பாம்பு வாகனமேறிய தவளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 56 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தவளைகள் நிறைந்திருந்த ஓர் ஓடைக்கரையில் ஒரு பாம்பு இருந்தது. அது தவளைகளை யெல்லாம் விழுங்கித் தன் பசியை ஆற்றிக்கொள்ள எண்ணியது. தவளைகளைப் பிடிப்பதற்காக அது ஒரு சூழ்ச்சி செய்தது. அந்த ஓடைக் கரையில் வந்து தன் தலை விதியை எண்ணி வருந்துவது போல் துயரக் குறி யோடு இருந்தது. 

அப்போது அந்த வழியாகத் தவளை அரசன் ஊர்வலம் வந்தது. வரித் தவளை என்ற தவளை யைத் தன் வாகனமாகக் கொண்டு அதன் மேல் தவளை அரசன் ஏறிவர, அமைச்சர்களும், சேனை களும் சூழ்ந்து வர, சில தவளைகள் மேளம் வாசிக்க மிகவும் கம்பீரமாகத் தவளையரசன் ஊர்வலம் வந்தது. 

கரையின் மேல் கவலையுடன் உட்கார்ந்திருந்த பரம்பைக் கண்டதும், தன் தூதன் ஒருவனை அனுப்பி என்ன காரணம் என்று அறிந்து வரச் சொல்லிற்று, தவளையரசன். 

அந்தத் தூதனும், பாம்பின் அருகில் போய் ”நீ யார்? நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?” என்று கேட்டது. 

‘நான்தான் பாம்பரசன், பாம்புகளின் அரச னாக சீரும் சிறப்புமாக இருந்த நான் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரைத் தீண்டி விட்டேன். உடனே அந்த முனிவர் என்னைச் சபித்து விட்டார். “நீ தவளையைச் சுமக்கக்கடவது, அந்தத் தவளையிடமே இரை வாங்கி உண்ணக் கடவது” என்று அவர் சாபம் இட்டுவிட்டார். நான் சாபமடைய நேர்ந்த என் தலைவிதியை நினைத்து வருத்தமாயிருக்கிறேன். இனி என் சாபம் நிறை வேறினால்தான் நான் பிழைக்க முடியும். உங்கள் அரசனிடம் சொல்லி, மேலும் ஆபத்து வராமல் காப்பாற்றச் சொல். நான் என்றும் உங்கள் அடிமை யாக இருப்பேன்” என்று கூறியது. 

தூதன் திரும்பி வந்து தவளையரசனிடம் பாம் பரசன் கூறிய கதையை அப்படியே கூறிற்று. தவளையரசன் தன் முதலமைச்சனைக் கூப்பிட்டு யோசனை கேட்டது. 

“பாம்பரசன் நம்மைச் சுமப்பதென்றால் சாதார ணமா? தினமும் அவன் தங்களைச் சுமப்பதென்றால் வரும் பெருமையே பெருமை! நம்மைப் போல் உயர்ந்த சாதி உலகத்திலேயே இல்லையென்றாகி விடும்’ என்று அந்த மண்டூகம் கூறியது. 

உடனே தவளையரசன், பாம்பரசனைக் கூட்டி வரச் சொல்லியது. 

”பாம்பே, நீ நீ என்னைத் தினமும் சுமந்து கொண்டிருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தவளை உனக்கு உணவாகக் கிடைக்கும்” என்று கூறியது. 

“ஆகா! என் பாக்கியம்! சீக்கிரம் என் சாபம்  தீர்த்தால் போதுமானது” என்று சொல்லித் தலையைக் குனிந்தது பாம்பு. 

அதன் தலையின் மேல் தவளையரசன் ஏறிக் கொண்டது. “இன்று என் எண்ணம் பலித்தது. இந்தத் தவளைகள் எல்லாம் என் வயிற்றுக்குத் தான்’ என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்ட பாம்பு, தவளையரசனைப் பார்த்து, “இனி நான் உங்களைப் பிரியவே மாட்டேன் ” என்று சொன்னது. 

தவளையரசனும் மனமகிழ்ந்து ஒரு தவளையைத் தின்று கொள்ளும்படி அனுமதி கொடுத்தது. 

ஒவ்வொரு நாளும், ஏதாவது சொல்லித் தவளையை மன மகிழ வைத்துப் பாம்பு ஒவ்வொரு தவளையாக விழுங்கிக் கொண்டு வந்தது. கடைசி யில் தவளையரசனைத் தவிர மீதித் தவளைகள் இரையாகி விட்டன. அப்போதுதான் தவளையரசனுக்குத் தான் மோசம் போனது முழுச்க புரிந்தது. 

தவளையரசன் கவலைப்படத் தொடங்கிவிட்ட தைக் கண்ட பாம்பு, மெல்லக் கீழே இறக்கி அதன் வளை எதிரில் விட்டது. தவளையரசன் வளைக்குள் நுழைந்தது. பாம்பு பின் தொடர்ந்து போய் அதையும் விழுங்கி விட்டது. 

மூடர்களின் யோசனையைக் கேட்டால் ஒரு குலமே நாசமடைந்து விடும்.

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 3 – அடுத்துக் கெடுத்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *