பாம்பும் காகமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 23,521 
 
 

ஒரு காட்டில் அரசமரம் ஒன்று இருந்தது. அந்த அரசமரத்திற்கு கீழே பாம்பு புற்று இருந்தது. தினமும் காகமானது தன்னுடைய கூட்டிலே முட்டை ஈன்று விட்டு இரை தேட செல்லுமாம். காகம் மரத்தை விட்டுச் சென்றவுடன் கீழே இருக்கும் பாம்பானது மரத்திற்கு மேலே சென்று காகத்தின் முட்டையை உடைத்துக் குடித்து விடும். திரும்பி வந்து பார்க்கும் காகத்திற்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது. முட்டை வைத்து குஞ்சு பொறிக்க முடியவில்லையே என்று வேதனையில் துடித்தது.

நாம் சென்றவுடன் தினமும் தன்னுடைய முட்டையை உடைத்துச் சாப்பிடுவது யார்? என்று கண்டறிய நினைத்தது. ஒருநாள் காகமானது இரைக்குத் தேடுவது போல் சென்றுவிட்டு பாதி வழியிலேயே திரும்பி வந்தது.

பாம்பு காகத்தின் முட்டையை உடைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த காகத்திற்கு கோபம் தலைக்கேறியது. பாம்பை தன்னுடைய மூக்கிலே கொத்தி சாகடிக்க வேண்டும் என்று பாம்பைத் துரத்தியது. காகம் வந்ததை அறிந்த பாம்பு சீக்கிரமாய் மரத்தின் கீழிறங்கி புற்றுக்குள் சென்று ஒளிந்து கொண்டது. அதன்பிறகு காகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்தப் பாம்பை கொல்ல வேண்டும். அப்போதுதான் தன்னுடைய முட்டையைக் காப்பாற்ற முடியும் என்று காகம் யோசனை செய்தது. காகத்திற்கு இப்போது யோசனை ஒன்று வந்தது.

நேராக அந்த நாட்டு ராஜாவின் அந்தபுரத்திற்குப் பறந்து சென்றது காகம். அந்த புரத்தில் தன்னுடைய நகையெல்லாம் கழட்டி வெளியே ஒரு ஓரதத்தில் வைத்துவிட்டு ராணி குளித்துக் கொண்டிருந்தாள். இந்தக் காகமானது ராணியின் நகையில் ஒரு ஆபரண நகையை மட்டும் வாயிலே கவ்விக்கொண்டு மேலே பறந்தது. இதைப்பாரத்த ராணி,

“காவலர்களே ஓடிவாங்கள்… காவலர்களே ஓடிவாங்கள்… என்னுடைய நகையை காகம் ஒன்று தூக்கிச் செல்கிறது” என்று கத்தினாள்.

பெண் காவலர்கள் ஓடிச்சென்று ஆண்காவலர்களிடம் சொல்ல, ஆண்காவலர்கள் அந்த காகத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். காகமோ நேராகச் சென்று பாம்பு இருக்கும் புற்றுக்குள் போட்டுவிட்டு மரத்தின் மேல் போய் அமர்ந்து கொண்டது.

ராணியும் தோழிகளும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். காவலர்கள் பாம்பு புற்று என்று தயங்கி நின்றார்கள். ராணிக்கோ நகை வேண்டும். அதனால் புற்றை உடைத்து நகையை எடுங்கள் என்று கட்டளை இட்டாள்.

புற்று உடைக்கப்பட்டது. புற்றிலிருந்து பாம்பு வெளியே வந்தது. காவலர்களால் பாம்பு கொல்லப்பட்டது. புற்றில் இருக்கும் நகையை காவலர்கள் எடுத்த ராணியிடம் ஒப்படைத்தார்கள்.

இப்போது அரசமரத்தில் காகம் குஞ்சுகள் பொறித்து சந்தோசமாக வாழ்ந்து வந்தது.

ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *