கோடை காலம். வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி ஒன்று மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள வேரில் அமர்ந்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது.
அந்த வழியே எறும்புகள் கூட்டம் சாரி சாரியாகச் சென்று கொண்டிருந்தது.
அவை தமக்குத் தேவையான உணவைத் தமது வாயில் கவ்வியவாறு சென்று கொண்டிருந்தன. சுமையோடு செல்வதால் வியர்த்துப் போய் மிகவும் களைப்பாகக் காணப்பட்டன. இருந்தாலும் மன உறுதியோடு தங்கள் உணவைச் சுமந்து கொண்டு சென்றன.
வெட்டுக்கிளி அவர்களைப் பார்த்து, ஏளனம் செய்தது.
“முட்டாள்களே, உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியவில்லையே…’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தது.
எறும்புகளோ, வெட்டுக்கிளியின் பேச்சை சட்டை செய்யவில்லை. தொடர்ந்து தங்கள் வழியே, தங்களது புற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
கோடைகாலம் முடிந்து மாரிக் காலம் வந்தது. ஊர் முழுவதும் அடைமழை பிடித்துக் கொண்டது. மக்களோ, உயிரினங்களோ வெளியே தலைகாட்ட முடியவில்லை. அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கோடைகாலத்தில் பாட்டுப் பாடி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த வெட்டுக்கிளி, சாப்பிட ஒன்றும் கிடைக்காமல் பட்டினியால் இறந்து போனது. எறும்புகளோ, தாம் கோடை காலத்தில் சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருள்களைத் தின்று ஆனந்தமாக இருந்தன.
காலம் பொன் போன்றது. அதை வீணாகக் கழிப்பவர்கள் ஒருநாள் வருந்த நேரிடும் என்பதற்கு வெட்டுக்கிளியே உதாரணமாகப் போனது!
– நவம்பர் 2011