தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,506 
 
 

காட்டுக்குள்ளே திருவிழா! மிருகங்களுக்கெல்லாம் அன்று ஒரே கொண்டாட்டம். ஆடல், பாடல்,விருந்து என எங்கும் ஒரே அமர்க்களம். பரம எதிரிகளான புலி, மான் போன்ற விலங்குகள்கூட அன்று தங்கள் பகையை மறந்து ஒற்றுமையோடு விழாவினைச் சிறப்பாக்கிக் கொண்டிருந்தன.

புதிய நீதிதிருவிழாவென்றால் போட்டி இல்லாமலா? ஆம். ஓட்டப் பந்தயம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் பந்தயம் ஆரம்பமாகும் என்று விழாவின் ஒருங்கிணைப்பாளர் நரியார் அறிவித்தார். மைதா

னம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. போட்டியாளர்கள் இரண்டே பேர்தான்! வெண்பஞ்சு முயலும் சிறிய, கரிய நிற ஆமையும்தான் அவை!

முயலின் நண்பர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தனர். போட்டியின் முடிவு முன்பே தெரிந்துவிட்டதால் மகிழ்ச்சிக்குக் குறைவேது! ஆமையின் நண்பர்களெல்லாம் சோகத்தில் மூழ்கி இருந்தார்கள். முயல்தான் வெற்றி பெறுமென்று தெரிந்தும் ஏன் அவமானப்பட வேண்டும்? விலகி விடுமாறு எவ்வளவு முறை சொல்லியும் ஆமை பிடிவாதமாக மறுத்துவிட்டதால் நண்பர்களுக்கு ஒரே வருத்தம்! போட்டியில் வெற்றி என்பது ஓர் அங்கம்தானாம்! அதுவே நோக்கமில்லையாம்! ஆமையின் வியாக்கியானம் வேறு, அவர்களுக்கு வெறுப்பை ஏற்றியது.

போட்டி ஓரிரு விநாடிகளில் துவங்கப் போவதாக சிங்கவால் குரங்கார் மரத்தின் உச்சியிலிருந்துகொண்டு அறிவித்தார். நரியார் சைகை செய்தவுடன் குயில் மூன்று முறை கூவிற்று. இதோ…. ஓட்டப் பந்தயம் பல ஆரவாரத்துக்கிடையே ஆரம்பமாகிவிட்டது.

எடுத்த எடுப்பிலேயே முயல் அதிவேகமாக ஓடத் துவங்கியது. திரும்பிக்கூடப் பார்க்காமல் ஓடியது. எதற்கு வம்பு? நீதிக் கதைகளில் வருவதுபோல ஒருவேளை ஆமை வென்று விட்டால்..?

மிக வேகமாக ஓடிய முயலுக்கு சற்று நேரத்திலேயே சோர்வும் தனியாக ஓடியதால் வெறுமையும் ஏற்பட்டது.

‘எதற்கு இப்படி வெறிநாய் துரத்துவது போல ஓடுகிறோம்?’ தன்னைத்தானே ஒருமுறை கேட்டுக் கொண்டது முயல்.

ஒரு சிறு பாறையின் மீது ஏறி நின்று பார்த்தது. தூரத்தில் சிறிய புள்ளியாய் ஆமை நகர்ந்து வருவது தெரிந்தது. சற்றுநேரம் யோசித்த முயல், திடீரென்று ஆமையை நோக்கி ஓடிவரத் தொடங்கியது.

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கத் தன் எதிரே நின்ற முயலைப் பார்த்ததும் ஆமைக்கு ஒரே ஆச்சர்யம்! என்ன ஆயிற்று… என்பதுபோல நிமிர்ந்து முயலைப் பார்த்தது.

“இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து வேகமாக ஓடலாமே நீ?’ என்று கேட்டது முயல்.

கனிவோடு சொன்னது ஆமை, “இல்லை என்னால் உன்போல வேகமாக ஓடமுடியாது!’

“புரிகிற மாதிரி சொல்லேன்…’ ஆதங்கத்தோடு கேட்டது முயல்.

ஆமை சிறு புனிசிரிப்புடன் தன் முதுகு ஓட்டினைக் காழற்றி முயலின் முதுகில் வைத்து, “இப்போது ஓடு…’ என்றது.

அதிகப் பளுவால் முயலால் வேகமாக நடக்கக்கூட முடியவில்லை. கண்களில் நீர் கோர்த்த முயல் சொன்னது:

“நண்பா, என்னை மன்னித்துவிடு. ஒரு பந்தயத்தில் சமபலமுள்ள இருவர் கலந்து கொள்வதுதான் நீதி. உன் வலி எனக்குப் புரிகிறது. இந்தப் போட்டியே உனக்குச் செய்யும் அநீதி! என்னை மன்னித்து விடு!’ குமுறியது முயல்.

ஆமை அன்போடு முயலைப் பார்த்தது. “நீ என்னை நண்பா என்றழைத்தது என்னை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிட்டது. வில் வித்தையின் உச்சம் அம்பை எறியாமலேயே இருப்பதுதான் என்று மனிதர்களுக்குள் ஒரு தத்துவம் இருக்கிறது தெரியுமா? ஒரு போட்டியின் இலக்கை அடைவதற்கு முன் நம் பலம் மற்றும் பலவீனம் என்ன என்று என்னையே நான் அறியும் முயற்சியாகவே இந்தப் போட்டியைப் பார்க்கிறேன். வெற்றி இரண்டாம் பட்சம்தான்’ என்றது.

ஒன்றும் புரியவில்லை என்பதுபோல முயல் தன் தலையைச் சொறிந்து கொண்டது.

சிரித்தபடியே ஆமை மேலும் சொன்னது, “புரியும்படி சொல்கிறேன். என் பலம் தண்ணீரில் வேகமாக நீந்துவது. உன்னால் அது முடியாது. உன் பலம் தரையில் வேகமாக ஓடுவது. என்னால் அது முடியாது. நம் இருவரின் பலத்தை மட்டும் கூட்டுமுயற்சியால் மேம்படுத்தினால், விளையும் பலன் இருமடங்கு வெற்றியைக் கொடுக்குமே? மேலும், நண்பா ஒரு போட்டியில் ஒருவர் ஏன் தோற்க வேண்டும்? இருவருமே வெற்றி பெறவும் வழி இருக்கலாம் இல்லையா?’

முயலுக்கு சட்டென்று எல்லாம் புரிந்தது. இப்போது தரையில் ஓடும்போது முயல் ஆமையைத் தன் முதுகில் சுமந்தபடி ஓடியது. நீரில் ஆமை முயலைச் சுமந்தபடி வேகமாக நீந்தியது. உற்சாகத்தில் கொளுத்தும் வெயில்கூட இருவருக்கும் உரைக்கவில்லை. சற்று நேரத்தில், ஒரே சமயத்தில் வெற்றிக் கோட்டைத் தொட்ட இருவரில் யாருக்கு கோப்பையைக் கொடுப்பது என்று அங்கு நடுவராக நின்றிருந்த யானையார் தலையைப் பிய்த்துக் கொண்டார்.

சிரித்தபடியே யானையிடம் சொன்னது முயல்: “இந்தப் போட்டியின் வெற்றி இந்தக் கோப்பையைப் பெறுவதில் அல்ல! எங்களைப் புரிந்து கொண்டதில்தான் இருக்கிறது. கோப்பை உங்களுடனும் மிக உயர்ந்த நட்பு எங்களுடனும் இருக்கட்டும்.’

நட்பெனும் ராஜபாட்டையில் இணைந்து வெற்றிநடை போட்ட இரண்டு போட்டியாளர்களையும் பார்த்து, அதிசயித்துப் பிளிறியது யானை.

மற்ற விலங்குகள் எல்லாம் ஆரவாரம் செய்தன.

– என்.எஸ்.சாந்தனு பரீஷத்,(டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *