கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 6,587 
 

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. நல்ல மனுசாளுக்கு ஒரு சொல்லு. ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்..” என்றார் ஆறாம் வகுப்பு ஆசிரியர் தணிகாசலம்.

பாஸ்கர் முணுமுணுத்துக் கொண்டே பெஞ்சின் மீது ஏறி நின்றான்.

பாஸ்கருக்கு இது ஒன்றும் புதிது இல்லை. எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி ஏறி நிற்பான்.

பாஸ்கர் கொஞ்சம் முரட்டு சுபாவம். மூக்கு நுனியில் கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பையனிடமாவது வம்பு வளப்பான்.

இப்போது பாஸ்கரின் கோபம் ராஜூவின் மீது இருந்தது.

ராஜூ கிளாஸ் லீடர். அவன்தான் இவனைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் வகுப்பில் இல்லாத நேரத்தில் அடித்த கொட்டத்திற்கு எப்படி தண்டனை கொடுப்பார்?.

பள்ளிக் கூடம் விடட்டும் என்று காத்திருந்தான் பாஸ்கர். வீட்டுக்கு பெல் அடித்தது. மாணவர்கள் திபுதிபுவென்று வகுப்பிலிருந்து வெளியேறினர்.

பாஸ்கர் மட்டும் ராஜூவின் பின்னாலேயே போனான். ராஜூ பள்ளிக்கூடக் கேட்டைத் தாண்டியதும் அவனைத் தோளைப் பிடித்து இழுத்தான்.

“டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்னே..?” என்று கோபமாய் கேட்டான்.

“நான் ஒண்ணுமே………. உன்னப்பத்தி சொல்லலடா….” என்றான் அமைதியாக ராஜூ.

அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

ராஜூ நிலை குலைந்து கீழே விழுந்தான்.

ராஜூவின் கிழிந்த சட்டை பாதிக்குமேல் பாஸ்கரின் கையில் இருந்தது.

அந்த சட்டைக் கந்தலை அவன்மீது தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவனைத் தாக்க ஆயத்தமானான்.

பாஸ்கர் எதிர்பார்த்ததைப் போல் இவனைத் திருப்பி அடிக்க முயற்சிக்கவில்லை.

ராஜூவின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன தனது ஒரே சட்டையைப் பற்றியே இருந்தது. நாளைக்கு எப்படி இவன் பள்ளிக்கு வருவான்…? எந்த சட்டையைப் போட்டுக் கொண்டு வருவான்?

ராஜூ செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான்.

மிச்ச கொஞ்சமாய் கிழிந்துபோன சட்டையை கழட்டி எறிந்தான்.

சிதறிக் கிடந்த புத்தகங்களை சேகரித்தான். எழுந்து நடந்தான்.

ராஜூ வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து கொண்டிருந்தது பாஸ்கருக்கு என்னவோ போல் இருந்தது.

பாஸ்கர் வீட்டிற்குத் திரும்பினான். அன்று முழுக்க அவனுக்கு மனசு என்னவோ போல் இருந்தது.

ஒருவாரம் கழிந்தது. ராஜூ பள்ளிக்கு வரவே இல்லை.

ராஜூவின் வீடு ஊர்க்கோடியில் இருந்தது. ஒரு சின்ன குடிசை.

அதில் அவனும், அவன் அம்மாவும் இருந்தனர். பாஸ்கரின் வீட்டு மாட்டுத் தொழுவம் கூட ராஜூவின் வீட்டை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கும்.

அன்று மாலை பள்ளியிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தான் பாஸ்கர். சட்டென்று ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னான்.

காரை விட்டு இறங்கினான்.

ரோட்டு ஓரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.

அங்கு ராஜூ தலையில் செங்கல் சுமந்தபடி சென்று கொண்டிருந்தான்.

பாஸ்கர் மெல்ல வேலை நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

“என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா….? வேலைக்கு வந்திட்டே…” அந்தப் பக்கமாக வந்த ஒருவர்.

“போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும்.” என்றான் ராஜூ.

“ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்பொறமா பள்ளிக்கூடம் போகப் போறீயா?” என்று சிரித்தபடி போனார் அவர்.

“இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்?” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் பாஸ்கர்.

முட்டாள்தனமான கோபம். அவனுக்கே அவன் மீது வெறுப்பாய் இருந்தது.

பாஸ்கர் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தான். அப்பா தனது பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக் கொண்டு ராஜூவின் வீட்டிற்குச் சென்றான்.

“உள்ள வாடா” என்று அன்புடன் அவனை வரவேற்றான் ராஜூ

இவன் தயங்கியபடி உள்ளே போனான். அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தான்.

“என் மீது உனக்கு கோபம் இல்லையா” என்றான் பாஸ்கர்.

“வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா?” என்றான் ராஜூ.

“கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான் திருந்திய பாஸ்கர்.

“எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது, நானே சம்பாதித்து வாங்கியிருக்கிறேன்.. உன் அன்புக்கு நன்றி” என்றான் ராஜூ. பாஸ்கர் எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜூ அதை வாங்கிக் கொள்ளவில்லை.

அடுத்தநாள் புதுச்சட்டையுடன் வகுப்பிற்குள் நுழையும் ராஜூவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *