(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே புகழேந்தி என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கல்வி பயின்று சிறப்படைய வேண்டும் என்று மிகுந்த அவா உண்டாயிற்று. ஓர் அறிஞரையடுத்துச் சில நூல்களைப் படித்தான். அவ்வளவிலே தான் எல்லாம் படித்து முடித்துவிட்டதாக எண்ணிக்கொண்டான். அதற்கு மேல் அவன் படிப்பதற்கு முயற்சி செய்யவில்லை. சொற்பொழிவு செய்வதற்கு நன்கு பழகிக்கொண்டால், பேரும் புகழும் மிகுதியாக உண்டாகும் என்று மனப்பால் குடித்தான். அறிஞர்களுடைய சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்டுக்கொண்டு வந்தான்.
ஒருநாள் பக்கத்து ஊரிலே ஒரு சங்கத்தின் ஆண்டு நிறைவுவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல அறிஞர்கள் சொற்பொழிவுகள் செய்தார்கள். புகழேந்தி, “நாம் இந்தச் சமயத்தை நழுவவிடக் கூடாது; இங்கு மக்கள் மிகுதியாகக் கூடியிருக்கிறார்கள். நாமும் இங்கே ஒரு சொற்பொழிவு செய்தால் நம்முடைய புகழ் எங்கும் பரவும். நாம் சிறப்படைவதற்கு இதுதான் தகுந்த சமயம்,” என்று முடிவு செய்தான். விழாவில் தலைமை தாங்கியிருந்த பெரியாரைப் பார்த்துத் தானும் ஒரு சொற்பொழிவு செய்யவேண்டு மென்று வேண்டிக்கொண்டான்.
சொற்பொழிவு செய்தற்குப் பெரியார் உடன் பாடு தந்தருளினார். உடனே புகழேந்தி சொற்பொழிவு செய்யும் மேடைமீது ஏறிச் சொற்பொழிவு செய்யத் தொடங்கினான்.
“இங்குக் கூடியுள்ள அரிஞர்களே! சகோதற் சகோதரிகளே! நான் இப்பொலுது ஞானசம்மந்தர் பெருமை என்னும் பொருளைப் பற்றிச் சொற்பொழிவு செய்யப்போகிரேன்,” என்று தொடங்கி மிகுந்த எழுத்துப் பிழைகளுடனும், பொருட் பிழைகளுடனும் உளறிக்கொட்டினான். அவைத் தலைவர் இம் முழு மகனை இனிமேலும் பேசவிடக்கூடாது என்றெண்ணி அவனை உட்காரச் சொன்னார். புகழேந்தியின் பிழை நிறைந்த பேச்சுக்களைக் கேட்டு அனைவரும் விழுந்து விழுந்து நகைத்தார்கள். அவையோர்களுடைய நகைப்பிற்குக் காரணத்தை யறியாத புகழேந்தி, அவையோர்கள் தன்னுடைய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்வதாக எண்ணித் தானும் மகிழ்ந்தான். பிழைபடப் பேசினால் இவ்வாறுதான் இழிவடைய நேரிடும்.
“பிழைபடச் சொல்லேல்” (இ – ள்.) பிழைபட – வழுக்கள் உண்டாகும்படி, சொல்லேல் – ஒன்றையும் பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955