பிறவிப் பகை நட்பாக முடியாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 1,969 
 

ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும் வசித்து வந்தன.
கீரியும், எலியும் மரத்தின் வேரின் கீழ் உள்ள வளைக்குள் தனித் தனியாக வசித்தன.

பூனை , மரத்தின் அடியில் உள்ள பெரிய பொந்தில் வசித்தது.

ஆந்தை, மரத்தின் உச்சியில் இருந்த ஒரு பொந்தில் வசித்தது.

எலியின் நிலைமைதான் பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. ஆந்தை, பூனை, கீரி இவற்றின் கண்களில் படாமல், எலி தினமும் இரை தேட வேண்டியதாயிருந்தது.
ஆந்தைக்குப் பகலில் கண்தெரியாது, அதனால் இரவில் தான் இரை தேடுவது வழக்கம்.

பூனையோ பகலிலும் இரவிலும் அருகில் இருந்த வயலுக்குச் சென்று பயமின்றி இரைதேடித் தின்று வந்தது.

பூனையைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன், வயலுக்குப் போகும் வழியில், கண்ணி வைத்துவிட்டுப் போனான்.

வழக்கம் போல், எலிகளைப் பிடிக்கச் சென்ற பூனை, வேடன் போட்டிருந்த கண்ணியில் சிக்கிக் கொண்டது, தப்பிக்க வழி இல்லை .

சிறிது நேரத்தில், பதுங்கிப் பதுங்கி, திருட்டுத் தனமாக, இரை தேடி வந்த எலி, கண்ணியில் சிக்கிக் கொண்டிருந்த பூனையைக் கண்டு துள்ளிக் குதித்தது. அப்பொழுது, ஆந்தையும் கீரியும் சேர்ந்து சென்ற போது பூனை கண்ணியில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தன. இனி, பூனையைப் பற்றிய பயம் இல்லை. எலியைப் பிடித்து விடலாம் என்று எண்ணின.

தன்னைக் குறி வைத்து ஆந்தையும், கீரியும் வருவதைக் கண்டு எலி நடுங்கியது, கீரிக்கும் ஆந்தைக்கும் பயந்து எலி, வழியை மாற்றிக் கொண்டு, பூனையின் பக்கம் சென்றது, பூனையின் கால்கள் கண்ணியில் சிக்கிக் கொண்டிருந்த போதிலும், ஒரே அறையில் கொன்று விடுமே என்று கலக்கமுற்று, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.

பூனையின் அருகில் சென்று, “நீ என் எதிரியாக இருந்தாலும் கூட, இப்போது நீ சிக்கிப் பரிதவிப்பதைக் காணும் போது, எனக்கு இரக்கமேலிடுகிறது. என் பற்களால் இந்தக் கண்ணியை கடித்து உன்னை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீ விடுபட்டதும், உன்னால் எனக்கு ஆபத்து நேரிடுமோ என்று தான் பயமாக இருக்கிறது” என்றது எலி.

“எலியே! நாம் எதிரிகளான போதிலும், இப்பொழுது என்னை நீ விடுவித்து விட்டால், உனக்கு நண்பனாக இருப்பேன். ஆபத்தான வேளையில் என் உயிரைக் காப்பாற்றிய உன்னை ஒருபோதும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன்” என்று கெஞ்சியது பூனை.

உடனே எலி பூனையை நெருங்கியது. அதைக் கண்ட கீரியும், ஆந்தையும் எலியைப் பிடிக்க வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டன.
எலியிடம், “சீக்கிரம் பற்களால் கண்ணியை அறுத்து விடு, விடியப் போகிறது, வேடன் வந்து விடுவானே என்று அவசரப்படுத்தியது, பூனை கண்ணிகளை கத்தரிப்பது போல், பற்களை வைத்து பாசாங்கு செய்து, வேடனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது எலி.

கண்ணியிலிருந்து சீக்கிரமே விடுபட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு இருந்தது பூனை.

பொழுது விடிந்தது. வேடனும் வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்ட எலி, கண்ணியின் சுருக்கை இறுகச் செய்துவிட்டு, வேடனுக்கு அஞ்சி ஓடத்தொடங்கயிது.

எலியிடம் ” இது நியாயமா? உதவியுரிவதாகக் கூறி, நம்பிக்கை மோசம் செய்து விட்டாயே?” என்று பரிதாபமாகக் கேட்டது பூனை.

“விரோதிகள் கூட சந்தர்ப்பம் காரணமாக, நண்பர்களாக ஆவார்கள். ஆனால், அத்தகைய நட்பானது உண்மையான நட்பாகவும், வெகு காலத்துக்கு நீடிக்கக் கூடியதாகவும் இருக்காது” என்று கூறி, ஒரே ஓட்டமாக ஓடியது எலி.

பிறவியிலேயே பகைவர்களாக இருப்பவர்கள் நட்புக் கொள்ள முடியாது.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *