பால்கோவாவுக்காக உயிரை விட்டவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 1,792 
 

ஒரு சிற்றூரில் செட்டி ஒருவன் இருந்தான். அவன் ஒரு கஞ்சன்.

அவன் மளிகைக் கடை வைத்திருந்தான். எவருக்குமே கடன் கொடுக்க மாட்டான்.

தர்மம் என்பதே அவனுக்குத் தெரியாது. ஒரு காசுகூட அவன் பிச்சை போட்டதில்லை.

செட்டிக்கு மனைவி மட்டுமே இருந்தாள். குழந்தைகள் இல்லை .

“இந்தச் செட்டி தானும் அனுபவிக்காமல், தர்மமும் பாய்யாமல், யாருக்குச் சேர்த்து வைக்கிறானோ” என்று ஊரார் பேசுவார்கள்.

செட்டிக்குப் பால்கோவா செய்து தின்ன வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை உண்டாயிற்று. மனைவியிடம் சொன்னான். மனைவி பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள். அப்பொழுது எவனாவது உறவினன் வந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணினான் செட்டி.

“பால்கோவா செய்ததும் என்னை வந்து கூப்பிடு, நான் தோட்டத்து கிணற்றடியில் மறைந்திருக்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான் செட்டி.

அந்தச் சமயத்தில், செட்டியின் நெருங்கிய உறவினன் ஒருவன் அங்கு வந்தான். அவன் செட்டியின் கஞ்சத்தனத்தை நன்றாக அறிந்தவன்.

பால்கோவா தயாரித்துக் கொண்டிருந்த செட்டியின் மனைவியிடம் சென்று “செட்டி எங்கே? என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை.

வந்தவன் தோட்டத்து வாசற்படியில் நின்று கொண்டு, ”உறவுக் காரன் வந்திருக்கிறேன்” என்று உரத்த குரலில் சொன்னான்.

அதைக் கேட்டதும் செட்டிக்கு உயிர் போகும் நிலை ஏற்பட்டது. வந்திருக்கும் உறவினனை அனுப்பிவிட, செட்டி ஒரு தந்திரத்தைக் கையாண்டான்.

“செட்டி செத்துப் போய் விட்டதாகச் சொல்லி அழும்படி மனைவியிடம் இரகசியமாகச் சொன்னான்.

அவளும் அப்படியே சொல்லி, அழத் தொடங்கிவிட்டாள்.

செட்டியின் தந்திரத்தை அறிந்த உறவினனும் கூடச் சேர்ந்து அழுதான்.

அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், ஊர்மக்கள் அனைவரும் வந்து கூடிவிட்டனர்.

பிறகு, இறுதிச் சடங்குகளை விரைந்து செய்து, பாடையில் செட்டியை வைத்து, சுடுகாட்டுக்குக் கொண்டு போய் சிதையில் வைத்து தீயும் மூட்டினார்கள்.

அப்போதும் கூட, செட்டி மூச்சு விடாமல் பிணம் போலவே கிடந்தான்.

அதைக் கண்டு நடுநடுங்கிப் போன செட்டியின் மனைவி. அழுதபடியே, சிதை அருகில் போய் “ஐயோ ! இப்பொழுதாவது எழுந்திருங்கள். தீ பரவி வருகிறதே !” என்று அலறினாள்.

ஆனாலும், செட்டி எழுந்திருக்காமல், “எனக்குப் பண்டம் தான் முக்கியம், உயிர் பெரிது அல்ல” என்று கூறி சிதையில் படுத்தவாறே, எரிந்து சாம்பலாகி விட்டான் செட்டி.

இத்தகைய கஞ்சன், கருமிகளும் இருப்பார்கள் போலும்!

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *