(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
படைகளின் வீரமிகுதி
திருக்காளத்தி யீஸ்வரருக்கு வலக்கண்ணி லிருந்து இரத்தம் ஒழுகுவதைக் கண்ணப்பர் கண்டார். கண்டு பல பச்சிலைகளைப் பறித்து வந்து அம் மருந்துகளை அவர் கண்ணில் பிழிந்தார். அதனால் அக்கண்ணிலிருந்து இரத்தம் தடைப்படாமையைக் கண்டு ஆவி சோர்ந்தார். ”ஊனுக்கு ஊனிடல் வேண்டும்” என்னும் பழமொழி அவர் நினைவில் தோன்றியது. தோன்றியதும் அம்பை எடுத்துத் தமது வலக்கண்ணைத் தோண்டிச் சுவாமியுடைய கண்ணிலே அப்பினார். அப்பின மாத்திரத்தில் இரத்தம் தடைப்பட்டதைக் கண்டார். அடங்குதற் கரிய மகிழ்ச்சிக்கடலில் அமிழ்ந்தினார். இந்தச் சமயத் தில் ஈஸ்வார்மேலும் திண்ணனாருடைய பேரன்பைத் தமக்குப் பூசை செய்துவரும் சிவகோசரியார் அறி யும் பொருட்டுத் தமது இடக்கண்ணிலும் இரத்தம் ஒழுகச் செய்தார். இதைக்கண்ட கண்ணப்பர்! “இதற்கு நான் அஞ்சேன்” மருந்து கண்டுகொண் டேன்; என் உடம்பில் இன்னும் ஒரு கண் இருக் கிறது; அதைப்பிடுங்கி அப்புவேன்” என்று பொங் கிய மகிழ்ச்சியுடையவராய்க் கண் எவ்விடத்தில் இருக்கிறது என்று தெரியும் பொருட்டு ஒருசெருப்புக் காலை அவர்கண்ணின் அருகிலே ஊன்றிக்கொண்டு தம்முடைய கண்ணைத் தோண்டும்படி அம்பை வைத்தார். கருணைக் கடலாகிய கடவுள் நில்லு கண்ணப்ப என்று சொல்லித் தமது திருக்கரத்தி னாலே அவர் கையைப் பிடித்துத் தடை செய்தார். இவ்விதம், ” ஒரு கண் போன பொழுதும், பிடுங்கி அப்புவதற்கு மற்றொரு கண் தம் உடம்பில் இருப்பதைப் பிடுங்கிச்சாத்தலாம்” என்று கண்ணப்பர் மகிழ்ந்தார். வள்ளுவரும் ”கைவேலை யானைமேல் எறிந்து வருபவன் வேறொரு தாக்கிய யானையைத் தொலைக்க தன் உடம்பில் பகைவர் விட்டுத் தைத் துள்ள வேலைப் பிடுங்கித் தனக்கு வேல் கிடைத்த தாக மகிழ்வான்” என்று கூறியுள்ளார்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (53)
கைவேல் = தன் கையிலிருந்த அம்பை
களிற்றொடு = (தன்னை நோக்கி வந்த) யானையோடு
போக்கி = (உடலில் எய்து) அந்த யானையை ஓடச்செய்து
வருபவன் = (தன்னை நோக்கி வருகின்ற யானைக்கு ) வேல் தேடி வருகின்றவன்
மெய்வேல் = தன் உடம்பில் தைத் திருந்தவேலை
பறியா நகும் = ‘தனக்கு வேல்கிடைத்ததாகப் பிடுங்கிக்கொண்டு மகிழ்வான்.
கருத்து: கைவேலை யானை மேல் எறிந்து வருபவன் தன் மெய்வேலைப் பிடுங்கி மகிழ்வான்,
கேள்வி: கை வேலை யானை மீது எறிந்து வருபவன் தன் மெய் வேலைப் பிடுங்கி மகிழக் காரணம் என்ன?
களிறு – ஆண்யானை. நகும் – மகிழ்வான்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.