(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டு மனிதர்கள் ஒரு பனந்தோப்பு வழியாகப்போய்க் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் போது, ஒருமனிதன் அங்குநின்ற பனை மரத்தின் மேல் ஒரு பச்சோந்தி இருப்பதைக் கவனித்தான்.
“அதோ, அந்தப் பனை மரத்தில் ஓர் ஓந்தியிருக்கிறது. பார் நல்ல சிவப்பு நிறம்.” என்றான்.
இரண்டாவது மனிதன் “எந்தப் பனை மரம் எந்தப் பனைமரம்?” என்று கேட்டுக் கடைசியாக அவன் சுட்டிக் காட்டிய மரத்தைப் பார்த்தான். அதில் இருந்த ஓந்தியையும் பார்த்தான்.
“பனைமரம் இருக்கிறது. அதில் ஓந்தியும் இருக்கிறது. ஆனால் அதன் நிறம் சிவப்பல்ல; நீலநிறம்” என்று சொன்னான் இரண்டாவது மனிதன்.
“சிவப்புக்கும் நீலத்துக்கும் வேற்றுமை தெரியாமல் உளறுகிறானே இவன்” என்று நினைத்துக் கொண்டான் முதல் மனிதன்.
“அடே அது சிவப்பு நிறமடா, சிவப்பு நிறம்!” என்றான்.
“இல்லை யில்லை அது நீலநிறம்தான்” என்றான் இரண்டாவது ஆள்,
“சிவப்பு சிவப்புத் தான்!” என்று கத்தி னான் முதல் மனிதன்.
“இல்லை நீலம், நீலமேதான்!” என்று கூச்சலிட்டான் இரண்டாவது ஆள்.
இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வேறொரு மனிதன் வந்தான்.
இரண்டு மனிதர்களும் அவனை அருகில் அழைத்தார்கள்.
“ஐயா, ஓந்தி சிவப்பு நிறம் தானே!’ என்று கேட்டான் முதல் ஆள். “ஆமாம்” என்றான் புது ஆள்.
“என்னையா இப்படிச் சொல்கிறீர்? நன் றாகப் பார்த்துச் சொல்லும் ஓந்தி நீல நிறம் தானே?” என்று கேட்டான் இரண்டாமவன்.
“ஆமாம் நீலநிறம் தான்” என்றான் புது ஆள்.
“என்னையா, நான் கேட்டாலும் ஆமாம் போடுகிறீர்? அவன் கேட்டாலும் ஆமாம் என்கிறீர்? உமக்கெனன பைத்தியமா?” என்று கேட்டான் முதல்வன்.
“பைத்தியம் எனக்கல்ல; உங்களுக்குத்தான். ஓந்தி நேரத்துக்கு நேரம் நிறம் மாற்றிக் கொள்ளும். நீர் பார்த்த போது சிவப்பா யிருந்தது. அவர் பார்த்த போது நீலமாகி விட்டது. இன்னொரு முறை பார்த்தால் பச்சையாகவும் காட்சியளிக்கும்” என்றான் அந்தப்புதுமனிதன்.
இருவரும் தெளிவு பெற்றார்கள். கடவுளும் இப்படித்தான். பிள்ளையாராக இருப்பவரும் கடவுள்தான்; பெருமாளாக இருப்பவரும் கடவுள்தான். இந்த உண்மையை அறியாமல் மதச்சண்டை போடுபவர்கள் பைத்தியக்காரர்கள்.
– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.