(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு நீர் நிலையில் ஒரு தவளை இருந்தது. அந் நீர்நிலையில் இருந்த தவளைகள் அதனோடு ஒற்று மையாக இல்லை. மேலும் அதைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தன. இதனால் வெறுப்படைந்த தவளை, மற்ற தவளைகளின் மேல் ஆத்திரம் கொண்டு, ஒரு பாம்புடன் போய்ப் பழகத் தொடங் கியது. தன் நண்பனாகி விட்ட அந்தப் பாம்பைப் பார்த்து, ”இந்தத் தவளைகளையெல்லாம் விழுங்கி விடு” என்று கூறியது. பாம்பும் அவ்வாறே தனக்குப் பசித்த போதெல்லாம் தவளைகளைப் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. தன் எதிரிகள் சாவதைக் கண்டு, அந்தத் தவளை மன மகிழ்ச்சி கொண்டிருந்தது.
பாம்பு விழுங்கி விழுங்கித் தவளைகளெல்லாம் ஒழிந்து போய் விட்டன, கடைசியில் இந்தத் தவளையின் குடும்பம் ஒன்றுதான் மிஞ்சியது. எல்லாரும் ஒழிந்தார்கள் என்று இந்தத் தவளை களிப்புற்றிருக்கும் நேரம் பாம்பு அங்கே வந்தது.
“எனக்கு இரை தா!” என்று பாம்பு கேட்டது.
“எல்லாம் தான் தீர்ந்து விட்டதே, தெரியவில் லையா?” என்று தவளை கேட்டது.
உடனே பாம்புக்குக் கோபம் வந்தது. அது தவளையைப் பார்த்து கூறியது. “ஏ அற்பத் தவளையே, உன் பேச்சை நம்பித்தான் நான் வேறு இரை தேடாமல் இருந்தேன். இப்போது நீ எனக்கு இரை தர வழி செய்யாவிட்டால் உன்னையும் விழுங்கி விடுவேன்” என்று சொல்லித் தவளையின் குஞ்சுகளை விழுங்கி விட்டுச் சென்றது.
தவளைக்கு வந்த துயரத்திற்கு அளவேயில்லை. அப்போதுதான் தான் ஆத்திரத்தில் அறிவிழந்தது அதற்குத் தெரிந்தது. இனியாவது புத்திசாலித் தன மாக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணியது.
மறுபடி பாம்பு வருவதற்குள், அது தன் மனைவித் தவளையை அழைத்துக் கொண்டு வேறொரு நீர் நிலைக்குப் போய் விடடது.
அந்த நீர் நிலையில் இருந்த தவளைகளுடன் அது அன்பாகப் பழகிக்கொண்டு இன்பமாக இருந்தது.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 4 – பெற்றதை இழக்கச் செய்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.