புதையலைப் பாத்தீங்களா!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,626 
 

சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தைக் கட்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார் அருணாச்சலம்.

இதைக் கவனித்த ஒரு வியாபாரி, “”ஐயா, இவ்வளவு பணத்தைத் தனியாக எடுத்துக் கொண்டு போகாதீர்கள். துணைக்கு நமது ஆட்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றார் கவலையுடன்.

அருணாசலம் இதைக் கேட்கவில்லை- “”எந்த ஆபத்து வந்தாலும் நான் சமாளித்து விடுவேன். நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தைரியமாகக் கிளம்பினார்.

நன்றாக இருட்டிவிட்டது. காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார் அருணாச்சலம்.

சரக் சரக்கென்று பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். தடித்தடியாக நான்கு திருடர்கள் அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அருணாச்சலத்துக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை. கைகால்கள் நடுங்கின.

சற்று நிதானித்து, பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “”நண்பர்களே, நீங்களும் புதையலைத் தேடித்தான் வந்தீர்களா?” என்று ஒரே போடாகப் போட்டார்.

திருடர்கள் குழம்பிப் போனார்கள். யோசிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களில் ஒருவன், “”என்ன சொல்கிறாய்? எங்கே புதையல் இருக்கிறது?” என்று கேட்டான்.

“”சரியாப் போச்சு. உங்களுக்கு விஷயமே தெரியாதா? சந்தைக்கருகில் ஒரு சாமியார் இருக்கிறார். காட்டுக்குள் ஒரு பானைத் தங்கக்காசுகள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கிறதாம். சாமியாரிடம் ஆசி பெற்றால், புதையல் இருக்கும் இடத்தைச் சொல்வாராம். அதனால்தான் நீங்கள் புதையலைத்தான் தேடி வந்திருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டேன்” என்று அருணாச்சலம், அளந்துவிட்டார்.

இதைக் கேட்டதுதான் தாமதம், திருட்டுக்கும்பல், அருணாச்சலத்தை விட்டுவிட்டு இல்லாத சாமியாரைத் தேடி ஓடியது.

சமயோசித புத்தியால் இப்போது தப்பித்து விட்டோம், இனிமேல் இதுபோலப் பணத்தைக் கொண்டு வரும்போது தனியாக வரக்கூடாது. வியாபாரி கூறியது போல ஆள் துணையுடன்தான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே அருணாச்சலம் நடையைக் கட்டினார்.

-கா.முருகேஸ்வரி, கோவை. (டிசம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)