(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பண்டைக் காலத்தில் அயர்லாந்திலே பல பெரிய கல்விச் சாலைகள் திகழ்ந்து வந்தன. அவைகளிலே கலைகள் பலவும் மக்களுக்குக் கற்பிக்கப்பெற்று வந்தன. அந்தக் காலத்தில் ஏழை மக்கள் பெற்றிருந்த கல்வியின் அளவு இக்காலத்துப் பிரபுக்களுடைய கல்வியைப்பார்க்கினும் அதிகமென்று சொல்லலாம். பாதிரிமார்களின் படிப்போ எல்லாவற்றிலும் மேற்போனது. ஆதலால், உலகெங்கும் அயர்லாந்தின் புகழ் பரவி, வெளிநாட்டு அரசர்கள் பலர் தங்கள் குமாரர்களை அயர்லாந்துக்கு அனுப்பி, அங்குள்ள பள்ளிகளில் பயின்று வரும்படி செய்தனர்.
ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் ஒரு பள்ளியில் படித்து வந்தான். அவனுடைய புத்திக்கூர்மையைக் கண்டு எல்லோரும் வியந்தனர். அவனுடைய பெற்றோர்கள் உழைப்பாளிகள், ஏழைகள். ஆயினும், பணக்காரர்களுடைய பிள்ளைகள், அரச குமாரர்கள் எவரும் கல்வியில் அவனை எட்டிப் பிடிக்க முடியவில்லை . அவனுக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர்கள் கூட அவனிடம் எச்சரிக்கையாக இருக்க நேர்ந்தது; அவர்கள் அவனுக்கு எதையாவது கற்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் அவர்களே கேட்டிராத அரிய பெரிய விஷயம் ஒன்றைச் சொல்லுவான். வகுப்பிலே அவர்கள் வெட்கமடையும்படி நேரிடும். அவனுடைய வெற்றி முறைகளுள் ஒன்று, விவாதம். அவனிடம் யார் தருக்கம் செய்தாலும் அவன்தான் வெற்றியடைவான். கறுப்பை வெள்ளையென்று நிரூபிக்கும்வரை அவன் விவாதத்தை விடமாட்டான். ‘சரி, வெள்ளைதான்!’ என்று ஒருவர் ஒப்புக்கொண்டாலும், அவன் தன் வாதத்தை மாற்றி, ‘வெள்ளையில்லை கறுப்புத்தான்!’ என்று நிலைநாட்டுவான் அல்லது உலகில் வர்ணங்களே இல்லை என்று காட்டுவான்.
அவன் பெரியவனாக வளர்ந்ததும், அவனுடைய பெற்றோர்கள் அவனைப்பற்றி மிகவும் பெருமை கொண்டு, அவனைப் பாதிரியாராகத் தகுதி பெறும்படி சமயக் கல்லூரியில் சேர்த்தார்கள். அவனுடைய செலவுக்காக அவர்கள் தங்கள் வாயையும் வயிற்றையும் கட்டிக்கொண்டு மிகுந்த சிரமப்பட்டார்கள். அவனைப் போன்ற கல்விமான் அயர்லாந்திலேயே இல்லை என்னும் அளவுக்கு அவன் பெயர் வாங்கினான். அப்பொழுதும் விவாதத்தில் அவன் சளைப்பதில்ல, அவனை வெல்வோருமில்லை. பெரிய பிஷப்புகள்கூட அவனிடம் பேசினால், உடனே அவன் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எடுத்துக் காட்டி விடுவான். கல்வி முடிந்து அவனும் பாதிரிப்பட்டம் பெற்றான்.
அக்காலத்திலே பள்ளிகளில் ஆசிரியர்கள் என்று தனியாக நியமிப்பதில்லை, பாதிரிமார்களே கல்விச் சாலைகளை நடத்தி வந்தனர். எனவே, நமது எழைப் பாதிரியாரிடமும் பல மாணவர்கள் படிக்க வந்தார்கள். அவரே நாட்டில் தலைசிறந்த அறிவாளியென்று புகழ் பெற்றிருந்ததால், வெளிநாடுகளிலிருந்த அரசர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை அவரிடமே அனுப்பி வைத்தார்கள். பள்ளிக்கூடம் கொள்ளும் அளவுக்குப் பிள்ளைகள் சேர்ந்து பயின்று வந்தனர். இதனால் அவருக்குச் செருக்கு அதிகமாகிவிட்டது. அவர் எவ்வளவு தாழ்ந்த நிலையி லிருந்தார் என்பதையே அவர் மறக்கத் தொடங்கினார். எல்லாவற்றிற்கும் மேலாக எந்தக் கடவுள் அவரை இவ்வளவு உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்தாரோ அந்தக் கடவுளையே மறக்கத் துணிந்துவிட்டார். விவாதத்திலே அவருக்கு இருந்த ஆர்வத்தினால், அவர் ஒவ்வொன்றாக மறுத்து வரத் தொடங்கி, கடைசியில் சுவர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது என்றும், பாப விமோசன ஸ்தானம் ஒன்றுமில்லையென்றும். கடவுளே இல்லை யென்றும், மனிதர்களுக்கு ஆன்மாக்கள் கிடையாதென்றும், அவர்கள் நாய் நரிகளைப் போன்றவர்களேயன்றி எதிலும் மேலானவர்களல்லரென்றும், அவர்கள் மரித்தால் அத்துடன் எல்லாம் முடிந்தது, மரணத்திற்குப்பின் எதுவுமில்லையென்றும் விவாதிக்க முன்வந்துவிட்டார் *ஆன்மாவைக் கண்டவன் எவன்? என்னிடம் காட்டினால் நம்புவேன்” என்று அவர் கூறுவார். இதற்கு யார் என்ன பதில் சொல்லமுடியும்? நாளடைவில் அவருடைய சீடாகள் எல்லோரும் வேறு உலகமே கிடையாது, இந்த உலகில் யார் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கைக்கு வந்துவிட்டனர். பாதிரியாரே அவர்களுக்கு வழிகாட்டி; வழிகாட்டவும் அவர் அஞ்சவில்லை . எவ்வாறெனில், நல்ல அழகான ஒரு பெண்ணைப் பார்த்து அவர் திருமணம் செய்துகொண்டார். விவாகத்தை நடத்திவைக்க நாட்டிலே ஒரு பாதிரியார்கூட முன்வர வில்லை. எனவே, அவரே வேத வாக்கியங்களைச் சொல்லி மணத்தை முடித்துக்கொண்டார். எங்கும் இதைப்பற்றி அபவாதம் ஏற்பட்டது. ஆனால், யாரும் வெளிப்படையாகப் பேசவோ, கண்டிக்கவோ முன்வரவில்லை. ஏனெனில், பாதிரியாரிடம் அரச குமாரர் பலர் படித்து வந்தார்கள் அல்லவா? அவர்கள் அவர் பக்கம் சேர்ந்துகொண் டிருந்தார்கள். எதிர்ப்பவர்களை அவர்களே அடித்து விடுவார்கள். ஒன்றுமறியாத பிள்ளைகளான அவர்கள் அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உண்மை யென்று நம்பி வந்தார்கள். இவ்வாறு அவர் கருத்துகள் எங்கும் பரவி வந்தன. உலகமே சீர் கெட்டுவிடுமோ என்றாகிவிட்டது.
அந்த நிலையில், ஓர் இரவில் தேவதூதர் ஒருவர் வந்து, பாதிரியாரிடம், பூவுலகில் அவர் வாழ்வு மேலும் இருபத்து நான்கு மணி நேரந்தான் என்று அறிவித்தார். உடனே பாதிரியாரின் உடலெல்லாம் நடுங்கத்தொடங்கிற்று. கூடுதலாகச் சிறிது காலம் உலகிலே தங்கியிருக்க அவர் அனுமதி கேட்டார்.
ஆனால், தேவதூதர் இடம் கொடுக்கவில்லை . “பாவியாகிய உமக்கு மேற்கொண்டு நேரம் எதற்கு?” என்று அவர் கேட்டார்.
“ஐயா, ஏழையாகிய என் ஆன்மாவுக்கு இரங்குங்கள்!” என்று பாதிரியார் மன்றாடினார்.
“முடியாது! ஆனால், உமக்கு ஓர் ஆன்மா இருக்கிறதா? அதை எப்படிக் கண்டுபிடித்தீர்?”
“நீங்கள் வந்ததிலிருந்து அது என்னுள்ளே சிறகடித்துக் கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி நான் முன்பே சிந்திக்காமலிருந்துவிட்டேனே! என்னைப் போன்ற அறிவிலி வேறு எவரேனும் உண்டோ?”
“ஆம், அறிவிலிதான்! நீர் கற்ற கல்வியெல்லாம் உமக்கு ஓர் ஆன்மா இருக்கிறது என்பதைக்கூட அறிவுறுத்தா விட்டால், அதனால் என்ன பயன்?”
“பிரபுவே! நான் இறக்கவேண்டியதுதான் என்றால், நான் எவ்வளவு சீக்கிரத்தில் சுவர்க்கம் போய்ச் சேருவேன் என்பதைச் சொல்லுங்கள்!”
“அங்கே உமக்கு இடம் கிடையாது. நீரோ சுவர்க்கமே இல்லை என்று கூறிவந்தவரல்லவா?”
“பாப விமோசன ஸ்தானத்திற்காவது நான் போக முடியுமா?”
“அப்படி ஒன்று இல்லையென்று நீர் சொல்ல வில்லையா? நீர் நேராக நரகத்திற்குத்தான் போவீர்!”
“ஆனால், பிரபுவே, நான் நரகமும் இல்லையென்று தானே சொல்லி வந்தேன்! அங்கு மட்டும் என்னை எப்படி அனுப்ப முடியும்?”
தேவதூதருக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. அவர் கூறியதாவது : “சரி, உமக்காக நான் செய்யக்கூடியது இதுதான். நீர் உலகில் நூறு ஆண்டுகள் வாழ்ந்து, எல்லா இன்பங்களையும் நுகர்ந்து வரலாம். ஆனால், அதற்குப்பின் நீர் நிரந்தரமாக, யுகக்கணக்காக நரகத்திலேயே கிடக்கவேண்டும். அல்லது மிகவும் அவதிப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்தில் நீர் மரணமடைந்து, இறைவனின் இறுதித் தீர்ப்பு நாள்வரை பாப விமோசன ஸ்தானத்தில் இருக்க வேண்டும்; ஆனால், இப்படி நடப்பதற்கு ஒரு நிபந்தனையுண்டு; உமக்காகப் பரிந்து பேசக்கூடிய – ஆண்டவனை நம்பும் ஓர் ஆஸ்திகனை நீர் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு வழிகளே இருக்கின்றன. உமக்கு எது தேவை?”
பாதிரியார் யோசித்து முடிவு சொல்ல ஐந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. “நான் இருபத்து நான்கு மணி நேரத்தில் இறந்துவிடத் தயார். என் ஆன்மா அதனால் ஈடேற்றமடையும்!” என்று அவர் சொன்னார். மேற் கொண்டு அவர் செய்ய வேண்டிய முறைகளைப்பற்றி விவரம் சொல்லிவிட்டுத் தேவதூதர் மறைந்து போனார்.
உடனே பாதிரியார், மாணவர்களும் அரச குமாரர்களும் அமர்ந்திருந்த அறைக்குள்ளே சென்று, எல்லோரையும் அழைத்துப் பேசத் தொடங்கினார்:
“இப்பொழுது உண்மையாகச் சொல்லுங்கள். நான் சொல்வதை மறுத்துப் பேசவேண்டியிருக்கிறதேயென்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை. மனிதர்களுக்கு ஆன்மாக்கள் உண்டா இல்லையா? இதைப்பற்றி உங்கள் நம்பிக்கை என்ன என்பதை என்னிடம் சொல்லுங்கள்.”
“ஐயா, ஒரு காலத்தில் நாங்கள் மனிதர்களுக்கு ஆன்மாக்கள் இருந்தன என்று எண்ணியிருந்தோம்; ஆனால், நல்லவேளையாக தங்களுடைய போதனையால் நாங்கள் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். நரகம் கிடையாது. சுவர்க்கம் கிடையாது. கடவுளும் கிடையாது. இதுதான் எங்கள் நம்பிக்கை. தாங்கள் சொல்லித்தந்ததும் இதுதான்!”
பாதிரியாருக்கு அச்சத்தால் முகம் வெளிறிப்போய் விட்டது. அவர், “இப்பொழுது கவனமாய்க் கேளுங்கள்! நான் உங்களுக்குப் பொய்யைக் கற்பித்துவிட்டேன். கடவுள் இருக்கிறார். மனிதன் அழிவில்லாத அன்மாவைப் பெற்றிருக்கிறான். இதற்கு முன் நான் இல்லையென்று மறுதலித்தவை எல்லாம் உள்ளன என்று இப்பொழுது நம்புகிறேன்!” என்று உரத்த குரலில் கூவினார்.
அவர் தங்களை விவாதத்திற்குச் சோதனை செய்வதாக எண்ணி , அவர்கள் ஆரவாரம் செய்தனர்.
“ஆசிரியர் அவர்களே! நீங்கள் சொன்னதை முதலில் நிரூபித்துக்காட்ட வேண்டும். கடவுளை எவர் கண்டிருக் கிறார், ஆன்மாவை எவர் பார்த்திருக்கிறார்?’ என்று அவர்கள் வினவத் தொடங்கினார்கள்.
அறை முழுதும் அவர்கள் கும்மாளமடித்துக் கொண்டிருந்தார்கள். பாதிரியார் பதிலுரைக்க எழுந்த பின்பும், அவர் பேச்சை யாரும் கேட்க முடியவில்லை, அவ்வளவு சத்தம் ஏற்பட்டிருந்தது. வழக்கமான அவருடைய விவாதத் திறமை, சொற்பொழிவு செய்யும் ஆற்றல் எல்லாம் அவரிடமிருந்து போய்விட்டன. அவர் கைகளைப் பிசைந்து கொண்டு, “ஆண்டவர் ஒருவர் இருக்கிறார்! ஆண்டவர் இருக்கிறார்! கர்த்தரே, என் ஆன்மாவின்மீது கருணை காட்டுவீராக!” என்று கூவினார்.
அவர்கள் அனைவரும் அவரைப் பரிகாசம் செய்தனர்; அவர் சொல்லிக்கொடுத்த பாடத்தை அவரிடமே திருப்பிக் கூறத் தொடங்கினார்கள்.
“அவரை எங்களுக்குக் காட்டுங்கள்; உங்கள் ஆண்டவரை எங்களுக்குக் காட்டுங்கள்!”
மிகுந்த மனவேதனையுடன் ஓலமிட்டுக்கொண்டே அவர் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டார். ஆண்டவனை நம்பும் ஒருவருடைய உதவி தமக்கு உடனே கிடைக்கா விட்டால் தமது ஆன்மா நிரையத்துள் அழுந்த வேண்டி யிருக்குமே என்று அவர் கவலைப்பட்டார்.
வீட்டினுள்ளே சென்று அவர் தம் மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். அவள், “உங்கள் கொள்கைதான் என் கொள்கை. நீங்கள் சொல்லியதையே நான் நம்பிக் கொண்டிருப்பவள். இந்த உலகிலும் சுவர்க்க லோகத்திலும் எல்லாவற்றிலும் உயர்ந்தவர் கணவரே என்பதுதான் என் நம்பிக்கை!” என்று மறுமொழி கூறினாள்.
அந்த நிலையில் அவருடைய நம்பிக்கையெல்லாம் சிதறுண்டு போயிற்று. அவர் வீட்டை விட்டு வெளியே ஓடி, வழியிலே போவோர் வருவோரையெல்லாம் கேள்வி கேட்கத் தொடங்கினார். எல்லோரும் அவர் முன்பு சொல்லிக்கொடுத்த பாடத்தையே ஒப்பித்தனர், பயத்தால் அவர் அரைப் பயித்தியமாகிவிட்டார். நேரம் கழிந்துகொண்டேயிருந்தது. அவருடைய முடிவு காலமும் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவர் ஏக்கத்தோடு, வழியிலே ஓர் ஒதுக்குப்புறத்தில், தரையிலே விழுந்து, அழுது, கதறி, முனகிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் இளஞ்சிறுவன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவரைப் பார்த்ததும், அவன், “ஆண்டவன் உங்களுக்கு அருள்புரிவாராக!” என்றான்.
பாதிரியார் துள்ளியெழுந்தார். “நீ கடவுள் இருக்கிறாரென்று நம்புகிறாயா?” என்று அவர் கேட்டார்.
“அவரைப்பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளத்தான் நான் வெளிநாட்டிலிருந்து இங்கே வந்திருக்கிறேன். இந்தப் பக்கத்திலேயுள்ள பள்ளிகளுள் சிறந்த பள்ளி ஒன்று எங்கே இருக்கிறதென்று தாங்கள் தயவுசெய்து தெரிவிக்க முடியுமா?” என்று கேட்டான், சிறுவன்.
“சிறந்த பள்ளியும் சிறந்த ஆசிரியரும் வெகு தொலைவி லில்லை – அருகிலேயே கண்டுகொள்ளலாம்!” என்று அவர் கூறிவிட்டுத் தமது பெயரைச் சொல்லி, “அவரே அந்த ஆசிரியர்!” என்றும் தெரிவித்துக்கொண்டார்.
“அந்த ஆசிரியரிடம் போகக்கூடாது. அவர் கடவுளை மறுப்பவர் என்றும், சுவர்க்கம், நரகம் முதலியவற்றில் நம்பிக்கையற்றவர் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்குக்கூட ஓர் ஆன்மா உண்டு. அவரை நான் கண்டால் அவரைச் சீக்கிரத்தில் நானே சரிப்படுத்தி விடுவேன்!”
பாதிரியார் ஆத்திரத்தோடு அவன் முகம் நோக்கி, “எப்படி?” என்று கேட்டார்.
“எப்படியா? அவருக்கு உயிர் இருக்கிறது என்று அவர் நம்பினால், அந்த உயிரைக் காட்டும்படி கேட்பேன்!”
“குழந்தாய், உயிரை எப்படிக் காட்ட முடியும்? உயிரைக் கண்ணால் பார்க்க முடியாது; ஆனால், அது இருப்பது உண்மை!”
“அப்படியானால், நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் நமக்கு உயிர் இருக்கிறது என்றால், நம் கண்ணுக்குப் புலனாகாவிட்டாலும் நமக்கு ஆன்மாவும் இருக்கக் கூடுமல்லவா!”
இந்த வார்த்தைகளை அவன் கூறியவுடன், பாதிரியார் அவன் முன்பு முழந்தாளிட்டுக்கொண்டு, ஆனந்தக்கண்ணீர் பெருக்கினார்; தமது ஆன்மா கடைத்தேறிவிடும் என்று அவர் மகிழ்ந்தார்; ஏனென்றால், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவனை அவர் கண்டுவிட்டார்! பிறகு, அவர் அக்குழந்தை யிடம் தம் வரலாறு முழுவதையும் சொன்னார். தமது செருக்கு, தீவினை, தேவசிந்தனை முதலியவைகளையும், தேவ தூதர் வந்ததையும், தமக்காக இறை நம்பிக்கை கொண்ட ஒருவர் பிரார்த்தனை செய்து ஆதரவு கொடுத்தால்தான் தாம் முக்தியடைய முடியும் என்று தேவதூதர் தெரிவித்ததையும் விளக்கமாகக் கூறினார்.
மேலும், அவர் கேட்டுக்கொண்டதாவது: “நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். இதோ இருக்கும் எனது பேனாக்கத்தியைக்கொண்டு என் நெஞ்சிலே குத்த வேண்டும். நான் இறந்து விழும்பொழுது என் உடலிலிருந்து சோதிமயமான என் ஆன்மா சிறகடித்துக்கொண்டு வெளியேறி உயரே பறந்து செல்வதை நீ பார்த்ததும், நேராக என் பள்ளிக்குச் சென்று, என் மாணவர்களை அழைத்துவந்து அக்காட்சியைக் காட்டவும். அதன் மூலம்
பாதிரியாரின் ஆன்மா நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனவெல்லாம் பொய்யென்றும், பாவத்திற்குத் தண்டனையளிக்கும் இறைவன் ஒருவன் உளன் என்றும், பேரின்பமும் நிரையமும் உண்டென்றும், மனிதன் அழிவில்லாத ஆன்மாவைப் பெற்றிருக்கிறானென்றும், அது நித்தியமான பேரின்பத் தையோ பெருந்துயரையோ அடைந்தே தீருமென்றும் நீ எடுத்துக்காட்டு!”
“எந்த உயிரையும் எவரும் மாய்த்துவிட முடியாது. அது இறைவன் ஒருவனால்தான் இயலும். இருபத்துநான்கு மணி நேரத்தில் உங்கள் ஆவி பிரியுமென்று தேவதூதர் சொன்னதாக நீங்களே தெரிவித்தீர்கள். அந்த நேரமும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உங்களுக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு நான் இங்கேயே தங்கியிருக்கிறேன்!” என்று சொல்லிப் பையன் தொழத் தொடங்கினான்.
சிறிது நேரத்தில் பாதிரியார் உடல் கடும் வேதனை களுக்குள்ளாயிற்று. அவர் கண்களை மூடிவிட்டார். அவருடைய ஆன்மா நான்கு வெள்ளைச் சிறகுகளுடன், அவர் உடலிலிருந்து மேலே பறந்து சென்றது. சிறுவன் ஓடிச்சென்று, மாணவர்களை அழைத்துவந்து அக் காட்சியைக் காட்டினான். அவர்கள் ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் ஆசிரியரின் ஆன்மா மேக மண்டலத்தில் மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தனர். அந்த ஆன்மாதான் அயர்லாந்திலே காணப்பெற்ற முதலாவது வண்ணத்துப்பூச்சி. அதுமுதல் பாவ விமோசன ஸ்தானத் திற்கு இறைவன் அழைத்துக்கொள்ளும்வரை இறந்தவர் களின் ஆன்மாக்கள் வண்ணத்துப்பூச்சிகளாக உலகிலே உலவி வருவதாக மக்கள் நம்புகின்றனர்.
பாதிரியார் பரலோகம் சென்ற பின்பு, அயர்லாந்தில் பள்ளிக்கூடங்கள் சீர்குலைந்துவிட்டன; மாணவர்கள் பெருவாரியாக வெளியேறிவிட்டார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை அயர்லாந்துக்கு அனுப்புவதில்லை. அந்நாட்டின் தலைசிறந்த அறிவாளியே தமக்கு ஆன்மா ஒன்றுண்டு என்பதை அறியாமலிருந்து, கடைசியாக ஒரு சிறு பையனின் கருணையால் ஈடேற்றமடைந்தார் என்றால், அவ்வளவு தூரம் சென்று படிப்பது என்ன படிப்பென்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
– இறுமாப்புள்ள இளவரசி (அயர்லாந்து நாட்டுக்கு கதைகள்), முதற் பதிப்பு: 14-11-1979 (குழந்தைகள் தின வெளியீடு), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.