(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சதுரமான காணி. மத்தியில் அழகிய வீடு. அதிலே அடக்கமான ஒரு குடும்பம். அக்குடும்பத்தின் தலைவன், அங்கு, சில தினங்களாக வந்து சென்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நாயை ஒவ்வொரு முறையும் அவதானிக்கத் தவ றவில்லை. மெலிந்த உருவங் கொண்ட அந்த நாய் முதிர்ந்த வயதெல்லையுள் அடிவைத்திருந்தது. இருந்தும் அதன் வயதையும் மீறிய சுறு சுறுப்பு, ஒளி உமிழும் பார்வை ஆகி யன அதன் மேல் அவனுக்கு ஒரு விதப் பற்றுதலை ஏற் படுத்தியிருந்தன. அதனால் அவன் அந்த நாய் அநாதர வான நிலையில் ஊர் சுற்றித்திரிகிறது என்பதை அறிந்து, உடனேயே அதனைத் தனது உடைமையாக்கிக் கொண்டான். அன்று முதல் அந்த நாயைப் பகலில் சங்கிலியாற் பிணைத் தும், இரவில் அதிலிருந்து விடுவித்தும் கட்டுப்படுத்தித் தனது வீட்டுக் காவலுக்குப் பயன் படுத்தி வந்தான்.
இருந்தும், அந்த நாய் இடையிடையே கழிவான உணவுக்காக ஊருக்குள் அலைவது வழக்கம்.
ஒரு நாள் அந்த வெள்ளை நாய் வழமை போல. கழிக்கப்பட்ட உணவுக்காக வீட்டிலிருந்து வெளிவந்து ஊருக்குள் புகுந்தது. ஆனால், அன்று அந்த நாய் ஓரிடத்திலே அவ்வுணவு அருந்துகையில் தெரு நாய்களினால் நன்கு கடிக்கப்பட்டு இரத்தம் பெருக வீட்டிற்கு மீண்டு கொண் டிருந்தது. அவ் வேளை அது தன்னை விடவும் சற்று வயது கூடிய பக்கத்து வீட்டுக் கறுப்பு நாயை அதல் இல்லத்தின் வேலியருகில் எரிந்து கொண்டிருந்த மின்சார விளக்கின் ஒளியிலே திடீரெனச் சந்தித்த போது செய்வதறியாது அவ்விடத்திலேயே அதிர்ந்து போய் நிற்கிறது. மறுவினாடி, அது தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு தலை நிமிர்கிறது. அப்போது, பக்கத்து வீட்டு நாய், அந்த வெள்ளை நாயை நெருங்கி வந்து, அதனை நோக்கியவாறு. “முகம் முதுகெல்லாம் இரத்தம் கசிகிறதே… என்ன நடந் தது?” என்று மிக்க பரிவோடு வினவியது. அதற்கு அந்த வெள்ளை நாய் தனக்கு நடந்த சம்பவத்தை அப்படியே அப்பட்டமாகப் பிட்டு வைத்தது. ஆனால், பக்கத்து வீட்டுக் கறுப்பு நாயோ, யாவற்றையும் வெகு உன்னிப்பாகக் கேட்டு விட்டு, “உனது எஜமான் உனக்கு உணவு தருவதில்லையா? அல்லது வேறு என்ன? எதற்காக நீ ஊருக்குள் செல்ல வேண்டும்?” என்று ஒரு நடுவரைப் போல அமைதியாக விசாரணை செய்தது.
“சேர்… சே… எனது எஐமான் தாராளமாக வேளைக்கு வேளை சுவையான உணவு தருகிறார். நானும் அதனை உண்ணத் தவறுவதில்லை இருந்தாலும் ஊருக் குட் சென்று தெரு நாய்களோடு சண்டையிட்டுச் சிறிதள வேனும் கழிவான உணவு உண்டால்தான் எனக்குத் திருப்தி. நான் அந்த உணவு அருந்துவதும், அதற்காகத் தெரு நாய்களோடு போரிடுவதும் எனது எஜமானிடம் வரும்வரை சிறு வயது முதல் நீண்ட காலப் பழக்கமாகப் போய்விட்டது. அதுதான் நான் ஊருக்குட் செல்வதற்கான காரணம்” என்று அந்த வெள்ளை நாய் தனது உண்மை நிலையைத் தெளிவாக உரைத்தது.
அதனைச் செவிமடுத்த பக்கத்து வீட்டு பின்வருமாறு கூறியது:
“நண்பா… நான் எனது எஜமானால் சின்ன வயது முதல் இங்கு வளர்க்கப்பட்டு வருகிறேன். நானும் உன்னைப் போலவே பகலில் சங்கிலியாற் பிணைக்கப்பட்டும், இரவில் அதிலிருந்து விடுவிக்கப்பட்டும் ஒரு கட்டுப்பாடான வாழ்க் கையை அனுபவித்து வருகிறேன். எனக்கும் தாராளமாக உணவு படைக்கப்படுகின்றது. ஆனால், நான் உணவில்லா விட்டாலுங் கூட ஊருக்குட் சென்று கழிவான உணவு உண்ணமாட்டேன். அதற்காகத் தெரு நாய்களோடு மோதிக் கொள்ளவும் மாட்டேன்”
“அதுசரி… நீ சின்னப் பருவம் முதல் அப்படிப் பழக்கப்பட்டு விட்டாய்… அதனாலேதான் உன்னால் அப்படி வாழ முடிகிறது. ஆனால், எனது பழக்கமோ உனது பழக்கத்திற்கு முற்றிலும் மாறானது. இருந்தும், நான் எனது எஜமானது கட்டுப்பாட்டிற்குள் வந்தபின்பு பலமுறை உன்னைப் போல வாழ முயன்றிருக்கிறேன்… முடியாமற் போய் விட்டதே… என்று விட்டு அந்த வெள்ளை நாய் பெருமூச் செறிந்தது.
“எந்தப் பழக்கமானாலும், அது எவ்வளவு காலம் நீண்டதாக விருந்தாலும் மாற்றி விடலாம். எல்லாவற்றிற் கும் மனந்தான் காரணம் என்று நான் கருதுகிறேன். எனவே, உனது உள்ளத்தில் உறுதியான ஓர் எண்ணம் மலருமானால் உனது பழக்கத்தை மாற்றி விடலாமே..” என்று பக்கத்து வீட்டு நாய் நல்ல அநுபவசாலியைப் போல செப்பியது. அதற்கு அந்த வெள்ளை நாய், “நண்பா.. எனது பழக் கத்தை மாற்றிக் கொள்ள என்னால் முடிந்த அளவு முயன்று பார்த்துவிட்டேன். நீ சொல்வது மற்றவர்களைப் பொறுத்த வரை ஒரு வேளை சாத்தியப் படலாம். ஆனால், அது என்னைப் பொறுத்தவரை முடியாத காரியமாகும்” என்று உறுதியாகப் பதிலளித்தது.
அதனைக் கேட்ட பக்கத்து வீட்டு நாயோ, எதுவுமே பேச முடியாது மௌனத்தில் ஆழ்ந்தது. மறுகணம் அந்த வெள்ளை நாய், அதனிடமிருந்து விடை பெற்று, விரைவாக மனைக்கு மீண்டு முற்றத்திலே ஒதுங்கிக் கொண்டது. அப்போது அதிகாலை. அந்த வெள்ளை நாயின் வரவை நெடு நேரம் வரை எதிர் பார்த்திருத்த எஜமான் அதனைக் கண்டதும் உடனே அருகிற் சென்றான். அதன் நடத்தையினை நினைக்க நினைக்க அதனைப் பார்க்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுள் கோபத் தீ சுவாலை விட்டெரிந்தது.
“நீ வந்ததில் இருந்து நான் உன்னை நல்லா அவதா னிச்சுத்தான் வாறன்… நீ ஒண்ட பழக்கத்த மாத்திக்கிறா யில்லை. இனி நீ திருந்த மாட்டாய். அட்டையைப் பிடிச்சி மெத்தையில வச்சா அது பூர்ர சருகுக்க தான் பூரும்… சீ… நாயே! இந்த வீட்டை விட்டுத் தொலைந்து போ!” என்று அவன் அந்த வெள்ளை நாயைக் காலால் எட்டி உதைத்தான். ஆனால், அந்த நாயோ, ‘வள்’ என்பதும் சிணுங்குவதுமாய் வாலை ஆட்டி ஆட்டிக் குழைந்து குழைந்து அவனைச் சுற்றிச் சுற்றியே வட்டமிட்டது. மீண்டும் மீண்டும் அதனை மிரட்டினான். அவ்விடத்தை விட்டு நகரவே யில்லை. இப்போது அவனது கண்களிரண்டும் சினத்தினால் கொவ்வைக் கனிகளாகின்றன.
உடனே, அவன் அந்த வெள்ளை நாயைப் பாய்ந்து பற்றி, கயிற்றினால் இறுகக் கட்டி, “இந்த நாயை எங்கெண்டான கொண்டு போய்த் தொலைத்து விட்டு வா” என்று தனது வேலைக்காரனிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தான். மறுவினாடி, அந்த வேலைக் காரனோ, தனது கரத்தினால் இறுகப் பற்றிய கயிற்றின் மறு முனையினால் பிணிக்கப் பட்டிருந்த அந்த வெள்ளை நாயை வலிந்து இழுத்துச் செல்கிறான். இந்த நிலையிலும் அந்த நாய் தனக்கு உதவி செய்த தனது எஜமானை விட்டுப் பிரியும் வேதனை தாங்காது வழியெல்லாம் கண்ணீர் வடிக்கின்றது.
– தினகரன் வார மஞ்சரி – 1980.01.27.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.