(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
படைகளின் பெருமை
கார்த்திகைத் திங்கள் கடைசி சோமவார நன்னாளாகிய 13-12-48 அன்று தருமபுர ஆதீன ஸ்ரீ-ல-ஸ்ரீ குருநாதர் அவர்கள் மதுரைச் சொக்க நாதரை யாத்திரையாகச் சென்று வழிபட்டார்கள். ஆதீனச் சமயப்பிரசாரக் குழுவினரும் வந்து, பிரசாரம் செய்தார்கள். அது சமயம் பல்லாயிரக் கணக்கான மக்கள் சொற்பொழிவைக் கேட்கத் திரண்டிருந்தனர். இவர்கள் செய்த ஓசை முழக்கம் கடல் முழக்கத்தைவிடப் பெரிதா யிருந்தது. சிலர் இவ் ஓசை எவ்விதம் அடங்கும் என்று எண்ணி ஏங்கினர். அச்சமயம், தருமபுர ஓதுவாமூர்த்திகள் புன்னாகவராளி இராகத்தில் தேவாரத்தைப் பாடத் தொடங்கினர். அதைக்கேட்டு மக்கள் யாவரும் பரவசமாகி ஓசை அடங்கி இருந்தனர். அதைக் கண்டவர்கள், எலிகள் கூடி கடல் போல் ஒலித் தாலும் பாம்பு மூச்சுவிட்ட அளவில் அடங்கு வதைப்போல “பண் ஓசையைக் கேட்ட அளவில் அடங்கியிருக்கிறார்கள்” என்று ஓதுவார் அவர் களைப் புகழ்ந்தார்கள். குறளும் இக்கருத்தை அறிவிக்கிறது.
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (58)
எலிப்பகை = எலி ஆகிய பகை
உவரி – = (கூட்டமாகக்கூடி) கடல்போல்
ஒலித்தக்கால் = இரைந்தால்
என் ஆம் = பாம்பிற்கு என்ன துன்பமாகும்?
நாகம் = அப்பாம்பு
உயிர்ப்ப = மூச்சுவிட்ட அளவிலே
கெடும் = அது தானே ஓசை அடங்கி அழியும்.
கருத்து: கலிகள் கூடிக் கடல் போல் ஒலித்தால் பாம்புக்கு என்ன துன்பம் வரும்? பாம்பு மூச்சுவிட்ட அள வில் ஓசை அடங்கி அழியும்.
எலிபலகூடிக் கடல்போல் ஒலித்தாலும் நாகம் மூச்சு விட்ட அளவில் அழியும் என்பது உபமானம்.
வீரரல்லாதார் பலர் திரண்டு இரைந்தாலும் வீரன் ஊக்கங்கொண்டு எழுந்தால் அடங்குவர் என்பது உப மேயம்.
இவ்வுபமேயப் பொருளை அடக்கிக் கொண்டு உப மானம் வந்திருப்பதால் இப்பாடல் பிறிது மொழிதல் அணி.
கேள்வி: நாகம் உயிர்ப்ப அழிவது எது? இப்பாடல் என்ன அணி?.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.