் விளங்காத மருட்சி! இப்பொழுது பணமூட்டையைப் பற்றி மைனருக்குக் கவலையில்லை. அந்த நேரத்தில் அவருக்கு வேண்டியது உயிர். உயிர். உயிர்தான் பெரிதாகப்பட்டது. எப்படியாவது கோயிலை விட்டு வெளியேற வேண்டும். பயங்கரமான அந்த நிலைக்குப் பலியாகாமல் தப்பிப் பிழைக்க வேண்டும். மைனர் மெல்ல நகர்ந்தார். முனகிக் கொண்டிருந்தான் வையாபுரி.

“டேய், மைனர்! இந்தப் புலியிடமிருந்து பிழைத்துப் போக முடியும் என்றா நினைக்கிறாய்? ஜாக்கிரதை…t”

அந்த நேரத்திலும் வையாபுரி தீரமாகப் பேசிக் கொண்டுதான் இருந்தான்.

மார்த்தாண்டம் எப்படியோ வெளியே வந்துவிட்டார். ஒரு மின்னல் மின்னியது! தூரத்தில் மாமரத்தடியில் கட்டப்பட்டிருந்தது, அவர் குதிரை. ஒரே தாவில் குதிரையில் ஏறி உட்கார்ந்தார் மைனர். கொட்டும் மழையைப் பற்றிக்கூட மைனருக்குக் கவலை இல்லை. எப்படியாவது தப்பி விட்டால் போதும்; உயிர் பிழைத்தால் போதும்! மழையோசையோடு குதிரைக் குளம்பொலியும் கேட்டது. வையாபுரிக்குச் சீற்றம் தாங்க முடியவில்லை. பாதத்திலே முள் தைத்து அதனால் நடக்க முடியாமல் சிங்கம் செயலற்றுக் கிடந்தால் எப்படியிருக்கும்? பணமுடிச்சை எடுத்துக் கொண்டு மைனர் பறந்து போய்விட்டானே என்று துடித்தான் வையாபுரி அத்தனை பணமும் பறிபோய்விட்டதாகவே வையாபுரி கருதினான்!

மார்த்தாண்டம் போய் விட்டான். அத்தனை முயற்சியும் வீணாகிவிட்டது. இதற்குத்தானா செல்ல முத்துவின் உயிரைக் குடித்தோம்!’ வையாபுரி துடித்தான். அவன் உடலில் வலி தாங்க முடியவில்லை. ஆழமான கத்திக் குத்து; ஆனாலும் உயிருக்கு ஒன்றும் அபாய மில்லை. எழுந்திருக்க முடியாததால்தானே மைனர் தப்பிப் போய்விட்டார்! மெதுவாக நகர்ந்து வெளி வாசலுக்கு வந்தான் வையாபுரி.

மழை வலுத்தது. பேய்க்காற்று வீசியது. மரம் மட்டைகளெல்லாம் பயங்கரமாகப் பிலாக்கணம் பாடின. ஆற்றுப் பக்கம் போய் இருந்த ஆட்கள் திரும்பி வந்தார்கள்!

“முனிசாமி…!” என்றான் வையாபுரி தீனமான குரலில்.

“என்னாங்க?”

“மோசம் போய்விட்டோம். முனியா. கறுப்பா! அவன் தப்பிப் போயிட்டான்!”

“யாருங்க அண்ணாச்சி?” கறுப்பனுக்கு ஒரே வியப்பு!

“மைனர் பயல்தான். பணமுடிச்சுப் பறிபோயிட்டது. பறந்து போயிட்டான் குதிரையில்!”

“நீங்க பார்த்துக்கிணு இருந்தீங்களா, அண்ணே!”

“இல்லே முனியா, துணிச்சலாத்தான் நின்னுக் கிட்டிருந் தேன். பாவிப்பயல் கத்தியாலே குத்திப்பிட்டான். தோள் பக்கம் பாருங்களேன். குருதி கொட்டுது. கறுப்பா! நாசமாய்ப் போகிறவன் நல்ல வேளையா இதோடு நிறுத்திக்கிட்டுப் போயிட்டானே! அத்தனை ரூபாயையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டானே! அதுதான் வருத்தம். மார்த்தாண்டனைச் சும்மா விடக்கூடாது…!”

வையாபுரியின் கலக்கம் அவர்களுக்குத் தெரிந்தது. முனிசாமி சவால் விட்டான். கறுப்பன் ஒரு துள்ளுத் துள்ளினான்.

காற்று அடங்கவில்லை; மழையின் வேகம் தணிய வில்லை. எங்கும் மையிருட்டு, வையாபுரியைத் தூக்கிக் கொண்டு கோயிலை விட்டு எல்லோரும் வெளியேறி னார்கள்.

இரவு ஆரம்பித்த மழையோடு புயலும் சேர்ந்து கொண்டது. ஓயாத பேரிரைச்சல், ஈ காக்கை கூட வெளியே தலைகாட்ட முடியாதபடி மழையும் புயலும்! இரவு முழுதும் இயற்கை கோரமாக விளையாடியது. மட மடவென்று மரங்கள் முறிந்தன. கூரைகளைப் பிய்த்துக் கொண்டு மழை கொட்டியது. வீடுகள் உட்கார்ந்துவிட்டன. குளம் நிரம்பித் தெருவில் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆற்றின் கரைகூட உடைந்து விட்டது.

இந்த நிலையில் கோயில் மட்டும் தப்புவது எப்படி? சுவர்கள் தகர்ந்தன. முன்னிரவில் போக்கிரிகளுக்கு விளையாட இடம் கொடுத்தது அந்தக்கோயில். அந்த இடம் இப்பொழுது உருமாறி விட்டது. அங்கே கற்பாறைகள் விழுந்து கிடந்தன.

பொழுது புலர்ந்தது. சுற்றுப் புறமெல்லாம் வெள்ளக் காடு. அந்தக் கிராமம் கிராமமாக இல்லை. காளிதான் ஊர் இப்படி ஆக வேண்டும் என்று ஏவியிருக்கிறாள் என்று சிலர் பேசிக் கொண்டார்கள். கண் விழித்த பச்சைக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் அம்மாவுக்கு ஒரே கவலை! செல்லமுத்துவை முதல் நாளிலிருந்து காணவேயில்லை. புயலில் எங்கே போனானோ, என்ன ஆயிற்றோ என்ற அச்சந்தான்! அடுத்த நாள் செய்தி எட்டியது, பக்கத்து ஊர் ஆற்றங்கரையில் ஒரு சவம் ஒதுங்கிக் கிடப்பதாக

செல்லமுத்துவின் சடலந்தான் அது என்று அறிந்தபோது பச்சையின் அம்மா அழுதாள். சித்தப்பா செத்துப் போய்விட்டார் என்று பச்சைக்குத் தெரிந்தது.

3

செல்லமுத்து போன நாளிலிருந்து பச்சையை அவன் அம்மா தான் வளர்த்து வருகிறாள். ஆடுகள் உதவின. ஆட்டுப்பால் அவன் உடலை வளர்த்தது. பச்சைக்கு இப்போது கருத்து வந்துவிட்டது. பொறுப்பும் ஏற்பட்டு விட்டது.

வள்ளியப்பனிடம் முப்பது ரூபாய் கடன் பட்டிருந்தாள் பச்சையின் அம்மா. எல்லாம் வயிற்றுப் பாட்டிற்காகத்தான். கடன் வாங்கிச் சில மாதங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது பணத்தைக் கேட்டான் வள்ளி. பணம் கையில் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். என்றாலும் அவன் நோக்கம் வேறு பச்சையின் வெள்ளைக் கடா ‘சிங்கம்’ வள்ளியப்பனை மயக்கியது. வெள்ளாட்டுக் கடா ‘சிங்கம்’ நல்ல உயரமாக இருக்கும். அதற்கேற்ற மினுமினுப்பான உடல் வெள்ளையும் கறுப்புமாக உடல் முழுதும் புள்ளிகள்! அழகான இரண்டு கூர்மைக் கொம்புகள் சிங்கத்தின்மேல் உயிரையே வைத்திருந்தான் பச்சை. என்ன இருந்தாலும் அறுபது ரூபாய்க்குக் குறையாமல் சிங்கம் விலை போகும். தீரமான ஆடு! அந்த ஆட்டிற்குத்தான் வள்ளியப்பன் கண்ணி வைத்தான்.

சிங்கத்தை நல்ல லாபத்திற்கு விற்றுவிடலாம். சண்டை ஆடு என்றால் சாதாரணமாக நூற்றுக்கு மேல் விலை போகும். இதை எண்ணித்தான் வள்ளியப்பன் விடாப்பிடியாக அவர்களை ஆட்டி வைக்கிறான் இரண்டு நாட்களாக!

“நாளைச் சாயந்தரத்திற்குள் பணம் வரவில்லை யென்றால் அப்புறம் நடப்பது வேறுதான். ஓர் ஆட்டைக் கொடுக்க மனம் வரவில்லையே! ஆசையோடு கடன் வாங்க மட்டும் தெரிகிறதா? சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். ஒன்று கையில் பணம் வரவேண்டும்; இல்லாவிட்டால் சிங்கத்தைக் கொடுக்க வேண்டும். நாளைச் சாயங்காலம் வந்துவிடுவேன்.” இதை எளிதாகப் பேசிவிட்டுப் போய்விட்டான் வள்ளியப்பன். ஆனால் அது அத்தனை சுலபமான காரியமா?

அம்மா கலங்கினாள்; பச்சை வருந்தினான். ஆசையின் உருவாக வளர்ந்துவரும் சிங்கத்தைப் பிரிய முடியுமா. பச்சையால்? மூன்று வருஷமாய் வளர்த்த சிங்கத்தின் மதிப்பு முப்பது ரூபாய் தானா? ‘இல்லை.. இல்லை… இழக்கத் துணியாதே!’ என்றது மனம்!

“அப்படியானால் வள்ளியப்பனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?’ மனத்தின் மற்றொரு மருங்கில் இந்த ஒலி!

பச்சையின் பச்சை மனத்தில் போராட்டம்!

4

பச்சையின் உள்ளத்தில் காளிதேவியின் உருவந்தான் நின்றது. அவள் பயங்கரத்தோடுதான் நின்றாள். ஆனாலும் என்ன…? அன்புக்கும் கருணைக்கும் அந்த உள்ளத்தில் இடமில்லாமலா போகும்? கண்டிப்பாக இருக்கும். அவன் காளியை நம்பினான். அவன் ஆசையை அது நிறை வேற்றாதா?

“தாயே, நீ தான் எனக்கு வழி காட்ட வேண்டும். என் மனத்திற்கு மகிழ்ச்சியைக் கொடு, தாயே!”

பச்சையின் மனம் எதை எதையோ மொழிந்தது. விதவிதமான கற்பனைகளையெல்லாம் அது கண்டது. எண்ணத்தில் தோய்ந்த வண்ணம் அந்த ஏழைச் சிறுவன் கண்ணயர்ந்து போனான்!

தேவி தோன்றுகிறாள், சாந்தமான கோலத்தில். அகங்கார சொரூபிணி அமைதியான தோற்றத்தில் எழுந்து நிற்கிறாள், பிஞ்சு மனத்தை மலர்விக்க! வேண்டுவன வற்றைக் கேட்கச் சொல்லுகிறாள். அகிலாண்டேசுவரி! அவன் முகத்திலே புதுமையொளி பாய்கிறது. பச்சை முணுமுணுக்கிறான். அவன் கேட்பது ஒன்றேயொன்றைத் தான்! அவனுக்கு வேண்டிய அந்தச் சில ரூபாய்களை மட்டும் வேண்டுகிறான். தேவி நகைக்கிறாள். ஒரே ஒளிமயம்!

“கவலைப்படாதே, குழந்தாய்! உன் ஆசை நிறைவேறும். அதோ, அங்கே பார்!” என்று கையை நீட்டினாள் தேவி. சுட்டிய இடத்தை நோக்குகிறான் பச்சை. சிறு கருங்கற்பாறைகள்; அங்கே ஒரு பொருள் கோயிலின் ஒரு மூலை அது.

கரங்குவிததுச் சேவிக்கிறான் பச்சை; ஒளி அடங்குகிறது கரையில்லாத மகிழ்ச்சி அவனுக்கு.

திடீரென்று கண் விழித்தான். பச்சை கண்டது கனவுதானா? கனவில் காளிதேவிதான் தோன்றினாளோ! தூரத்தில் நாய் குரைத்து, ஓயாமல் ஆடுகள் ம்மே.. மே’ என்று தொடர்ந்து கத்தின. எழுந்தான் பச்சை. கண்ணைக் கசக்கிக் கொண்டு தூரத்தில் பார்த்தான். மேகத்திரை நிலவை மறைத்திருந்தது. தூரத்தில் ஆடுகளின் பயந்த குரல்களும் வீரனின் குரைப்பும் அடங்காமல் கேட்டன. வாசலைத் தாண்டி நகர்ந்தான் பச்சை. திடுக்கிட்டுப் படுகைப் பக்கம் ஓடினான்.

வீரன் யாரையோ துரத்தியது. சிங்கம் அங்குமிங்கும் பாய்ந்தது. நாய் யாரைத் துரத்துகிறது? இந்த நேரத்தில் அங்கே வந்திருப்பது யாராக இருக்கலாம்? நாய் பாய்ந்தது மனித உருவம் ஓட முயன்றும் பயனில்லை! அந்த மனித உருவத்தின் காலைக் கவ்விப் பிடித்தது. அவன் அலறினான்! அந்த வட்டார முழுதும் குரல் ஒலித்தது. பச்சைக்குப் புரிந்துவிட்டது அந்தக் குரல்) வள்ளியப்பனின் குரல் தான்! அவன் ஓட முயன்றான். வீரனிடமா அது முடியும்?

பச்சைக்குச் செய்தி விளங்கியது. இரவோடு இரவாகச் சிங்கத்தைக் கடத்திப் போகத் திட்டமிட்டு வள்ளி வந்திருக்கிறான். வீரனின் பார்வையில் பட்டுவிட்டான். அதனால்தான் இப்போது அலறுகிறான். நெருங்கிப் போனான் பச்சை!

“யாரையா அது?” – துணிவோடு அவன் கேட்டான்.

“நான்தான். வள்ளி!”

“இங்கே ஏன் வந்தீங்க?”

“கன்னுக்குட்டி ஓடியாந்திட்டது. மாடு கொல்லையிலே கத்திக்கினு இருக்கு. அதைத் தேடிப் பார்க்கத்தான் வந்தேன். பச்சை! இந்த நாயை விரட்டு! சதையைப் பிடுங்கும் போலிருக்கே!”

வள்ளியப்பனுக்கு அழுகையே வந்துவிட்டது.

“டேய், வீரா! அப்பாலே வாடா…!” – ஒரே சொல்! பச்சையின் அந்தச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றது வீரன். வள்ளி ஓட்டமெடுத்தான் அந்த இடத்தை விட்டு.

வாலைக் குழைத்தவண்ணம் வீரன் நின்றது. ஆடுகள் இப்போது கத்தவில்லை. சிங்கம் அமைதியோடு நின்றிருந்தது. எல்லாவற்றையும் சற்றுத்தள்ளி ஓட்டிவிட்டுக் கோயில் பக்கம் திரும்பினான் பச்சை!

நித்திரை அவன் கண்ணைச் சுற்றியது. மனத்தில் ஒருவிதத் தெளிவு நிலவியது. அகிலாண்டேசுவரியல்லவா கனவில் வந்திருக்கிறாள்! மீண்டும் படுத்தான் பச்சை. கண்கள் அழுந்தின.

5

வைகறைக் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண் டிருந்தது. கரிச்சான் குருவி இன்னும் கத்தி ஓயவில்லை. நிலந்தெளியாத நேரம். மரம் மட்டைகளின் இலேசான அசைவு! ஊர் அந்த நேரத்திலும் அமைதியின் அணைப்பில் தான் சோர்ந்து கிடந்தது. பச்சை கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது ஆட்டுக்குட்டியொன்று கோயில் வாசலில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு குட்டிதான். என்றாலும் கொள்ள மாளாத இன்பம் வந்தாற்போல் குதித்து விளையாடியது. கண்ணை மூடிக் கொண்டு குதி போட்டுக்கொண்டிருந்த அந்த ஆட்டுக் குட்டி பச்சையின் மேலும் பாய்ந்து விளையாடியது. பச்சை விழித்துக் கொண்டான்.

காலை இன்னும் அரும்பவில்லை. அந்த அமைதி யான நேரத்தின் அழகுக் கோலத்தைக் கண்டவண்ணம் பச்சை எழுந்தான். படுகைப் பக்கத்தில் அவனுடைய ஆடுகள் நிற்கவில்லை. கோயிலுக்கருகிலேயே எல்லா ஆடுகளும் படுத்திருந்தன. நன்றாக மேய்ந்துவிட்டு அவைகள் அசை போட்டுக் கொண்டிருந்தன. சிங்கம் மிடுக்கோடு படுத்திருந் தது. அதைப் பார்த்தபோதே பச்சையின் மனம் மருண்டது.

இரவு கண்ட கனவு அவன் நெஞ்சில் நிழலாகப் படிந்திருந்தது. காளிதேவி கனவில் வந்தாள். கவலை நீங்கும் என்று சொன்னதாக நினைவு. அது முடியுமா? கற்பனை எண்ணங்களின் உருவந்தானே கனவாக நெஞ்சத்தில் நிழலிடுகின்றது!

ஆடுகளின் இடையே பார்வையைச் செலுத்தினான் பச்சை. வீரனைத் தேடின அவன் கண்கள். ஆனால் தீட்சண்யம் மிக்க பார்வையோடு வாலைக் குழைத்துக் கொண்டு முதுகுப்புறமாகத் துள்ளி வந்து கொண்டிருந்தது வீரன். பச்சைக்கு எதையேனும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வீரன் அப்படித்தான் குதிக்கும்.

சுறுசுறுப்புக்குன்றி உட்கார்ந்திருந்த பச்சையால் வீரனின் குறிப்பை அறிந்து கொள்ள முடியவில்லை. நெஞ்சில் கவலை குடி கொண்டிருக்கும்போது வீரனைப் பற்றி அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. பொறுமையிழந்த வீரன் பச்சையின் துணியைக் கவ்வியது! இழுத்தது. உணர்வு பெற்ற பச்சை எழுந்தான். வீரன் முன்னே செல்லப் பச்சை பின் தொடர்ந்தான். கோயிலின் உள்ளே நுழைந்தது வீரன். அதே தெற்கு மூலை. அவன் நெஞ்சில் நிற்கும் அதே இடந்தான்! சிதைந்து போன சிற்பக் குவியல்கள்; சிறுசிறு பாறைக் கற்கள் அங்கே போய் வீரன் நின்றது. அவனைப் பார்த்தது. அடுத்த கணம் இரண்டு பாறைகளுக்கு இடையில் மேலாகப் படிந்திருந்த மண்ணை முன்னங்காலால் வாரியிறைத்தது. மண் அகன்ற அந்த இடத்தில் மங்கிய வெள்ளை நிறப் பொருள் தெரிந்தது. அதை வாயால் கவ்வியது நாய்! ஆனால் அதுதான் வரவில்லை. கருங்கல்லில் இடுக்கிக் கொண்டிருந்ததால் அந்தப் பொருளை வீரனால் எளிதில் எடுக்க முடியவில்லை.

பச்சைக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லுக்கிடையே வெள்ளையாகத் தெரிந்தது. அது என்னவாக இருக்கலாம்? அவன் நெஞ்சில் ஆர்வத்துடிப்பு ஒருவேளை ‘அது’வாக இருக்கலாமோ! கனவில் கண்டது நனவாகிவிடுமோ? தேவியின் அருள் நிறைவாகிவிடுமோ!

பரபரப்போடு கீழே குனிந்தான் பச்சை. அந்தப் பொருளைத் தொட்டுப் பார்த்தான். துணி மூட்டைதான். ஆனாலும் அதனுள்ளே ஏதோ இருப்பது மட்டும் அவனுக்கு விளங்கியது. முயன்று கல்லை அகற்றப் பார்த்தான். எப்படியோ கல் நகர்ந்தது. மூட்டையைக் கவ்வி எடுத்தது நாய் வாலை ஆட்டிய வண்ணம் பச்சையினருகே அதனை வைத்தது. பொழுது புலர இன்னும் சில நேரங்கள். தூரத்தே கரைக்கொடிக் கூரையின்மேல் சேவல் கூவியது. இன்னும் சற்று நேரத்தில் ஊர் உறக்கம் கலைந்துவிடும்.

பச்சை மூட்டையைத் தூக்கிப் பார்த்தான். அதிகக் கனம் இல்லை ஆனாலும் மூட்டை சற்றுக் கனத்தது. அங்கேயே உட்கார்ந்தான். பச்சை துடிக்கும் இதயத்தோடு மூட்டையை அவிழ்த்தான்.

முடிச்சு அவிழ்ந்தபோது-

அவன் முகம் மலர்ந்தது. மூட்டையில் இருந்தவைகள் மின்னின. அப்போதைய ஆனந்தத்தில் பச்சைக்கு எதுவும் விளங்கவில்லை.

காகங்கள் கரைய ஆரம்பித்துவிட்டன. பச்சை எழுந்தான். விரைந்து வீட்டிற்கு ஒடத் துடித்தது மனம். மூட்டையை மார்போடு அணைத்துக் கொண்டான்.

“டேய் வீரு, ஆட்டுக்கு அருகிலேபோய் நில்லு. ஊட்டுக்குப் போயிட்டு ஓடியாந்திடறேன்…!”

வீரன் முதுகில் தடவிக் கொடுத்த வண்ணம் சாடை காட்டினான் பச்சை. வீரன் நகர்ந்தது. விளங்காத மகிழ்ச்சியோடு விரைந்து போனான் பச்சை, வீடு நோக்கி! அற்புத விளக்கின் அருமையறிந்த அல்லாவுதீனைக் காட்டிலும் அவன் நெஞ்சத்தில் களிப்பு நிறைந்திருந்தது.

6

கதவைத் திறந்தாள் பச்சையின் அம்மா. மூச்சுமூட்ட நிற்கும் மகனைப் பார்த்தாள். பச்சை ஏன் இப்படி ஓடி வந்திருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

“அம்மா அந்தக் கதவைத் சாத்திவிடு. சீக்கிரம் இங்கே வாம்மா!”

“என்னடா கண்ணு. இப்படித் துடிக்கிறே. புதையல் எடுத்தவன் மாதிரி!” என்ற வண்ணம் கதவண்டைப் போனாள் தாய்.

“நீ சொன்னது சரிதாம்மா… எல்லாம் நம்முடைய அதிருஷ்டம். காளியின் அருள்தான் எல்லாம்!”

“என்ன சொல்லுறே, பச்சை…?” என்றாள் அம்மா ஆச்சரியத்துடன்.

“இங்கே வந்து பாரும்மா!” சுருக்கமாகப் பேசினான் பச்சை.

அன்னை அருகே வந்தாள். அந்த மூட்டையைப் பார்த்தாள். மெல்லிய வெளிச்சத்தில் மூட்டை கட்டப் பட்டிருந்த துண்டு அவள் கண்ணில் மின்னியது. துண்டைத் தொட்டுப் பார்த்தாள். அந்த வேட்டியின் கரை! பச்சைக் கரைதான்! அவள் ‘நெஞ்சு ‘திக்’ கென்றது. நினைவு மயங்கியது.

“ஏம்மா இப்படித் தயங்கறே?”

“ஒன்றுமில்லையடா கண்ணு. இந்த மூட்டையை எங்கிருந்து எடுத்து வந்தே பச்சை? உன் அப்பா போட்டிருந்த வேட்டித் துண்டைப் போல தெரியுது! அப்புறம் சித்தப்பா போட்டுக்கிட்டிருந்தார். அதே துண்டுதான் இது…”

“இருக்கலாம். அம்மா! கோயிலில் புதைந்து கிடந்ததுதான்! இந்த மூட்டையை அவிழ்த்து பாரேன்!”

பச்சையின் அம்மா மூட்டையைப் பிரித்தாள். வியப்பால் அந்த விழிகள் விரிந்ததைப் பச்சை பார்த்தான். துண்டு நிறைய நாணயங்கள்! வெள்ளி ரூபாய்கள்தாம்!

“பச்சை! எல்லாம் எப்படிடா கிடைச்சுது?”

“நான் எடுத்துவந்ததுதானம்மா. காளியை நினைச்சிக் கிட்டேன். கனவிலே வந்தாள்; கவலை நீங்கும் என்றாள். காலையில் எழுந்திருச்சப்போ வீரன் என்னை இழுத்துட்டுப் போனது கோயில் மூலைக்கு. அங்கேதான் இந்த மூட்டை…!”

“பச்சை, இது யாருடைய சொத்தும் அல்ல. நம்முடையது தான். நமக்குச் சேர வேண்டிய செல்வந்தான். உன் சித்தப்பா சேர்த்த காசு. ரகசியமாகப் பேசியதுண்டு இதைப்பற்றி. ஊர்ப்பேச்சை நானும் நம்பினேன். நம்பிக்கை வீண் போகவில்லை. நம்ம கனவு பலித்துவிட்டது, பச்சை. சித்தப்பா கொண்டுவந்து சேர்க்க வேண்டிய செல்வத்தை நீயே கொண்டுவந்து விட்டாய். இனிமேல் நமக்குக் கவலையே இல்லையடா, கண்ணு!”

பச்சையின் அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

“பத்திரமா பெட்டியில் கொண்டுபோய் வையம்மா! அந்தப் பயல் வள்ளியப்பன் வரட்டும்! ஒரு கை பார்த்து விடுகிறேன். ராத்திரி சிங்கத்தைத் திருடிப் போகப் படுகைப் பக்கம் வந்தான். எங்கிட்டேயா அது முடியும்? வீரன் ஆளை வளைத்துவிட்டது. அப்புறம் ஆள் ஓடிப் போயிட்டான்.”

“நிசமாகவா, பச்சை?”

“ஆமாம்மா. நடுச் சாமத்திலே வந்தான். காலையில் ஆள் வரட்டும். காசை மூஞ்சியில் எறிந்துவிடலாம்!” என்றான் பச்சை பரவசத்தோடு.

“அம்மா…!”

“என்னடா, கண்ணு?”

‘வயிற்றைப் புரட்டுது. கொஞ்சம் நீராகாரம் சாய்த்துக் கொடேன்…”

“தர்றேண்டா, ராஜா!”

பெற்றவள் கொடுத்தாள்; மகிழ்ச்சியோடு குடித்தான் பச்சை.

உதய நேரம். கிழக்கு வெளுத்திருந்தது. செங்கதிர் சிரிப்போடு எழுந்தது. மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வெளியே வந்தான் பச்சை. நேராகக் கோயிலை நோக்கி நடந்தான். புதையல் தந்த காளிதேவிக்கு தனது நன்றியைத் தெரிவிக்க வேண்டாமா? நன்றியோடு தனக்கு அந்தப் பொருள் கிடைக்க உதவிய நாய் வீரனுக்கு அன்பைக் காட்ட வேண்டாமா? இத்தனை நாளாக தன்னை வளர்த்து வரும் ஆடுகளுக்கு தன் அன்பைத் தெரிவிக்க வேண்டாமா?

வேண்டும்!

அதற்காகத்தான் இப்போது அவன் போய்க் கொண்டிருக்கிறான், காளிகோயில் படுகைப் பக்கம்!

– 1958 – ‘கண்ணன்’ இதழில் இடம்பெற்ற முழுநீளக்கதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *