(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1884-இல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ‘பிராங்லின் பியர்ஸ்’, அந்த தேசத்தின் ஆதிவாசிகளான சிவப்பு இந்தியரிடமிருந்து விசாலமான ஒரு பகுதி நிலத்தை, விலைக்கு வாங்கிக் கொள்ள விரும்பி அவர்களுக்கு அந்தச் செய்தியை அறிவிக்கிறார். அப்பொழுது, சிவப்பு இந்திபர்களின் தலைவனாயிருந்த, ‘சியாடில்’ என்பவன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது. தன்னுடைய கடிதத்தில் ‘சியாடில்’ வெள்ளையர்களான அமெரிக்கரின் அறிவற்ற, நாகரிகம் என்ற பெயரில், இயற்கைச் சூழ்நிலையைக் கெடுத்து விடாமல் காப்பாற்றித் தீர வேண்டிய அவசியத்தை, வெகு நுட்பமாக விளக்கி, நிரூபிக்கிறான். வில்லும், அம்பும் கையில் பிடித்து, தலையை வண்ணப் பறவைகளின் இறகுகளைக் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொள்ளும், “அநாகரிகன்” ஒருவன் அமெரிக்காவின் “நாகரிக” ஜனாதி பதிக்கு புவியின் இயற்கை நிலையைக் குறித்து, எழுதிய சொற்கள் இன்றைய நமது பாரத தேசத்திற்கும் மிகப்பொருந்துவதாகவே உள்ளது.
‘ஆகாயத்தையும், பூமியின் வனப்பு மிக்க இயற்கைத் தோற்றத்தையும் உங்களால் இவற்றை எப்படி விலைக்கு வாங்க முடியும்? விற்க முடியும்? இந்தக் கற்பனையே எங்களுக்குப் படு விசித்திரமாக உள்ளது. நறுமணம் கமழும், மென்மைக் காற்றின் புதுத்தன்மையும், பாடிக் கொண்டோடும் புனித நதிகளின் செவிக்கினிய ஒலியும், நம்முடைய ஆளுமையில் இல்லாதிருக்கும் போது நீங்கள் அவற்றை வாங்கத்தான் முடியுமா? விற்கத்தான் முடியுமா? எங்களுடைய இந்தப் பூமியின் ஒவ்வொரு சிறு அம்சமும் எங்களுக்குப் புனிதமானது. உள்ளங் கவரும் பசிய மரங்களின் ஒளி மிகுந்த இளந்தளிர்களும், மணலோடு சேர்ந்த கடற்கரையும், அடர்ந்த காடுகளில் படிந்துள்ள பனித்துளிகளும், ரீங்காரமிடுகின்ற வண்டுகளும், தும்பிகளும் – இவைகளெல்லாம் எங்கள் மக்களது நினைவுகளில் படிந்துள்ள மறக்க முடியாத அனுபவங்கள்.
வெள்ளை மனிதர்கள் காலஞ்சென்ற பின், சுவர்க்கமடைந்து அங்குள்ள கணங்களிடையே உலாவுங்கால், அவர்கள் பிறந்து வாழ்ந்திருந்த புனிதமான நமது தாய் போன்ற இந்தப் புவியை அறவே மறந்து விடுகிறார்கள். ஆனால் சிவப்பு மனிதர்களாகிய எங்களுக்கு இந்த நிலமகளே அன்னையாக இருப்பதினால் மாண்டு, மறைந்தபோதுங்கூட இந்த அழகிய பூமியை மறந்து விடுவதில்லை. நாங்கள் இந்த மண்ணின் மக்கள். மண் எங்களுடையது. மணங்கமழும் மலர்கள் எங்கள் உடன் பிறப்புகள். கண்ணைக்கவரும் புள்ளி மான்கள், காட்டுக் குதிரைகள், கழுகு, கௌதாரிகள் – இவைகள் எங்களுடைய சசோதரர்கள். “மலைச் சிகரங்கள், பசுமையான கண்ணைக் கவரும் புல்வெளிகள், அதில் வயிறு நிறைய மேய்ந்து கன்றுகளை நினைத்துக் கூவிக் கொண்டு வரும் எங்கள் வளர்ப்புப் பிராணிகள், மற்ற மனிதர்கள் நாங்கள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளம், படுகைகளில், ஆறு குளங்களில் பளபளக்கும் தண்ணீர் கேவலம் அது தண்ணீரல்ல, அது எங்கள் முன்னோர்களின் இரத்தம்.
நாங்கள், உங்களுக்கு விற்கவுள்ள நிலம் மிகப் புனிதமானது என்று நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பூக்கள் மலர்ந்துள்ள பொய்கைகளின், புனித நீரில் பிரதிபலிக்கின்ற ஒவ்வொரு பொருளும், எங்கள் மக்கள் வாழ்வின் செயல்பாடுகள், நினைவுகளை சதா சொல்லிக் கொண்டுள்ளதென்று நீங்கள் உங்கள் மக்களுக்கு அறிவித்து விட வேண்டும். ஆம், அந்தத் தண்ணீரின் சிறு அலைகளில் எங்களுடைய தந்தைக்குத் தந்தையின் கம்பீரமான குரல் அடங்கியுள்ளது என்பதையும், நீங்கள் தயவு செய்து மறந்து விடக் கூடாது.
எங்கள், நீர் வேட்கையைத் தணித்து மகிழ்விக்கும் புனித நதிகள், எங்கள் உற்றார் உறவினர்கள் போல, எங்கள் குழந்தைகளுக்கும் பசி தணிய உணவளிக்கிறது. எங்களுடைய ஓடங்களை இயங்க வைக்கிறது. நதிகள், எங்கள் உறவினர்கள் மட்டுமல்ல சற்று சிந்தித்துப் பார்த்தால், உங்களுடைய உறவினர்களுங்கூட. இவற்றையெல்லாம் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் மக்களுக்கும், உள்ளத்தில் பதியச் சொல்லி வைக்க வேண்டும். நீங்கள் உங்கள் உடன் பிறந்தவர்களிடம் அன்பு காட்டுவதைப் போல, இந்த ஆறு குளங்களின் மீதும் அன்பு காட்ட வேண்டும்.
வெள்ளையர்கள் எங்கள் வாழ்வின் நெறிமுறைகளைச் சரிவரப் புரிந்து கொள்வ தில்லை. இரவோடு இரவாக வந்து தனக்கு வேண்டியவற்றை பூமியிலிருந்து, வலிந்து எடுத்துக் கொள்ளும், ஒவ்வொரு வெள்ளையனும், பாரதீனன். இந்தப் புனிதத் தரணி அவனுக்குச் சத்துரு, சகோதரனல்ல. புது மண்ணை அடைய ஆசைப்பட்டு வெள்ளை மனிதன் தன்னுடைய பழைய மண்ணை மறந்து விட்டு முன்னுக்குச் செல்லுகிறான். அவன் தன்னுடைய மூதாதையரின் சமாதிகளை அங்கு விட்டு விட்டுப் புதிய இடத்தில் குடியேறு கிறான். அவை பாழாகி விடுகின்றன. தன்னுடைய மக்களோடு சேர்ந்து பிறருடைய மண்ணை ஆக்கிரமிக்கிறான் அவன். தன்னை ஈன்ற தாய் உடன் பிறப்பு, உலகம், வானம் வைகளையெல்லாம் அடைய முடியும். அசிங்கம் செய்ய முடியும். ஆடு, மாடுகளை விற்பதைப் போல இவைகளையும் விற்க முடியும் என்பது போல நெறிமுறையின்றி வாழ்கிறான். அவனுடைய இந்தப் பசி, வண்ண வண்ணச் செடி கொடிகளின் பேரழகை நாசப்படுத்தி, பொட்டல் காடுகளாக மாற்றி விடுகிறது.
எங்களுடைய நெறிமுறைகள் உங்களுடையதைவிட முற்றிலும் வேறானவை. உங்களுடைய நகரங்களைப் பார்க்கும் போது, எங்களுடைய கண்களுக்கு நோயை உண்டு பண்ணுகின்றன. பாரம்பரியமாய் நாங்கள் அநாகரிகர்களாக இருப்பதினால், உங்களுடைய நடத்தையைப் புரிந்து கொள்ளக் கூடாதவராக உள்ளோம். வெள்ளை மனிதரின் நகரங்களில், மனோ ரம்மியமான பொது இடங்களே இல்லை. வசந்த காலத்தில் இளந்தளிர்கள் தழைப்பதைப் பார்ப்பதற்கோ, வண்ண, வண்ணப்பட்டுப் பூச்சிகளின் மெல்லிய இறக்கைகளின் ஒலியைக் கேட்பதற்கோ அங்கு இடமே கிடையாது. நான், அநாகரிகன் ஆனதன் காரணமாக இவைகளெல்லாம் எனக்கு அர்த்தமாகாமல் கூட இருக்கலாம். நிசப்தமான, இரவு நேரங்களில் கூகைக் கோழியின் கூச்சலைக் கேட்காத குளக்கரையிலுள்ள தவளைகளின் இரவு நேரக் கீர்த்தனைகளைக் கேட்காத வெள்ளை மனிதர்களின் வாழ்வு, வறட்சியான வாழ்வே யல்லவா? நானொரு சிவப்பு இந்தியன். அதனால், வெள்ளையர்களைப் பற்றி எனக்கு அதிகமாக வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
விலங்குகள், பறவைகள், தாவரங்கள், மனிதர்கள் இவர்களெல்லாம் சுவாசிப்பது ஒரே பிராணவாயுவை மட்டும். அதனால், சிவப்பு மனிதனுக்கு மென்மையான காற்று மகத்தானதாகவுள்ளது. வெள்ளை மனிதன், தான் சுவாசிக்கும் பிராணவாயுவைப் பற்றியுங்கூட, எண்ணிப் பார்ப்பதில்லை. இறப்பதற்காகவே வந்திருக்கும் ஒரு மனிதனைப் போன்று அவன் தன்னைச் சுற்றியுள்ள, துர்நாற்றத்தையுங்கூட அறிந்து கொள்ளாத ஜடப் பொருளாயுள்ளான். எங்களுடைய பூமியை உங்களுக்கு விற்கப்பட்ட பின் காற்று, எங்களுக்கு எவ்வளவு மகத்தானதாயிருந்து என்பதை நீங்கள் உள்ளத்தில் வைத்திருக்க வேண்டும். காற்று தன்னுடைய சக்தியை எல்லா ஜீவராசிகளோடும் பங்கிட்டுக் கொள்கிறது என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பாட்டனுக்கு அவனுடைய முதல் மூச்சாக மூக்கின்வழி சுவாசித்தது பிராணவாயுவே. அவன் கடைசி வேளையில் வெளியே விட்ட மூச்சுங்கூட அதே பிராணவாயுதான். நீங்கள் காற்றின் புனிதத் தன்மையை அறிந்து காப்பாற்ற வேண்டும். அப்போது மட்டும் நீங்கள் இந்த நிலத்திலிருந்த செடி கொடிகளிலிருந்து வெளிப்படும் பரிமளத்தோடு கூடிய சுத்தமான காற்றை நுகர்ந்து, ஆனந்தப்படலாம்.
நான் ஒரு அநாகரிகன் ஆனதினால் வேறொன்றும் எனக்குத் தெரியாது. ஓடுகின்ற ரயில் வண்டியில் அமர்ந்துள்ள வெள்ளையன் தன் துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டுகள் பட்டு ஜீவன் விட்டு இங்கு அழுகிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான காட்டெருமைகளை நேரில் கண்டிருக்கிறேன். நான் எங்களுடைய உணவுக்காக மட்டும், நாங்கள் கொல்லக்கூடிய எருமைகளைவிட புகையை விட்டுக் கொண்டு ஓடும் இவர்களது இரும்பு வண்டி மேலானது எவ்வாறு என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில், நானொரு அநாகரிகன். விலங்குகளில்லாத மனித வாழ்வு பாழானது. எல்லா ஜீவராசிகளும் இவர்களால் சுடப்பட்டு, அறவேயில்லாத போது, மனித குலமே ஒளியற்ற தனி வாழ்வில் நாசமடைகிறது. ஏனெனில், பிராணிகளுக்கு இவர்கள் ஏற்படுத்திய தலைவிதி இவர்களுக்கும், எதிர்காலத்தில் விதிக்கப் பட்டிருக்கும் எல்லா ஜீவராசிகளும் ஒன்றுக் கொன்று சம்பந்தப்பட்டேயுள்ளன.
நீங்கள் உங்கள் மக்களுக்கு அவர்கள் கால்களுக்குக் கீழாகயிருப்பது எங்களது மூதாதையர்களின் சாம்பல் என்பது பற்றிச் சொல்லித் தெரிவிக்க வேண்டும். இந்தப் பூமி எங்கள் குலத்தவரின் வாழ்வினால் நிறைவு பெற்றுள்ளது என்பதை உங்கள் மக்களுக்குப் போதிக்க வேண்டும். அவர்களுக்குப் பூமி மதிக்கப்பட வேண்டுமென்பதைக் கற்பித்திருக்க வேண்டும். இந்த மண் “எங்களுடைய அன்னை” என்று நாங்கள் எங்கள் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளதைப் போல் நீங்களும் உங்கள் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மண்ணுக்கு ஆவதுதான் மண்ணின் மேல் பிறந்த மக்களுக்கும் ஆகின்றது. மனிதர்கள் இந்த பூமியை உதாசீனம் செய்தால் அது தம்மைத்தாமே உதாசீனம் செய்து கொண்டது போலும்.
எங்களுக்குத் தெரிந்தது இவ்வளவு. இந்த பூமி மனிதனுக்குச் சேர்ந்ததல்ல. மனிதன், பூமியினால் தோன்றியவன். இதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரே குடும்பத்திற்குச் சேர்ந்தவர்களில் இரத்த சம்பந்தம் இருப்பதைப் போன்றே பூமியின் மேலிருக்கும் எல்லா உயிர்ப் பிராணிகளினிடையிலும் சம்பந்தமுள்ளது. மனிதன் தன்னுடைய உயிர் வாழ்வை நியமனம் செய்து கொண்டவனல்ல. வாழ்வின் ஒரு சிறு அம்சம் மட்டும் தான் மனிதன். அவன் வாழ்க்கையில் எதை எதைச் செய்கிறானோ அதைத் தனக்காகவே செய்து கொள்கிறான்.
தெய்வத்தோடு பேசுவேன், அவரோடு நட்புறவு பூண்டுள்ளேன் என்று பேசிக் கொண்டிருக்கிற வெள்ளை மனிதன் கூட மற்ற எங்களைப் போன்ற எல்லா மனிதர்களோடும் ஒன்றிப் புரிந்து கொண்டு வாழவேண்டும். அவனுக்குத் தனிப்பட்ட மேலாண்மை எதுவும் கிடையாது. எல்லா மனிதர்களும், சகோதரர்கள் என்பது எங்களுக்கும் புரிந்துள்ளது. நம்முடைய தெய்வம், எல்லாருடைய தெய்வமுமாகும். இந்த உண்மையை வெள்ளை மனிதன் எப்போதாவது ஒரு நாள் புரிந்து கொண்டே தீர வேண்டும். இறைவன் உங்களுடையவன் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், அது அப்படியில்லை. இறைவன் எல்லாருக்கு முரியவன், பொதுவானவன். அவன் எங்களுக்கும் வெள்ளையனுக்கும் சரிசமமான கருணையைத் தான் காட்டுகிறான். இந்த பூமி அவனுக்கு மகத்தானது. மண்ணுக்குப் பாதகம் செய்தால் நம்மை உண்டாக்கிய அந்த எல்லாம் வல்ல இறைவனையே அவமானம் செய்ததைப் போல. மற்ற எல்லா மக்களின் காலமும் முடிவதற்கு முன்பேயே வெள்ளையனின் காலம் முடிந்து போகக் கூடும். நீங்கள் உறங்கும் உங்களது படுக்கையிலேயே அசூசி செய்தால், ஒரு நாள் அந்த அசூசியிலேயே உங்களுடைய உயிரை நீங்கள் விட வேண்டியிருக்கும்.
ஏதோ ஒரு உத்தேசத்துக்காக இறைவன் உங்களுக்கு இந்த நிலம், மேலும் இந்த நிலத்தின் வாழும் மனிதர்கள் மேலே ஆளுமையைக் கொடுத்துள்ளான். இந்த விதி விலாசம் எங்களுக்கு மர்மமாகத் தோன்றுகிறது. ஏனென்றால் நீங்கள் காட்டெருமைகளை வீணாக சுட்டுக் கொல்வதிலும், காட்டுக் குதிரைகளுக்குக் கடிவாளம் இடுவதையும், மணங்கமழுகின்ற அழகிய காடுகளினிடையே ஒருவரோடொருவர் உரையாடுவதற்கான கம்பிகளை இழுத்து, காடுகளின் இயல்புக்குக் குறைவு ஏற்படுத்தியதை நாங்கள் புரிந்து கொள்ளவே இயலாது.
நீங்கள் இங்கு வந்து குடியேறியதன் காரணமாக முந்தி இருந்ததைப் போன்ற அடர்ந்த மரங்கள் நிறைந்த வனங்களில்லை. தேன் கூடுகளில்லை. வைகறைப் போதில் அரும்பி மலர்ந்த மலர் வனங்களில்லை. பசுமையான புதர்களில்லை. பறவைகளெல்லாம் எங்கேயுள்ளன? விலங்குகளெல்லாம் எங்கே உள்ளன? துள்ளிக் குதித்து விளையாடி எங்கள் உள்ளங்களையும், கண்களையும் ஒருங்குகவர்ந்து கொண்டிருந்த அந்தக் கலைமான்களின் கூட்டம் எங்குப் போய் ஒழிந்தன? ஆம்! இனிச் செவ்விந்தியர்களாகிய நாங்களும் சரி, எங்களோடு சேர்ந்து ஒன்றி வாழ்ந்த விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் நிலைத்து, இந்த மண்ணின் மேல் வாழ்வதற்காக இனி வெள்ளையரோடு போராட வேண்டிய காலம் வர ஆரம்பமாகி விட்டது”.
– நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2005, வெளியீடு: வெ.இரா.நளினி, கோயம்பத்தூர்.