கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 698 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவிச்சக்கரவர்த்தி சி. சுப்பிரமணிய பாரதியார் என்று விளக்கமாகச் சொல்லவேண்டியதில்லை. பாரதியார் என்றாலே எனக்கும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கவிச்சக்கரவர்த்தி சி.சுப்பிரமணிய பாரதியாருடைய ஞாபகந்தான் உண்டாகும். சுப்ரமணியன் என்பது தகப்பனார் வைத்த பெயர். பாரதி என்பது அவருடைய பெருமையை அறிந்தவர்கள் வைத்த பெயர். பாரதி என்பதற்குக்கலைமகள் என்று அர்த்தம். கலைமகளே அவதாரம் செய்தது போன்ற கலைக் களஞ்சியமாக இருக்கிறவர்களுக்குப் பாரதி என்ற பட்டப் பெயர் கொடுப்பார்கள். நம்முடைய பாரதியாருக்கு முன்பு பல பாரதிகள் : கோபாலகிருஷ்ண பாரதி, அனந்த பாரதி என்பவர்களைப் போலப் பலர் இருந்திருக்கிறார்கள் அவருக்குப்பின்பும் பலபாரதிகள் உண்டு. ஆனால் பாரதியார் என்று சொன்னமாத்திரத்திலே நமக்கெல்லாம் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற பாட்டைப் பாடின நம்முடைய சுப்பிரமணிய பாரதியாரைத்தான் நினைக்கத் தோன்றுகிறது. காரணம் என்ன? அவர் இத்தனை பாரதிகளி லெல்லாம் பெரியவர்; வயசினால் அல்ல; கவிப் புலமையினால்.

இந்தியா இப்போது சுதந்தரம் அடைந்து விட்டது. இதற்கு முன் அடிமை வாழ்வில் நாம் இருந்தோம். அப்போது நமக்கு இருந்த சுதந்தரப் பசியை அவர் பாட்டாகப் பாடினார். பாரத தேசத்தில் அவரைப் போல மனத்தை உருக்கும்படி சுதந்தரப் பசியைப் பற்றிப் பாடினவர்கள் இல்லை. அது மட்டுமா? சுப்பிரமணிய பாரதி யார் நமக்குச் சுதந்தரம் கிடைப் பதற்கு முன்பே இறந்துவிட்டார். ஆனால் சுதந்தரம் வந்த பிறகு பாடுவதற்குக்கூட அவர் கவிகளைப் பாடியிருக்கிறார். “ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே” என்ற பாட்டை நீங்கள் கேட்டிருப்பீர்களே! “ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோமென்று” என்ற பாட்டை முன்பே பாடிவிட்டார். இப்படிப் பின்னாலே வருவதை முன் கூட்டியே தெரிந்துகொண்டு சொல்பவர்களைத் தீர்க்கதரிசிகள் என்று சொல்வார்கள். நம்முடைய பாரதியார் சிறந்த தீர்க்கதரிசி. அதனால் தான் 1947-ஆம் வருஷம் சுதந்தரம் வந்தபோது, புதிய பாட்டைப் பாடிக்கொண்டு திண்டாடாமல் அற்புதமான பாட்டு ஒன்றை முன்பே பாடித் தந்திருக்கிறார். புதிய பாட்டை யாராவது பாடினால் தான் என்ன? அவர் பாட்டு மாதிரி இருக்க முடியுமா?

பாரதியார் எட்டையபுரத்தில் 1882 – ஆம் வருஷம் நவம்பர் மாதம் பிறந்தார். அவருடைய தகப்பனார் சின்னசாமி ஐயர் தாயார் லக்ஷ்மி அம்மாள். எட்டையபுரம் ஒரு சிறிய சம்ஸ்தானம். அதில் உள்ள ஜமீன்தாரை ஊர்க்காரர்கள் ராஜா என்று சொல்வார்கள். பெரிய ராஜாவாக இல்லாவிட்டாலும் குட்டி ராஜாவுக்கு ஏற்றபடி சின்னச் சின்ன ஆடம்பரமெல்லாம் இருக் கும். அரண்மனை கூட உண்டு. வெறும் பணக்காரராக இருந்தால் அவர் வீட்டை மாளிகை என்று சொல்லலாம்; பங்களா என்று சொல்லலாம்; வசிக்கிறவர் ராஜாவானால் அந்த மாளிகை அரண்மனை ஆகிவிடாதா?

சின்னசாமி ஐயருக்கு அரண்மனையில் உத்தியோகம். நல்ல அறிவாளி. கணக்கில் புலி. எந்த யந்திரமானாலும் ஓடித்துப் பார்ப்பார் முடுக்கிச் சேர்த்துப் பார்ப்பார். துறுதுறுத்த கை; துறு துறுத்த புத்தி. அவருக்குப் பிள்ளையாகப் பிறந்த சுப்பிரமணிய பாரதியாருக்கோகணக்கென்றால் வேப்பங்காய். ஐந்து வயசிலேயே அம்மாவை இழந்தார் பாரதியார். அவர் தகப்பனார் தாயில்லாக் குழந்தையிடம் அதிக அன்போடிருந்தார். அவரே படிப்புச் சொல்லித்தந்தார். தாயுமானவர் பாட்டு, கம்பராமாயணம், திருக் குறள் எல்லாவற்றையும் சொல்லித் தந்தார். தமக்குப் பிரியமான கணக்கைக் கூடச் சொல்லித்தந்தார். பாரதியாருக்குக் கணக்கு வந்தால் தானே? கணக்குக்குரிய வாய்பாட்டிலே அவர் மனசு செல்லாது. ஆனால் கவிதைக்குரிய வாய்பாட்டிலே ஊன்றி நிற்பார். “கணக்குப் போட வாடா” என்று அப்பா அழைப்பார். கணக்கு – பிணக்கு – வணக்கு – மணக்கு – ஆமணக்கு” என்று எதுகை வாய்பாட்டை மனசுக்குள்ளே அடுக்குவார். கணக்கைச் சரியாகப் போடமாட்டாமல் விழிப்பார்.”முழிக்கிற முழியைப் பார்” என்று அப்பா சொல்வார். அதிலிருந்து மற்றோர் எதுகை வரிசை ஆரம்ப மாகும்:”விழி – பழி – குழி – வழி – பிழி – சுழி” என்று வாய்விட்டே சொல்லிவிடுவார். அவருடைய ஞாபகமெல்லாம் கவிபாடுவதற்கு ஏற்றபடி போய்க்கொண் டிருந்தது. கருத்து எங்கெங்கோ பறந் தது. வார்த்தை பாட்டுக்கேற்ற ஜோடனைகளைச் செய்தது.

கருத்தும் வார்த்தையும் இணைந்தன ; பாட்டு உதயமாகி விட்டது. பதினொரு வயசு நடக்கும் போதே பாரதியார் கவிபாடத் தொடங்கிவிட்டார். அவர் காதில் விழும் வார்த்தைகளெல்லாம் அவருடைய கவிக்கு உபயோகப்படும். விளையாட்டாகக் கவிதை இயற்றுவார். சின்னப்பையன் கவி பாடுகிறான் என்றால் கேட்கிற வர்களுக்கு ஆச்சரியம் உண்டாகாதா? எல்லோரும் அந்தப் பையனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதைப் பாடு , அதைப் பாடு என்று கேட்டுத் தூண்டி விட்டார்கள். பாரதியார் அவர்கள் கேட்கிறபடியெல்லாம் கவிபாடுவார். அப்படிப் பாடுவதில் அவர் பிரமாதமாகச் சிரமப்படுவதே இல்லை. அருவி ஓடுகிறது; குயில் கூவுகிறது; மயில் ஆடுகிறது; சிங்கம் பாய்கிறது. இந்தக் காரியங் கள் பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றன. ஆனால் அவை அவைகளுக்கு இயற்கையானவை . அப்படித்தான் பாரதியாருக்கும் கவிபுனைவது என்பது உடன் பிறந்ததாகிவிட்டது.

‘ராஜா’ இருக்கிற சம்ஸ்தானத்தில் வித்துவான்கள் இருப் பார்கள். வேறு ஊர்களிலிருந்தும் அடிக்கடி பல புலவர்கள் வரு வார்கள். அவர்கள் பாரதியாரின் கவிதா சக்தியை உணர்ந்து வியப்படைவார்கள். தமக்குச் சமானமாக அவரை வைத்துக் கொண்டு பேசுவார்கள். அந்தச் சின்னப் பிள்ளையும் மேலும் மேலும் அதிசயப்படும்படியாகக் கவிகளைப் பாடி வந்தார்.

அந்த ஊரில் இருந்தவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த இளம்பிள்ளை இவ்வளவு அருமையாகப் பாடுகிறானே, இவனுக்கு ஏதாவது பட்டம் அளிக்க வேண்டும்” என்று நினைத் தார்கள். படித்த வித்துவான்களும், பாட்டைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டும் அன்பர்களும் சேர்ந்து ஒரு பெரிய சபை கூட்டினார்கள். அந்தச் சபையில் பாரதி என்ற பட்டத்தைச் சுப்பிரமணியனுக் குச் சூட்டினார்கள்.

பாரதியார் அதிகமாகப் படிக்கமாட்டார். கொஞ்சமாகப் படித்தாலும் படித்ததை மறக்கமாட்டார். ஆகையால் அவர் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் தேர்ச்சி பெற்று வந்தார். எட்டையபுரத்தில் சின்ன வயசில் படித்தார். பிறகு திருநெல்வேலியில் உள்ள ஹிந்து கலாசாலையில் சேர்ந்து படித் தார். ஐந்தாம் பாரம் வரையில் அங்கே படித்தார். மாணாக்கராக இருந்தாலும் அவர் பாரதியாரே அல்லவா? ஆகவே அவர் கவி பாடிக்கொண்டே இருந்தார்.

காந்திமதிநாத பிள்ளை என்ற ஒரு கனவான் பாரதி யாருக்கு இருந்த புகழைக் கண்டு சகிக்கவில்லை. “சின்னப் பிள்ளை யாண்டான்; இவனைப் போய்க் கவியென்றும் பாரதியென்றும் உச்சாணிக்கொம்பில் தூக்கி வைக்கிறார்களே!” என்பது அவ ருடைய எண்ணம். ஒரு நாள் பல அறிஞர்கள் கூடியிருந்த இடத் தில் காந்திமதிநாத பிள்ளையும், பாரதியாரும் சந்தித்தார்கள். பாரதியாரை அவமானப் படுத்த வேண்டும் என்பது காந்திமதிநாத பிள்ளையின் ஆசை. அவர் பாரதியாரைப் பார்த்து, “உம்மை எல்லோரும் கவிஞர் என்று சொல்கிறார்களே. நான் கடைசி அடி தருகிறேன். அதை வைத்து ஒரு வெண்பாப் பாடுவீரா?” என்று கேட்டார். பாரதியார் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார் காந்திமதிநாத பிள்ளை குறும்புத்தனமாக, “அப்படியானால், பாரதி சின்னப் பயல் என்பதைக் கடைசி அடியாக வைத்துப் பாடும்” என்றார். பாடமாட்டார் என்று அவர் நினைத்தார். பாட முடியாமல் விழித்தால், “பாரதி சின்னப் பயல் : இவனைப்போய்ப் பிரமாதப் படுத்துகிறீர்களே’ என்று சொல்லலாமென்று அவ ருக்கு ஆசை. பாடிவிட்டால் தான் என்ன? “பார்த்தீர்களா? இவரே தம்மைச் சின்னப் பயல் என்று பாடிக்கொண்டார். இவரைப் பெரியவராகச் சொல்லலாமா?” என்று வாதம் பேச லாம் அல்லவா?

இந்தக் கெட்ட எண்ணம் பலிக்கவில்லை. பாரதியார் அவ் வளவு லேசானவரா? காந்திமதிநாத பிள்ளையின் சின்னப் புத்தி பாரதியாருக்குத் தெரிந்துவிட்டது. ‘இத்தனை பேருக்கு நடுவில் நம்மைச் சின்னப் பயல் என்று சொல்லிவிட்டதால், மகிழ்ச்சி அடைகிறார் இந்த மனுஷர். இவருக்குச் சரியானபடி பதில் கொடுக்க வேண்டும்’ என்று அந்தச் சிங்கக்குட்டி நினைத்தது. பாட்டு வந்துவிட்டது. ‘பாரதி சின்னப்பயல்’ என்ற ஈற்றடியை வைத்து ஒரு வெண்பாவைப் பாடிவிட்டார் பாரதியார்.

“…காந்திமதிநாதனைப் பாரதி சின்னப் பயல்” என்பது பாட்டின் முடிவு. இதைக் கேட்டுப் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். பிள்ளையவர்கள், பாரதியைச் சின்னப்பயல் என்று சொன்னார். பாரதியாரோ பிள்ளைவாளையே சின்னப்பயலாக்கிவிட்டார் : காந்திமதி நாத னைப் பார், அதி சின்னப் பயல் என்று பிரித்து அர்த்தம் செய்யும் படி பாடினார். பிள்ளை வாள்’ பாரதியாரைச் சின்னப் பயல் என்று மாத்திரம் சொன்னார். அந்த இளங்கவியோ அப்படிச் சொன்னவரை அதி சின்னப்பயல், மிகவும் சின்னப் பயல் ஆக்கி விட்டார். சிறுபிள்ளை அழகாகப் பாடுவதைக் கேட்டுச் சந்தோஷப் படாமல் பொறாமைப்பட்ட அந்த மனிதர் சின்னப் புத்தி படைத்தவர். அவரைப் பெரிய மனிதர் என்று எப்படிச் சொல்லலாம்? அதி சின்னப்பயல்’ என்று பாரதியார் சொன்னது சரி.

இந்தச் சமாசாரம் ஊர் முழுவதும் பரவிவிட்டது. பாரதி யாரின் புகழ் பின்னும் உயர்ந்துவிட்டது. ஒரு நாள் தமிழ் வகுப் பில் பாடம் நடந்துகொண் டிருந்தது. தமிழ் வாத்தியார் பாரதி யாரை ஏதோ ஒரு கேள்வி கேட்டார். பாரதியார் தக்க விடை சொல்லவில்லை. சும்மா இருந்தார் . ‘என்னப்பா , உன்னைப் பற்றி ஊரிலெல்லாம் பிரமாதமாகச் சொல்கிறார்கள். காளமேகம் போல் கவியைப் பொழிவதாகப் பாராட்டுகிறார்கள். அந்தக் காளமேகம் இப்போது ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கிறதே” என்று கிண்டலாகக் கேட்டார் வாத்தியார். பாடத்தில் கேட்ட கேள்விக் குப் பாரதியார் பதில் சொல்லவில்லை. ஆனால் கிண்டலாக வாத்தி யார் கேட்ட இந்தக் கேள்விக்குப் பதில் உடனே வந்துவிட்டது.

“வாத்தியார் நினைக்கிற போதெல்லாம் மேகம் மழை பொழியுமா? மேகம் ஒருவருக்கு அடங்கி அவர் விருப்பப்படி மழை பொழிவதில்லையே! இந்த விஷயம் ஐயாவுக்குத் தெரியாதா?” என்றார் பாரதியார். பையன்கள் எல்லாம் சிரித்தார்கள்.

பாரதியாருக்கு ஓர் அத்தை இருந்தாள். அவளுடைய கணவர் காசியில் வேலையாக இருந்தார். பாரதியார் அங்கே போய்ச் சில வருஷங்கள் படித்தார். வடமொழி, ஹிந்தி ஆகிய பாஷைகளில் அவர் அறிவு பெற்றார். மறுபடி 1901-ஆம் வருஷம் எட்டையபுரம் வந்து அப்பாவைப் போல அரண்மனை உத்தியோகம் – பார்க்கத் தொடங்கினார். எட்டையபுரம் ராஜாவுக்கு அவரிடத்தில் அதிகப் யிரியம். ஆனாலும் பாரதியார் அந்த ஊரிலே இருக்க விரும்பவில்லை. மதுரைக்கு வந்து சில காலம் தமிழாசிரியராக இருந்தார். அந்த வேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை. சென்னைக்கு வந்து சுதேச மித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். பிறகு இந்தியா’ என்று ஒரு பத்திரிகையைத் தாமே நடத்தத் தொடங்கி னார். அப்போது அவருக்கு 25 வயசு. அவ்வளவு சின்ன வயசில் அரசியல் ஞானமும் கவிதா சக்தியும் பெற்றுப் பத்திரிகாசிரிய ராக விளங்கினவர்கள் உலகிலேயே மிகச் சிலர்.

இந்தியாவின் அடிமை வாழ்வைப் போக்க வேண்டுமென்ற கிளர்ச்சி அப்போது ஏற்பட்டிருந்தது. திலகர் சுயராஜ்யம் வேண்டும் என்பதைப் பிரசாரம் செய்தார். பாரதியாரிடம் தீவிரமான தேசபக்தி முளைத்து வளர்ந்தது. பல கவிதைகளைப் புனைந்தார். சுடச்சுட எழுதினார். அவருடைய எழுத்து வழவழவென்று இராது. வீரம் கொப்புளிக்கும். அரசாங்கத்தார் அந்தப் பத்திரிகைக்குத் தடை போட்டார்கள். தம்மையும் சிறையிலிடுவார்கள் என்று எண்ணிப் பாரதியார் புதுச்சேரிக்குப் போய்விட்டார்.

புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களுடையது. பிரிட்டிஷ் அரசாங் கத்தின் வெறுப்புக்கு ஆளான பல தேசபக்தர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். அரவிந்தர், வ.வே.சு. ஐயரைப் போன்ற தேசபக் தர்களோடு பாரதியாரும் போய்ச் சேர்ந்து கொண்டார். புதுச் சேரியில் சில காலம் ‘இந்தியா’ப் பத்திரிகையை நடத்தி வந்தார். பிறகு அது நின்று போயிற்று. அற்புதமான கவிதைகளைப் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது பாடினார்

1918-ஆம் வருஷம் பாரதியார் மறுபடியும் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் வேலை பார்த்தார். 1921 செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பாரதியார் உலக வாழ்வைப் பிரிந்தார்….

பாரதியார் 39-வருஷங்கள் வாழ்ந்தார். அதற்குள் அவர் செய்த காரியம் பல . அழகான கவிதைகளை , இதற்குமுன் இல்லாத சுவைகளையெல்லாம் காட்டும் இனிய கவிதைகளை, அவர் இயற்றியிருக்கிறார். சின்னக் குழந்தைகளுக்காக அவர் பாடிய பாப்பா பாட்டு’ மிகவும் நல்ல பாட்டு. குழந்தைகளெல்லோரும் படித்துப் பாடம் பண்ணிப் பாடவேண்டிய பாட்டு.

– விளையும் பயிர், முதற் பதிப்பு: 1956, கண்ணன் வெளியீடு, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *