“பாரத தேச மென்று பெயர் சொல்லு வார்மிடிப்
பயங் கொல்லு வார் துயர்ப் பகைவெல்லுவார்”
“பாரத நாடு பழம் பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே”
“பாரிலுள்ள பல நாட் டினர்க்கும்
பாரத நாடு புது நெறி
பழக்கல் உற்றதிங் கிந்நாள்”
“பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய”
“வாழிய பாரத மணித்திரு நாடு”
“பாரத நாடு பாருக் கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர்”
“பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற் றாதீர்”
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”
என்றெல்லாம் பாரதியார் நம் நாட்டைப் பாரத நாடு என்று கூறிப் புகழ்ந்து பாடியிருக்கிறார். நம் நாட்டுக்குப் பாரத நாடு என்று ஏன் பெயர் வந்தது ?
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருஷபர் என்ற முனிவருக்கும் அவர் மனைவியாகிய சயந்திக் கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பரதன் என்று பெயர் வைக்கப்பட்டது.
பரதன் வளர்ந்து வருகையில், தம் தந்தையாகிய இருஷப முனிவரிடம் எல்லாக் கலைகளையும் நன்கு கற்றார். ஞானமும் வீரமும் அவரிடம் சிறந்திருந் தன. அவர் ஒரு முனிவருக்குரிய ஞானமும் பெற் றிருந்தார்; அரசனுக்குரிய வீரமும் பெற்றிருந்தார். எனவே, மக்கள் இருஷப முனிவரின் மகனாகிய பர தரை அரசராக்கிக் கொண்டார்கள். இவர் பல ஆண்டுகள் அரசாண்டார். பிறகு மகரிஷி புலகரின் ஆச்சிரமத்திற்குச் சென்று யோகத்தில் அமர்ந்தார். இவரைச் சட பரதர் என்றும் கூறுவார்கள். இவர் ஆண்டதால் இந் நாடு பரதகண்டம் அல்லது பாரத நாடு என்னும் பெயரைப் பெற்றது.
நம் நாடு பாரத நாடு என்று கூறுவதற்கு மற் றொரு கதையும் கூறப்படுகிறது. அதைக் கீழே படிப்போம்:
கச்யபர் என்னும் மாமுனிவரின் மாணவர் கண்ணுவர் என்பவர். இவர் காட்டில் ஆசிரமம் அமைத்துத் தவம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் நீராடிவிட்டு ஆசிரமத்திற்குத் திரும்பினார். வழியில் ஒரு சிறு அழகான பெண் குழந்தை தரையில் கிடந்து அழுது கொண்டிருந்ததைப் பார்த்தார்; சகுந்தலப் பறவைகள் அக்குழந்தையின் மீது கதிரவனின் ஒளிக்கதிர்கள் படா வண்ணம் தம் அழகிய சிறகுகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.
கண்ணுவர் அதன் அருகில் சென்று அக்குழந்தையை எடுத்தார். அக்குழந்தையைத் தம்முடைய ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று அக்குழந்தைக்குச் சகுந்தலை என்று பெயரிட்டார்; அக்குழந்தையை அன்போடு வளர்த்து வந்தார். அவள் வளர்ந்து அழகிய மங்கை ஆனாள்.
அந்தக் காட்டையும் அதை அடுத்திருந்த நாட்டையும் துஷ்யந்தன் என்ற மன்னன் ஆண்டு வந் தான். அவன் அடிக்கடி காட்டிற்குச் சென்று, காட்டில் வாழும் கொடிய விலங்குகளை வேட்டை ஆடுவான். அவன் மிகவும் நல்ல அரசன்; குடி மக்களிடம் அன்புடன் நடந்து கொண்டான். அவன் நாட்டை நீதி வழுவாது ஆண்டு வந்தான்.
ஒரு முறை துஷ்யந்தன் காட்டில் வேட்டை ஆடியபின் களைத்து, ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான்; பிறகு எழுந்து உலாவலானான்.
அவன் தங்கிய இடம் கண்ணுவ முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்த இடமாகும். அப்பொழுது சகுந்தலை தன் ஆசிரமத்தின் சோலையில் பூப்பறித்துக் கொண்டு இருந்தாள். உலாவிக் கொண்டிருந்த துஷ்யந்த மன்னன் ஒரு மானைக் கண்டு அதைத் துரத்திக் கொண்டு ஓடி ஆசிரமச் சோலைக்குள் புகுந்தான்; அங்கே பூப்பறித்துக் கொண்டிருந்த சகுந்தலையைக் கண்டான்.
அப் பெண் யார் எனக் கேட்டான். அவள் விசுவாமித்திரருக்கும் மேனகை என்பவளுக்கும் பிறந்த பெண் என்பதையும், கண்ணுவ முனிவர், சிறு குழந்தையாக இருந்த அவளை எடுத்து வளர்த்து வருகிறார் என்பதையும் தோழிகள் கூறத் தெரிந்து கொண்டான்.
துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டு பேசினான். இருவரும் கந்தர்வ மணம் செய்து கொண்டனர். பிறகு ஒரு நாள் துஷ்யந்தன் தன் பெயருள்ள மோதிரம் ஒன்றை அவளிடம் கொடுத்தான். குறித்த நாளில் வந்து அவளை அரண்மனைக்கு அழைத்துப் போவதாக உறுதி கூறிவிட்டு அவளிடம் விடை பெற்றுக் கொண்டு தன் நாட்டிற்குச் சென்றான்.
நாட்டிற்குச் சென்ற துஷ்யந்தன் குறித்த நாளில் வரவில்லை. அவன் சகுந்தலையை மறந்து விட்டான்; காரணம் அவன் கவனம் முழுவதும் நாட்டை ஒழுங்காக ஆட்சி செய்வதிலேயே இருந்தது.
துஷ்யந்தன் வராமற்போகவே சகுந்தலைக்குக் கவலை உண்டாயிற்று. கண்ணுவர் சகுந்தலையின் கவலையைப் போக்க எண்ணினார். சகுந்தலையைத் தகுந்த துணையுடன் துஷ்யந்தனிடம் அனுப்பி வைத்தார்.
சகுந்தலை இரண்டு தோழிகளுடன் கண்ணு, வரின் மாணவர்கள் இருவரைத் துணைக்கு. அழைத்துக் கொண்டு துஷ்யந்தனின் நாட்டை நோக்கிப் புறப்பட்டாள். அவள் காட்டைக் கடந்து. வந்து கொண்டிருந்தாள். வழியில் அவளுக்குத் தாகம் உண்டாயிற்று. அங்கிருந்த குளம் ஒன்றில் இறங்கி அவள் தண்ணீர் அள்ளிக் குடித்தாள். அச்சமயம் அவள் விரலில் இருந்த துஷ்யந்தனின் மோதிரம் நழுவித் தண்ணீ ரில் விழுந்துவிட்டது.. அவள் அதைக் கவனிக்கவில்லை.
பிறகு, சகுந்தலை தன் துணைவர்களுடன் அரண் மனை போய்ச் சேர்ந்தாள். தன் வருகையை அரசனுக்குத் தெரிவித்தாள்.
துஷ்யந்தன் அவர்களை வரவேற்று, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு, என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
சகுந்தலையை அவனால் அறிந்துகொள்ள முடிய வில்லை. அவள் துஷ்யந்தனைப் பார்த்து, “ ஆசிரமச் சோலையில் நாம் சந்தித்ததை மறந்துவிட்டீர்களா? எனக்கு மோதிரம் கொடுத்துவிட்டு வந்தது நினைவில் இல்லையா? குறித்த நாளில் ஆசிரமத்திற்கு வந்து:
என்னை அரண்மனைக்கு அழைத்து வருவதாகக் கொடுத்த வாக்குறுதி நினைவிலில்லையா? ” என்று கேட்டாள்.
ஆனால் துஷ்யந்தனுக்கு ஒன்று கூட நினைவில் இல்லை. ஆசிரமச் சோலையில் நடந்தவற்றை எல்லாம் அவன் அடியோடு மறந்துவிட்டான். அவளையே அவன் அடியோடு மறந்து விட்டான். மோதிரத் தைப்பற்றிச் சகுந்தலை கூறவே, துஷ்யந்தன் அந்த மோதிரத்தைக் காட்டும்படி கூறினான். ஆனால், சகுந்தலை தன் விரலில் மோதிரம் இல்லை என்பதை அப்பொழுதுதான் அறிந்தாள். அது வழியில் குளத்தில் தான் தண்ணீர் குடித்தபோது நழுவி விழுந்து விட்டிருக்கும் என்று கூறினாள். ஆனால் மோதிரம் இல்லாததை அறிந்த துஷ்யந்தன் அவள் கூறிய எதனையும் நம்பவில்லை.
சகுந்தலை, தான் குழந்தைக்குத் தாயாகும் நிலையில் இருப்பதாயும், இப்படித் தன்னைக் கைவிடு வது பாதகச் செயல் என்றும் கூறினாள். அவளுடன் வந்த மற்றவர்களும் அவள் நிலையை விளக்கி, அவளைப் பழிக்கு ஆளாக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர்.
துஷ்யந்தன் அவர்கள் கூறியதை நம்பவில்லை. அவர்கள் தன்னை ஏமாற்றுவதாகவே அவன் நினைத் தான். அரண்மனையை விட்டு அவர்களை வெளியேறு மாறு சொல்லிவிட்டு, அவன் கோபத்தோடு உள்ளே சென்று விட்டான். சகுந்தலை தன்னை மறந்துவிட்ட துஷ்யந்தனின் போக்கை எண்ணி வருந்தினாள்.
அவளுடன் வந்தவர்கள், ஆசிரமத்திற்கு அவளை அழைத்துச் செல்லவில்லை. அவளால் ஆசிரமத்திற்குப் பழிவரும் என்றுகூறி, அவளை அரண்மனை வாயிலில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள்.
தனியே விடப்பட்ட சகுந்தலை, அழுது புலம் பினாள். பின் தன் தாயிடம் போய்ச் சேர்ந்தாள். சில நாட்கள் கழிந்தபின், அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தைக்குப் பரதன் என்னும் பெயர் இடப்பட்டது. அந்தக் குழந்தை நன்கு வளர்ந்தது. காட்டில் வளர்ந்தபடியால் சிங்கம், புலி முதலியவைகளே அவனுடைய விளையாட்டுத் தோழர்கள் ஆயின. அச்சம் என்பது என்ன என்றே அறியாதபடி பரதன் வளர்ந்து வந்தான்.
ஒருநாள் துஷ்யந்தனிடம் இரண்டு மீனவர்கள் வந்து ஒரு மோதிரத்தைக் கொடுத்தனர். “நாங்கள் பிடித்த மீன்களுள் ஒன்றின் வயிற்றில் இந்த, மோதிரம் இருந்தது. இதில் தங்கள் பெயர் பொறிக். கப்பட்டு இருக்கிறது. எனவே அரசருடைய முத்திரை மோதிரம் என்பதை அறிந்த நாங்கள் இதைத் தங்களிடம் கொண்டுவந்தோம்” என்று கூறினர்.
மோதிரத்தைப் பார்த்தவுடன் துஷ்யந்தனுக்குச் சகுந்தலையின் நினைவு வந்துவிட்டது. வழியில் காட்டில் தண்ணீர் குடிக்கும் பொழுது, மோதிரம். நழுவித் தண்ணீரில் விழுந்து விட்டிருக்கும் என்று சகுந்தலை கூறிய சொற்கள் அவன் நினைவுக்கு வந்தன. ஆசிரமத்தில் தான் சகுந்தலையைச் சந்தித்தது, மோதிரம் கொடுத்தது, அரண்மனைக்கு அழைத்து வருவதாகக் கூறியது ஆகிய எல்லாம் நினைவிற்கு வந்தன. சகுந்தலையை மறுத்து அனுப்பி விட்டதை நினைத்துப் பெரிதும் வருந்தினான்; தான் ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டதாக எண்ணி, அழுது புலம்பினான்; அதே கவலையுடன் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் துஷ்யந்தன் காட்டில் நெடுந் தொலை சென்று திரும்புகையில், அப்பகுதியின் இயற்கை அழகுகளைப் பார்த்தபடி மெல்ல வந்து கொண்டிருந்தான். அழகு மிகுந்த சிறுவன் ஒருவன் சிங்கக் குட்டிகளைத் தூக்கி வைத்துக் கொண்டு சிங்கத்திடம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அச்சிறுவன் சிங்கத்தின் பிடரியைப் பிடித்து இழுப்பதும் பற்களை எண்ணிப் பார்ப்பதும் வாலை பிடித்து இழுப்பதுமாக இருந்தான்.
துஷ்யந்தன், அச்சிறுவனைப் பார்த்து வியப்பு அடைந்தான். அவனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான். “தம்பி, உன்பெயர் என்ன? உன் தாய் தந்தை யாவர் ? உன் வீடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டான். அந்தச் சிறுவன் துஷ்யந்தனைப் பார்த்து, “ஐயா என் பெயர் பரதன். என் தாய் பெயர் சகுந்தலை. என் தந்தை இங்கு இல்லை. அவரை நான் பார்த்ததும் இல்லை; என் வீடு அருகில்தான் இருக்கிறது” என்று கூறினான்.
பரதன் தன் மகன் என்பதைத் துஷ்யந்தன் தெரிந்து கொண்டான்; அவனுடன் சகுந்தலை இருக்கும் இடத்திற்குச் சென்றான். துஷ்யந்தன் வருவதைக்கண்ட சகுந்தலை அவனை வரவேற்று வணங்கினாள். துஷ்யந்தன் அவளுக்கு ஆறுதல் கூறினான்; நடந்தவைகளை மறந்து விடுமாறு வேண்டினான். தன் தவறுக்காக மிகவும் வருந்தினான்; மீனவர்கள் கொண்டு வந்து கொடுத்த மோதிரத்தைப் பார்த்தபின் தனக்கு எல்லாம் நினைவிற்கு வந்து விட்டதாகவும் அன்று முதல் துன்பத்தில் காலம் கழித்து வருவதாகவும் கூறினான்.
சகுந்தலை தன் கணவரின் வருத்தத்தைப் போக்கி னாள். இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். துஷ் யந்தன் சகுந்தலையையும் தன் மகன் பரதனையும் அழைத்துக் கொண்டு தன் அரண்மனை வந்து சேர்ந்தான்.
பரதன் இளவரசனானான்; எல்லாக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். அச்சத்தை அறியாமல் வளர்ந்த பரதன் வீரத்தில் சிறந்தவனாக விளங்கினான்.
பரதன் தக்க வயது அடைந்ததும், துஷ்யந்தன் அவனுக்கு முடி சூட்டி விட்டு, அரச பதவியி லிருந்து விலகி ஓய்வு பெற்றான்.
பரதன் மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய் தான்; இந்தியா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். அவன் ஆட்சியில் மக்கள் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். எனவே அவன் பேரும் புகழும் நாடு முழுவதும் பரவிற்று.
அது முதல் அவன் பெயராலேயே இந்த நாடு பாரத நாடு என்று வழங்கிற்று.
எனவே நம் நாடு பாரத நாடு என வழங்கப்படுகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் மகரிஷியான சடபரதர். மற்றொருவர் துஷ்யந்தனின் மகனாகிய பரதன் ஆவர்.
பயிற்சி
1. சடபர தரும் பாரத நாடும்
2, துஷ்யந்தன் கதை
3. பாரத நாட்டின் பெயர்க் காரணம்
(இவை ஒவ்வொன்று பற்றியும் இரண்டு பக்கங்கட்கு மிகாமல் ஒவ்வொரு கட்டுரை எழுதுக)
– சிறுவர் கதைச் சோலை (சிறுகதைத் தொகுப்பு), ஆறாம் வகுப்புத் துணைப்பாட நூல், முதற் பதிப்பு: அக்டோபர் 1965, திருமுருகன் பதிப்பகம், வேலூர்.