பழிவாங்கிய குரங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 271 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தான். அவன் ஒரு நாள் ஒரு குரங்கு ஆடுவதை ஆசையோடு பார்த்துக் காண்டிருந்தான். அதன் பின் அரசன் தன் ஊரில் ஏராளமான குரங்குகளை வளர்த்து வந்தான். 

ஒரு நாள் அரண்மனை வேலைக்காரர்களுக் குள்ளே சண்டை ஏற்பட்டது. அதைக் கண்ட ஒரு கிழட்டுக் குரங்கு, ‘இந்தப் போர் பெரிதானால் தீமை ஏற்படும். நாம் ஏதாவது ஒரு காட்டுக்குப் போய் விடுவோம்’ என்று கூறியது. 

‘ஒழுங்காகச் சாப்பாடு கிடைக்கிற இடத்தை விட்டுவிட்டு எங்கோ போக வேண்டுமென்கிறது இந்தக் கிழடு’ என்று சொல்லி மற்ற சிறு குரங்குகள் எல்லாம் ‘வெவ்வெவ்வே’ காட்டின. 

ஆனால், அந்தக் கிழட்டுக் குரங்கு மாத்திரம் தன் குடும்பத்துடன் பக்கத்துக் காட்டுக்கு ஓடி விட்டது. 

பிறகு ஒருநாள், அரண்மனை வேலைக்காரர் களுக்குள்ளே நடந்த சண்டை பெரிதாகி விட்டது. அவர்களில் ஒரு தீயவன் எதிரிகளின் மேல் கொள்ளிக் கட்டையை எடுத்து வீசினான். அது தவறிப் போய்க் குதிரைச் சாலையின் கூரையில் பட்டு, குதிரைச் சாலை தீப்பிடித்துக் கொண்டது. குதிரைச்சாலை எரிந்ததால், குதிரைகள் எல்லாம் நெருப்புக் காயம் ஏற்பட்டுத் துன்பமடைந்தன. குதிரைக்காரர்கள் அரசனிடம் போய் நிகழ்ந்ததைச் சொல்ல, அவன் மருத்துவரை அழைந்து வரச் செய்தான். 

குரங்கு நெய் இருந்தால்தான் குதிரை நோயைத் தீர்க்கலாம் என்று மருத்துவன் கூறினான். உடனே அரசன் ஊரில் உள்ள குரங்குகளை யெல்லாம் பிடித்துக் கொன்று குரங்குநெய் இறக்கிக் கொள்ளும்படி கட்டளை யிட்டான். மருத்துவன் குரங்கு நெய் பூசிக் குதிரைகளை யெல்லாம் குணப் படுத்தி விட்டான். 

தன் இனமெல்லாம் கொலையுண்டதைப் பற்றிக் கேள்விப் பட்ட அந்தக் கிழக்குரங்கு அந்த அரசனைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று மனம் பதைத்தது. அந்தப் பெரிய காட்டில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் கொடுமைக் குணம் நிறைந்த பேய் ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணிய அக்கிழக் குரங்கு அதில் இறங்கி, ஒரு தாமரைத்தண்டை ஒடித்து அதில் நீரை மொண்டு குடித்தது. அப்போது அந்தக் குளத்துப் பேய் அதன் முன் தோன்றியது. ‘நீ பெருமை மிக்கவன் என்று அறிந்துதான் நான் உன் கண் முன்னே தோன்றுகிறேன். இதோ மாணிக்க மாலையைப் பெற்றுக்கொள்’ என்று சொல்லி அந்தப் பேய் தன் கழுத்தல் இருந்த மாலையைக் கழற்றி அந்தக் குரங்கின் கையில கொடுத்தது. 

குரங்கு அந்தப் பேயைப் பார்த்து, ‘இந்த நீரில் உன் சக்தி எவ்வளவு?’ என்று கேட்டது. 

‘அருமைக் குரங்கே, ஆயிரம் பேர் வந்தாலும், அத்தனை பேரையும் இழுத்துப் பிடித்து உண்ணக் கூடிய வலிமை என்னிடம் உண்டு’ என்று பேய் பதிலளித்தது. 

‘அப்படியானால், நான் உனக்கு நல்ல உணவு கொண்டுவருகிறேன்’ என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டது குரங்கு. 

பேய் தந்த மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு குரங்கு, அரசனிடம் சென்றது. அந்த மாலையின் அழகைக் கண்டு வியந்த அந்தமன்னன், ‘வானரனே, இந்த அழகு பொருந்திய மாணிக்க மாலையை எங்கிருந்து பெற்றாய்?’ என்று கேட்டான். 

‘அரசே, பக்கத்தில் ஓர் அழகான காடு இருக் கிறது. அங்கே ஒரு குளம் இருக்கிறது. காலை நேரத்தில் முதலில் குளத்தில் இறங்குவோர்க் கெல்லாம் இது போன்ற மாணிக்க மாலை கிடைக் கும்’ என்று கிழக் குரங்கு கூறிற்று. 

‘அப்படியானால் நானும் அங்குச் சென்று ஒளி வீசும் மாணிக்க மாலைகள் பெறுவேன்’ என்று அரசன் தன் சேனைகள் புடைசூழப் புறப்பட்டான். 

குரங்கு அவனைக் கூட்டிக்கொண்டு குளக் கரைக்கு வந்தது. அப்போது அது ‘அரசனே, முதலில் உன் சேனைகள் எல்லாம் குளத்தில் இறங்கித் தங்கள் தங்களுக்கு அகப்படும் மாலை களை எடுத்துக்கொண்டு வரட்டும், கடைசியில் நாம் இருவரும் இறங்கி நமக்குரிய மாலைகளை எடுத்துக் கொள்வோம்’ என்றது. 

‘அப்படியே ஆகட்டும்!’ என்று அரசன் தன் சேனைகளைக் குளத்தில் குதிக்கச் சொன்னான். எல்லோரும் குளத்தில் குதித்தவுடன் கீழேயிருந்த பேய் அப்படியே வளைத்துப் பிடித்துச் சாப்பிட்டு விட்டது. 

நெடுநேரமாகியும் குளத்தில் மூழ்கிய சேனா வீரர்களில் ஒருவர் கூட மேலே வரவில்லை. அவன் குரங்கைப் பார்த்து, “ஏன் சேனைகள் இன்னும் மேல் வரவில்லை?’ என்று கேட்டான். 

குரங்கு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறி நின்று கொண்டு, ‘அரசனே, நீ என் குரங்குக் குலம் முழுவதையும் அழித்ததற்காகத்தான் நான் உன்னைப் பழிவாங்க வந்தேன். என் விருப்பம் நிறைவேறி விட்டது. உன் கையில் நான் என் வயிற்றுப் பசிக்குச் சோறு வாங்கி யுண்டபடியால், உன்னைப் பழி வாங்குவது துரோகம் என்று விட்டு விட்டேன்’ என்று சொல்லிக் கிளைக்குக் கிளை தாவி ஓடி மறைந்து விட்டது. 

அரசன் மனவேதனையோடு நகருக்குத் திரும்பிச் சென்றான்.

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *